ஒற்றையடிப் பாதைகள் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6353
“மன்னிக்கணும். நான் இந்த ஆடைகளை மாற்றிவிட்டு வருகிறேன்” - சுதா திரும்பி நடந்தாள்.
இளம் ரோஸ் நிறத்தில் இருந்த ஒரு மெல்லிய கவுனை அவள் அணிந்திருந்தாள். ராமன் குட்டி தன்னுடைய கிராமத்திற்குப் போய்விட்டதால், இந்த இரவு வேளையில் அது இருந்தால் போதும் என்று அவள் நினைத்திருந்தாள்.
“இல்லாவிட்டால் வேண்டாம்...” அவள் திரும்பி வந்தாள். “இங்கே இப்போது... வேறு யாரும் இல்லையே.”
அவள் எதிரில் இருந்த சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
உண்ணியின் கூர்மையான பார்வை தன்னுடைய உடலின் வழியாக நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து, அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
“என்ன, நான் ஆடைகளை மாற்றிவிட்டு வரணுமா?”
“ஏய் வேண்டாம்” - தவறு நடந்துவிட்டதைப்போல அவன் சிரிக்க முயற்சி செய்தான்.
“பிறகு... என்ன?”
“ஒண்ணுமில்ல...”
“என்ன... இந்த இரவு நேரத்தில் ஃபோன்கூட செய்யாமல்...?”
“ஃபோனில் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வழியே போனபோது கொஞ்சம் நுழைஞ்சு பார்க்கலாமே என்று நினைத்தேன். சுதா, நீ ஃப்ரீயா இருப்பியான்னு சந்தேகமா இருந்தது.”
“கம்பெனி கெஸ்ட் ஹவுஸாக இருந்தாலும், இங்கு... இப்போது நான் மட்டுமே இருப்பேன் என்ற விஷயம்... உண்ணி அத்தான், உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு பெண் தனியாகத் தங்கியிருக்கும் இடத்தைத் தேடி வரும்போது, சில சிறு சிறு விஷயங்களைப் பின்பற்றுவது நல்லது அல்லவா? குறைந்தபட்சம் ஒரு ஃபோன் தகவல்.”
“மன்னிக்கணும். அந்த அளவுக்கு நான் திட்டம் போட்டு வரவில்லை. இந்த வழியே போனபோது... அது இருக்கட்டும் சுதா, உனக்கு பிரச்சினைன்னா நான் போயிடுறேன்.”
“எது எப்படியோ... நீங்க வந்துட்டீங்க... இங்கே நுழைஞ்சு உட்காரவும் செய்துட்டீங்க. அந்த அளவுக்கு ஆனபிறகு வெளியே போகச் சொல்ற அளவுக்கு மரியாதைக் குறைவாக நடக்க நான் கத்துக்கல. பிறகு... என்ன இருந்தாலும் என்னுடைய முறைப்பையன் ஆயிற்றே.”
சுதாவின் முகத்தில் இதற்கு முன்பில்லாத ஏதோவொன்று வெளிப்படையாகத் தெரிந்தது. இனிமேலும் அங்கு இருப்பது அந்த அளவிற்கு நல்லதாக இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது.
அவள் திரும்பவும் கேட்டாள்.
“பிறகு... என்ன கொஞ்சமும் எதிர்பார்க்காமல்..?”
“ஓ.. அப்படியொண்ணும் இல்ல..” அவன் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.
“இல்ல... இப்படி இரவு நேரத்தில் வந்து நுழைஞ்சிட்டு, ஒண்ணுமில்லைன்னு சொன்னா எப்படி? என்னிடம் டிஸ்கஸ் பண்றதுக்காக, அந்த அளவுக்கு ஏதாவது அவசரமான விஷயம் இருக்கும் என்று நினைத்தேன்.”
“அப்படியொண்ணும் இல்ல” - அவன் சற்று நிறுத்தினான். அவளுடைய முகத்தையே உற்றுப் பார்த்துவிட்டு, அவன் சொன்னான். “இருந்தாலும், நீ நேற்று சொன்ன விஷயத்தைப் பற்றி பிறகு நான் சிந்தித்துப் பார்த்தேன்.”
“எந்த விஷயம்?”
“நம்முடைய புதிய ப்ராஜெக்டைப் பற்றி.”
“நம்முடையது என்று சொல்ல வேண்டாம். உங்களுடையது என்று கூறுவதுதானே சரியாக இருக்கும்?”
“சுதா, நீ ஏதோ தவறுதலா நினைக்கிறேன்னு தோணுது. நான் அது சம்பந்தப்பட்ட எல்லா பேப்பர்களையும் கொடுத்து அனுப்புறேன். எந்தவித முன் முடிவும் இல்லாமல், அதை விரிவாக படித்துப் பார்த்தேன்னா நல்லது. அதற்குப் பிறகு, தேவைப்பட்டால் நம்முடைய கன்சல்ட்டன்ஸை வைத்து ஒரு பிரசன்டேஷன் நடத்துவோம். பப்ளிக் இஸ்யூவிற்காக மெர்ச்சன்ட் பேங்கர்ஸும் ப்ராஜெக்டை நல்ல முறையில் படிச்சு முடிச்சிருக்காங்க. அவர்களுடன் ஒரு செஷன்.”
“போதும், போதும்” -சுதாவிற்கு சிரிப்பு வந்தது. “இந்த கம்பெனிக்காக... பாவம் உண்ணி அத்தான், நீங்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுறீங்க?”
“உரிய நேரத்தில் நாம இதை செயல்வடிவில் கொண்டுவர வேண்டும் என்பது அங்கிளின் மிகப்பெரிய விருப்பமாக இருந்தது நல்ல பலன்கள் இருக்கக்கூடிய லைன். இந்தப் புதிய ஜெர்மன் டெக்னாலஜியைப் பயன்படுத்தும், இந்த அளவிற்கு கெப்பாசிட்டி உள்ள ஒரு யூனிட் இந்தியாவிலேயே முதல் தடவையாக இதுதான். இப்போது குஜராத்தில் ஏதோ அதைப்பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
அதற்கு முன்பே, நாம்... ஃபாரின் கரன்ஸி கடன் விஷயத்தைக்கூட சரி பண்ணியாச்சு. மெஷினரி இறக்குமதி செய்வதற்கான எல்ஸி ஓப்பன் செய்யப் போறோம். அடுத்த வாரம் நான் ஃப்ராங்ஃபர்ட்டிற்கு...”
“அந்த விஷயத்தை நான் அப்பாவிடம் கூறிவிட்டேனே?”
“அங்கிள் சொன்னார். சுதாக்குட்டி, அதனால்தான் அந்த விஷயத்தை உன்னிடம் நேரடியா...”
சுதாக்குட்டி.. அவள் சிரிப்பை அடக்க முயற்சித்தாள். இப்படி அழைத்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன.
“முப்பத்தைந்து வயதான என்னை எந்த வகையில் குட்டியாக உங்களால் பார்க்க முடிகிறது உண்ணி அத்தான்? ஒண்ணு- மிஸ் சுதா நம்பியார் என்று குறிப்பிடலாம். இல்லாவிட்டால் வயது அதிகமான கஸின் என்ற முறையில் வெறும் சுதா என்று சொல்லலாம். முதல்ல சொன்னதுதான் அதிகப் பொருத்தம் உள்ளதாக இருக்கும்னு தோணுது.”
“சுதா.. நான்..”
சுதா எழுந்து கையைப் பின்னால் கட்டிக்கொண்டு அங்குமிங்குமாக நடக்க ஆரம்பித்தாள்.
“உண்ணி அத்தான், நான் ஒரு ட்ரிங் ஊற்றித் தரட்டுமா?”
“பார்த்தப்பவே நான் நினைச்சேன். இங்கே வர்றதுக்கு இந்த அளவுக்கு தைரியம் இருக்குறது நல்லதுல்ல.. நான் சொல்றது சரிதானே?”
உள்ளுக்குள் ஏதோ மூலையில் இருந்து கூர்மையான வார்த்தைகளைப் பொறுக்கிப் பொறுக்கி அவனுடைய முகத்தின்மீது எறிவதில் என்ன காரணத்தாலோ அவள் அதிகமான சந்தோஷத்தைக் கண்டாள். ஒரு கிறிஸ்துமஸ் கால இரவு வேளையில், அப்பார்ட்மெண்ட்டிற்குச் செல்லும் வழி முழுவதும் மூடிவிட்டிருந்த பனிப் படலத்தின் வழியாக கால்களை இழுத்துக் கொண்டு நடக்கும்போது தலை சுற்றும் தெளிவே இல்லாமல் இருந்தது. ஏதோ அறிமுகமில்லாத இளைஞனின் தோள்மீது சாய்ந்து கொண்டு மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டே நடக்கும்போது, உள்ளுக்குள் எங்கோ தந்தையின் கடிதத்தின் ஒன்றிரண்டு வாசகங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அத்துடன் புதிய ஒரு பெயரும்- தெரேஸா.
தெரேஸா.. தெரேஸா.. தெரேஸா..
பிடிவாதமாக அன்று அவளுக்கு ஒரு முகத்தைக் கொடுக்க அவள் நினைத்தாள். சிவப்புப் புள்ளிகள் விழுந்த முகம், இருட்டைத் துளைத்து நுழையக்கூடிய பூனைக் கண்கள். செம்பட்டை நிறத்தில் தலைமுடி. சுத்தமில்லாத உதடுகளும் பற்களும். கழுத்தின் ஒரு பக்கத்தில் பார்க்க சகிக்காத ஒரு மரு. சிறிதுகூட இனிமை இல்லாத ஒரு கரடுமுரடான குரல்.
அதுதான் தெரேஸாவாக இருக்க வேண்டும். அப்படி மட்டுமே அவள் இருக்க முடியும்.
உண்ணி அத்தானின் தாழ்ந்த குரலைக் கேட்டு அவள் திடுக்கிட்டு, பேந்தப் பேந்த விழித்தாள்.
“நான் சொன்னது எதுவாவது காதில் விழுந்ததா?” - அவன் கேட்டான்.