ஒற்றையடிப் பாதைகள் - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6354
அந்தச் செயல்கள் ஆண்மைத் தனத்தைக் காட்டுவதற்காகவா? இல்லாவிட்டால் இளம்பெண்களுக்கு அந்த வயதில் அவையெல்லாம் பெரிய விருப்பமாக இருக்கும் என்று தவறாக கணக்கு போட்டதன் விளைவா? எது எப்படி இருந்தாலும் உண்ணி அத்தான், உங்களுக்கு ஏதோ மனக்கோளாறு இருக்கிறது என்று நான் நினைக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருவேளை, இந்த அளவிற்கு நெருங்கிய உறவு, வெறுப்பைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கலாம். அபர்ணா கூறியதைப்போல, காதலின் இனிமையையும் ஆழத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். பிரிவினால் உண்டாகும் துன்பத்தை அப்போதுதான் தெரிந்து கொள்ள முடியும். எதுவாக இருந்தாலும்.. நமக்கு இடையில் இல்லாமலிருந்தது காதல் மட்டும்தான். இதை முகத்தைப் பார்த்து சொல்ல வேண்டியதிருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. உண்ணி அத்தான், நீங்கள்தான் அதைக் கூறும் அளவிற்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.”
அவற்றையெல்லாம் கூறி முடித்த நிம்மதியுடன் அவள் நீண்ட பெருமூச்சை விட்டாள்.
“அதெல்லாம் ஏனோ எனக்குத் தெரியல” - உண்ணி தோளைக் குலுக்கினான். “என்னைப் பற்றி இதுவரை நான் அந்த அளவிற்கு ஆழமாக ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அது தேவையென்று தோன்றியதில்லை. அவ்வளவுதான். நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவன் என்ற விஷயம் எனக்கு அப்போதே தெரியும். பிறகு.. அந்த சுயநலமும், ஆசைப்படுவதைக் கைப்பற்ற வேண்டும் என்ற பிடிவாதமும்.. ஒருவேளை, சுதா, நீ கூறுவது சரியாக இருக்கலாம். இல்லாவிட்டால் தவறாகவும் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் கடந்துபோன விஷயங்கள். எதிர்காலத்தைப் பற்றி எனக்கு சந்தேகமே இல்லை. எனக்கு நீ வேணும். ஒரு முப்பத்தொன்பது வயது மனிதனின் நடவடிக்கைகளில் சந்தேகம் தோன்ற வேண்டிய அவசியமே இல்லை.”
“வேண்டாம் உண்ணி அத்தான். அது இரண்டு பேருக்கும் சரியாக இருக்காது” - சுதா தலையை ஆட்டினாள். “அந்த கட்டமெல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது.”
“இன்னொரு முறை நாம் ஏன் முயற்சி பண்ணி பார்க்கக்கூடாது?”
“வேண்டாம்... அந்த சோதனை வேண்டாம்.. அது சரியாக இருக்காது..” - அவள் உரத்த குரலில் திரும்பத் திரும்ப கூறினாள்.
“எனக்கு கொஞ்சம்கூடப் புரியவில்லை.”
ஒரு நிமிடம் தயங்கிவிட்டு, சுதா முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.
“என் உடல் முழுவதும் அழுக்காகி இருக்கிறது. அன்று நான் எல்லாவற்றையும் மனம் திறந்து சொன்னேனே!”
“அது கடந்துபோன விஷயங்கள். உடலைப் பற்றி நான் இப்போது தீவிரமாக சிந்திப்பதே இல்லை.”
“உடல் மட்டுமல்ல, மனமும் அழுக்காகி இருக்கிறது. பல நேரங்களில் தேவையற்ற, அசிங்கமான, சில ஆசைகளுக்கு அடிபணிந்த மனமும் கரி பிடித்த சுவரைப்போலத்தான். மனதின் அந்த அழுக்கை எந்த சமயத்திலும் நீக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.”
“உண்மையான காரணம் எனக்குத் தெரியும்” - உண்ணியின் முகம் இருண்டது. “என்னுடைய அந்தப் பெரிய தவறு.. ஆனால், நம்பு. அது வேண்டுமென்றே செய்யப்பட்டது அல்ல. அப்போதைய சூழ்நிலைகளில் எப்படியோ அது நடந்துவிட்டது. அதை அதற்கு மேலும் விளக்க விரும்பவில்லை. இப்போதும் ஆச்சரியம் தோன்றுகிறது. தெரேஸா எப்படி என்னுடைய வாழ்க்கைக்குள் நுழைந்தாள் என்ற விஷயம். எந்த விதத்திலும் பொருத்தமான குணங்களைக் கொண்டவர்களாக நாங்கள் இல்லை. ஒருவேளை, என்னுடைய அந்த துணிச்சல் குணம் காரணமாக இருக்கலாம். அவளும் அதே மாதிரியான குணத்தைக் கொண்டவளாக இருந்தாள். அந்த வகையில் திடீரென்று எடுத்த தேவையற்ற ஒரு முடிவு அது. என்னை தந்தையைப் போல வளர்த்து ஆளாக்கிய அங்கிளிடம்கூட ஒரு வார்த்தை சொல்லாமல் நான் செய்த முட்டாள்தனமான செயல் அது. ஒரு இணக்கமும் இல்லாத வெளிநாட்டைச் சேர்ந்த பெண்..”
“அது இருக்கட்டும். எனக்கு முன்னால் இப்போது தெரேஸா இல்லை. நான் அவளுடைய படத்தைக்கூட பார்த்தது இல்லை. இப்போது அவள் எனக்கு ஒரு பிரச்சினையாக வரப்போவதும் இல்லை.”
“பிறகு? பிறகு என்ன பிரச்சினை என்று சொல்லு...”
அப்போது பணியாள் வந்தான். பாத்திரங்களை எடுத்துச் செல்ல ஆரம்பித்தான்.
“சுதா, உனக்கு என்ன டெஸர்ட் வேணும்?”
“எதுவும் வேண்டாம். இல்லாவிட்டால்.. ஒரு காபி. கருப்பு காபி..”
பணியாள் போவதற்காக அவள் காத்திருந்தாள். பிறகு எதையோ நினைத்துக்கொண்டு அவள் உரத்த குரலில் சொன்னாள்:
“வேண்டாம் உண்ணி அத்தான்... இன்னொரு சோதனை வேண்டாம். எனக்கு அதற்கான சக்தி இல்லை. ஆர்வமும் இல்லை.”
“அந்த அளவிற்கு தைரியம் இல்லாமல் இருப்பது தேவையா?”
“ஒரு டைவர்ஸி என்பதைவிட ஸ்பின்ஸ்டர் என்ற வார்த்தை கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. குறிப்பாக- நம்முடைய சமூகத்தில். மலையாளத்தில் சொல்வதாக இருந்தால்-கன்னி. உலகத்திற்கு முன்னால், மூன்று பிள்ளைகளைப் பெற்ற பழைய சினேகிதி ஜானுவிற்கு முன்னால் நான் இப்போதும் கன்னிப்பெண்தான். அப்படி அழைக்கப்படுவதற்காக ஒரு வெர்ஜினிட்டி சோதனையோ, மெடிக்கல் சர்ட்டிபிகேட்டோ நம்முடைய நாட்டில் தேவையில்லையே! உண்மையிலேயே அது நிம்மதியான விஷயம். இல்லாவிட்டால் அங்கும் நான் கீழே விழுந்திருப்பேன். இல்லையா?”
அவளுடைய குரலில் இனம் புரியாத ஒரு வேதனை தங்கியிருப்பதை உண்ணியால் புரிந்துகொள்ள முடிந்தது.
சிறிது நேரத்திற்கு இரண்டு பேரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள்.
“பில்லை செலுத்திவிட்டு லிஃப்டை நோக்கி நடக்கும்போது உண்ணி சொன்னான்.
“நமக்கு எங்கோ தவறு நடந்துவிட்டது இல்லையா சுதா? எல்லாவற்றையும் மீண்டும் ஒருமுறை சரி பண்ணிக் கொண்டு போக முடியுமா என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.”
“தேவையற்ற ஆசை” - சுதா ஒரு விரக்தி கலந்த சிரிப்பு சிரித்தாள்.
லிஃப்ட் வந்தது. அந்த சிறிய கூட்டின் தனிமையில் சாய்ந்து நின்றுகொண்டு சுதா சொன்னாள்.
“ஒருவேளை... உண்ணி அத்தான், உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். முன்பு நம்முடைய ஜாதகங்களை குறைந்தபட்சம் நான்கைந்து ஜோதிடர்களிடமாவது அப்பா கொண்டு போய் பார்த்திருக்கிறார். அந்த ஜாதகங்கள் சேரவே சேராது என்று எல்லோரும் உறுதியான குரலில் சொல்லிவிட்டார்கள். ஒரு ஆள் மட்டும் பரவாயில்லைன்னு சொன்னார். மற்ற விஷயங்களெல்லாம் சரியாக இருந்தால், அந்த அளவிற்கு விருப்பம் இருந்தால், ஓரளவுக்கு சேர வாய்ப்பு இருக்குன்னு அவர் சொன்னார். என்னவெல்லாம் நிபந்தனைகள்.. இல்லையா? போன வருடம்தான் எனக்கு அது தெரியும். ஆனால் கிரகங்கள் அந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், ஜோதிடர்கள் கூறுவதற்கு முன்பே, நாம் இருவரும் சிறிதும் சேர மாட்டோம் என்பதை நான் அறிந்திருந்தேன்.”
ஆரஞ்சு நிற வெளிச்சம் விழுந்திருந்த ஈரமான சாலையில் வண்டியை ஓட்டிப் போகும்போது, உண்ணி வெறுமனே சந்தோஷமாக இருப்பது மாதிரி காட்டிக் கொண்டான்.