ஒற்றையடிப் பாதைகள் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6353
“இந்த குரூப்பின் பெரிய பாலிஸி விஷயங்கள் போன்றவற்றை ப்ரமோட்டர்கள் முடிவு செய்வதுதானே சரியாக இருக்கும்? அதாவது- சேர்மனும் வைஸ் சேர்மனும் சேர்ந்து... மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சப்போர்ட்டிங் ரோல் இருக்கலாம். அஃப்கோர்ஸ்... தே ஆர் பெய்ட் ஃபார் இட்.”
உள்ளே யாரோ மிகவும் ஆழத்தில் குத்தியதைப்போல் உண்ணி உணர்ந்தான். அவன் வேகமாக உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தான். உள்ளுக்குள் பலத்த எரிச்சல் உண்டானது. கோபத்தையும் தன்மீது உண்டான வெறுப்பையும் அடக்குவதற்கு அவன் படாத பாடு பட்டான்.
“எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. ஒன்றிரண்டு அப்பாயின்ட்மென்ட்கள்...”
“என்னுடன் பேசிக் கொண்டிருப்பதைவிட அவை மிகவும் முக்கியமானவை என்றால் போங்க...”
உண்ணி சற்று தயங்கியவாறு நின்றான். சுதாவின் பார்வை தன்மீது ஆழ்ந்து பதிந்து கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். அந்தப் பார்வையின் முனை எங்கேயோ போய் குத்திக் கொண்டிருந்தது. அதன் வெப்பம் மேலே பரவிக் கொண்டிருந்தது.
அவன் அங்கிருந்து சீக்கிரம் போக வேண்டும் என்று நினைத்தான்.
“அவர்கள் காத்திருப்பார்கள்.”
“ம்... அப்படின்னா போங்க” - அவள் அலட்சியமாக சொன்னாள். “யாரையும் காத்திருக்க வைக்கக்கூடாது தேவையில்லாமல் ஒரு முறை கையை விட்டுப் போன நேரம் திரும்பவும் வரவே வராது.”
எதுவும் கூறாமல் தலையைக் குனிந்து கொண்டே வெளியேறும்போது, அவனுடைய மனதிற்குள் ஒரே ஒரு எண்ணம் மட்டுமே இருந்தது.
ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுக்க வேண்டும்.
அதற்குப் பிறகு அங்கிளைப் போய் பார்த்தால் போதும்.
அவன் தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து சிகரெட் பாக்கெட்டை வெளியே எடுத்தான்.
3
“சரி... என் மகளே. இறுதியில் வீட்டில் டின்னர் சாப்பிடவாவது ஒத்துக் கொண்டாய் அல்லவா? அதற்காக இப்போது நான் எந்தக் கடவுளுக்கு நன்றி சொல்வது?”
மகள் சிரித்தாள்.
“இன்னைக்கு மட்டும்தான், புரியுதா?”
“போதும்... இப்போதைக்கு இன்னைக்கு நடக்குறது நடக்கட்டும். நாளைய விஷயம் நாளைக்கு... சரிதானே? தன் சொந்த தந்தையை இப்படி நல்ல செயல்வடிவில் இருக்கும் ஜாமீன் தந்து, ப்ரஃபஷனில் நிற்க வைக்கலாம் என்றால், அது ஒரு நல்ல விஷயம்தானா? வெளிநாடுகளில் இருந்து நாம் எப்படிப்பட்ட பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது? சிவ சிவா... சரி... அது இருக்கட்டும். அங்கே ராமன் குட்டியின் சமையல் என் மகளுக்குப் பிடிக்கிறதோ என்னவோ? ராமன் குட்டி மனது வைத்தால், சமையல் பிரமாதமாக இருக்கும். இருந்தாலும், மனதை அங்கு வைப்பதா இங்கு வைப்பதா என்ற தடுமாற்றம் ராமன் குட்டிக்கு... அவனுடைய போக்கு எப்போதும் ஒரே பக்கம்தான்...”
“மதியம் சாப்பிட்டேன். சுவையாக இருந்தது. முருங்கையிலைப் பொரியலும், மாம்பழக் குழம்பும், மாம்பழ ஊறுகாயும்... அவற்றை சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆகிவிட்டது.”
“ராமன் குட்டியின் அவியல் புகழ் பெற்றதாச்சே!”
“சொன்னார்.”
“ராமன் குட்டி மீனும் வைப்பான். தெரியுமா? அருமையாக... கிராமத்து பாணியில்...”
“கொஞ்ச நாட்களாகவே நான் அதை சாப்பிடுறது இல்லை அப்பா.”
“அப்படியா?”-நம்பியாருக்கு அது ஆச்சரியத்தைத் தரும் ஒரு விஷயமாக இருந்தது. “பிறகு எப்படி அங்கு இருக்குறே? இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் அங்கே வந்தப்போ...”
“அதற்குப் பிறகு நிறுத்திட்டேன். அதன்மீது இருந்த ஆர்வம் போய்விட்டது. வெஜிட்டேரியனாக மாறினால் பெரிய பிரச்சினை இல்லை. உணவு சுத்தமாக இருந்தால் மனமும் சுத்தமாக இருக்கும் என்று எங்கேயோ படித்திருக்கிறேன். அதனால் மட்டுமல்ல... அந்த அளவிற்குக் குறைவான அழுக்கு உள்ளே போனால் போதும் என்று நினைத்தேன். இயற்கையில் இருந்து இயல்பாகக் கிடைக்காததே, ஒரு வகை அழுக்குதானே.”
“நீ கூறுவது அனைத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறுவதற்கில்லை. நான் ஒரு கிராமத்து மனிதன் ஆயிற்றே. வயதும் அதிகம் ஆயிடுச்சு! இப்போது உங்களுடைய தலைமுறை கூற வேண்டியது. அதை நாங்கள் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு கேட்க வேண்டியதுதான். அதுதான் சரியானது. இந்த அறிவாளிக் கிழவன் என்று சொல்வதெல்லாம் பொய். வயதானவர்களை சகித்துக் கொள்வது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்.”
சுதாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“அப்பா, இந்த வித்தையெல்லாம் என்னிடம் வேண்டாம். வெளியே போய் படிக்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். எத்தனை முறை உலகத்தைச் சுற்றி இருக்கிறீர்கள்? எவ்வளவு நாடுகள். எத்தனை வகைப்பட்ட மக்கள்! அப்பா, எங்களைப் போன்ற மூன்று தலைமுறைகளை விற்ற பணம் உங்களின் கையில் இருக்கிறதே.”
“அதற்காக கருணாகரன் நம்பியார், கருணாகரன் நம்பியார் இல்லை என்று ஆகிவிடாதே! எனக்கு, எனக்குள் இருக்கும் அந்தப் பழமையான மனிதரைத்தான் பிடிக்கும். அந்தப் பழைய ஃப்யூடல் பெருச்சாளியை...”
“எனக்கும் இந்த அப்பாவைத்தான் பிடிக்கும்” - மகள் அடுத்த நிமிடத் தன் தந்தைக்கு அருகில் வந்து உட்கார்ந்து, அவருடைய தோளில் கையைப் போட்டுக் கன்னத்தில் முத்தமிட்டாள். “அறிந்தே செய்யும் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டிலும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்யுது. இதைப்போன்ற ஒரு அப்பா கிடைப்பதற்கு நான் முன் பிறவிகளில் எவ்வளவோ புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும்.”
“உன்னைப் போன்ற ஒரு மகளை...”
“ரியலி..?”
உண்மையான ஆச்சரியத்துடன், நம்பிக்கையே வராததைப் போல, அவள் அவருடைய கண்களையே பார்த்தாள். “அப்பா, உண்மையாகவே அப்படி சொல்றீங்களா? உங்களிடமிருந்து கிடைப்பதில் நூற்றில் ஒரு பங்கையாவது திருப்பித்தர என்னால் இதுவரை முடிந்திருக்கிறதா?”
“குடும்ப உறவுகளில் அளவு, எடை எதையும் பார்க்கக்கூடாது மகளே. அவை அனைத்தும் வெள்ளைக்காரர்கள் செய்தவை. குடும்பத்தின் இனிமையை எந்த சமயத்திலும் வெள்ளைக்காரர்களால் அனுபவிக்க முடியாது. முடிந்தவரையில் மனதைத் திறந்து கொடுக்கிறேன். கேட்டு வாங்க முயற்சிக்காமல் கிடைப்பதை நிறைவுடன் பெற்றுக்கொள்ள வேண்டும். விஷயம் அதுதான். ஏராளமான ஆட்கள் இருக்கக்கூடிய குடும்பத்தில் வளரும்போது, சிறுபிள்ளைப் பிராயத்தில் பெரிய மாமா எங்களுடைய பார்வையில் மிகப்பெரிய சக்கரவர்த்தியாக இருந்தார். நிறைய கஸின்களுடன், ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொண்டு, அன்பு செலுத்தி... இப்படி ஒன்றாக சேர்ந்து ஆடு, கோழி, வாத்து ஆகியவை வளர்வதைப் போன்ற ஒரு வளர்ப்பு... எந்தவித சூழ்நிலையுடனும் அனுசரித்துப் போகக்கூடிய பொறுமையும் சகிப்புத் தன்மையும் கிடைத்தது அந்தக் கூட்டுக் குடும்ப அமைப்பில் இருக்கும்போதுதான்... நம்முடைய ஜாயின்ட் ஃபேமிலி அமைப்பு தகர்ந்துபோனது வெள்ளைக்காரர்களின் பாதிப்பாலும் நகரமயமாக்கலினாலும்தான். இப்போதைய சிறுசிறு குடும்பப் பகுதிகளில் எல்லோரும் மிகவும் சுயநலம் கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். மற்றவர்களுக்காக அவனவனும் தன்னுடைய சிறு சிறு சுகத்தையும்கூட விட்டுத்தரத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.”