ஒற்றையடிப் பாதைகள் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6354
“சரி அங்கிள். இதோ வர்றேன்” உண்ணி வருவதற்காகக் காத்திருந்தபோது, சிறிய ஒரு வருத்தத்துடன் நம்பியார் நினைத்துப் பார்த்தார். ‘இவன் காட்டும் அன்பைக்கூட என்னுடைய மகள் என்மீது காட்டவில்லையே!’
வரப்பில் ஒற்றைக் காலில் தவம் இருக்கும் கொக்கின் முன்தலையில் வைப்பதற்கு சிறிது வெண்ணெய்.
தயிர் கடைந்து கடைந்து கைகள் பலமாக வலிக்க ஆரம்பித்திருக்கின்றன. இறுதியில் அது ஒரு வீணான வேலை என்று ஆகிறதோ.
2
சுதாவிற்கு ஜானுவை உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
வரவேற்பறையின் கதவுக்கு அருகில் ஓரத்தில் சாய்ந்தவாறு தாங்க முடியாத வெறுப்புடன் அவள் நின்றிருந்தாள். அவளுடன் கையில் தூங்கியவாறு ஐந்தாறு வயது கொண்ட ஒரு சிறுவன்..
ராமன்குட்டி விருப்பப்படாத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தான்.
“சின்னம்மா, உங்களைப் பார்க்கணும்னு பிடிவாதம் பிடிச்சாங்க. உங்களை நல்லா தெரியும்னு சொன்னாங்க.”
சிறிது நேரத்திற்கு எதுவுமே புரியவில்லையென்றாலும், திடீரென்று தலைக்குள் என்னவோ மின்னியது.
‘கீழேக்களத்தில்’ வீட்டைச் சேர்ந்த ஜானு.
சுதா ஓடிச்சென்று அவளுடைய கையைப் பற்றிக் கொண்டாள்.
“அய்யோ... என் ஜானு, எனக்கு உன்னைக் கொஞ்சம்கூட அடையாளமே தெரியல. இது என்ன கோலம். உனக்கு என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?”
நீர் வற்றிய முகம். மெலிந்து உலர்ந்து காணப்படும் கை, கால்கள். முடியில் நிறைய நரை விழுந்திருந்தது.
ஜானு சிரிக்க முயற்சித்தாள்.
“சின்னம்மா, நீங்க வந்திருப்பதைக் கேள்விப்பட்டேன். வந்து பார்க்கணும்னு தோணிச்சு. பார்க்க முடியுமான்னு சந்தேகமா இருந்தது.”
“விளையாடுறியா? எது எப்படி இருந்தாலும் ‘சின்னம்மா’ என்றெல்லாம் கூப்பிட வேண்டாம் ஜானு. அந்தப் பழைய பேரே போதும். இல்லாவிட்டால் சிறு வயதில் சண்டை உண்டாகுறப்போ நீ அழைக்கற அந்த செல்லப் பெயர் ஞாபகத்துல இருக்குதா?”
ஜானு வாயை மூடிக்கொண்டு சிரிப்பை அடக்கினாள்.
“ஞாபகத்துல இருக்குதா?”
அவள் தலையை ஆட்டினாள்.
“அதுதான் நல்ல பெயர். ‘குசும்பி பாரு’ன்னு கூப்பிடுவேயில்ல. அப்போ நான் பெரிய குசும்புக்காரியாகத்தான் இருந்தேன் இல்லையா? இப்போ பெரிய பெண்ணா ஆன பிறகு, குசும்புத்தனம் பத்து மடங்கு அதிகமாயிடுச்சுன்னு எல்லோரும் சொல்றாங்க.”
“ஏய்.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. அதெல்லாம் சிறு வயதில் நடந்த தமாஷான விஷயங்கள். அர்த்தத்தை அறிந்து அழைத்ததா என்ன?”
“சரி.. இருக்கட்டும். நீ வா” -சுதா அவளுடைய கையைப் பற்றினாள். “நாம் அங்கே போய் இருப்போம். பார்த்து எவ்வளவு காலம் ஆயிடுச்சு.”
“வேண்டாம் நான் இங்கேயே இருக்கேன். பரவாயில்லை.”
“போடீ..” சுதா அவளைப் பிடித்து இழுத்து டைனிங் டேபிளுக்கு அருகில் கொண்டு சென்று உட்கார வைத்தாள். “ராமன்குட்டி, தேநீர்..” அவள் உரத்த குரலில் சொன்னாள். “ஏதாவது தின்பதற்கும் கொண்டு வாங்க.”
ராமன்குட்டி வந்து எட்டிப் பார்த்தான். விருப்பப்படாத மாதிரி முகத்தை ஒரு மாதிரி வெட்டிக் கொண்டு சமையலறையை நோக்கிச் சென்றான்.
“நீ எப்படி இப்படி ஆயிட்டே ஜானு?” நாற்காலியை நெருக்கமாகப் போட்டுக் கொண்டு அவள் ஜானுவின் தோளில் கையை வைத்தாள். “என்னைவிட இரண்டு வயதுதானே நீ மூத்தவள்? என்ன, உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?”
“வயசாயிடுச்சுல்ல சுதாக்குட்டி. பிறகு.. குடும்பச் சுமை..”
“உனக்கு எத்தனை பிள்ளைகள்? இது மூத்ததா?”
“இவன் எல்லாருக்கும் இளையவன். மூத்தது ரெண்டும் பெண் பிள்ளைகள். பதினைந்தும் பன்னிரெண்டும் வயது.”
“உன் பெயர் என்ன? - சுதா சிறுவனின் தாடையைப் பிடித்தபோது, வெட்கத்தால் நெளிந்த அவன் தன் தாயின் பின்னால் போய் நிற்க முயற்சித்தான்.
“ராசப்பன்..” - ஜானு பாசத்துடன் சொன்னாள். “ஒரு ஆண் குழந்தைக்கு எவ்வளவோ நாங்கள் ஆசைப்பட்டோம்.”
இப்போது எவ்வளவோ வருடங்கள் ஆகிவிட்டன. முன்பு ஊட்டியிலிருந்து விடுமுறையில் வரும்போதெல்லாம் ஜானு தேடி வருவாள். யாருக்கும் தெரியாமல் மேற்குப் பக்கத்தில் இருக்கும் திண்ணையின் அருகில் வந்து மெதுவாகக் கூப்பிடுவாள். கையில் ஒரு சிறிய பொட்டலம் எப்போதும் இருக்கும். வறுத்த முந்திரிப் பருப்போ, வறுத்த புளியங்கொட்டையோ, இல்லாவிட்டால் மாம்பழத் துண்டோ.. இப்படி ஏதாவது.. உரம் வைக்கப்பட்டிருக்கும் அறையின் மறைவில் முன்பைப்போல மறைந்து உட்கார்ந்து கொண்டு கல் விளையாட்டு விளையாடுவார்கள். பாட்டி பார்த்தால் சண்டை போடுவாள். டெல்லிக்குப் போன பிறகு, அவளைப் பார்க்கவே இல்லை என்பதை நினைத்துப் பார்த்தாள் சுதா. போவதற்கு முன்னால் விடைபெறுவதற்காக அவளுடைய வீட்டிற்கு சுதா போயிருந்தாள். அந்த சமயத்தில் திருமணம் முடிந்து அவள் எங்கோ தன்னுடைய வசிப்பிடத்தை மாற்றியிருந்தாள். பார்க்க முடியவில்லை.
“எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கும் ஒரு பையன் இங்கே.. கம்பெனியில் இருக்கான். அவன் சொல்லித்தான் சீமையில் இருந்து நீ வந்திருக்கிற விஷயமே தெரிஞ்சது சுதாக்குட்டி..”
“அது நல்லதாப் போச்சு. எது எப்படியோ ஜானு, உன்னைப் பார்க்க முடிந்ததே! சரி.. அது இருக்கட்டும். உன் ஆளு யார்? எங்கே வேலை?”
“எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் வீடு. நகரத்தில் ஒரு கம்பெனியில் காவலாளி வேலை. அங்கேயே தங்கிக் கொள்கிறார். வாரத்துல ஒருமுறை வருவார். கிடைக்கும் வருமானத்தில் நகரத்தில் குடும்பத்துடன் வாழ முடியுமா?”
“ஆள் எப்படி?” சுதா அவளுடைய தோளைப் பிடித்து குலுக்கினாள்.
ஜானுவின் முகத்தில் திடீரென்று வெட்கம் பரவியது.
“ஒண்ணுமே சொல்ல வேண்டாம். என்னைப்போல இல்லை அவர். நல்ல உயரமும் அதற்கேற்ற தடிமனும். பெரிய மீசை. அவரை அச்செடுத்த வார்ப்புதான் லட்சுமிக்குட்டி. மூத்த மகள். இவன் என்னை மாதிரி..”
பாசத்துடன் அவள் மகனின் தலையை வருடுவதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தபோது தனக்குள் ஏதோ குடைவதைப்போல சுதா உணர்ந்தாள்.
“நீங்கள் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டீர்களா?” அவள் கேட்டாள்.
“ஏய்.. அப்படியொண்ணும் இல்லை. திருமணம் முடிந்த பிறகு விருப்பப்பட்டோம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். எங்களைப்போல இருப்பவர்களுக்கு இது பெரிய விஷயமாச்சே. சுதாக்குட்டி, நிரந்தரமான வேலை உள்ள மனிதர், முடியாதப்போ துணைக்கு ஒரு ஆள். அதுதானே வேணும்?”
“அப்படியென்றால் உன்னுடைய பழைய ஆள்?” -சுதாவின் கண்களில் ஒரு கள்ளத்தனமான சிரிப்பு மலர்ந்தது. “வேலிக்கு அருகிலும் ஆற்றின் கரையிலும்..”
ஜானு சிரித்தாள். முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.
“அதெல்லாம் அந்த வயதால் உண்டாவதுதானே? அந்த ஆளின் தந்தை தாலுகா அலுவலகத்திலிருந்து மாறுதல் பெற்றுப் போனபிறகு, நான் அந்த ஆளைப் பார்க்கவே இல்லை. எங்கேயாவது பெரிய மனிதராக வாழ்ந்து கொண்டிருப்பார்”- தன்னையே அறியாமல் ஜானுவிடமிருந்து ஒரு பெருமூச்சு வந்ததை சுதா கவனித்தாள்.