ஒற்றையடிப் பாதைகள் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6353
சுதாவின் முகத்தில் இப்போதும் அதே பாறையைப் போன்ற இறுக்கம் இருந்தது. பேனாவின் முனைப் பகுதியைக் கடித்தவாறு அவள் என்னவோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
மேஜைமீது இருந்த பேப்பர் வெயிட்டை வெறுமனே சுழற்றியவாறு எதுவும் பேசாமல், அவளுடைய அசைவுகளையே உற்றுப் பார்த்துக் கொண்டு உண்ணியும் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து, சற்று தயங்கிக் கொண்டே அவன் சொன்னான்.
“அங்கிள் மிகவும் வருத்தத்துல இருக்கார்னு நினைக்கிறேன்.”
“ஏன்?” அவள் தலையை உயர்த்தினாள்.
“சுதா, நீ வர்ற விஷயத்தைக் கேள்விப்பட்டு, கொஞ்ச நாட்களாகவே அவர் முற்றிலும் மாறிப் போயிருந்தார். ஒரு வகையில் சொல்றதா இருந்தால், அவர் துள்ளிக் குதித்து நடந்து கொண்டிருந்தார். ஆனா, இப்போ நீ தனியா கெஸ்ட் ஹவுஸில்...”
“அதுவும் தங்கி இருக்கக்கூடிய ஒரு இடம்தானே?”
“இந்த அதிர்ச்சி வைத்தியம்லாம் யாருக்காக? தெரியாமல் கேட்கிறேன்.”
“ஒரு அதிர்ச்சியும் இல்லை. வைத்தியமும் இல்லை. அப்படி தோணுச்சு. அவ்வளவுதான். இப்படிப்பட்ட சிறிய தீர்மானங்களுக்குப் பின்னால் பெரிய ஒரு திட்டத்தைப் போடக்கூடிய குருட்டு புத்தி எதுவும் எனக்கில்லை.”
“இருந்தாலும், அங்கே அங்கிளை தனியா விட்டுட்டு.”
“சில வருடங்களாகவே அப்பா தனியாகத்தானே இருந்தார். அதே மாதிரி நானும் இப்போ பழகிவிட்டிருக்கேன்.”
உண்ணி விஷயத்தை மாற்றப் பார்த்தான்.
“பயணம் சுகமாக இருந்ததா?”
“ஓ... என்ன சுகம். யாருமே இல்லாமல், ஒரு வட்டத்திற்குள் சிக்கிய எறும்பைப்போல வானத்திலேயே எத்தனையோ மணி நேரங்கள்! கடல்களைக் கடக்கும்போது, கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி நேரத்தைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் நகர்த்தி... ஒரு வகையில் பார்க்கப் போனால் மிகப்பெரிய கோமாளித்தனம்தான். பாதி உலகம் தூங்கிக் கொண்டும், எஞ்சிய பாதி கண் விழித்துக்கொண்டும் இருக்க, இரண்டையுமே செய்ய முடியாமல் தெறித்துக் கொண்டிருக்கும் தலையுடன் கண்களை விழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.”
உண்ணியின் கண்கள் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
“சுதா, நீ ரொம்பவும் மாறிப் போயிட்டே - எல்லா வகைகளிலும்...”
“என்னை முப்பத்தைந்து வயது கொண்ட ஒரு பெண்ணின் வடிவத்தில் பார்க்க வேண்டியதிருக்கும் என்று எந்தச் சமயத்திலும் நீங்க மனதில் நினைச்சிருக்க மாட்டீங்க. அப்படித்தானே.”
“ஓ... அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. இருந்தாலும் வேறு யாரையோ பார்ப்பதைப்போல... அந்த நீளமான தலைமுடி முழுவதையும் வெட்டி குட்டையாக்கி... அத்தையிடம் இருந்ததைப்போல இருந்த அழகான முடி...”
“சுமையாக இருப்பதாக உணரக்கூடியவற்றை நேரம் கிடைக்கிறப்போ நீக்கி விடுவதுதானே நல்லது! மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் பெரிய ஒரு சுமையை சுமந்து கொண்டு திரிய வேண்டும். வேறு எந்தவொரு வேலையும் இல்லாமல் அதை இப்படி தடவி கவனம் செலுத்தி, அலங்கரித்துக் கொண்டு நடக்க வேண்டும். அந்தக் காலமெல்லாம் கடந்து போய்விட்டதே! அன்று பெண்களுக்கு வேறு வேலை இல்லாமலிருந்தது.
“அப்படியா? எனக்குத் தெரியாது” - உண்ணி தன் தோள்களைக் குலுக்கினான். “இருந்தாலும் ஒரு விஷயத்தை மட்டும் நான் கவனித்தேன். மனிதன் என்னதான் மாறினாலும், ஏதாவது பழைய கயிறு ஒன்று எங்கேயாவது கிடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுதா, உன்னுடைய விஷயத்தில், இப்போ ஒண்ணே ஒண்ணு எஞ்சி நிற்கிறது... அந்தப் பழைய மொழி. அதன் எல்லா வாசனைகளையும் கொண்டு. இவ்வளவு வருடங்கள் கடந்தோடிய பிறகும் அந்த உச்சரிப்பில்கூட எந்தவொரு மாறுபாடும் உண்டாகவில்லை.”
“சில நேரங்களில் அதன் சுமையை உணர்வது உண்டு. இருந்தாலும் என்ன காரணமோ தெரியவில்லை... அந்த சுவை என்னிடமிருந்து போகவில்லை. அது எனக்குள்ளேயே தங்கிவிட்டது. பிறகு... நம்பியாரின் மகளான என்னிடம் அதுவாவது எஞ்சியிருக்கட்டுமே என்று நினைத்தேன். சொல்லப் போனால் அங்கு பிறந்து வளர்ந்த மலையாளிகளின் பிள்ளைகளும் பல நேரங்களில் மலையாளத்தில் பேச வேண்டிய சூழ்நிலை வரும்போது என்னுடைய இந்த மொழியைக் கேட்டு அவர்கள் சிரியோ சிரி என்று சிரிப்பார்கள்.”
சுதா திடீரென்று தன் பேச்சை நிறுத்தினாள். எதையோ நினைத்துக் கொண்டு சிறிது நேரம் அவள் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய நடவடிக்கை திடீரென்று மாறுவதையும் முகம் இருள்வதையும் உண்ணி கவனித்தான்.
“இங்கு சில புதிய திட்டங்களைப் பற்றி முடிவு செய்யப் போறதா கேள்விப்பட்டேன்.”
“பேப்பர்லதான் இருக்கு” உண்ணி சொன்னாள். “இருந்தாலும் நினைத்ததைவிட விஷயங்கள் வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன. பிறகு... நம்ம நாடாச்சே! இந்த அளவுக்காவது விஷயங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்றால், அதற்குக் காரணம் யாரோ செய்த புண்ணியம்தான்.”
“ம்” சுதா மெதுவான குரலில் முனகினாள். “நமக்கு கொஞ்சமும் அறிமுகமே இல்லாத லைன். நான் திரும்பி வருவதற்கு முடிவு செய்த சூழ்நிலையில்... என்னிடம் ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்க வேண்டும். இடையில் அவ்வப்போது அப்பா தொலைபேசியில் என்னுடன் பேசத்தானே செய்கிறார்?”
உண்ணி அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டான்.
“அங்கிள் சொல்லி இருப்பார்னு நினைச்சேன்.”
“இங்கே ஒரு ஆள் கூறுவது மட்டும்தானே அப்பாவுக்கு வேத வாக்கியமா இருக்கு! ஒரு பக்கம் பெரிய ஒரு பொறுப்பை என்னிடம் தரவேண்டும் என்று நினைக்கிறார். அதே நேரத்தில் எனக்குப் பின்னால் இருந்து கொண்டு சில பெரிய முடிவுகளையும் எடுக்கிறார்.”
“அப்படியொண்ணும் இல்லை” - உண்ணி சற்று தயங்கிக் கொண்டே கேட்டான். “சுதா, இதில் உனக்கு ஏதாவது எதிர்ப்பு?”
“வெறும் எதிர்ப்பு இல்லை, விருப்பமே இல்லை. அவ்வளவுதான். அது மட்டுமல்ல என் மனதில் வேறு சில திட்டங்கள் இருக்கின்றன. நிர்வாக விஷயங்களைப் பற்றி நானும் கொஞ்சம் படிச்சிருக்கேன்... எவ்வளவோ பணத்தை செலவழித்து...”
அவளுடைய குரலில் கலந்திருந்த கிண்டல் தன்னை நோக்கித் தான் என்ற விஷயம் உண்ணிக்கு நன்றாகத் தெரியும். ஹார்வர்டின் பின்புலத்தை அவள் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
எனினும், அவன் விளக்கிக் கூற முயன்றான்.
“சுதா, நீ என்ன சொல்றே? எம்.ஓ.வில் கையெழுத்துப் போட்டாகி விட்டது. எல்லா பேப்பர்களும் நகர்ந்து விட்டன. ஃபைனான்ஸ், மெஷினரி இறக்குமதி ஆகிய விஷயங்களில் ஒப்பந்தம் போட்டு முடித்த நிலையில் இப்போ... இந்த கட்டத்தில் நாம் ஒரு பெரிய பப்ளிக் இஷ்யூ சம்பந்தப்பட்ட விஷயத்தை மெர்ச்சன்ட் பேங்கர்ஸுடன் பேசிக் கொண்டிருக்கும்போது...”
“எந்தப் பேப்பர்களாக இருந்தாலும், தேவைப்பட்டால் அவை கிழித்து எறியப்பட வேண்டியவைகளே உண்ணி அத்தான்” சுதாவின் உதடுகள் துடித்தன. “அப்படிப்பட்ட சில பேப்பர்களை ஒரு காலத்தில் நானும் கிழித்து எறிந்திருக்கேனே. உண்ணி அத்தான், உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் கையெழுத்தைத்தான்.”