ஒற்றையடிப் பாதைகள் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6354
ஆனால், இங்கு கண்களில் தெரிபவை அனைத்தையும் உருவாக்கிய பிறகு, தொட்ட ஒவ்வொன்றிலும் அதிர்ஷ்டம் கிடைத்தபோது தலையை கம்பீரமாக உயர்த்த முடிந்தது. இப்போதும் என் தலை நேராகத்தான் இருக்கிறது. பலரும் கைகளைத் தட்டிக் கொண்டாடும் பெரிய பெரிய சாதனைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பித்தலாட்டங்களைப் பற்றி எனக்கு மிகவும் நன்றாகத் தெரியுமோ.”
இவை அனைத்தும் பல முறைகள் கேட்டவைதான். சுதா வேகமாக விஷயத்தை மாற்றப் பார்த்தாள்.
“எது எப்படி இருந்தாலும் என் மனதில் சில ப்ராஜெக்ட்டுகள் இருக்கின்றன. அதை நான் உண்ணி அத்தானிடம் குறிப்பாகக் கூறியிருக்கிறேன்.”
நம்பியார் தாடையில் கையை வைத்துக் கொண்டு சிறிது நேரம் யோசனையில் ஈடுபட்டிருந்தார்.
“இந்த கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் ஏற்றுமதி என்று சொல்றப்போ, அது நமக்கு சிறிதும் தெரியாத ஏரியாவாயிற்றே மகளே? மனதிற்குள் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒரு திட்டத்திற்குள் கால் வைக்கிறோம் என்றால்- அதன் வரும், வராதது ஆகியவற்றைப் பற்றி எதுவுமே நமக்குத் தெரியாதே.”
“அறியாமல் இருப்பதைப் பற்றிய பயம்.. அப்படிததானே?”
“அப்படியொண்ணும் இல்லை. ஒரு காலத்தில் எதைப் பற்றியும் நான் தெரியாமல்தானே இருந்தேன். ஆனால், தலைக்குள் விழுந்த ஒரு வெளிச்சக் கீற்று. அதுதானே எனக்கு எப்போதும் வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறது.”
அதைக் கேட்காதது மாதிரி, தூரத்தில் எங்கேயோ பார்த்துக் கொண்டு சுதா கூற ஆரம்பித்தாள்.
“முடிவே இல்லாமல் பரந்து கிடக்கும் காங்கிரீட் வனத்தில் நீண்ட காலம் இருந்துவிட்டது காரணமாக இருக்கலாம்- மனதிற்குள் தேவையற்ற சில ஆசைகள். தெளிந்த ஆகாயம், தெளிந்த நீர், நான்கு பக்கங்களிலும் பச்சை நிறம், குன்றும் மலையும். ஏராளமான பச்சை மரங்கள் அடர்த்தியாக நின்று கொண்டிருக்கும் பள்ளத்தாக்கு, பரந்து கிடக்கும் புல்வெளிகள்.. எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. ஒரு நல்ல மழைக் காலத்தில் காட்டின் நடுவில் இருக்கும் பங்களாவின் அறையில் தனியாக, கண்ணாடி ஜன்னல் வழியாக மழை பலமாகப் பெய்து கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே ஒரு இரவு முழுவதும் கண்களை விழித்துக் கொண்டு இருக்க வேண்டும். மழைக்காலத்தில் ஓட்டின்மீது ஒலிக்கும் பறை சத்தம், குளிர்காலத்தில் முடியை அவிழ்த்துப் போட்டு ஆடுதல், சிங்க மாதத்தில் கழுவி சுத்தமான புலர்காலைப் பொழுதில் கண்களைத் திறக்கும் காக்கா மலர்கள்..”
“பழைய நினைவுகள்.. அப்படித்தானே?” - நம்பியார் சிரித்தார். “கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கு. மிகவும் அதிகமான தூரத்தில் இருக்கும்போது பழைய நினைவுகளுக்கு அடர்த்தி அதிகமாக இருக்கும். எது எப்படியிருந்தாலும் சந்தோஷம்தான். இந்த அளவுக்கு என் மகளுக்கு மிகவும் அருமையாக மலையாளம் பேச முடிகிறதே.”
“எவ்வளவு வருடங்கள் ஆனாலும், எங்கு வசித்தாலும் உள்ளுக்குள் இருக்கும் அந்த எட்டு வயது சிறுமியின் பிடியிலிருந்து தப்பிக்க முடியும் என்று தோன்றவில்லை. அன்றைய மிகவும் சிறிய ஆசைகளும், முடிவே இல்லாத கனவுகளும்.. சில நேரங்களில் தோணுவதுண்டு. அதே புனிதத் தன்மையை வாழ்நாள் முழுவதும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்க முடிந்தவர்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள்.”
“மகளே, ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது” - நம்பியார் சொன்னார். “இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைத்தது நீதான். நான் எவ்வளவோ சொல்லியும், படிப்பு முடிந்த பிறகுகூட நீ அங்குதான் இருக்கணும்னு நினைச்சே. ஒவ்வொரு இடங்களிலும் போய் இருந்தே. திரும்பி வரவேண்டும் என்று தோன்றும் அளவிற்கு எவ்வளவோ சம்பவங்கள் நடந்தன. உன்னுடைய சினேகிதியின் அப்பார்ட்மெண்டில் பட்டப் பகலில் நீக்ரோக்கள் பலவந்தமாகப் புகுந்து அங்கிருந்த எல்லா பொருட்களையும் திருடிவிட்டு, அவளுக்கும் தொந்தரவுகள் தந்தப்போ, நீ வரவேண்டும் என்று நினைத்தாய் அல்லவா? அங்கிருக்கும் சட்டம், ஒழுங்கு சூழ்நிலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது என்று நீதான் சொன்னே. அதற்குப் பிறகும் நீ அங்குதான் இறுகப் பிடித்துக் கொண்டு இருந்தே.”
சுதாவிற்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.
“அது இருக்கட்டும். நாம் அந்த விஷயத்தில் இறுதியாக ஒரு முடிவு எடுத்தே ஆகவேண்டும். அடுத்த வாரம் போர்ட் மீட்டிங் இருக்கு. சில விஷயங்களில் முடிவு எடுக்க வேண்டியதிருக்கிறது. நீ வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் கூட்டம் அன்றைய தினத்தில் வைக்கப்பட்டிருக்கு.”
“நான் எதுவும் கூறுவதற்கில்லை அப்பா. என் மனதில் எந்தவொரு குழப்பமும் இல்லை. இதற்குமேல் ஒரு மீட்டிங்கும் விவாதமும் எனக்குத் தேவையில்லை.”
“இது பிடிவாதமாச்சே மகளே.”
“கொஞ்சம் பிடிவாதம் இருக்குறது நல்லதுதானே அப்பா? பிறகு.. ஒரு முப்பத்தைந்து வயது பெண் பிடிவாதம் பிடிக்கிறாள் என்னும்போது, அதற்குப் பின்னால் ஏதாவது இல்லாமல் இருக்குமா?”
“உண்ணியுடன் இன்னொரு முறை வேணும்னா..”
“அதற்கான அவசியம் இல்லை.”
“நான் மிகுந்த தர்மசங்கடத்தில் இருக்கேன் மகளே.”
அவர் கையை நீட்டி அவளுடைய உள்ளங்கையை அழுத்தினார். அது தன் தந்தையின் பதினெட்டாவது முயற்சி என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவள் மெதுவாகக் கையை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர முயற்சித்தாள்.
“என்னை மன்னிச்சிடுங்க. இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால்..” - சுதா திடீரென்று நிறுத்தினாள்.
“முன்கூட்டியே தெரிந்திருந்தால்..?”
எதுவும் கூற முடியாமல் அவள் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.
“முன்கூட்டியே தெரிந்திருந்தால் நீ திரும்பி வந்திருக்க மாட்டாய். அப்படித்தானே?” - தந்தையின் கண்கள் தனக்குள் ஆழமாகச் செல்வதை அவள் அறிந்து கொண்டாள்.
அவள் அப்போது எதுவும் சொல்லவில்லை.
தந்தைக்குத் தன் தொண்டையே அடைத்துக் கொண்டுவிட்டதைப்போல இருந்தது. உள்ளுக்குள் இருந்து என்னவோ வேகமாக வெளியே வந்து கொண்டிருந்தது. என்னவோ கூற வேண்டும்போல அவருக்கு இருந்தது. சிறுபிள்ளையாக இருக்கும்போது தன்னுடைய கையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி.. அவளுடைய பிடிவாதத்திற்கு முன்னால் எப்போதும் தான் தோல்வியைத் தழுவினாலும், இப்போது அவள் கம்பீரமாக நின்று கொண்டு தன்னுடைய கருத்தை முகத்தை நோக்கி உறுதியான குரலில் கூறும்போது, அவருக்கு என்னவோ போல் இருக்கிறது.
“வெளியே போய் படித்ததால்தான் இப்படியெல்லாம் ஆயிட்டே அப்படித்தானே? நீ ஆசைப்பட்டதைப்போல சொந்தக் காலில் நிற்கக்கூடிய பலமும் தன்னம்பிக்கையும் கிடைத்துவிட்டன என்பது மட்டுமல்ல.. வேண்டியவர்களின் முகத்தைப் பார்த்து குரூரமாக பேசுவதற்கும் சிறுதுகூடத் தயக்கம் இல்லாத நிலை வந்திருக்கிறது” - இதைச் சொல்லி முடித்தபோது, இதைச் சொல்லியிருக்க வேண்டாம் என்று அவருக்குத் தோன்றியது.
தன் தந்தையின் முகம் மங்கலாகி இருள்வதையும், குரல் தடுமாறுவதையும் மகள் தெரிந்து கொண்டாள். சற்று தயக்கத்துடன் அவள் சொன்னாள்.