ஒற்றையடிப் பாதைகள்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6353
நம்பியாரின் மகள் வந்து நுழைந்ததே ஒரு சிறிய கோபத்துடன்தான்.
விமான நிலையத்தில் யாரையும் காணோம். பழக்கமான ஏதாவது முகம் இருக்கிறதா என்று தேடி இவ்வளவு நேரமும் வரவேற்பறையில் சுற்றித் திரிந்து பார்த்தாள். கடைசியில் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து காத்து நின்றிருந்தாள். அங்கும் யாரையும் காணோம். பிறகு ஒரு சிறிய போராட்டத்திற்குப் பிறகு எப்படியோ டாக்ஸியை ஏற்பாடு செய்து பொருட்களை ஏற்றும்போது டயோட்டாவும், பெரிய ஒரு சிரிப்பும், தலைக்குப் பின்னால் சொறியலுமாக டிரைவர் அச்சுதன் நாயர் வந்து நின்று கொண்டிருந்தார்.
பிறகு டாக்ஸியில் இருந்து சாமான்கள் முழுவதையும் இறக்கி இன்னொரு காரில் ஏற்றும்போது டாக்ஸிக்காரனின் நாக்கில் உண்டான எரிச்சல் சிறிதும் குறையவில்லை. ஒரு நோட்டை கையில் வைத்து நீட்டியதற்கு, அவன் ‘சூ’ என்று சீறினான்.
வண்டியை ஓட்டும்போது அச்சுதன் நாயரின் பழையப் புராணத்தைச் சிறிது நிறுத்துவதற்கு அவள் மிகவும் படாத பாடுபட்டாள். முப்பது வருடங்களாக வேலை பார்ப்பதன் வரலாறை இரண்டரை மணி நேரங்களில் சுருக்கிக் கூறுவதற்கு அவரும் மிகவும் சிரமப்பட்டார். இரண்டு பெரிய கொட்டாவி விட்டப் பிறகும், அவர் தன் கதையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து, சிறிதும் கவலையே படாமல் உரத்த குரலில் அவள் அதை நிறுத்தச் சொன்னாள்.
வீட்டை அடையும்போது, முன்பக்க வாசலில் சிறிய ஒரு ஆட்களின் கூட்டம் இருந்தது.
அதைப் பார்த்தவுடன், சுதாவிற்கு எரிச்சல் உண்டானது. தன்னுடைய பழைய கைத்துப்பாக்கி எங்கே என்று அவள் நினைத்தாள். அதை எடுத்து வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டு குண்டுகளைப் பொழியச் செய்து, அவர்கள் எல்லோரையும் விரட்டியடிக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். அடுத்த நிமிடமே நம்பியாரின் மகள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். அவர்களை விரட்டுவதற்குக் கைத்துப்பாக்கி போதாது. ஒருவேளை, அந்த பழைய ரைஃபில் சரியாக இருக்கலாம். டிஷ்க்கு... டிஷ்க்கு... டிஷ்க்கு...
நம்பியார் நீட்டிய கைகளுடன் ஓடி வந்தார். கட்டிப்பிடிக்க முயன்றபோது, மகள் உதடுகளைக் கோணலாக ஆக்கிக் கொண்டு அவரிடமிருந்து விலகினாள்.
“கார்ட் ஆஃப் ஹானருக்கு முன்னால் யாருக்காவது மாலை போட்டிருக்கலாம். சிவப்பு கம்பளமும் கண்ணில் தெரியவில்லை.”
நம்பியார் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
“நீ எப்படி வந்தே மகளே? பயணத்தில் ஏதாவது பிரச்சினை உண்டானதா?”
“குதிரைமீது ஏறி வந்தேன் அப்பா” - மகள் சொன்னாள். “எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு வர்றேன்ல. நம்முடைய ஆடம்பரத்தைக் கொஞ்சம்கூட குறைக்க வேண்டாம் என்று நினைத்தேன்.”
அதைக் கேட்காததைப்போல அவர் அவளை இறுக அணைத்துக் கொண்டு வரவேற்பறையை நோக்கி நடந்தார். அப்போது ஆட்களின் கூட்டம் முழுவதுமாக மெதுவாக நடந்து வந்து அங்கு குழுமியிருந்தார்கள். கம்பெனியின் இயக்குனர்கள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், சில உறவினர்கள், அவர்கள் தங்களுடைய பதவியையும் சம்பளத்தையும் இரத்த ரீதியான நெருக்கத்தையும் அனுசரித்து பொருத்தமான இடங்களில் நின்றிருந்தார்கள்.
“பலம், வயது ஆகியவற்றை அனுசரித்து வரிசையாக நிற்கும்படி சொல்லியிருக்கலாமே அப்பா?” - மகள் தன் தந்தையின் காதில் சொன்னாள். “அறிமுகப்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு இருபத்தொரு மரியாதை வெடிகளையும் வெடிக்கவும் செய்யலாம்.”
“அதை முன்னாடியே வெடிக்கச் செய்தாகிவிட்டது மகளே” - தந்தை தாழ்ந்த குரலில் சொன்னார். “நம்முடைய கோவிலில் - நீ திரும்பி வர்றதைச் சொல்லி, சரியாக இருபத்தொரு வெடிகள் வெடிக்கச் செய்தேன். நானே எண்ணினேன்.”
அந்தச் சடங்குகள் அனைத்தும் முடிந்து, மகளுடைய கோபம் சற்று குறைந்துவிட்டது என்று தோன்றியபோது, நம்பியார் மெதுவான குரலில் சொன்னார்.
“என்னால் விமான நிலையத்திற்கு வர முடியவில்லை. இரண்டு வெளிநாட்டுக்காரர்களுடன் காலையிலேயே ஒரு மீட்டிங் இருந்தது. அவர்கள் இரண்டு நாட்களாக இங்கு குளிக்காமலே தங்கியிருந்தார்கள். ஒரேயடியா என்கிட்ட அந்த வெள்ளைக்காரர்கள் ஒட்டிக்கிட்டாங்க. அவர்களிடம் பேச வேண்டியதையெல்லாம் பேசி அவர்களை அனுப்புறதே பெரிய பாடாப் போச்சு... பிறகு... பெங்களூர்ல இருந்து உண்ணி இன்னைக்கு வர்றான். இதோ... இப்போ அவனுடைய விமானம் வந்து இறங்கியிருக்கும்.”
“அப்படியா?” - மகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. “அதற்குத்தான் அச்சுதன் நாயர் அங்கே வந்திருந்தாரே... பட்டத்தைப் பறக்க விட்டுக் கொண்டு.”
“பட்டம் பறக்க விட்டாரா? நம்ம அச்சுதன் நாயரா? நீ என்ன சொல்றே?”
“விமானம் வர்றதைப் பார்த்துக் கொண்டு கண்களை மேலே வச்சிக்கிட்டு நின்னப்போ அவர் பட்டங்களையும் பார்த்திருக்கார். விமானம் கண்களில் படல. சரி... பட்டங்களையாவது பார்த்துக் கொண்டு இருக்கலாம்னு நினைச்சிருக்கணும். அப்போ ட்ராலியைத் தள்ளிக் கொண்டு நான் வெளியே வர்றேன். விமானம் வந்து இறங்கினதையே அவர் பார்க்கல...”
நம்பியார் சிரிப்பை அடக்க முயன்றார்.
“இல்லை அப்பா. எல்லா இடங்களிலும் சரியான நேரத்திற்கு விமானங்கள் வந்தன. இந்த அளவுக்கு சரியான நேரத்துக்கு வந்திருக்க வேண்டியது இல்லை.”
பிறகு அங்கு கூடியிருந்தவர்கள் மெதுவான சிரிப்புடன் ஒருவகை மரியாதை வார்த்தைகளுடன், மனமே இல்லாமல் பிரிந்து போக ஆரம்பித்தவுடன் அவர்கள் உள்ளே சென்றார்கள்.
சிறிய ஒரு ப்ரீஃப் கேஸை மட்டும் தூக்கிக் கொண்டு அச்சுதன் நாயர் பின்னால் வந்தபோது, நம்பியார் கேட்டார்.
“அப்படின்னா... இவளுடைய மற்ற சுமைகள்...”
அதற்கு பதில் கூறினாள் சுதா.
“அவற்றை எல்லாம் கெஸ்ட் ஹவுஸுக்கு அனுப்பிட்டேன் அப்பா.”
“கெஸ்ட் ஹஸுக்கா?” - நம்பியார் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்து நின்றார். “அது ஏன் மகளே?”
“அங்கேதான் நான் இனிமேல் தங்கப் போறேன் அப்பா?”
நம்பியார் தன் தலையை சொறிந்தார்.
“எனக்கு எதுவும் புரியல...”
“ஃப்ளோரிடாவில் இருந்து புறப்படுவதற்கு முன்பே நான் நிறைய சிந்தித்தேன். எங்கேயாவது கொஞ்ச நாட்களுக்காவது தனியா ஒரு கூடு அமைக்க வேண்டியது இருக்குமேன்னு. அப்போ எந்தவிதத்தில் பார்த்தாலும் கெஸ்ட் ஹவுஸ்தான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். அதாவது உங்களுக்கும், எனக்கும், நம்முடைய நிறுவனங்களுக்கும், எல்லோருக்கும்... பெரிய ஏரியும், சற்று முன்னால் ஆறும், ஆற்றில் இறங்க துறையும், ஓடித் திரியவும், தேவைப்பட்டால் தலை குப்புற விழவும் பெரிய புல்வெளியும்...”