ஒற்றையடிப் பாதைகள் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6353
“அப்போ எனக்குள் சில தெளிவான திட்டங்கள் இருந்தன. சொல்லப் போனால், நான் எந்த சமயத்திலும் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணாக இருந்தது இல்லை. இனிமேலும் காலம் இருக்கே. எதற்கு அவசரம் என்று நான் நினைத்தேன். பிறகு... படிப்பினால் உண்டான பிரஷர்... இறுதியில் கைவிட்டுப் போன பிறகு தாங்கிக் கொள்ள முடியவில்லை...”
தனக்குத் தெரியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்ட அவள் கண்களைத் துடைத்துக் கொள்வதை தந்தை பார்த்தார்.
சிறிது நேரத்திற்கு இரண்டு பேராலும் எதுவும பேச முடியவில்லை. சற்று கடந்த பிறகு தாழ்ந்த குரலில் அவள் கூறுவதை தந்தை கேட்டார்.
“என்ன இருந்தாலும் இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள். அவற்றை கம்பெனி விஷயங்களுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். சரியா? நான் சொல்ல வேண்டியதை நேரடியாகவே உண்ணி அத்தானிடம் கூறியிருக்கிறேன். இனி இருக்கும் விஷயங்களை மற்றவர்கள் தீர்மானித்தால் போதும்.”
நம்பியார் கைகளைக் கழுவுவதற்காக எழுந்தார். தந்தையின் முகம் மிகவும் வாடிப்போய் இருப்பதை மகள் பார்த்தாள். உடலும் மிகவும் ஒடிந்து போய் காணப்பட்டது. தோள்கள் மிகவும் இறங்கிப் போய் தெரிந்தன.
“அப்பா, சமீபகாலமா உடற்பயிற்சி சிறிதுகூட இல்லைன்னு தெரியுதே.”
“இந்த வயதில் என்ன உடற்பயிற்சி வேண்டியிருக்கு மகளே?”
“அதிகாலை நேரத்தில் இருக்கும் அந்த நீண்ட நடையும், யோகா பயிற்சியும்...”
“கொஞ்ச அளவில் நம்முடைய காம்பவுண்டிற்குள்ளேயே நடக்கிறேன். பிறகு... யோகா என்று சொல்றப்போ, சட்டதிட்டங்களுக்குள் இருக்குறது மாதிரி எதுவும் இல்லை. குளித்து முடித்து, கொஞ்ச நேரம் பூஜை அறைக்குள் நுழைந்து சப்பணம் போட்டு கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். அவ்வளவுதான். வேணும்னா அதை தியானம் என்று கூறிக் கொள்ளலாம். எல்லாவற்றையும் மறந்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருத்தல்... இல்லாவிட்டாலும் இனி அதிக காலம் உயிருடன் இருப்பேன் என்று படவில்லை. ஜாதகத்தின்படி மூன்றோ நான்கோ வருடங்கள்... அதுதான் போனஸாக இருக்கும். சட்டத்திற்கு வெளியே ஒரு இலவசம்!”
தன்னுடைய தொண்டை அடைப்பதைப்போல சுதா உணர்ந்தாள். இவ்வளவு நாட்கள் கடல்களைத் தாண்டி அவள் இருந்தாள். இப்போது அருகில் வந்திருக்கும்போது, எதையோ இழப்பதற்கு அவள் தயங்கினாள். சிறு பிள்ளை பிராயத்தில் ஆற்றின் கரையில், ஈர மணலில் தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்த சிறுமியின் பத்திர உணர்வு... விரல் நுனியில் அந்த உள்ளங்கையின் வெப்பம்... நீருக்குள் இரண்டு அடிகள் எடுத்து வைத்தபோது, தந்தை பின்னால் இருந்துகொண்டு இழுக்கிறார்.
“அவ்வளவு போதும் மகளே, அதற்கு மேலே போனால் ஆழம்.”
பிறகு எப்போதோ வழி தவறிய ஒரு இளம்பெண் ஆழமான ஆற்று நீருக்குள் நடந்து இறங்கிக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து பிடித்து இழுக்க அவளுடைய தந்தை இல்லை.
தேவகியம்மா பாத்திரங்களை எடுக்க வந்தபோது, சுதா கேட்டாள்...
“உதவி செய்யணுமா தேவகியம்மா?”
“வேண்டாம் மகளே. இங்கே நான் இருக்கேனே.”
“அச்சுதன் நாயர் இருக்காரா?”
“வெளியே உட்கார்ந்து, அப்பவே சாப்பிட்டாச்சு.”
“அப்படியென்றால் நான் புறப்படுறேன் அப்பா. நேரம் அதிகமாகிவிட்டது.”
சோஃபாவில் சாய்ந்து கிடந்தார் நம்பியார்.
“இந்த இரவு நேரத்தில் போக வேண்டுமா மகளே?”
“போகணும் அப்பா. சிறிது நேரம் பாட்டு கேட்கணும். சிறிது நேரம் வாசிக்கணும்.”
“அவற்றை இங்கேயே பண்ணலாமே?”
“வேண்டாம் அப்பா. தனியா இருப்பதன் சந்தோஷம் தெரிந்துவிட்டது. இனிமேல் அதை மாற்றுவது என்பது மிகவும் கடினமானது.”
“சாப்பிட்டு முடித்தப் பிறகு, கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகலாமே?”
“என்னை கொண்டு போய் இறக்கிவிட்டப் பிறகு, அச்சுதன் நாயர் போய் படுக்கலாமே?”
“சரி... உன் விருப்பம். நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?” தந்தை முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
அவள் காருக்குள் ஏறுவதையும், பெரிய ஒரு இரைச்சலுடன் வண்டியின் பின்னால் இருக்கும் கண்கள் விலகி விலகி இருட்டில் கரைந்து போவதையும் பார்த்துக் கொண்டே அவர் தூணில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார்.
‘அப்படியென்றால், அனைத்தும் இவ்வளவுதான். அப்படித்தானே?’ - அவர் தனக்குள் கூறிக் கொண்டார்.
இதற்காகத்தான் அவர் இவ்வளவு நாட்களையும் எண்ணிக் கொண்டு காத்திருந்தார். ஒரு காரணமும் இல்லாமல் வெறுமனே விரல்களை மடக்க, நிமிர்த்திக் கொண்டு அவர் அப்படி அமர்ந்திருந்தார். நாட்களை எண்ணிக் கொண்டிருந்தபோது அவர் நம்பியது தன்னுடைய விரல்களை மட்டுமே. ‘இந்த விரல்கள் எந்த சமயத்திலும் என்னை ஏமாற்றாது’ தனக்குள் அவர் கூறிக் கொண்டார்.
சிறிய மண்ணால் ஆன கிண்ணத்தில் குண்டுமணிகளை இட்டு, எண்ணிப் படிக்கும் சிறுமியின் ஆர்வத்துடன் அவர் திரும்பத் திரும்ப எண்ணினார். ஒவ்வொரு முறையும் ஒரு எண் வந்தது.
கனம் நிறைந்த ஒரு நிழல். அதை மதிக்காமல் தாண்டிப் போகும் சிவப்பு வண்ணம் படர்ந்த பாதம். ஈரம் இல்லாத மணலில் சிறு அடையாளத்தைக்கூட பதிக்காமல் அது தாண்டிப் போகிறது.
தரையில் உட்கார்ந்து தயிர் கடையும்போது, அந்த வழியே வந்த வழிப்போக்கன் கேட்கிறான்- “என்ன, என்றைக்கும் இல்லாமல் இப்படி?” அப்போது அவர் சிரிக்க முயற்சிக்கிறார். வரப்பில் ஒற்றைக் காலில் தவம் இருக்கும் கொக்கின் முன் தலையில் வைக்க சிறிது வெண்ணெய்.
ஆமாம்... சிறிது வெண்ணெய்.
அவர் கண்களை மூடினார்.
4
ஒரு பறவையின் அழுகையைப் போல வரவேற்பறையின் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தபோது, வாசலில் சற்று தயங்கியவாறு உண்ணி நின்றிருந்தான்.
“உள்ளே வரலாமா, எப்படி?” - தயக்கத்துடன் அவன் கேட்டான். “போன் செய்து பார்த்தேன். கிடைக்கவில்லை. அப்பாயின்ட்மெண்ட் இல்லாமல் வருவது...”
நினைத்திராத அந்த வருகை சிறிதும் பிடிக்கவில்லையென்றாலும் சுதா தலையை ஆட்டினாள்.
“ம்... வாங்க. இல்லாவிட்டாலும் நான் யாருக்கும் இரவு நேரத்தில் அப்பாயிண்ட்மென்ட் தருவது இல்லை. ஒரு வகையில் பார்க்கப் போனால், அந்த ஸ்டேஜ் எல்லாம் தாண்டி விட்டது என்று வைத்துக் கொள்ளலாம் வயசாயிடுச்சுல்ல...”
வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்திருந்தபோதும், உண்ணியின் முகத்தில் தெரிந்த திகைப்பு சிறிதும் மாறவில்லை. ஆரம்பமே மிகவும் சோர்வைத் தரும் ஒன்றாக அமைந்துவிட்டதைப்போல் திடீரென்று அவனுக்குத் தோன்றியது. சமீபகாலமாக அப்படித்தான். எப்போதும் நாக்கில் இருந்து தேவையில்லாததெல்லாம் நேரம் காலம் தெரியாமல் உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது.