ஒற்றையடிப் பாதைகள் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6353
“இருந்தாலும் அது தேவையில்லைன்றதுதான் என் எண்ணம்” - தந்தையின் முகம் வாடியது. “மகளே, இங்கே நாங்க எல்லாரும் இவ்வளவு காலமா உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போவாவது திரும்பி வரணும்ன்ற நல்ல எண்ணம் உனக்கு உண்டானதோ என்ற விஷயத்தை நினைச்சு சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்குறப்போ...”
“ஓ... அதைப்பற்றி பரவாயில்லை. நான் இங்கேதானே இருக்கேன். கம்பெனியின் கெஸ்ட் ஹவுஸுக்கும் வீட்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கு?”
“எவ்வளவோ வித்தியாசம் இருக்குல்ல மகளே. அதை விருந்தினர்கள் இல்லம் என்றுல்ல சொல்றோம். விருந்தினர் என்று சொல்றப்போ...”
“ஒரு அர்த்தத்தில் பார்த்தால், ஒரு விருந்தாளியின் வருகைதான். ஊர் சுற்றும் பறவைகளின் சில பைத்தியக்காரத்தனமான பழக்க வழக்கங்களைப் பற்றி நான் கொஞ்சம் படிச்சிருக்கேன்.”
“அமெரிக்காவில் நீண்ட காலம் வசித்த காரணத்தால், அந்த மாதிரி உன்னால் நடக்க முடியுது. அப்படித்தானே மகளே?”
“இப்படிப்பட்ட சென்டிமென்டான வார்த்தைகளை உங்களிடமிருந்து கேட்பேன்னு நான் நினைக்கவே இல்லை அப்பா.”
“எதுவுமே இல்லைன்னாக்கூட ஆட்கள் என்ன சொல்லுவாங்க?”
“ஆட்களிடம் போய் வேலைகளைப் பார்க்கச் சொல்லுங்க அப்பா. இல்லாவிட்டால்கூட அவர்கள் என்ன சொல்வாங்க? நம்பியார் குடும்பத்தில் அப்பாவுக்கும் பொண்ணுக்குமிடையில் சண்டைன்னு பேசிக்குவாங்க. அவ்வளவுதான்” - சுதாவிற்கு சிரிப்பு வந்தது. “அந்த அளவிற்கு நம்முடைய குடும்ப வியாபாரத்தின் இப்போதைய நிலைமை ஆகிவிட்டது அல்லவா? முகலாயர்களின் காலத்தை விட மிகவும் மோசமாகிவிட்டது இல்லையா? தந்தைக்கும் மகனுக்கும் இடையில், அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில், ஒன்றுவிட்ட தம்பிமார்களுக்கு இடையில்- அடியும் பிடியும், நீதிமன்ற வழக்குகளும், பாகம் பிரிக்கும் விஷயங்களும்.. அங்கே கிடைக்கிற வர்த்தக மாத இதழ்களில் இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் மட்டுமே இப்போது இருக்கின்றன. அவை எதுவும் இல்லாவிட்டால், நான்கு பேர்களுக்குத் தெரியாமலே போயிருக்கும்.”
அவர்கள் அலுவலக அறைக்கு முன்னால் வந்திருந்தார்கள். கதவை மரியாதை நிமித்தமாகத் திறந்து வைத்துக்கொண்டு, முதுகை வளைத்துக் கொண்டு நம்பியார் சொன்னார்.
“வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா மகளே. பழைய நம்பிக்கைகள் எதையும் நாமே மீறக்கூடாது. இனிமேல் பெரும்பாலான நேரம் வேலை செய்யப் போறது இந்த அறையில்தானே. வீட்டின் அலுவலக அறை வெள்ளைக்காரர்களின் கேம்ப் அலுவலகத்தைப் போல இருக்கும்.”
அதற்குள் சுதா அறைக்குள் வந்திருந்தாள்.
“அய்யோ.. தவறுதலா நடந்துட்டேன்னு நினைக்கிறேன் அப்பா. முதல்ல வச்சது இடது காலா இருக்கும்னு நினைக்கிறேன். அதற்காக இரண்டாவது ஒருமுறை நுழைவது சரியாக இருக்காது. அப்படித்தானே அப்பா? இனிமேல் முறை தெரியாத சிலர் இடது காலை முன்னால் வைத்து நுழைஞ்சாலும் நுழையலாம். சில நேரங்களில் வேறு மாதிரியும் இருக்கலாம்.”
“பரவாயில்ல.. என் மகளுக்கு எந்த சமயத்திலும் தவறு உண்டாகாது” - தன்னுடைய அறைக்கு முன்னால் மகளை இறுக அணைத்துக் கொண்டு சிறிது நேரம் நம்பியார் நின்றிருந்தார். அவளுடைய கன்னங்களிலும் நெற்றியிலும் அவர் முத்தமிட்டார்.
“உன்னுடைய இந்த ஆடைகள் கண்களைப் பறிக்குதே மகளே” - அவர் அவள் அணிந்திருந்த ஆடைகளைப் பார்த்தார். இளம் நீல நிறத்தில் இருந்த ஜீன்ஸும், சிவப்பு நிற மேலாடையும், அதன்மீது இருந்த நீலநிற ரவிக்கையும்...
“நீ ரொம்பவும் மாறியிருக்கே. நான் போன தடவை அங்கே பார்த்த பிறகு, நிறைய...”
“இவற்றையெல்லாம் அவிழ்த்து மாற்றப் போகிறேன் அப்பா, இல்லாவிட்டால் ஒரே வெப்பம்..”
“என் பழைய ரமணிக்குட்டியை அதேபோல பார்க்க விரும்புறேன். ரமணியின் அதே சாயலில் முண்டும் மேற்துண்டும் அணிந்து, நெற்றியில் சந்தனம் பூசி, கூந்தலில் துளசி இலைகளை வைத்து..”
நம்பியாரின் கண்களில் நீர் அரும்பியது.
“எது எப்படி இருந்தாலும்.. உன்னுடைய அந்தக் கூந்தலை அறுத்திருக்கக் கூடாது. எந்த அளவிற்கு அழகான, அடர்த்தியும் நீளமும் கொண்ட கூந்தலாக இருந்தது! ரமணியின் கூந்தலைப் போலவேதான்..”
நம்பியார் சோஃபாவில் உட்கார்ந்து தன் மகளை அருகில் அமர வைத்து, நெற்றியை வருடினார்.
“தலைமுடியை வளர்ப்பதற்கு ஃப்ளோரிடாவில் சட்டப்படி தடை எதுவும் இல்லையே?” நம்பியார் சிரித்தார்.
“அப்படி எதுவும் இல்லை அப்பா. கூந்தலை கவனமா பார்த்து வளர்ப்பது என்பதே பெரிய பிரச்சினை. தலை வாரணும்.. சுத்தமா வச்சிருந்தாலும் ஒரு தோட்டத்தைப் பார்த்துக்குற மாதிரி கவனம் செலுத்தி பார்க்கணும். யாருக்கு அதற்கெல்லாம் நேரமும் வசதியும் இருக்கு? தேவையில்லாத ஒரு சுமையை சுமந்து திரிந்துகொண்டு என்ன பிரயோஜனம்? அப்பா, தெரியும்ல? தேவையில்லாத விஷயங்களை முன்கூட்டியே அங்கே இருக்குறவங்க வெட்டி எறிஞ்சிட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்பாங்க.”
“அதற்காக அதைக் கூலி கொடுத்து பண்ணிக்கணுமா மகளே? இப்படி கூந்தல் இருக்குறதுக்கு கடவுளின் அருள்தான் காரணம் என்ற நினைப்பு இருக்க வேண்டாமா? பெண் பிள்ளைகளின் அழகுன்னு சொல்றதே கண்களும், சிரிப்பும், மூக்கும், கூந்தலும்தான்..”
அதற்குள் சுதா அறையை ஒருமுறை சுற்றி நடக்க ஆரம்பித்திருந்தாள்.
“நைஸ்.. அறை மிகவும் அழகா இருக்கு! திட்டமிட்டு அமைக்கப்பட்ட சட்டங்களும், பழைய ஃபர்னிச்சர்களும், பழைய ஓவியங்களும்.. மொத்தத்தில்.. ஒரு விக்டோரியன் காலத்தைப் பார்த்த உணர்வு..”
“அப்படியென்றால் எதற்கு தேவையற்ற ஆடம்பரம் என்றுதானே சொல்றே மகளே? அதைப் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாதே. பிறகு.. கம்பெனியில் என்னுடைய அறையும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இருக்கணும். என்னதான் நவநாகரீக விஷயங்கள் வந்து சேர்ந்தாலும், அந்தப் பழைய பொருட்களின் அழகு எந்த சமயத்திலும் கிடைக்கவே கிடைக்காது. சுற்றிலும் ஈட்டி மரத்தால் ஆன சட்டங்களும்.. சுவரில் பழைய பெரிய மனிதர்களின் எண்ணெய் சாய ஓவியங்களும்.. மூலையில் ஒரு அடுப்பும்.. பார்ப்பதற்கு எவ்வளவு அழகா இருக்கும்.”
பெரிய ஒரு ஓவியத்திற்கு முன்னால் போய் நின்றிருந்தாள் சுதா.
“இந்த ஓவியத்தை நீ பார்த்திருக்க மாட்டே” நம்பியார் சொன்னார்.
“தாத்தா.. நம்ம ஊரிலேயே முதல் முதலா வெளிநாட்டுக்குப் போய் படித்த மனிதர். சின்னப் பிள்ளையா இருந்தப்போ பார்த்தது நினைவில் இருக்கு. கோட்டும் சூட்டும்.. பெரிய மீசையும்.. சிவந்த நிறமும்.. சரியாக சொல்றதா இருந்தால்.. துரையேதான்” சுதா மீண்டும் சோஃபாவிற்குத் திரும்பினாள்.
“இங்க பார்ப்பவை எல்லாம் உண்ணியின் ரசனைப்படி அமைந்தவை. அவனுடைய விரல் அடையாளம் நம்ம கம்பெனியிலும் எல்லா இடங்களிலும் இருக்கும்..”
“ம்” - அவள் மெதுவாக முனகினாள். “அப்படின்னா, உண்ணி அத்தான் இனிமேல் போறதா இல்லைன்னே முடிவு பண்ணியாச்சு.. அப்படித்தானே?”