ஒற்றையடிப் பாதைகள் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6354
அவற்றில் இருந்த ஆபாசமும் வெறியும் பொறுமையின்மையும் அந்த வயதில் எனக்கு அந்த அளவிற்குப் புரியவில்லை. வெறுமனே ‘அய்யே.. அய்யே.. என்ன இது?’ என்று சொல்லி விலகி நின்று கொண்டிருந்தேன். உண்ணி அத்தான், அப்போதைய உங்களுடைய ஒவ்வொரு அசைவுகளிலும் அசிங்கமான ஒரு ஆபாசம் இருந்தது என்பதை பின்னால்தான் நான் புரிந்து கொண்டேன். என்னுடைய முறைப் பையன் ஆயிற்றே. வழிபடக்கூடிய, ஆசையைத் தூண்டும் ஒரு விளையாட்டு பொம்மையாக மட்டுமே நான் இருந்தேன். அதனால் அந்த பதைபதைப்பு, கோமாளித்தனம் எல்லாவற்றையும் நான் பொறுத்துக் கொண்டேன். உரிமை உள்ள மனிதரின் - எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றக்கூடிய அதிகாரம் என்பது மட்டுமே நான் அதைப் பார்த்தேன். இல்லாவிட்டால் - தன்னை விட கூர்மையான பெண்ணின்மீது அதிகாரத்தை செலுத்தக்கூடிய முயற்சி. ஒரு வகையான காம்ப்ளெக்ஸ்.”
உண்ணி கடிகாரத்தைப் பார்த்தான். அவனுக்கு எப்படியாவது அங்கிருந்து தப்பிக்க வேண்டும்போல இருந்தது.
“நேரம் அப்படியொன்றும் அதிகம் ஆகவில்லையே?” - சுதா சொன்னாள். “அது இருக்கட்டும்.. ஒரு விஷயத்தைக் கேட்கட்டுமா?”
அவள் மேலும் சற்று முன்னால் நகர்ந்து அவனுக்கு மிகவும் அருகில் வந்து நின்றாள்.
“இப்போ.. இப்போ.. உண்ணி அத்தான், உங்களுக்கு என்மீது மோகம் தோணுதா? மனதைத் திறந்து சொல்லுங்க. டூ யூ வான்ட் டூ ஸ்லீப் வித் மீ?”
“சுதா, என்ன இது? போதும்.. போதும்..” - அவன் காதுகளை மூடிக் கொண்டான்.
“இல்ல.. நான் இப்போதும் ஒரு கன்னிப் பெண்தான் என்பதை நீங்க நம்புறீங்களா? நம்முடைய பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்த பெண்களின் கற்பு என்ற அந்தப் பெரிய விஷயத்தை அளந்து பார்க்கும்போது, நான் இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறேன்? மைதானத்திற்கு வெளியிலா, உள்ளேயா? இவ்வளவு காலமா மிகவும் சுதந்திரமாக இருக்கும் ஒரு சமூகத்தில் தனியாக வாழ்ந்ததற்காக, நெருப்பில் இறங்கும் சம்பவம், தொடுவதற்கு முன்பு தேவைப்படும். அப்படித்தானே? நம்முடைய ஸ்ரீராமன்களுக்கு அப்படியெல்லாம் கூறக்கூடிய அதிகாரம் இருக்கத்தானே செய்கிறது? பழைய நெருப்பு குண்டத்திற்குப் பதிலாக இப்போது மண்ணெண்ணெய் ஸ்டவ். அவ்வளவுதான்..”
எதுவுமே கூற முடியாமல் அவன் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். ஒரு சிகரெட் புகைக்க வேண்டும் என்ற ஆசையுடன் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தபோது, அருகில் அமர்ந்திருந்த சுதாவின் சத்தத்தைக் கேட்டு அவன் அதிர்ச்சியடைந்தான்.
“ஒரு ட்ரிங் வேண்டும் என்று தோணுது.. அப்படித்தானே?”
அவன் ஒரு முட்டாளைப்போல் தலையை ஆட்டினான்.
“எனக்கு அது புரிந்துவிட்டது” சுதா உரத்த குரலில் சிரித்தாள். “ஆண்களுக்கு கொஞ்சம் தைரியம் வருவதற்கு மது வேண்டும்.. இல்லையா? எது எப்படியோ.. ஒரு பெண்ணைக் கையாள்வதற்கு மது வேண்டும் என்றால், அது நரம்புகளின் பலவீனத்தைக் காட்டவில்லையா? அதுவும், இந்த வயதில்.. அது இருக்கட்டும். இதற்கு முன்னால் என்ன சாப்பிட்டீங்க?”
“விஸ்கி.”
“அப்படியா? ஆன் தி ராக்ஸ்.. இல்லாவிட்டால்.. சோடாவா?”
“தண்ணி போதும்.”
“சரி..”
கண்ணாடிக் குவளையை நிறைத்து அவனுடைய கையில் கொடுத்துவிட்டு, அவள் எதிரில் சோஃபாவில் வந்து உட்கார்ந்தாள்.
தொடர்ந்து மீண்டும் கூறத் தொடங்கினாள்.
“அப்போது நான் ஏற்கனவே எதை சொல்லி நிறுத்தினேன்? ஆ.. என் புனிதத்தன்மை.. கன்னித்தன்மை பற்றி விஷயம்.. இல்லையா? அப்படியென்றால் நான் மனம் திறந்து கூறுகிறேன். நமக்கு இடையில் என்ன மறைவு விளையாட்டு? உண்ணி அத்தான், அதிர்ச்சியடைய வேண்டாம் தெரியுதா? என் கன்னித்தன்மையெல்லாம் எப்பவோ போய்விட்டது. அந்த கிறிஸ்துமஸ் கால இரவு வேளையில்.. சுற்றிலும் பனிப்படலம் மூடிக் கிடந்தபோது, அன்று முதல் தடவையாக பார்த்த ஏதோ ஒரு இளைஞனுக்கு நான் அதைக் கொடுத்துவிட்டேன். ஊரிலிருந்து என் தந்தையின் கடிதம் வந்த நாள்.. அதிலிருந்து அதுவரையில் கேட்காத புதிய ஒரு பெயரை நான் கேட்ட நாள்.. முழுமையாகப் பனி மூடிவிட்டிருந்த தெருவில் என்னுடைய அப்பார்ட்மெண்ட்டிற்கு செல்லக் கூடிய பாதையைக் காட்டிய இளைஞன் சிறிய ஒரு அதிகார தோரணையுடன் அறைக்குள் தள்ளிக் கொண்டு வந்தபோது, நான் தடுக்க முயற்சிக்கவில்லை. ஏதோ ஒரு ஆள்.. மதுவின் போதையில் வீங்கிப்போன முகம்.. அதற்கு முன்பும் பின்பும் நான் அந்த மனிதனைப் பார்க்கவே இல்லை. எது எப்படியோ.. அத்துடன் தயக்கம் போய்விட்டது. அதற்குப் பிறகு எத்தனையோ தடவை யார் யாரோ நண்பர்கள்.. எங்கெல்லாமோ வைத்து. ஒரு வகையில் பார்க்கப் போனால்.. முதல் மரக்கொம்பைத் தாவி கடந்து விட்டால், அதற்குப் பிறகு இருப்பவை அனைத்தும் ஒரே மாதிரிதான்.. இல்லையா?”
பற்களைக் கடித்து நெறித்து, கைகளை சேர்த்து பிசைந்து கொண்டிருந்தான் அவன்.
“உண்மையை மனம் திறந்து கூறுவதில் தவறே இல்லை உண்ணி அத்தான். எனக்கு செக்ஸ் மிகவும் பிடித்த ஒரு விஷயம். அதை சரியாக எஞ்ஜாய் பண்ணவும் செய்கிறேன். என்னுடன் பணியாற்றிய ஒரு பஞ்சாபி பையன் தான் எனக்குக் கிடைத்ததிலேயே பொருத்தமான ஜோடியாக இருந்தான். அவன் என்னைவிட ஐந்து வயது இளையவனாக இருந்தான். ஆனால், அவனுடைய கையில் என் உடல் உண்மையாகவே ஒரு வினோதமான இசைக் கருவியைப்போல இருந்தது. ஹீ வாய் டெரிஃபிக். அவனுடன் சேர்ந்து ஒருமுறையாவது உறங்கிய இளம் பெண்ணால் இந்தப் பிறவியில் அவனை மறக்கவே முடியாது. ஆனால் சில நாட்கள் கடந்த பிறகு என்மீது அவனுக்கு தீவிரமான காதல் உண்டாக ஆரம்பித்தது. அழுகையும் புலம்பலும் காதலை வெளிப்படுத்தும் செயலும் சம்மதிக்கவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பயமுறுத்தலும்.. அத்துடன் நான் அவனை கத்தரித்து விட்டேன். அப்படிப்பட்ட ஆழமான காதலர்களை என்னால் சிறிதுகூட சகித்துக்கொள்ள முடியாது-.”
“நான் கிளம்பட்டுமா? நேரம் அதிகம் ஆயிடுச்சு” - அவன் வேகமாக எழுந்தான். புட்டியில் இருந்து இன்னும் கொஞ்சம் மதுவை குவளைக்குள் ஊற்றி, நீர்கூட கலக்காமல் ஒரே இழுப்பில் குடித்து முடித்த அவன் சிரிப்பைத் துடைத்தான்.
“ஒரு நிமிடம் நில்லுங்க.”