சிவப்பு தீபங்கள் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6740
“நன்றி கெட்டவன்”- ஆயி உரத்த குரலில் சொன்னாள்: “நான் அந்த ஆளுக்கு விலை மதிப்புள்ள பொருட்களைப் பரிசா கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் தவறாம கொடுக்கிற மாமூல் ஐம்பது ரூபா போக, என் எல்லா பெண்ணுகளையும் அந்த ஆள்கிட்ட படுக்க விட்டிருக்கேன். இவ்வளவு காரியங்களை அந்த ஆளுக்கு நான் செஞ்ச பிறகும், அவன் என்னோட எதிரியோட வீட்டுக்கு சுகம்தேடிப் போறான்னா, அவனுக்கு எப்படி அதுக்கு மனசு வந்துச்சு? என் பொண்ணுகள்கிட்ட என்ன குறைபாடு இருக்கு? கவுசல்யாவோட பொண்ணுங்க என் பொண்ணுகளைவிட சுத்தமானவங்களா என்ன? பிணங்கள்! வெறும் அஞ்சு ரூபாய்க்கு போறவளுக!”
“சரி தங்கச்சி... கொஞ்சம் அமைதியா இரு...”- சிந்துத்தாயி ஆறுதல் சொல்கிற குரலில் சொன்னாள் : “பெண்ணுங்ககிட்ட போயி போயி இப்போ ஒரே வெறுப்பாயிடுச்சுன்னும் பிஞ்சா இருக்குற சிறு பொண்ணுங்க மேலதான் இப்போ எனக்கு விருப்பம் இருக்குன்னும் இன்ஸ்பெக்டர் ஐயா என்கிட்ட சொன்னாரு.”
“ஏன் இங்கே சின்ன பொண்ணுங்க இல்லியா?”- ஆயி கேட்டாள். “சீதா இல்லியா? அழகான அவ தோல் வெள்ளை நிறத்துலதானே இருக்கு? அவ உடம்பு யாரையும் இழுக்குற மாதிரி இல்லியா?”
“சீதா யார்கிட்டயும் சொன்னபடி நடக்குறது இல்ல போல இருக்கு...” - அந்தக்கிழவி சொன்னாள்.
“நான் இன்னைக்கு வாங்கியிருக்குற சின்னப் பொண்ணை நீங்க பார்த்தீங்களா?” - ஆயி கேட்டாள் : “ருக்மிணி... இங்கே வா, சிந்துத்தாயி உன்னைக் கொஞ்சம் பார்க்கட்டும்...”
ருக்மிணியை முன்னறையை நோக்கி சீதா பிடித்துத் தள்ளி விட்டாள். அந்தக் கிழவி அந்தச் சிறு பெண்ணின் தொடைப் பகுதியை மெதுவாகக் கிள்ளிவிட்டு அவளின் பின் பகுதியை லேசாகத் தடவினாள். “பரவாயில்ல... உண்மையிலேயே இவ நல்ல அழகிதான்” சிந்துத்தாயி கேட்டாள் : “எவ்வளவு ரூபா கொடுத்து இவளை நீ வாங்கினே?” இவளுக்காக நீ நல்ல ஒரு தொகைக் கொடுத்திருக்கணுமே!”
கிழவியின் காதில் ஆயி மெதுவான குரலில் என்னவோ சொன்னாள்.
“ஓ... இவ அனுசூயாவோட மகளா, அதுதான் இவளுக்கு இப்படியொரு அழகான, கவர்ச்சியான கால்கள் இருக்கு...”
“இப்படியொரு அழகு தேவதை என் வீட்டுல இருக்கான்னு இன்ஸ்பெக்டர் ஐயாகிட்ட சொல்லுவீங்களா, சிந்துத்தாயி?”- ஆயி கேட்டாள்.
“இன்னைக்கு சாயங்காலம் நான் போய் கட்டாயம் இந்த விஷயத்தைச் சொல்றேன்” என்றாள் சிந்துத்தாயி. பித்தளைப் பெட்டியிலிருந்து சிறிது வெற்றிலையை எடுத்து அவள் வெளியே புறப்பட ஆரம்பித்தாள். அழுக்குப் படிந்த கூர்மையான நகங்கள் உள்ள சுருங்கிப் போய்க் காணப்பட்ட அவளுடைய கைகளை ருக்மிணி பார்த்தாள். “அந்தக் கிழவி என்னைத் தொட்டப்போ ஒரு மரங்கொத்திப் பறவை என் தோலை தன்னோட கூர்மையான அலகால் கொத்துறது மாதிரி இருந்துச்சு. ச்சே... என்ன அவலட்சணமான பொம்பளை அது!” - ருக்மிணி சீதாவிடம் தனியாக இருக்கும்போது சொன்னாள்.
“ம்... அந்தக் கிழவி பயங்கரமா பொய் சொல்லும். எனக்கு அந்தக் கிழவியைக் கண்டாலே பிடிக்காது...” என்றாள் சீதா.
2
தெரு விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தாலும் வானம் நீலநிறத்தில்தான் காட்சியளித்தது. அப்போதுதான் “மீரா... மீரா...” என்று அன்புடன் அழைத்தவாறு மீராத்தாயின் வாடிக்கையாளனான கல்லூரி மாணவன் மெதுவாக ஆடியவாறு அங்கு வந்தான். கடுகு எண்ணெய் தேய்த்து கால்களைத் தடவி விட்டுக் கொண்டிருந்த ஆயி அவன் அழைப்பதைக் கேட்டாள். அவளின் புருவம் சற்று மேல்நோக்கி உயர்ந்தது.
“அந்த வாயாடிப் பயதான்...” - கால்களை நீவிவிட்டுக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் ஆயி சொன்னாள்.
“இந்த முறையும் அவன் பணம் தரலைன்னா போலீஸ்கிட்ட சொல்லி அவனை நான் அடிச்சு விரட்டப்போறேன்”- என்றவள் கேட்டாள்: “ராதா, அவன் எப்பவாவது உன்கிட்ட வந்திருக்கானா?”
“ஊஹும்... அந்த பையனுக்கு எப்பவும் மீரா இருந்தாபோதும். மீராவோட புருஷன் மாதிரியே அவன் எப்பவும் நடப்பான். ராத்திரி ரொம்ப நேரம் வரை அவன் அவகிட்ட பேசிக்கிட்டே இருக்கான். சில நேரங்கள்ல அவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறதும் உண்டு” ராதா பதில் சொன்னாள்.
“ராத்திரி ரொம்ப நேரம் வரையா?”- ஆயி ஆச்சரியத்துடன் கேட்டாள். “அவ்வளவு நேரம் இருக்குறதுக்கு அவன் பணம் தர்றானா என்ன?”
“அதைப் பற்றி எனக்குத் தெரியாது”- ராதா ஒருவித வருத்தம் கலந்த குரலில் சொன்னாள்: “எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். அவதானே உங்களோட செல்ல மகள்! இந்த வீட்டுல மீராவைப் பற்றி யாரும் ஒரு வார்த்தைகூட சொல்லக்கூடாது. இப்போவெல்லாம் சொல்லப் போனா அவளுக்குப் பயங்கர ஆணவம் வர ஆரம்பிச்சிடுச்சு. தலைவலி இருக்கிறதா சொல்லிக்கிட்டு இன்ஸ்பெக்டர் ஐயாவோட இருக்க முடியாதுன்னு நேற்று சொல்லிட்டா. நம்ம தொழிலுக்குத் தேவையான நடத்தை அவகிட்ட இல்ல. அவளுக்கு அந்த கல்லூரி மாணவன் மட்டும் போதும்ன்ற நினைப்பு. தேவடியாள்கள் அப்படி இருக்க முடியுமா?”
“ராதா, தேவையில்லாம நீ வாய்க்கு வந்தபடி பேசாத” - ஆயி அவளைப் பார்த்து கண்டிப்பான குரலில் சொன்னாள்.
“தேவடியான்னு சொன்னா உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காதே” - ராதா மெதுவான குரலில் முணுமுணுத்தாள். “ஆயி, நாம எல்லாருமே தேவடியாள்கள்தான்ற விஷயம் உங்களுக்கு நல்லாவே தெரியும். உண்மையை எந்தவித தயக்கமும் இல்லாம வெளிப்படையா சொல்லி ஒத்துக்கணும்ன்ற கொள்கையைக் கொண்டவ நான்.”
“சரி... நீ காலை ஒழுங்கா பிடிச்சு விடு” - ஆயி சொன்னாள்.
மீராவின் அறைக்குள்ளிருந்து ஒரு ஆண்குரல் கேட்டது. அதோடு சேர்ந்து மீராவின் சிரிப்புச் சத்தமும். அதைக்கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டாள் ஆயி.
“அவன் அப்படி என்ன அவள்கிட்ட சொல்றான்?”- ஆயி கேட்டாள்.
“அவளுக்கு அவன் அரசியல் பாடல் சொல்லித் தர்றான்”-ராதா பதில் சொன்னாள்.
“அவன் என்ன பொட்டையா?”
“எனக்குத் தெரியாது. எங்களை அவன் தொடுறதே இல்ல. அவன் போற ஒவ்வொரு நேரமும் மீராவுக்கு தவறாம தலைவலி வர்றது நிச்சயம்ன்ற ஒரு விஷயம் மட்டும் எனக்குத் தெரியும். அவன் வந்துட்டுப் போனபிறகு யார்கூடவும் மீரா படுக்குறது இல்ல. அவன் படுக்கையில உட்கார்ந்து பல வினோதமான பாடல்களை முணுமுணுத்துக்கிட்டு இருப்பான்”- ஆயி எழுந்து மீராவின் அறையை நோக்கி நடந்தாள். கதவு அடைக்கப்பட்டிருந்தது. காதைத் தீட்டி வைத்துக் கொண்டு கேட்டபோது அந்த இளைஞன் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. ஆனால், அவனுடைய பேச்சில் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே ஆயி இதற்கு முன்பே கேட்டவையாக இருந்தன. ஒன்றிரண்டு முறை அவன் புரட்சி என்ற வார்த்தையை உச்சரித்தான். ஆயி கதவைத் தட்டினாள்.