ஒற்றையடிப் பாதைகள் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6353
சிறிதும் தன்னம்பிக்கை இல்லாத குரல்.. அந்தப் பழைய தலையை உயர்த்தி, நெஞ்சை விரித்துக் கொண்டு நின்றிருந்ததும், உதட்டைக் கடிதத் திருட்டு சிரிப்பும், பெரிதாக ஒலிக்கும் குரலும் எங்கே போயின? பெரிய கொலைகளை செய்யக்கூட அஞ்சாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள் இப்படித்தான் கடைசியில் ஆகி விடுவார்களா?
உள்ளுக்குள் அரும்பிய சிரிப்பை அடக்குவதற்கு அவள் படாதபாடு பட்டாள்.
உண்ணி தொடர்ந்து சொன்னாள்.
“இன்று மதியம் மெஷினரி சப்ளை செய்பவர்கள் அழைத்திருந்தார்கள். ஃப்ராங்க் ஃபார்ட்டில் இருந்து, காலதாமதம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்கள் பக்கம் இருக்கிறது. உரிய நேரத்தில் எல்ஸி. ஓப்பன் பண்ணாமல் இருந்தால் விலை அதிகமாகிவிடும்.
சுதா சற்று நகர்ந்து உட்கார்ந்தாள்.
“நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே. இந்த விஷயத்துக்காக யாரும் ஜெர்மனிக்குப் போக வேண்டிய அவசியமே இல்லைன்னு... அது இருக்கட்டும்... உண்ணி அத்தான், இனியும் ஜெர்மனியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்க வேண்டிய தேவையே இல்லையே. முன்பு அங்கேதான் பல தடவை நீங்க போயிருக்கீங்களே.”
“அங்கிள் உறுதியாக எதையும் கூறவில்லை.”
“இனிமேலும் அப்பா வேறு குரலில் பேசுவதற்குத் தயாராக இருந்தால், நான் அதைப்பற்றி எதுவும் கூறுவதற்கில்லை. அது உங்களுடைய விஷயம்.”
“எம்.ஓ.யூ. கையெழுத்துப் போட்டது அங்கிள்தான்” - உண்ணியின் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது. “இனிமேல் கால்களை பின்னால் எடுத்து வைத்தால், அவர்களுக்கு நாம் பெரிய அளவில் நஷ்ட ஈட்டைக் கொடுக்க வேண்டியதிருக்கும். அவர்களுக்கு மட்டுமல்ல... பல ஒப்பந்தங்களையும் ரத்து செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. எவ்வளவு நஷ்டம் வரும் என்பதைக் கணக்கு போட்டுக்கூட பார்க்க முடியாது. வழக்கு, ஆர்ப்பாட்டம், அவமானம்.. இவை வேறு.”
அவை அனைத்தையும் அவள் ஒரு சிறிய சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான்.
“உண்ணி அத்தான், நஷ்டம், லாபம் - இவையெல்லாம் இயல்பாக இருக்கக்கூடியதுதானே? வியாபார விஷயத்தில் மட்டுமல்ல.. மனிதர்களின் விஷயத்திலும் ஒரு இடத்தில் உண்டாகக்கூடிய நஷ்டம் சில வேளைகளில் இன்னொரு இடத்தில் லாபமாக அமைந்துவிடும். எனக்கு அப்படித்தான் தோணுது. நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு லெவலிங் ஃபோர்ஸ் இந்த இயற்கையில் இருக்கு. இயற்கை உண்டாக்கும் மாறுதல்களை மிகவும் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா உண்ணி அத்தான்? நம்மால் பார்க்க முடியாத ஏதோ சக்கரம் திரும்பவும் சுற்றி வருவதை அனுசரித்து, ஒவ்வொரு பருவத்தின் வருகையும் செல்கையும் ஒன்றின் முடிவுக்கும் இன்னொன்றின் ஆரம்பத்திற்கும் முன்னால் இருக்கும் அந்த சிறிய இடைவெளி.. மிகவும் இயல்பாகவே நடந்து கொண்டிருக்கும் ஒரு மாற்றம்..
சற்று நிறுத்திவிட்டு சுதா தொடர்ந்து சொன்னாள்.
“இல்லாவிட்டாலும்.. உண்ணி அத்தான், உங்களைப் போன்று வேலைகள் அதிகமாக வைத்திருக்கும் ஒரு மனிதருக்கு கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டு இயற்கையை கவனிப்பதற்கு நேரம் எங்கே இருக்கிறது? நான் சொல்றது சரிதானா? சிறிது நேரமாவது தனியாக இருக்க முடியாதவர்களால் மட்டுமே அது முடியும். கண்கள் இருந்தால் மட்டும் போதாது. பார்க்கவும் வேண்டுமே.”
அவன் தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இரண்டு முறை இழுத்தவாறு அவன் முணுமுணுத்தான்.
“இந்த விஷயங்கள் எதுவுமே எனக்குப் புரியல. சுதா, நீ மிகவும் மாறிட்டே.”
சுதாவின் முகம் திடீரென்று சிவந்தது.
“எனக்கு முன்னால் இருந்து கொண்டு யாரும் சிகரெட் புகைப்பது எனக்கு விருப்பமான ஒன்று அல்ல என்று ஒருமுறை நான் சொல்லியிருக்கேன். மற்றவர்களுடைய விருப்பத்தையும் விருப்பமின்மையையும் பார்த்து செயல்படும் பழக்கம் இல்லாமல் இருக்கலாம். அப்படித்தானே?” - அவளுடைய குரல் மிகவும் கடுமையாக இருந்தது. அதில் பெரிய அளவில் வெறுப்பு கலந்திருப்பதை அவனால் உணர முடிந்தது.
காலில் இருந்து தலைவரை அவனுக்கு எரிச்சல் ஏறியது. ஒருவகையில் அதை அடக்கிக் கொண்டு, அதிகரித்துக் கொண்டிருந்த எரிச்சலுடன், என்னவோ கூற நினைத்து, உடனே அவன் அதை தனக்குள்ளேயே விழுங்கியும் விட்டான். அவன் ஒரு சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் வைத்து அணைத்தான். அவள் அதை குரூரமான சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் மீண்டும் கழுத்தை சொறிந்து கொண்டே வார்த்தைகளுக்காகத் தடுமாறிக் கொண்டிருந்தான்.
திடீரென்று மெதுவாக அடி எடுத்து வைத்த அவள் அவனுக்கு முன்னால் அதிக தூரத்தில் இல்லாமல் ஒரு காலை ஸ்டூலின் மீது வைத்துக் கொண்டு நின்றாள்.
கூர்ந்து பார்த்தபோது உண்ணியின் வெப்பம் நிறைந்த பார்வை தன்னுடைய உடல் முழுவதும் படர்ந்து கொண்டிருப்பதை அவள் பார்த்தாள்.
“என்ன உண்ணி அத்தான்?”
“ம்.. ஒண்ணுமில்லே..” அவனுடைய குரலில் மெல்லி நடுக்கம் இருந்தது.
“அது இல்ல.. என்னவோ இருக்கு.. முகம் என்னவோ மாதிரி இருக்கு.”
“ஒண்ணுமில்லைன்னு சொல்றேன்ல..” - அவன் கோபத்துடன் சொன்னான்.
“அது இல்ல.. எது இருந்தாலும் திறந்து சொல்லுங்க. தயங்க வேண்டாம். தெரியுதா?” - அவளுடைய முகத்தில் சிவப்பு நிறம் படர்ந்து கொண்டிருந்தது.
“ஒண்ணுமில்ல...” மீண்டும் கூறியபோது தன்னுடைய குரலுக்கு சிறிதும் கம்பீரமே இல்லை என்பதை உண்ணி உணர்ந்தான்.
“உண்மையாகவே எதுவும் தோணலையா?”
அவளுடைய முகத்தில் கொல்லக்கூடிய சிரிப்பு படர்ந்து விட்டிருந்தது. “உண்ணி அத்தான், எது எப்படி இருந்தாலும் ஒரு காலத்தில் நான் உங்களுடைய ஃப்ளேம் ஆக இருந்தது உண்மைதானே. அப்போது எந்த மாதிரியான வரிகளை எல்லாம் நீங்க எழுதினீங்க? கல்லூரி ஆண்டு மலரில் இருந்து திருடிய வரிகள்.. அந்த நான் உங்களின் கனவுகளை நெருப்பு பிடிக்க வைத்தேன். ‘ஹைலி இன்ஃப்ளெமபில்- கவனமாகக் கையாள வேண்டும்’ என்ற ஸ்டிக்கரை என்னுடைய நெற்றியில் ஒட்டி இருக்க வேண்டும். அப்படித்தானே? இப்போது அந்தப் பழைய நெருப்பெல்லாம் எங்கே போனது? ஒரு முப்பத்தைந்து வயதுப் பெண்ணுக்கு நெருப்பு பிடிக்கச் செய்யும் ஆற்றல் குறைவாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அது அவ்வளவு சரியாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை - சிலருடைய விஷயங்களில்.”
“சுதா, நீ என்ன சொல்றே?” அவன் பொறுமை இல்லாமல் சொன்னான்.
“அன்று இந்தக் கண்களுக்கு என்ன கூர்மை இருந்தது. யாரையும் வீழ்த்தும் சக்தி படைத்த கண்கள். அப்பாவின் பாரம்பரிய வீட்டின் படிகளுக்குக் கீழே இருட்டில் அன்று என்னை முதல் தடவையாக முத்தமிட்டபோது... பிறகு.. தனியாக இருக்கும்போதெல்லாம் கடிதத்திலும் தொலைபேசியிலும் சொல்லக்கூடிய அந்த சில கெட்ட வார்த்தைகள் இருக்கின்றனவே.