ஒற்றையடிப் பாதைகள் - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6354
“அய்யோ.. வேண்டாம். வீட்டில் குழந்தைகள் தனியாக இருக்காங்க..”
“நேரம் அதிகமாயிடுச்சு. பேருந்து இருக்குமா?”
“சுமார் ஒண்ணரை மணி நேர தூரம் இருக்கும். நான் போறேன். தாமதமானால் குழந்தைகள் பயப்படுவாங்க.”
“கொஞ்சம் நில்லு.”
சுதா உள்ளே சென்று கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். அதை சிறுவனின் பையில் வைக்க முயன்றபோது, ஜானு அதைத் தடுத்தாள்.
“குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்குவதற்கு..” சுதா சொன்னாள்.
“வேண்டாம் சுதாக்குட்டி. அது நல்லது இல்ல. நான் இதை வாங்கினால் உனக்கும் எனக்கும் இடையில் இருக்கக்கூடிய நட்பு என்னவோ மாதிரி ஆயிடும். இவ்வளவு நேரமா நாம இங்கே குழந்தைகளைப்போல இருந்தோம். குழந்தைகளுக்கிடையே எந்த சமயத்திலும் நோட்டுகள் கை மாறக்கூடாது. நமக்கிடையே கொஞ்சம் தாமரை மொட்டுகளும், புளியங்கொட்டைகளும், முந்திரிப் பருப்பும், வளையல் துண்டுகளும் மட்டும் தானே இருந்தன. அவ்வளவு போதும். அது அங்கேயே இருக்கட்டும். இல்லாவிட்டால் ஒரு சுவாரசியம் இருக்காது. நம்முடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட சில சின்ன சந்தோஷங்கள் மட்டுமே இருக்கின்றன. எது எப்படி இருந்தாலும், எதையுமே நினைக்காமல் உன்னை சந்திக்க முடிந்ததே. அது போதும். நான் இனிமேல் ஊரில் பெருசா பெருமையுடன் பலரிடமும் சொல்லிக் கொள்ளலாம், சுதாக்குட்டி என்னுடைய நெருங்கிய தோழின்னு.”
அவளுடைய கசங்கிய ஆடைகளையும், எண்ணெய் தேய்த்திராத காற்றில் பறந்து கொண்டிருந்த நரை விழுந்த தலைமுடியையும் பார்த்தபோது உள்மனம் கலங்கியது.
வாசலை விட்டுப் படிகளில் இறங்கும்போது, ஜானு திடீரென்று திரும்பி நின்றாள். என்னவோ கூற முயற்சித்தாள். உடனே அதைத் தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டாள். மீண்டும் இரண்டு அடிகள் வைத்த அவள் எதையோ நினைத்து முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.
“என்ன ஜானு?” சுதா அருகில் வந்து அவளுடைய தோளில் கையை வைத்தாள். “சொல்லு.. தயங்க வேண்டாம்.”
அவளுடைய வதங்கிப்போன முகத்தில் இருந்த சுருக்கங்கள் மேலும் அதிகமாவதை சுதா பார்த்தாள். அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கும்போது, கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.
“இல்ல.. இவனுடைய அப்பா சொன்னார்- உனக்கு பிரச்சினை இல்லாமல் இருந்தால்...”- தொண்டை தடுமாறியபோது, அவள் பேச்சைத் தொடர சிரமப்பட்டாள். “லட்சுமிக்குட்டி பத்தாம் வகுப்பில் தோல்வியடைஞ்சிட்டா. இனிமேல் அவள் தேர்ச்சி பெறுவாள் என்று சொல்வதற்கில்லை. அவளுக்கு சரியா படிப்பு வராது. அதனால் இவனோட அப்பா சொன்னார். செய்யணும்னு இல்ல. இருந்தாலும்.. சுதாக்குட்டி.. நீ நினைச்சால் கம்பெனியில அவளுக்கு ஏதாவது வேலை.. ஏதாது பெருக்குற வேலையோ வேறு ஏதாவதோ.. உங்களுடைய கம்பெனியிலதான் வேணும்னு இல்லை. வேறு ஏதாவது கம்பெனியில்..” குரல் இறங்கி கொண்டேயிருந்தது.
“ஜானு, கவலைப்பட வேண்டாம். நான் அப்பாக்கிட்ட சொல்றேன். நீ அவளை ஒரு விண்ணப்பம் எழுதித்தரச் சொல்லு.”
“ரொம்பவும் உதவியாக இருக்கும். அங்கே வேலை கிடைக்க ஒரு வழியும் இல்லை. செங்கல் சூளையில் வேணும்னா வேலை கிடைக்கும். ஏனோ மனசு வரலை. சொல்லப் போனால் மேல் ஜாதியாச்சே! பிறகு.. அவளை தலையில் சுமை சுமக்க வைப்பது என்பது...”
“ஜானு, நீ கிளம்பு. நான் பார்த்துக்குறேன்.”
“நல்லா வளர்ந்த பொண்ணு. நான்தான் ஏற்கனவே வயதைச் சொன்னேனே! யாருடனாவது திருமணம் செய்து அனுப்பி வைக்கிறதா இருந்தால், நாங்க நினைச்சாலும் நடக்காது.”
சுதா ஆறுதல் கூறுகிற வகையில் அவளுடைய தோளைத் தட்டினாள்.
“இப்போ நாம் சிறு குழந்தைகளாக இல்லாமல் போய்விட்டோம். இல்லையா சுதாக்குட்டி? ஏற்கனவே நான் சொன்னதெல்லாம் வெறுமனே சொல்லப்பட்டவை. அப்படித்தானே?”
புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டு, மகனின் கையைப் பிடித்தவாறு அவள் நடந்து போவதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது, பல வருடங்களுக்குப் பிறகு அன்று முதல் தடவையாக சுதாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.
உரம் வைக்கப்பட்டிருந்த அறையின் மறைவில் எங்கேயோ இழந்துவிட்ட கொஞ்சம் உருண்டையான கற்களும், களரி மைதானத்தின் மண்ணில் காற்றடித்து மறைந்த அந்தப் பழைய கோலங்களும்...
எப்போதும் வெற்றி பெற்றதென்னவோ ஜானுதான். என்றாவது அவளைத் தோல்வியடையச் செய்ய முடியும் என்ற ஆசையும் இல்லாமல் இருந்தது.
அப்படியென்றால் எல்லாம் சேர்ந்து இவ்வளவுதான். இல்லையா? தன் மனதிற்குள் தனக்கே தெரியாத ஒரு வெறுப்பு திரண்டு நிற்பதை அவளால் உணர முடிந்தது.
ராமன்குட்டி தோட்டத்திலிருந்து வந்து கொண்டிருந்தாள்.
“போயாச்சா?” அவனுடைய முகத்தில் அப்போதும் வெறுப்பு இருந்தது.
“ம்.”
“இரவு உணவுக்கு என்ன வேணும்?”
“உங்களுக்குப் பிடித்த ஏதாவது..”
“என்ன, அப்படி சொல்றீங்க? உங்களுக்கு என்ன வேணுமோ அதை நான் செய்வேன். தெரிந்தவை என்ன என்றால்... பெரிய விஷயங்கள் எதுவும் எனக்கு பழக்கம் இல்லை. பங்களாவில் அப்படிப்பட்ட பார்ட்டியோ வேறு ஏதோ இருக்குறப்போ வெளியில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து சமையல் செய்வதுதான் வழக்கம்.”
“விசேஷமா ஒண்ணும் வேண்டாம் ராமன்குட்டி” - அவள் மெதுவான குரலில் சொன்னாள். “கொஞ்சம் கஞ்சி.. முருங்கைக்காய், மாங்காய் ஆகியவற்றைச் சேர்த்து கூட்டு, மாங்காய் ஊறுகாய், இரண்டு அப்பளம்.. பிறகு.. சிரமம் இல்லையென்றால் காய் வறுவல் மண் சட்டியில் கிடந்து நல்லா வறுபடணும்.. தெரியுதா?”
அவள் உள்ளே திரும்பியபோது, நம்பிக்கை வராததைப்போல ராமன்குட்டி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
அப்போது தொலைபேசி ஒலித்தது.
அது உண்ணிதான்.
“சுதா, ஃப்ரீயா இருக்கியா?” உண்ணி கேட்டான்.
“என்ன?”
“நாம கொஞ்சம் நகரத்திற்குப் போறோம். இரவு சாப்பாடு அங்கேதான்.”
“என்ன விசேஷம்?”
“ஒண்ணுமில்ல. வெறுமனே நாம அப்படிப் போறோம். அவ்வளவுதான்” - உண்ணியின் குரலில் முன்பில்லாத ஒரு உறுதி தொனித்தது. சிறிய அளவில் அதிகாரத்தின் கனம் தெரிந்தது. அதைச் சிறிதும் விரும்பவில்லையென்றாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் அவள் அதை நிராகரிக்க முயற்சித்தாள்.
“இங்கே சாப்பாடு தயாரிக்கச் சொல்லிட்டேன்.”
“அதனால் பரவாயில்ல.. இரண்டு பேருக்கான சாப்பாட்டை சாப்பிட ராமன்குட்டியே போதும்.”
“என்ன விசேஷம்னு சொல்லலையே?”
“சிறப்பாக ஒண்ணும் இல்லை... இல்ல.. இனிமேலும் காரணம் வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், சொல்றேன். இன்று என்னுடைய பிறந்தநாள். ஆனால் அதனால் ஒண்ணுமில்ல. வெறுமனே ஒரு நீண்ட டிரைவ். அத்துடன் வெளியில் இருந்து சாப்பாடு அவ்வளவுதான்.”
என்ன காரணத்தாலோ - அவளால் மறுத்து எதுவும் கூற முடியவில்லை. சரியான ஒரு சாக்குப் போக்கைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே உண்ணி தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டான்.
உடலை நீரில் கழுவிவிட்டு ஆடைகளை மாற்றுவதற்காக நிலைக்கண்ணாடிக்கு முன்னால் வந்து நிற்கும்போது, அவள் நினைத்துப் பார்த்தாள்.