ஒற்றையடிப் பாதைகள் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6354
சுதா முன்னால் வந்த நின்றாள். அவனுடைய கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டு கேட்டாள்.
“உண்மையை சொல்லுங்க. இங்கு யாரும் இல்லை. இப்போ என்மீது மோகம் தோணுதா? மனதைத் திறந்து சொல்லுங்க. தயங்க வேண்டாம். என்ன இருந்தாலும் உங்களுடைய பழைய ஒரு ஜுவாலைதானே நான். படுக்கையில் நான் நல்ல பங்காளியா இருப்பேன் என்று பலரும் கூறியிருக்கிறார்கள். ஒரு விஷயத்தை நினைக்கும்போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. உண்ணி அத்தான், எல்லோரையும் விட அதிகமான உரிமைகளைக் கொண்ட உங்களுக்கு மட்டும் அதற்கான கொடுப்பினை இதுவரை கிடைக்கவில்லை. வெறும் வார்த்தைகளில் கலந்திருந்த ஆபாசத்தில் இருந்து கிடைத்த சுகம் மட்டுமே மிச்சம். எந்த சமயத்திலும் என்னை அடிமைப்படுத்த என் தந்தையின் செல்ல மருமகனான உங்களுக்கு முடியவில்லையே.”
திடீரென்று அவன் தோளில் கையை வைத்தாள். அவனுடன் சேர்ந்து நிற்க முயன்றாள்.
கையை விலக்கி அவளிடமிருந்து விலகி நிற்கும்போது உள்ளுக்குள் இருந்து வந்த ஏதோ கோபமான வார்த்தைகளை தனக்குள்ளேயே விழுங்குவதற்கு முயன்றான் அவன்.
கதவை இழுத்துத் திறந்து, எப்படியோ அவன் வெளியே வந்துவிட்டான். பின்னால் அப்போதும் அவளுடைய உரத்த சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பாதி சுய உணர்வு போய்விட்டதைப்போல் அவள் சத்தம் போட்டு சொன்னாள்.
“இல்ல.. அவசரம் ஒண்ணும் இல்ல. தெரியுதா? வேண்டும் என்று அவசியம் தோணுறப்போ சொல்லுங்க. நான் இங்கேதானே இருக்கேன்.”
கதவை சேர்த்து அடைத்துவிட்டு, அவன் நின்று மேலும் கீழும் மூச்சுவிட்டான். தூணில் ஓங்கி இடித்துக் கொண்டே அவன் கத்தினான்.
“தேட் ப்ளடி பிச். அவனவனைப் பற்றி அவள் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கா? இன்டீஸன்டாக பேசக் கூடாதுன்னு நினைச்சு விலகிப் போனால், தானே வலிய வந்து பேசிக்கிட்டு இருக்கிறாளே!”
கோபம் ஏறிய தலையுடன் இரவைக் கிழித்துக் கொண்டு, எங்கு போகிறோம் என்றே தெரியாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு போன போதும், அவளுடைய அந்த கொல்லக்கூடிய சிரிப்பு தன்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான்.
2
தந்தையும் மகளும் அலுவலக அறையில் அமர்ந்திருந்தார்கள்.
“நீ அவனை அளவுக்கு மீறி கிண்டல் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்” - மகளுடைய முகத்தில் எதையோ தந்தை தேடிக் கொண்டிருந்தார்.
அவள் சிரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
“இதற்கு கிண்டல் என்றா சொல்வது? என்ன கனம் குறைவான சொல். ஏன், உண்ணி அத்தான் ஏதாவது சொன்னாரா?”
“அந்த அளவுக்கு தெளிவா எதையும் சொல்லல. இருந்தாலும் அவனுடைய நடவடிக்கைகளில் என்னவோ அர்த்தம் நிறைந்த பிரச்சினைகள் இருப்பதைப்போல தோன்றியது.”
“என்ன பிரச்சினை?” சுதா கையை விரித்தாள். “எனக்குத் தெரியலையே. என்னைப் பொறுத்தவரை சொல்ற அளவுக்கு ஒரு பிரச்சினையும் தெரியவில்லை.”
“உண்ணி மிகவும் விரக்தி அடைஞ்சு போயிருக்கான். எப்போதும் அவனிடம் இருக்கக்கூடிய சுறுசுறுப்பும் உற்சாகமாக பேசுவதும் இப்போ இல்லவே இல்லை. அவனுடைய மனதிற்குள் என்னவோ அடி விழுந்திருப்பதைப்போல தெரியுது. எதையும் தெளிவா சொல்லவில்லையென்றாலும், அவனுடைய மனதிற்குள் என்னவோ இருந்துகொண்டு வேதனையைத் தந்து கொண்டு இருக்கு. சந்தேகமே இல்லை.”
சுதாவிற்கு அப்போதும் சிரிக்க வேண்டும்போல தோன்றியது.
“அப்பா, உங்களுக்கு வெறுமனே தோணியிருக்கலாம். அந்த அளவுக்குத் தேவையே இல்லாமல் உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் குணத்தைக் கொண்டவர் இல்லை உண்ணி அத்தான். எல்லா விஷயங்களிலும் ஒவ்வொருவருக்கும் என்னென்ன வேண்டும் என்பதைப் பற்றி அவருக்குத் தெளிவான அறிவு உண்டு. எல்லா காரியங்களையும் சரியான நேரத்திற்கு முடிக்கவும் செய்வார். சிறு வயதில் இருந்தே நான் இதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கேன். அந்தப் பிடிவாதமும், முகத்தை ஒரு மாதிரியா - கோணலா வைத்துக் கொள்வதும், இறுதியில் நினைத்த இடத்திலேயே கொண்டுபோய் காரியத்தை முடிப்பதும் ஒரு காலத்தில் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். அந்த விஷயங்களில் உண்ணி அத்தானுக்கென்றே சொந்தமாக ஒரு ஸ்டைல் இருந்தது. எமன் தொட்ட பாம்பு என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். தெரியுதா அப்பா? இப்போ உண்ணி அத்தானின் நிலைமை அப்படி ஆயிடுச்சு. இந்த தெரேஸாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மான்செஸ்ட்டரில் எமன் அனுப்பி வைத்த ஆட்களோ என்னவோ.”
நம்பியாரால் மகளுடன் சேர்ந்து சிரிக்க முடியவில்லை. சுதாவோ குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தாள். அவளால் சிரிப்பை சிறிதுகூட அடக்க முடியவில்லை.
“எது எப்படி இருந்தாலும் இந்தப் போக்கு எனக்கு சரியாக தோணல” - நம்பியாரின் முகத்தில் முகமூடி போடப்பட்ட மிடுக்கு தெரிந்தது. “உங்களுக்கிடையே ஏதாவது கருத்து வேறுபாடுகள் இருந்தால், அதை வெளிப்படையாக சொல்லி விடுறதுதான் சரியாக இருக்கும். என்ன இருந்தாலும், அவனும் என்னோட பையன்தானே. சிறுவயதில் இருந்தே அவன் என்கூடத்தான் இருக்கான். சின்ன வயசா இருக்குறப்பவே அவனை சிங்கப்பூக்காரர்கள் இங்கே கொண்டு வந்து விட்டுட்டாங்க. அதற்குப்பிறகு அவன் வளர்ந்தது என் மடியில் படுத்துதான். மாலதி இறக்குறப்போ உண்ணிக்கு பன்னிரண்டு வயது. அதனால்தானோ என்னவோ அவனுக்கு மிகவும் நெருக்கம் என்னுடன்தான். நீ எப்போதும் பெரிய பிடிவாதக்காரியாகவும் குறும்புத்தனம் பண்ணக் கூடியளாகவும் இருந்தே. உன்னுடன் சேர்ந்து பிடிவாதம் பிடித்து நிற்கக்கூடிய தகுதி தனக்கு இல்லைன்னு அவனுக்கு சிறு வயதா இருக்குறப்பவே தெரியும். அதனால்தான் அவனுடைய விஷயத்தில் நான் எப்போதும் அதிகமான கவனத்தை செலுத்தினேன். நீ பிடிவாதம் பண்ணி படிப்பதற்காக வெளியே சென்றபோது, அவனும் மிகவும் பின்தங்கிப் போய்விடக்கூடாது என்ற விஷயத்தில் நான் உறுதியாக இருந்தேன். அதனால்தானே தவிர, அவன் கேட்டு அல்ல நான் அவனை லண்டனுக்கு அனுப்பி வைத்தது. உங்களுக்கிடையே இருக்கும் கம்பேட்டிபிலிட்டியில் உயர்வு, தாழ்வு இருக்கக்கூடாது என்று நான் நினைத்தேன்.
“அங்குதான் நீங்க தப்பு பண்ணிட்டீங்க அப்பா” இடையில் புகுந்து சொன்னாள்.
“நீ சொல்றது ஒருவேளை சரியாக இருக்கலாம். என்னை யாரும் படிக்க வைக்கவில்லையே மகளே. சுற்றிலும் பார்க்கக் கிடைத்த வாழ்க்கையிலிருந்து ஒவ்வொன்றையும் நானே படித்துத் தெரிந்து கொண்டேன். இருபது சதவிகிதம் மட்டும் தேர்ச்சி பெறும் சாதாரண அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் மலையாள மீடியத்தில் படித்தேன். பிறகு ஒவ்வொரு நாளும் ஆறாறு மைல்கள் வீதம் நகரத்திற்கு நடந்து பேருந்தைப் பிடித்து, கல்லூரிக்குச் சென்றேன். இறுதியில் வெறும் ஒரு மூன்றாவது வகுப்பு பி.ஏ., பட்டத்துடன் பம்பாய்க்கு வண்டி ஏறினேன். அதெல்லாம் ஒரு கதை.