ஒற்றையடிப் பாதைகள் - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6354
“நீயும் உன் கணவரும் சண்டை போட்டுக் கொள்வதுண்டா?”
“அதெல்லாம் நடக்கத்தான் செய்யும். விடுமுறை எடுத்துக் கொண்டு வர்றப்போ, பாதி நாள் சண்டைதான் நடக்கும். சில நேரங்களில் எனக்கு அவர் பேசுவதைக் கேட்டால் எரிச்சல் வரும். ஒரு பண்பாடே இல்லாத மனிதரைப்போல தோணும். ஒருவகையில் பார்க்கப் போனால் இரண்டு பேரும் இரண்டு இடங்களில் இருப்பது நல்லதுதான் என்று சில நேரங்களில் தோணும்.”
சுதா சிரிக்க முயற்சித்தாள்.
ராமன்குட்டி தேநீர் கொண்டு வந்து வைத்தான். ஒரு தட்டில் பூ போட்ட கேக் துண்டுகள் இருந்தன. முதலில் சற்று தயங்கினாலும் பிறகு ஜானுவின் மகன் ஆவலுடன் அதைத் தின்று தீர்ப்பதை சுதா ஆர்த்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இங்கேயிருந்து போரடித்துக் கொண்டிருக்க வேண்டாம். வேணும்னா, நாம ஆற்றின் கரைவரை நடந்துவிட்டு வருவோம். இந்த காம்பவுண்டைத் தாண்டினால் ஆறுதான். நீரில் இறங்குவதற்குப் படித்துறை இருக்கு. அங்கே போய் கொஞ்ச நேரம் உட்காருவோம்.”
“வேண்டாம் சுதாக்குட்டி..” - ஜானு தயங்கினாள்.
“சுதாக்குட்டி, நீ என்னுடன் வெளியே.. யாராவது பார்த்தால்.. வேண்டாம்.. அது சரியாக இருக்காது. சிறு வயதில் ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, நான் என்னுடைய நிலையை மறக்கக்கூடாதே. நிற்க வேண்டிய இடத்தில் நிற்க வேண்டும் - எல்லோரும்.”
என்ன கூறுவதென்று தெரியாமல் சுதா வெறுமனே அவளுடைய கைகளைப் பிடித்து மெதுவாக அழுத்தினாள். விரல்களில் சொடக்கு போட்டாள். எந்த அளவிற்கு சுறுசுறுப்பான பெண்ணாக அவள் இருந்தாள். காலம் ஏராளமான காயங்களை உண்டாக்கியிருக்கும் அந்த முகம் வேறு யாருடைய முகமோ என்று தோன்றியது. பழைய ஜானுவை ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் வடிவத்தில் எந்த சமயத்திலும் கற்பனை பண்ணிப் பார்க்கக்கூட அவளால் முடியவில்லை.
“கேட்பது சரியா என்று தெரியவில்லை” - ஜானு தயங்கித் தயங்கி கேட்டாள். “சுதாக்குட்டி.. இப்போதும் தனியாத்தான் இருக்கியா? எப்போதும் இப்படியே இருக்கணும்ன்றதுதான் எண்ணமா?”
“அதனால் என்ன பிரச்சினை ஜானு?”
“இல்ல. பிரச்சினை எதுவும் இல்லை. இருந்தாலும் அந்த முடியை வெட்டி எறிஞ்ச பிறகு உன்னைப் பார்க்குறப்போ என்னவோபோல இருக்கு. அந்த முடி எவ்வளவு அழகா இருந்தது. எங்கள் எல்லோருக்கும் நிறைய பொறாமையா இருக்கும்ன்றதை தெரிஞ்சிக்கோ.”
“அதை பத்திரமா பாதுகாத்துக் கொண்டு நடப்பது என்பது கஷ்டமான விஷயம் ஜானு.”
“ஓ... அதனால்தானா? நான் நினைச்சேன். வெள்ளைக்காரர்களின் நாட்டுக்குப் போன பிறகு நீ வெள்ளைக்காரியாகவே மாறிட்டியோன்னு..”
சுதாவிற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
ராமன் குட்டி சமையலறையின் கதவுக்கு அருகில் வந்து எட்டிப் பார்த்தான். அவனுடைய பார்வை குழந்தையின் அழுக்கு படிந்த கால்களில் இருந்ததை சுதா கவனித்தாள். விரிப்பில் சேறு படிந்துவிடுமோ என்பது அவனுடைய பயமாக இருக்கலாம். அவள் அவனை உள்ளே போகும்படி கையால் சைகை காட்டி சொன்னாள்.
ஜானு அதற்குப் பிறகும் ஒன்றிரண்டு விஷயங்களைப் பேசியவாறு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். சுதாவிற்கு அது பெரிய சுவாரசியமான விஷயமாக இருந்தது. வருடங்களின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவள் கிராமத்து சிறுமியாக மாறினாள். ஜானுவின் கையைப் பிடித்துக்கொண்டு அவள் அந்த வயலின் வரப்புகளிலும் செடிகள் நிறைந்த இடங்களிலும் மலைச் சரிவிலும் ஆற்றின் கரையிலும் ஓடித் திரிந்தாள். ‘எனக்குள் இருக்கும் எட்டு வயது சிறுமி இப்போதுகூட சிறிதும் வளராமலே இருக்கிறாளே!’ சிறிய ஒரு ஆச்சரியத்துடன் அவள் நினைத்துப் பார்த்தாள். சிறிதும் வளர சம்மதிக்காத சிறுமி.. ஜானுவிற்கும் தன்னுடைய சிறு பிள்ளைப் பருவம் திரும்பவும் வந்திருப்பதைப்போல இருந்தது. மீண்டும் களரிப் பயிற்சி நடக்கும் இடத்தின் வாசலில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு, கட்டத்திலிருந்து ஒரு கட்டத்திற்குத் தாவி, காய்களைத் தட்டிச் சிதறி ஓடச் செய்ய ஆரம்பித்தாள் அவள். அந்த கட்டங்களிலாவது அவள் மீண்டும் வெற்றி பெற்றவளாக ஆனாள். அரசியாக ஆனாள். சுதாவின் வீட்டில் இருந்த பெரிய குளத்தில் அவள் மீண்டும் நீந்தித் துடித்தாள். கருங்கல் படியில் அமர்ந்து சுதா மீண்டும் எண்ணத் தொடங்கினாள்- ‘முப்பத்தொண்ணு.. முப்பத்திரெண்டு.. முப்பத்து மூணு..’
அந்தத் தலை மேலே வரவில்லை. நீர் சிறிதுகூட அசையவில்லை. அத்துடன் எண்ணுவதில் வேகம் குறைந்தது. குரல் தடுமாறியது.
ஜானு.. அந்த சத்தம் பெரிய ஒரு அழுகையில் போய் முடிந்தது.
அப்போது பூச்செடிகளைப் போல நீரை சிதறடித்துக் கொண்டு நீர்பரப்பிற்கு மேலே ஜானுவின் தலை மேலே வந்தது.
“என்ன சுதாக்குட்டி சிரிக்கிறே?” ஜானு கேட்டாள்.
“இல்ல... நீ எத்தனை தடவை என்னை பயமுறுத்தி இருக்கே. தெற்குப்பக்க குளத்தில், பாம்புப் புற்றுக்குப் பக்கத்தில் இருக்கும் பாலை மரத்திற்குப் பின்னால், முந்திரி மரத்தின் உச்சியில்.. இப்படி எங்கெல்லாமோ..”
“அதெல்லாம் இப்போதும் ஞாபகத்தில் இருக்குதா?”
“எப்படி மறக்க முடியும் ஜானு?”
சுதாவின் குரல் மிகவும் தாழ்ந்து விட்டிருந்தது. “இது மட்டும்தானே நம்முடைய வாழ்க்கையில் எஞ்சி நிற்பது! சில நேரங்களில் தோணும் பெரிதாக வளர்ந்திருக்கவே கூடாதுன்னு. இப்படிப்பட்ட சில நேரங்களில்தான் நாம் எந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் இழந்துவிட்டோம் என்ற புரிதலே உண்டாகிறது. ஜானு, உனக்குத் தெரியுமா? ஊட்டியிலும் டெல்லியிலும் படிக்கும்போது எனக்கு இருந்த காலத்தில் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், பிரிந்து போனபிறகு அவர்களை நான் உடனடியாக மறந்துவிட்டேன். இதோ - இதைப் போன்ற சின்னச்சின்ன விஷயங்கள் எதுவும் அவர்களைப் பற்றி எனக்கு ஞாபகத்திலே இல்லை. அது ஏன் ஜானு?”
ஜானு எதுவும் சொல்ல முடியாமல் வெறுமனே சிரிக்க முயன்றாள். அவளுடைய தோள்களைப் பிடித்துக் குலுக்கியவாறு ஒரு சிறு குழந்தையைப்போல சுதா அந்தக் கேள்வியைத் திரும்பக் கேட்டாள்.
“அது ஏன் ஜானு அப்படி?”
நேரம் அதிகமானதைத் தொடர்ந்து ராமன்குட்டி ஓடிச் சென்று தோட்டத்தில் விளக்குகளை எரிய வைக்க தொடங்கியவுடன், ஜானு வேகமாக எழுந்தாள்.
“அய்யோ... நேரம் போனதே தெரியல. சாயங்காலம் ஆயிடுச்சே சுதாக்குட்டி?”
“ஆமாம்.. வெளியே சாயங்காலம் ஆகப் போகுது ஜானு” சுதா சொன்னாள். “நமக்கு அது தெரியல.”
திடீரென்று ஜானுவின் முகம் மங்கலானது.
“ஜானு உனக்கு போவதற்கு பேருந்து கிடைக்குமா?”
“இருக்கும்.”
“வேணும்னா இரவில் இங்கேயே தங்கிடு. அந்தக் காலத்துல இருந்தது மாதிரி ஏராளமான விஷயங்களை நாம சுவாரசியமா பேசிக்கொண்டே இருக்கலாம்.”