ஒற்றையடிப் பாதைகள் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6353
“அப்பா, நீங்க சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய சுகத்திற்காகத்தான் நான் இங்கு தங்கியிருக்காமல், தனியாகத் தங்கி இருக்கிறேன் என்று நீங்க நினைக்கிறீர்களா?”
நம்பியார் எதுவும் பேசவில்லையென்றாலும், அந்த முகத்தில் எழுதப்பட்டிருப்பதை வாசித்துப் புரிந்து கொள்வதற்கு சுதா அப்படியொன்றும் கஷ்டப்படவில்லை.
“மற்றவர்களிடம் அனுசரித்துப் போக வேண்டியது இருக்குமே என்பதற்காக இல்லை. இருந்தாலும் என்ன காரணத்தாலோ தனியாக இருக்க வேண்டும் என்றொரு ஆசை.”
“இங்கேயும் தனியாகத்தானே இருக்கப் போறே! நாங்கள் யாரும் தேவையில்லாமல் வந்து தொந்தரவு கொடுக்கப் போவது இல்லையே. அந்த மேலே இருக்கும் மாடி முழுவதையும் எடுத்துக்கோ. தேவைப்பட்டால் அதையே உன் சாம்ராஜ்யமா வச்சுக்கோ. ஒரு காவலாளியைக்கூட நிற்க வைக்கிறேன் - யாரும் மேலே வராம பார்த்துக்குறதுக்கு அது போதாதா?”
“அந்தக் காரணத்தால் அல்ல. ஒரு வகையில் பார்க்கப் போனால் தேவையில்லாத சில பழக்க வழக்கங்கள்... அப்படித்தானே? சரி, அங்கேயே இருந்து பார்க்குறேன். பிறகு யோசிப்போம்.”
“எல்லாம் உன் விருப்பம். பிறகு நான் என்ன சொல்றது?”
மகள் தன் தந்தையின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்பா, நான் உங்களை மிகவும் கவலைப்படச் செய்துவிட்டேனா?”
“ஓ... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. உண்மையாகச் சொல்லப் போனால் அப்படியொன்றும் ரமணி போன பிறகு தோன்றவே இல்லை. எல்லாம் ஒரு மாதிரி போய்க் கொண்டு இருக்கு. பிசினஸ் விஷயங்களை உண்ணி பார்த்துக் கொள்வான். நான் ஒரு மேற்பார்வை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும். அவன் திறமைசாலி. மரியாதை தெரிந்தவன். பிறகு... இங்கே இருக்கும் விஷயங்கள் இருக்கின்றனவே. அவற்றைப் பார்த்துக் கொள்ள அச்சுதன் நாயரும் தேவகியம்மாவும் போதுமே.”
சுதா எழுந்தாள்.
“அப்பா, நான் உங்களுக்குக் கொஞ்சம் மது ஊற்றித் தரட்டுமா? பழைய பழக்கத்தை நிறுத்திவிடவில்லை அல்லவா? உங்களுக்காக என்றே நான் ஒரு பொருளை எடுத்து வச்சிருக்கேன்.”
“பழக்கம் எதையும் நிறுத்தி விடவில்லை மகளே. சாப்பாட்டுக்கு முன்னால் இரண்டு ஸ்காட்ச். அது ஒரு பழக்கமாகிவிட்டது. இனிமேல் அதுவும் இல்லாமல் போனால் இந்த வாழ்க்கைதான் எதற்கு? இரவில் தூக்கம் வர வேண்டாமா? எனக்கு ஒரு ஆசை இருக்கு. இறக்கும் வரையில் அவ்வப்போவாவது கொஞ்சம் பால் பாயாசம் குடிக்கணும். பிறகு இரவில் இரண்டு... இறுதியில் சாகக் கிடக்கிறப்போ, கங்கை நீருக்குப் பிறகு, குறைந்தது ஒன்றாவது... ஒன் ஃபார் ரோட்! அதற்குப் பிறகு மேலே செல்லும் பயணம் சந்தோஷமானதாக இருக்கும்.”
கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கண்ணாடிக் குவளையில் அவள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் மதுவை ஊற்றும்போது, ஐஸ் கட்டிகளை இடும்போது, அதையே பார்த்தவாறு நம்பியார் கூறினார்.
“சில நேரங்களில் எல்லாவற்றையும் உங்க இரண்டு பேரிடமும் ஒப்படைத்து விட்டு, ரிஷிகேசத்திற்கோ வேறு எங்கோ போய் சில நாட்கள் இருந்தால் என்ன என்று தோணும். எதற்கு, யாருக்காக இந்த கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்? செய்யும் வேலையில் முன்பு மாதிரி ‘த்ரில்’ எதுவும் கிடைக்கவில்லை என்னும்போது, வயதான ஒரு உணர்வு...”
தெளிவான பார்வையுடன் சுதா நினைத்துப் பார்த்தாள். அவளுடைய தந்தை மிகவும் மாறி விட்டிருக்கிறார். எல்லோருக்கும் தெரியக்கூடிய மிகப்பெரிய குரூப்பின் தலைவர்... தொட்டவற்றையெல்லாம் பொன்னாக்கக்கூடிய விரல்கள்... கொள்கைகள் விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு இருக்கும் காரணத்தால் சிறிதும் குறைவே இல்லாமல் பெரிய ஒரு இமேஜை பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்க நிரந்தரமாக அவரால் முடிந்திருக்கிறது. அதனால அவருக்கு எங்கும் ஒரு சிம்மாசனம் கிடைத்தது... கேட்காமலேயே சரியாக சொல்லப் போனால், இந்தத் தொழில் உலகத்தின் பிதாமகனாக இருப்பவர் அவர். இந்தத் துறையில் புதிதாகக் கால் வைப்பவர்கள் முதலில் அறிவுரைகள் கேட்டு வருவது அவரிடம்தான். எனினும் இப்போது எப்படியோ, எங்கேயோ அவருடைய தந்தையின் லட்சியத்தின் முனை ஒடிந்து விட்டதைப்போல தோன்றுகிறது. மனிதனின் லட்சியத்திற்கு எல்லையே இல்லை என்று ஒருமுறை கூறிய அதே தந்தைதான்...
கண்ணாடிக் குவளையை டீப்பாயில் வைத்தபோது, தன்னையே அறியாமல் அவள் கேட்டுவிட்டாள்.
“அப்பா, இந்த வெறுப்பு நிறைந்த பேச்சை என்னால் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. அடைய வேண்டியவை அனைத்தையும் அடைந்து விட்டோம் என்று தோன்றுகிறதா?”
“அதென்ன மகளே அப்படிச் சொல்றே... தொழில்கள் உண்டாக்குவதும், அவற்றை நடத்திக் கொண்டு செல்வதும் கிரியேட்டிவிட்டியின் பகுதி ஆயிற்றே! நான் எப்போதும் கிரியேட்டிவ்வாக இருந்தவன் ஆயிற்றே! அதன் முனையை ஒருவனால் அடைக்க முடியுமா? அது ஒரு பெரிய காதல் உறவு ஆயிற்றே! இடையில் அவ்வப்போது தளர்ச்சி உண்டாகலாம். எனினும் அதற்குப் பிறகும் திரும்பி வராமல் இருக்க முடியாதே! ஒருவேளை, அதற்குக் கிடைக்கும் சந்தோஷம் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். இது வாழ்க்கை ஆயிற்றே!”
“என்ன காரணமோ தெரியவில்லை... அப்பா, உங்களுடைய பேச்சில் பழைய உற்சாகத்தைப் பார்க்க முடியவில்லை. எல்லா விஷயங்களிலும் தேவையற்ற ஒருவகை திருப்தி தெரிகிறது. ஒருமுறை திருப்தி தோன்றி விட்டால், எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் ஆகிவிடும். போதாது, போதாது என்று தோன்றும்போது தானே புதியது ஏதாவது உண்டாகும்?”
“சரியாக இருக்கலாம். சில நேரங்களில், சில விஷயங்களில் வேண்டிய அளவிற்கு சென்ஸ் ஆஃப் டைரக்ஷன் கிடைக்காமல் போய்விடுகிறது. பிசினஸ் என்று வரும்போது கணக்கு கூட்டல்கள் தவறாக ஆகலாம். சரியாகவும் ஆகலாம். அது தொழிலின் பகுதிதானே! ஆனால், நான் அதை சொல்லவில்லை. நம்முடைய மனதிற்குள் ஒரு பார்வை இருக்குமே! காலத்தைத் தாண்டி போகக்கூடிய ஒரு பார்வை சக்தி. அதைக் கொண்டுதானே எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். அது சில நேரங்களில் தெளிவாகத் தெரியாமல் போய்விடும். பிறகு... உள்ளே கிடைக்கும் இன்ட்யூஷன்! சிறிதுகூட நினைத்திருக்காத நேரத்தில் உள்ளே இழுத்துக் கொண்டு யாரோ அழைத்துக் கூறுவார்கள். இப்போது, முன்பைப்போல அந்த உள் அழைப்பு கேட்பதில்லை. இந்த அளவிற்கு வந்தாகிவிட்டது அல்லவா? இனி போதும் என்பது மேலே உள்ள தீர்மானமாக இருக்கலாம். பிறகு... இன்னொரு விஷயம் இருக்கு.”
நம்பியார் தன் பேச்சை சிறிது நிறுத்தினார். கண்ணாடிக் குவளையை காலி செய்துவிட்டுத் தொடர்ந்தார்.