ஒற்றையடிப் பாதைகள் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6353
“இனி எதற்கு மகளே அதெல்லாம்? எனக்கு முடியாத நிலை... உங்க இரண்டு பேருக்கும் வனவாச காலம் முடிஞ்சிடுச்சுல்ல? இனிமேல் இரண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து எல்லாவற்றையும் கவனமா பார்த்து நடத்திக்கோங்க. உண்ணியைப் பொறுத்தவரையில் நல்ல திறமையானவன். எல்லா விஷயங்களிலும் அவனுக்குத் தெளிவான பார்வை இருக்கு. இதோ.. இப்போ அவனுடைய மனம் முழுவதும் ஒரு புதிய திட்டத்தைப் பற்றிய சிந்தனைதான். இல்லாவிட்டாலும், இப்போது இருக்கும் லைனில் வளர்ச்சி முழுமையடையிற நிலைக்கு வந்திடுச்சு. அதிகம் தாமதமாவதற்கு முன்னால் களத்தை மாற்றிக் கொண்டு நடப்பதுதான் புத்திசாலித்தனம். ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்து தொழில் பண்றதுக்கு எம்.ஓ.வில்கூட கையெழுத்து போட்டாகிவிட்டது. அதற்குப் பொருத்தமான ஒரு இடத்தையும் வாங்கியாச்சு - கர்நாடகாவில். கொஞ்சம் நினைச்சுப் பார்க்கிறப்போ, நம்முடைய தொழில் ஏற்பாடுகள் மூன்று மாநிலங்களிலும் பரவிக் கிடப்பது நல்லது என்று மனதிற்குப் பட்டது. எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் இட முடியாதே. இப்போதிருக்கும் காலத்தில் எங்கு எப்போது பிரச்சினைகள் வந்து சேரும் என்று யாருக்குத் தெரியும்?”
“சரிதான்” - அவள் விருப்பமே இல்லாதது மாதிரி முனகினாள். “அப்பா, அதைப்பற்றி நீங்க இதுவரை எனக்கு எதுவும் எழுதவில்லையே. ஃபோன் பண்றப்போகூட சொல்லவே இல்லை.”
“அதுதான் நீயே இங்கே வர்றயேன்னு நினைச்சேன்.”
“இருந்தாலும் பெரிய ஒப்பந்தங்கள் ஆகுறப்போ, என்னிடமும் ஒரு வார்த்தை சொல்றதுல என்ன பிரச்சினை?”
நம்பியார் எதுவும் கூறாமல் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் தன் பேச்சைத் தொடர்ந்தார்.
“அது இருக்கட்டும் மகளே. இந்த ஆடைகளை மாற்றிவிட்டு குளிக்கப் பார். வியாபாரிகளிடம் இருக்கும் மோசமான குணத்தைப் போல யாரைப் பார்த்தாலும் முதலில் பேசுவதற்கு ஒரே ஒரு விஷயம்தான் இருக்கு. வியாபாரம்.. தந்தைக்கும் மகளுக்கும் இடையில் வியாபாரம்ன்ற விஷயம் நுழைவது என்பது மிகவும் சேர்வைத் தரக்கூடிய ஒன்றே.”
சுதா எழுந்தாள்.
“நான் கெஸ்ட் ஹவுஸுக்குப் போறேன் அப்பா.”
“அதெல்லாம் எதற்கு மகளே? என்னால புரிஞ்சிக்க முடியலையே.”
“பத்து இருபது வருடங்களாகத் தனியாகத்தானே இருக்கிறேன்? ஊட்டியில் பள்ளிப் படிப்பு, டெல்லியில் கல்லூரிப் படிப்பு, பிறகு.. சிறிது நாட்களுக்கு இங்கு ஒரு இடைவேளை.. மீண்டும் டெல்லியில். அதற்குப் பிறகு யூஎஸ்ஸில் ஏழு வருடங்கள். எல்லா இடங்களிலும் நான் தனியாகத்தானே இருந்திருக்கிறேன். அப்பா, இப்போ தனியாக இருப்பதுதான் சந்தோஷம் தரக்கூடிய விஷயமாக இருக்கு. பிறகு... கொஞ்சம் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க.. எல்லா இடங்களிலும். அதுவும் மிகவும் குறைவாக...”
“இருந்தாலும்” - தந்தை இடையில் புகுந்து என்னவோ கூறத் தொடங்கினார்.
“அப்பா, நீங்க எனக்கு தந்த ஒரு வாக்குறுதி ஞாபகத்தில் இருக்கிறதல்லவா? எதை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது நான்தான். அதாவது- வேண்டாம் என்று நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் யாரிடமும் ஒரு வார்த்தைகூட சொல்லிக் கொள்ளாமல் நான் திரும்பிப் போய்க் கொண்டே இருப்பேன். ஒருவேளை, உங்களிடம்கூட கூறாமல் போனாலும் போகலாம். அந்த நிபந்தனையின் பெயரில்தான் நான் வருவதற்கே சம்மதித்தேன்.”
“சரி, இருக்கட்டும் மகளே. நான் எதுவும் சொல்லலையே” நம்பியாரின் கண்கள் அடுத்த நிமிடம் கண்ணீரால் நிறைந்தன.
“இங்கே வர்றேன்னு கேள்விப்பட்டப்போ, மனதுக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது. இவ்வளவு பெரிய மாளிகையில் நான் மட்டும் தனியாக இருக்க வேண்டியதில்லையே என்று நினைத்தேன். எழுபத்து இரண்டாவது வயதில் தனியாக இருக்க வேண்டியதுதான் சூழ்நிலை என்றால், அது ஒரு மிகப்பெரிய சாபம்தான். பார்க்குறப்போ எல்லோரும் இருக்கிறார்கள் என்பது மாதிரி இருக்கும். ஆனால் யாருமே இங்கு இல்லை.”
“பரவாயில்லை.. நான் இங்கேதானே இருக்கேன். அப்படியொண்ணும் அதிகமான தூரத்தில் இல்லையே.”
“உண்ணியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு..”
“அது எதற்கு?” சுதாவின் முகம் கறுத்தது. “இதுல அவருடைய பங்கு என்ன இருக்கு?”
“என்ன ஆனாலும்.. என்ன ஆனாலும்.. அவன் உன்னுடைய..” நம்பியார் திடீரென்று நிறுத்தினார். மகளின் முகம் இருண்டு மேகம் படர்வதை அவரால் பார்க்க முடிந்தது.
“இல்லை.. இனி.. அவசியம் என்று நினைத்தால் இரண்டு நாட்கள் வேணும்னா அங்கே.. கெஸ்ட் ஹவுஸிலேயே தங்கிக்கோ. தேவையான ஏற்பாடுகளை செய்துதரச் சொல்லி நான் ராமன் குட்டிக்கிட்டே சொல்றேன். ஒரு மாறுதலுக்காக இருக்கட்டும். அதற்குப் பிறகு மற்ற விஷயங்களைத் தீர்மானிப்போம். சரியா?”
“எதுவும் தீர்மானிப்பதற்கு இல்லை அப்பா.. கெஸ்ட் ஹவுஸே போதும்” மகளின் குரல் உறுதியானதாக இருந்தது.
எதுவும் பேசாமல் வெளியேறும்போது நம்பியார் மனதிற்குள் நினைத்துக் கொண்டார். இது யாருடைய குணம்? தாத்தாவின் குணமா? பெரிய மாமாவின் குணமா? எது எப்படியோ- ரமணியின் குணம் அல்ல. பெண்மையைப் பற்றிய அவருடைய கருத்துக்கள் அனைத்தும் ரமணியிடமிருந்து தொடங்குகின்றன. அங்கேயே முடியவும் செய்கின்றன.
அவர்கள் முன் பக்கத்தை அடைந்திருந்தார்கள்.
“நாம கொஞ்சம் கெஸ்ட் ஹவுஸ் வரை போகலாம். அச்சுதன் நாயர்” நம்பியார் ஓட்டுனரிடம் கூறினார்.
அச்சுதன் நாயர் பின்பக்கக் கதவைத் திறந்து பிடித்துக் கொண்டு நின்றிருந்தபோது, சுதா சொன்னாள்-
“வேண்டாம் அப்பா. நானே போய்க் கொள்கிறேன். உங்களுக்கு அலுவலகத்தில் முக்கிய வேலைகள் இருக்கும் பட்சம், நான் தொந்தரவு தர விரும்பல..”
நம்பியார் திகைத்துப் போய், அவள் காரில் ஏறுவதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
“கொஞ்ச நேரம் கழித்து நான் கம்பெனிக்கு வர்றேன் அப்பா” கையை வீசிக்கொண்டு சுதா சொன்னாள்.
முன்னால் இருந்த புல்வெளியைச் சுற்றி விட்டு, வளைவில் திரும்பி, கார் கேட்டைக் கடந்து போவதையே பார்த்தவாறு நம்பியார் அதே இடத்தில் நின்றிருந்தார்.
2
“குட் மார்னிங்!”
“யார், உண்ணி அத்தானா?” சுதா சுழலும் நாற்காலியில் சற்று நகர்ந்து உட்கார்ந்தாள். “கதவைத் தட்டி இருக்கலாம். உட்காரும்படி நான் சொல்லவில்லை.”
உண்ணியின் முகம் சற்று சிறிதானது.
“வைஸ் சேர்மனின் அறை. வைஸ் சேர்மனுக்கு முன்னால் இருக்கும் நாற்காலி. ஸாரி... நான் மறந்து விட்டேன். நாற்காலியில் உட்கார்ந்திருப்பது சேர்மன் இல்லையே. இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறதே!”
அதை சிறிதும் விரும்பாதது மாதிரி தூரத்தில் எங்கோ பார்த்துக் கொண்டு சுதா சொன்னாள்.
“லண்டனில் படித்தவர்களுக்கு இப்படிப்பட்ட சிறிய மரியாதைகளை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. பிரிட்டிஷ்காரர்களுக்கு இப்போ எஞ்சி இருக்குறது அது மட்டும்தான். அந்தப் பழைய காலனிய புகழைப் பேசிக் கொண்டிருப்பதும், எலிஸபெத்தின் ஆங்கிலமும், பிறகு கொஞ்சம்... இம்பெக்கபில் மேனர்ஸும், அதற்கேற்ற ஆடைகளும்...”