ஒற்றையடிப் பாதைகள் - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6353
“இதைத்தான் வாழ்க்கை வாழ்க்கைன்னு சொல்றாங்க. இதோ... இந்த சாலைகளைப் போலத்தான். தேவையில்லாத வளைவுகளும் திருப்பங்களும் அருகில் நெருங்கும்போது மட்டுமே பார்க்க முடிகிற சிறிய குழிகளும்.. பிறவியில் ஒன்றாக சேர்வதற்கு படைக்கப்பட்ட இரண்டு பேர் இறுதியில் நடுத்தர வயதை நெருங்கும்போது, தாங்கள் சேர்வதற்கு வாய்ப்பில்லை என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். நல்ல தமாஷ் இல்லையா?”
அவனுக்கு சிரிப்பு வந்தது. குலுங்கிக் குலுங்கி சிரித்தான். சிரித்து சிரித்து முகம் அளவுக்கும் அதிகமாக சிவந்தது. இறுதியில் அது ஒரு நீண்ட இருமலில் போய் முடிந்தபோது, சுதா கையை நீட்டி மெல்ல தலையில் தட்டினாள். இருமல் நின்றது.
“சிறு வயதில் பாட்டி சொல்லித் தந்த விஷயம்.”
தொடர்ந்து வெளிச்சம் இல்லாத சாலைகள் வழியாகக் கார் போய்க் கொண்டிருந்தபோது, மிகவும் அருகில் உண்ணியின் குரல் கேட்டது.
“அப்படின்னா.. சுதா, இனி உன் எதிர்கால திட்டம்?”
அவள் சற்று நகர்ந்து உட்கார்ந்தாள். இருக்கையில் சாய்ந்து கொண்டு மெதுவாகக் கண்களை மூடினாள்.
ஒரு வருடத்தின் இறுதியாக இருந்தது. இரவில் தோழிகள் அனைவரும் புது வருடத்தை வரவேற்பதற்காக கூட்டமாகச் சேர்ந்து எங்கோ போனபோது, அவள் மட்டும் அவர்களிடமிருந்து விலகி நின்றாள். ஜன்னலுக்கு அருகில் மெல்லிய கண்ணாடி வழியாக வெளியே பனி விழுந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். சுருக்கங்கள் விழுந்திருந்த நரைத்த ஆகாயத்திலிருந்து விழுந்து கொண்டிருந்த பனித்துளிகள் கீழே குவிந்து கிடக்க, அதில் நிலவு தெரிந்தது. மாலை நேரத்தில் யாரோ கஷ்டப்பட்டு வெட்டி உண்டாக்கிய, இந்தப் பக்கமாக வரும் சிறிய ஒற்றையடிப் பாதை மீண்டும் மூடப்பட்டுவிட்டது. சிறிய ஒரு காற்று கடந்து சென்றபோது, பனியின் ஒரு மேல்படலம் அதோடு சேர்ந்து சென்றது. இந்த நிலவு கரைந்திருக்கும் பனியில் ஒரு வருடமும்கூட முடிந்து போகிறது அல்லவா? தோழிகள் இப்போது அதன் இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று... அப்போது தேவாலயத்தின் மணிகள் ஒன்று சேர்ந்து முழங்குகின்றன. இரவைக் கிழித்துக்கொண்டு பெரிய ஒரு ஓசை.. துறைமுகத்தில் நங்கூரம் இட்டிருக்கும் கப்பல்களின் நீண்ட சைரன் ஒலி.. யாரோ உரக்க அழைக்கிறார்கள். தெளிவற்ற தொண்டையில் ஏராளமான அபஸ்வரங்களின் ஒரு கூட்டுப் பாட்டு. கோலம் வரையப்பட்ட தரையில் ஆடிக்கொண்டிருப்பவர்களின் மென்மையான காலடிகளுக்கு மத்தியில், அமைதி நிறைந்த குளிர்ந்த காற்றுடன் புதிய ஒரு வருடம் கடந்து வந்து கொண்டிருக்கிறது.
“இல்லை. இதைப்பற்றி இனிமேல் நினைப்பதற்கில்லை” - சுதா முணுமுணுத்தாள்.
இப்போது உள்ளுக்குள் இருப்பது கைலாசத்தின் ஒரு இரவு மட்டுமே. நேரில் பார்க்காத, கனவுகளில் பல தடவை கண்டு ஆசைப்பட்ட இரவு. சுற்றிலும் பரந்து கிடக்கும் பனியில் நிலவு வெளியே வருகிறது. முழுவதும் வெள்ளைநிறத் தோற்றம். தூய வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆடைகள். வெளுத்த உரோமத்தாலான சட்டை. என்னுடைய நீளமாக வளர்க்கப்பட்டிருக்கும் முடியில் நரை விழுந்திருக்கிறது. நெற்றியில் திருநீறு. அடர்த்தியான பனி வழியாக கால்களை நகர்த்தி நடக்கும்போது, தூரத்தில் இமயமலையின் தலையில் வெள்ளிக் கிரீடத்தின் பிரகாசம் தெரிகிறது. பாதிக்கு மேல் உறைந்து போய்விட்ட நீர் அருவிகள் வழியாகப் பெரிய பெரிய பனிக் கட்டிகள் கீழே விழுந்து கொண்டிருக்கின்றன. அருவியைக் கடக்கும்போது, காலுக்குக் கீழே பனிப்பாறைகளில் கால் வழுக்கி விடாமல் இருக்க படாதபாடுபடுகிறேன்.
இந்த நிலவும் பனிப்பரப்பும் வெளுத்த பள்ளத்தாக்கும் அமைதியின் வடிவங்கள். குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் உதடுகள் முன்பு எப்போதோ மறந்து போய்விட்ட வரிகளை உச்சரிக்க தொடங்குகின்றன.
வெள்ளைக் கம்பளி போர்த்திய அமைதியான அடிவாரம். அங்கு நிலவு எந்த சமயத்திலும் மறைவது இல்லையே! வேறொரு இடத்தில் இருந்து வழி தேடி வரும் பயணிகள் இந்தக் குளிர்ந்த- வெண்மை படர்ந்திருக்கும் பள்ளத்தாக்கு வழியாக நடந்து மேலே செல்கிறார்கள். அப்போது இமயமலையின் வெள்ளிக் கிரீடத்தின் ஒளி நெருங்கி நெருங்கி வருகிறது. வெள்ளைப் பட்டில் மூடப்பட்டிருக்கும் இரண்டு கைகள் ஒன்றோடொன்று சேர்வதற்காக நீண்டு வருவதைப்போல...
“என்ன, தூங்குறியா?” - காதில் உண்ணியின் குரல் வந்து விழுந்தபோது, அவள் அதிர்ச்சியடைந்து கண் விழித்தாள்.
“ஏய்.. ஒண்ணுமில்ல” அவள் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். இடம் மாறிவிட்டிருந்த முண்டை சரி பண்ணினாள். கண்களிலிருந்து தூக்கக் கலக்கத்தைக் கசக்கி விரட்டினாள். வெளிச்சம் விழுந்து கொண்டிருந்த சாலையையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நான் ஏதோ ஞாபகத்தில் மூழ்கி விட்டேன்” - அவள் மெதுவான குரலில் சொன்னாள். “உண்ணி அத்தான், நீங்க என்னவோ சொல்லிக் கொண்டு இருந்தீங்க. அதற்கிடையில்..”
“இல்ல.. சுதா, உன்னுடைய எதிர்கால திட்டம் என்னன்னு கேட்டேன்.”
“ஓ.. அதுவா?” அவள் சிரிக்க முயற்சித்தாள். “எனக்கு அதைப்பற்றி நிச்சயமா தெரியவில்லை. இருந்தாலும், இப்போ மனசுக்குள் இருப்பது என்ன என்பதை உங்களிடம் மட்டும் சொல்றேன். அப்பாவுக்குத் தெரிய வேண்டாம். மிகவும் கவலைப்படுவார். இன்னும் சில நாட்கள் இங்கேயேதான் இருக்கப் போறேன். அது முடிந்த பிறகு, ஒருநாள் காலையில் ராமன்குட்டி கதவைத் திறக்குறப்போ, டீப்பாயில் ஒரு கடிதம் இருக்கும்..”
“என்ன?” - உண்ணி அதிர்ச்சியடைந்து திரும்பினான். ஒரு பெரிய முனகலுடன் வண்டி நின்றது.
“பயப்பட வேண்டாம்” - சுதா உரத்த குரலில் சிரித்தாள். “ஒரு நீண்ட பயணம்.. வடக்கு நோக்கி.. எவ்வளவு நாட்களுக்கு என்று தெரியாது. ரிஷிகேஷ், ஹரித்துவார், பத்ரி.. முடிந்தால் மானஸரோவருக்கும்.. சரியாகக் கூற முடியாது. போவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியாது. ஒருவேளை... சில நாட்கள் கடந்த பிறகு... அங்கும் வெறுப்பு தோன்றலாம். அப்போது... ஒருவேளை திரும்பி வரவேண்டும் என்று தோன்றலாம். ஒன்று இங்கு.. இல்லாவிட்டால், திரும்பவும் பழைய இடத்திற்கு...”
“இங்கு வந்தால் போதும். நான் இங்கு எப்போதும் இருப்பேன். உன்னுடைய பழைய முறைப் பையனுக்கு அந்த சமயத்தில் வயதாகிவிட்டிருக்கும். அவ்வளவுதான். ஒருவேளை யாருக்குத் தெரியும்? வயதான பிறகுதான் உறுதியான முடிவை எடுக்கக்கூடிய ஆற்றல் நம்மிடம் இருக்குமோ என்னவோ? ஒரு டைவர்ஸியைப் பற்றி நினைத்துப் பார்ப்பதற்கு சக்திகூட இல்லாமல் இருக்குறப்போ, ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று நீ முடிவு எடுத்தால்..?”
அப்படிச் சொன்னது தனக்கு மிகவும் பிடித்திருப்பதைப்போல உண்ணி மீண்டும் உரத்த குரலில் சிரிக்கத் தொடங்கினான்.
சுதா எதுவும் கூறவில்லை. காரின் எரிந்து கொண்டிருந்த கண்கள் இருட்டைத் துளைத்துப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு அதே நிலையில் அவள் உட்கார்ந்திருந்தாள்.
மிகுந்த களைப்பு தோன்றியது. சிறிது நேரம் கழித்து, மெதுவாக இருக்கையில் சாய்ந்து கொண்டு அவள் கண்களை மூடினாள். தூக்கத்தின் கனம் கண் இமைகளை அழுத்தியது.
அப்போது தோளில் ஒரு கை வந்து விழுந்ததைப்போல அவளுக்குத் தோன்றியது. அதன் வெப்பத்தில் அவள் தூங்க ஆரம்பித்தாள்.