ஒற்றையடிப் பாதைகள் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6353
தனக்குள் ஏதோ ஒன்று நெளிந்து கொண்டிருப்பதை உண்ணியால் உணர முடிந்தது. சிறிது நேரம் முகத்தைத் தாழ்த்திக் கொண்டு உட்கார்ந்துவிட்டு, அவன் மெதுவாக எழுந்து சாளரத்திற்கு அருகில் போய் நின்றான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து, வெறியுடன் புகையை விழுங்கினான்.
“அந்த சாளரத்தை மூடுங்க” பின்னால் சுதாவின் குரல் கேட்டது. “ஏசியைக் கொஞ்சம் ஆன் செய்தால் நன்றாக இருக்கும். இஃப் யூ டோன் மைன்ட்... பிறகு... என்னுடைய அறையில் யாரும் சிகரெட் பிடிப்பதை நான் விரும்பவில்லை தெரியுதா?”
எதுவும் பேசாமல் அவன் ஜன்னல்களை இழுத்து அடைத்தான். ஏ.சி.யை ஆன் செய்தான். வேறு வழியில்லாமல் சிகரெட்டைக் குத்தி அணைத்து, ஆஸ்ட்ரேயில் போடும்போது அவன் சற்று திரும்பி பார்த்தான். சுதாவின் கண்கள் அப்போதும் மேஜைமீது இருந்த பேப்பர்களில்தான் இருந்தன.
“நிற்க வேண்டாம், அங்கே உட்காரலாமே” முகத்தை உயர்த்தாமலே அவள் சொன்னாள். “பேப்பர்களின் முக்கியத்துவம் என்பதைப் பற்றி சொல்றப்போ, என்னால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இந்தப் பேப்பர்கள் என்று கூறப்படுபவை நாம் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எழுதி தயார் பண்ணுபவைதானே? அப்படி இருக்கும்போது- அந்த சூழ்நிலைகள் மாறும்போது, சிலவற்றையாவது கிழத்து எறிய வேண்டும். நெருப்பில் எரியச் செய்ய வேண்டும். வேறு சிலவற்றை சட்டத்திற்கு ஏற்றபடி வாசகங்கள் எழுதி அழித்துவிட வேண்டியதிருக்கும் அல்லவா?”
“என்ன சொல்றே?” - அவனுடைய முகம் வெளிறிப் போனது. தயங்கித் தயங்கித்தான் அவன் பேசினான். அவனுக்குள் வேறு ஏதோவொன்று ஓடிக் கொண்டிருந்தது. “பெரிய அளவில் நம்பிக்கைகள் கொண்ட நம்முடைய மிகப்பெரிய லட்சியத் திட்டம் இது. இந்த அளவிற்கு முன்னோக்கிச் சென்றிருக்கும் நிலையில், ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு மெஷினரிகளும் ஆர்டர் செய்யப்பட்டுவிட்டன. இன்டஸ்ட்ரியில் நம்முடைய குரூப்பின் பெயரும் இமேஜும்... சற்று அதிகமான பணத்தையும் இதுவரை முதலீடு செய்திருக்கிறோம். இந்த நிலைமையில் அதையெல்லாம் அங்கிளால் தாங்கிக் கொள்ளத்தான் முடியுமா?”
“அப்பாவை வெறுமனே விடுங்க” - சுதாவின் குரல் உயர்ந்தது. “அப்பாவைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும். இதையும் இதன் இரண்டு மடங்கையும் தனி மனிதனாக சந்திக்கக்கூடிய தைரியம் அப்பாவுக்கு இருக்கு.”
“இருந்தாலும் இதற்குப் பின்னால் இருக்கும் சில மனிதர்கள்...”
“அதாவது- முக்கியமாக நீங்கள்... அப்படித்தானே? அப்பாவை முன்னால் நிறுத்தி, பின்னால் இருந்து கொண்டு அம்பை விடும் தைரியசாலி...”
அவளுடைய பார்வையை சந்திக்க முடியாமல், அவன் எதிர் திசையிலிருந்த சோஃபாவில் போய் உட்கார்ந்தான். கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுத்தித் துடைக்கும்போது, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகைக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டானது. அவள் என்னவெல்லாம் கூறுகிறாள்? அவளுக்குள் என்னதான் ஓடிக் கொண்டிருக்கிறது?
“உண்ணி அத்தான், உங்களுக்கு அதிகமாக வியர்வை வருதே? முன்கூட்டியே ஏ.சி.யை ஆன் செய்திருக்கலாம்ல? அடைந்து கிடக்கும் அறைதானே? கொஞ்சம் நல்ல காற்றும் வெளிச்சமும் உள்ளே வரட்டும்ணு நினைச்சேன். நம்மைப் போன்ற தொழில் செய்பவர்கள் காற்று, வெளிச்சம், பசுமை ஆகியவற்றுக்கு எதிரிகளாக இருக்கணும் என்பதுதானே இப்போது நாட்டு நடப்பாக இருக்கிறது” - அவள் சிரித்தாள்.
சிறிது நேரம் கழித்து மிகவும் தாழ்ந்த குரலில் அவன் கூறுவதை சுதா கேட்டாள்.
“சுதா, நீ இப்போத்தானே வந்திருக்கே! மெதுவாக அமைதியாக இருந்து கொண்டு இந்த புதிய ப்ராஜெக்ட்டுகளை பற்றிப் படித்து...”
“எதையும் படிப்பதாக இல்லை...”- அவளுடைய குரல் உடனடியாக வந்து மோதி நின்றது.
“இனிமேல் இந்த விஷயத்தில் எந்தவொரு முயற்சிகளையும் எனக்குத் தெரியாமல் செய்ய வேண்டாம். இப்பொழுதே சரியான ஒரு லைனை எடுத்தால், மேலும் பேப்பர்களின் சுமைகளில் இருந்து நீங்க தப்பிக்கலாம் உண்ணி அத்தான்.”
“சுதா, அங்கிளிடம் சிறிது டிஸ்கஸ் பண்ணிவிட்டு...” தன்னுடைய குரல் நடுங்குவதை உண்ணி உணர்ந்தான்.
அவளோ அதைக் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
“உண்ணி அத்தான், கிழிக்க வேண்டிய பேப்பர்களை நீங்களே தனியாக உட்கார்ந்து கிழித்தெறிவதுதான் நல்லது. இந்த பொயட்டிக் ஜஸ்டிஸ் என்று கூறும்போது, அது மிகவும் கண்மூடித்தனமான ஒன்றாகிவிடும் இல்லையா? ஒருமுறை சற்று அதிகமான பேப்பர்களை நான் கிழித்துவிட்டேன். இனிமேல் உண்ணி அத்தான் உங்களின் முறை. அது சக்கரத்தின் ஒரு பெரிய சுற்றாக இருக்கலாம். எனினும் என்னுடைய மனதில் வேறு சில ப்ராஜெக்ட்டுகள் இருக்கின்றன.”
“அதாவது...?”
“கெமிக்கல்ஸ், பெட்ரோ கெமிக்கல்ஸ்... இவை எதுவும் நம்முடைய குரூப்பிற்கு சிறிதுகூட தேவையில்லை. அப்படிப்பட்ட லைன்களை விட்டு நாம் விலகியே இருக்க வேண்டும். இயற்கையில் விஷத்தைக் கலப்பதற்குத் தான் வேறு ஏராளமான ஆட்கள் இருக்கிறார்களே, நம்பியார் குடும்பமும் அதில் பங்கு பெற வேண்டாம்.”
“பொல்யூஷன் விஷயத்தில் எல்லா ஏற்பாடுகளையும் நாம் ஏற்கனவே செய்திருக்கிறோம்.”
“வேண்டாம்...” - சுதா கையை உயர்த்தினாள். “அவையெல்லாம் எந்த அளவிற்கு நடக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். சட்டத்தை மீறி நடப்பதற்கான ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதற்கு நம்முடைய ஆட்கள் மிகவும் திறமைசாலிகள். அதனால் மாசுக் கட்டுப்பாடு பேப்பரிலேயே இருந்துவிடும்.”
“அப்படி சொல்ல முடியாது. அந்த விஷயத்தில் தேவையான வேலைகள் முடிக்கப்பட்டுவிட்டன.”
சுதா அதைக் காதில் வாங்காத மாதிரி கூறினாள்.
“அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆந்திரக்காரரை எனக்கு நன்றாகத் தெரியும். பெயர் சத்யநாராயணா. கம்ப்யூட்டரில் ஒரு ஜீனியஸ் என்றே சொல்லலாம். அவருடைய பன்னிரண்டு வயதான மகன் கம்ப்யூட்டர் விஷயத்தில் அவரைவிட திறமைசாலி. ஒரு சாஃப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனத்தைப் பற்றி நான் அவருடன் பேசியிருக்கிறேன். ஒன்று- பெங்களூர். இல்லாவிட்டால் நம்முடைய மாநிலத்தில் எங்காவது படித்த சில மாணவர்களுக்கு வேலை கிடைத்தது மாதிரியும் இருக்கும். குறிப்பாக நம்முடைய இளம்பெண்களுக்கு பிறகு... பொல்யூஷன் பிரச்சினை இல்லாத சில ஹைடெக் ப்ராஜெக்ட்டுகளும் மனதில் இருக்கின்றன. அங்கு இருக்கும் என்.ஆர்.ஐ.களின் உதவி தேவைப்படும் அளவிற்குக் கிடைக்கும். பணம், டெக்னாலஜி எந்த பிரச்சினையும் இல்லை. இந்தத் துறைக்குள் நுழைவதற்கு பலருக்கும் பெரிய விருப்பம் இருக்கிறது. அதை செயல்படுத்துவதற்கு இங்கு ஒரு நல்ல குரூப் இருந்தால் போதும்.”
“திடீரென்று இப்படியொரு மாறுதல் உண்டாகும்போது” - உண்ணி இடையில் புகுந்து சொன்னது சுதாவிற்கு சிறிதும் பிடிக்கவில்லை என்று தோன்றியது. அவள் அவனுடைய முகத்தையே வெறித்துப் பார்த்தாள்.