ஒற்றையடிப் பாதைகள் - Page 19
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6354
சுரிதார் போதுமா? இல்லாவிட்டால் புடவை வேண்டுமா?
ஆனால் அலமாரியைத் திறந்தபோது, முதலில் கண்களில் பட்டது அந்த ஜரிகை போட்ட முண்டுதான். வந்த மறுநாள், அவளுடைய தந்தை வாங்கிக் கொண்டு வந்தது. காக்கும் தேவதையின் ஆலயத்தில் அன்றைய பூஜைகள் முழுவதும் அவளுடைய தந்தையின் மேற்பார்வையிலேயே நடைபெற்றன. மகள் திரும்பி வரவேண்டும் என்பதற்காக நேர்ந்திருக்கலாம். அன்று முண்டுதான் உடுத்த வேண்டும் என்று அவளுடைய தந்தை வற்புறுத்தினார். அதை உடுத்துவதற்கு தேவகியம்மா மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது.
இன்றும் அதையே உடுத்தினால் என்ன? ஒரு மாறுதலாக இருக்குமே. உண்ணி அத்தானைக் கொஞ்சம் விரட்டவும் செய்யலாம்.
அவள் அக்கறையுடன் ஆடையை மாற்ற ஆரம்பித்தாள்.
முண்டு, மேற்துண்டு ஆகியவற்றுடன் கண்ணாடியில் பார்த்த உருவத்திற்கு, அந்த வெட்டி சரி செய்யப்பட்ட தலைமுடி ஒரு கோமாளியின் முகத்தைக் கொடுப்பதாக அவளுக்குத் தோன்றியது.
‘பரவாயில்லை. இதுபோதும்’ - அவள் முணுமுணுத்தாள். ‘வெட்டி எறிந்த தலைமுடி இனி முன்பு இருந்தது மாதிரி முளைத்து வரப்போவதில்லை என்பது எனக்கு அப்போதே நன்றாகத் தெரியும்.’
போர்ட்டிக்கோவில் காரின் சத்தம் கேட்டது. அவள் மெதுவாக வரவேற்பறையை நோக்கி நடந்தாள்.
“நான் சாப்பாட்டுக்கு இருக்க மாட்டேன். தெரியுதா? நகரத்திற்குப் போகிறேன்.”
ராமன்குட்டி அதைக் காதிலேயே வாங்கவில்லை என்பது மாதிரி இருந்தது. அவன் அவளுடைய ஆடை மாற்றத்தையே வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
2
மொட்டை மாடியின் ஒரு மூலையில், தூரத்தில் ஏரியின் அக்கரையில் இருந்த தீவின் கண்கள் மின்னுவதைப் பார்த்தவாறு அவள் அமர்ந்திருந்தாள்.
“இந்த ஆடைகள்.. இனியும் அதையே சொல்லிக் கொண்டிருந்தால் மிகவும் போராக இருக்கும். இல்லையா?” - உண்ணி சிரிக்க முயன்றான்.
“காருக்கு அருகில் இந்த ஆடைகளுடன் நடந்து வருவதைப் பார்த்தபோது, இன்னொரு உலகத்தில் இருந்து வேறு யாரோ..”
அவள் முகத்தைத் திருப்பினாள்.
“அப்படியா?”
“சிறிதுகூட நினைத்திருக்காத நேரத்தில் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொள்வது.. சுதா, அந்தப் பழக்கம் சிறு வயதிலிருந்தே உன்னிடம் இருக்கிறதே. அதனால் பல நேரங்களில் உன்னுடைய குணத்தைக் கண்டுபிடிக்க முடியாமலே போய்விடுகிறது. மேகங்கள் திடீரென்று மூடியதைப்போல இருப்பதும், பிறகு மின்னலும் இடி இடிப்பும்.. ஒரு முழுமையான மழைக்காலம் எங்கேயோ மறைந்திருப்பதைப்போல..”
அவள் வெறுமனே தோளைக் குலுக்கினாள்.
“என்னதான் விழுந்து விழுந்து புரண்டாலும் ஒரு ஆளை அவனுக்குப் பொருத்தமான சூழ்நிலைகளில் பார்ப்பது என்பது நல்ல விஷயம்தான். சுதா, இந்த ஜரிகை முண்டில்..”
அவள் எந்தவித ஆர்வத்தையும் வெளிப்படுத்தாமல் தன்னுடைய சொந்த சிந்தனைகளில் ஆழமாக மூழ்கிப் போய்க் கொண்டிருந்தாள்.
அத்துடன் உண்ணிக்கு பேசுவதற்கு எதுவுமே இல்லை என்றாகிவிட்டது. நீண்ட நேரம் எதுவும் பேசாமல் நேருக்கு நேராக அவர்கள் அதே நிலையில் உட்கார்ந்திருந்தார்கள். உண்ணி பேச ஆரம்பிக்கட்டும் என்று அவள் எண்ணினாள். அது மட்டுமல்ல.. ‘இந்த மனிதனால் என்ன காரணத்தாலோ, என்னை சிறிதுகூட அசைக்கவே முடியவில்லையே’ என்று அவள் ஆச்சரியப்படவும் செய்தாள். உண்ணியோ எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற தடுமாற்றத்தில் இருந்தான்.
சிறிது நேரம் சென்றவுடன் வெறுப்புடன் அவன் கேட்டான்.
“சுதா, உனக்கு ஒரு ஜிம்லெட் சொல்லட்டுமா?”
“வேண்டாம்..”
“ஒயின்.”
“வேண்டாம். கட்டாயம் என்றால் ஃப்ரஷ் லைம் சொல்லுங்க. கொஞ்சம் உப்பு போட்டு.. இல்லாவிட்டால் வேண்டாம். எதுவும் வேணும்னு தோணல..”
“நான் ஒரு விஸ்கி சொன்னால், பிரச்சினை இல்லையே?”
“என்ன பிரச்சினை?”
“சிகரெட் புகைப்பதை எதிர்க்கக்கூடிய உனக்கு இப்படியும் சில விஷயங்கள் பிடிக்காமல் இருந்தால்..” அவன் திடீரென்று நிறுத்தினாள். “ஓ.. அன்னைக்கு எனக்கு நீ ஊற்றித் தந்தாய் அல்லவா? அதை மறந்துவிட்டேன்.”
உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்ட பிறகு, மீண்டும் அமைதி.
சிறிது நேரம் கழித்து உண்ணி சொன்னான். “எனக்கும் இப்படி நீரைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் பிடிக்கும்.. இரவு நேரத்தில்..”
“அப்படியா?”
“தேம்ஸ் நதிக்கரையில் எனக்கு விருப்பமான ஒரு தனியிடம் இருந்தது.”
சுதா திடீரென்று எழுந்தாள். வேலிக் கம்பிகளைப் பிடித்தவாறு தூரத்தில் நங்கூரம் இட்டவாறு நின்றிருந்த கப்பலின் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
உண்ணி அருகில் சென்றான். கண்ணாடிக் குவளையில் இருந்து ஒரு மடக்கு பருகிவிட்டு அவன் மெதுவான குரலில் முணுமுணுத்தான்.
“பிறந்த நாளைப் பற்றி நான் சொன்னேன். அவ்வளவுதான். என்ன காரணமோ அதில் ஆர்வம் எதுவும் தோன்றவில்லை. காலையில் அங்கிள்தான் ஞாபகப்படுத்தினார். கோயிலுக்குப் போனேன். வருடத்திற்கொருமுறை வரும் நினைவைப் புதுப்பித்துக் கொள்ளுதல் அப்படித்தானே? அது இருக்கடடும். சுதா, நீ தீவிரமாக அப்படி எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறே?”
“அப்படிக் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை.”
“நல்ல ஒரு மாலைப்பொழுது வீணாகிக் கொண்டிருக்கிறது.”
அவளுடைய உதடுகள் கோணுவதை அவன் பார்த்தான்.
“எது எப்படியிருந்தாலும், ஆள் இப்போது இங்கேயே இல்லை. வேறு ஏதோ உலகத்தில்.. வேறு ஏதோ வட்டத்தில்..”
அவள் எதுவும் சொல்லாமல் வெறுமனே வேலிக் கம்பிகளில் தாளம் போட்டுக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் நாற்காலிகளுக்குத் திரும்பி வந்தபோது, உண்ணி சொன்னான்.
“என்ன காரணத்தாலோ அங்கிள் மிகுந்த கவலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் அவரை என்னால் முடிந்தவரையில் சமாதானப்படுத்த முயன்றேன். என்ன இருந்தாலும், நான் என்னும்போது, கொஞ்சம் வரையறைகள் இருக்கத்தானே செய்கின்றன. ஒருவேளை.. சுதா, நீ இன்னும் கொஞ்சம் நல்ல விதமாக இந்த விஷயத்தைக் கையாள முடியும்.”
“எந்த விதத்தில்?”
“மனம் திறந்து சொல்லவில்லையென்றாலும், அங்கிளின் மனதிற்குள் நிறைய பயம் இருக்குன்னு தெரியுது. சுதா, நீ எங்கே திரும்பிப் போயிடுவியோன்னு அவர் நினைக்கிறார்.”
உண்ணி அவளுடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவனுடைய தந்திரம் என்பதை உடனடியாக சுதா புரிந்துகொண்டாள். அவளுடைய தந்தை நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் விடாமல் அவனிடம் சொல்லியிருப்பார். அப்படியே இல்லையென்றாலும், உண்ணி அத்தானுக்குத் தெரியாத விஷயங்கள் எதுவும் அவளுடைய தந்தையிடம் இல்லையே.
அவள் சாதாரணமாக அங்கிருந்து போய்விடலாமா என்று பார்த்தாள்.
“அதற்கு.. திரும்பிப் போகமாட்டேன் என்று நான் எந்த சமயத்திலும் சொன்னது இல்லையே.”
“இருந்தாலும்.. நாங்க ஏற்கனவே நினைத்திருந்தது அப்படி இல்லையே.”
“அதற்கு நான் காரணம் இல்லை.”
திடீரென்று உண்ணி சற்று நகர்ந்து உட்கார்ந்தான். கண்ணாடிக் குவளையில் இருந்தது முழுவதையும் காலி செய்துவிட்டு, பணியாளை அழைத்து மீண்டும் ஒரு பெக்கிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, சொல்ல ஆரம்பித்தான்.