ஒற்றையடிப் பாதைகள் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6354
“எனக்கு வருத்தமாகத்தான் இருக்கு. நீங்கள் என்னை தூரத்தில் படிக்க விட்டிருக்கக்கூடாது என்று சில நேரங்களில் தோன்றும். ஊட்டிக்கும் டெல்லிக்கும் பிறகு ஹார்வர்டுக்கும் போய் என்ன கிடைத்தது? இங்கேயே இருப்பவற்றைப் படித்து ஒரு நல்ல மகளாகவும் மனைவியாகவும் தாயாகவும் ஆகி..” - அவளுடைய தொண்டை இடறியது. தடுமாறிய குரலில் அவள் தொடர்ந்து சொன்னாள். “அப்பா, என்னைப் பற்றிய உங்களின் எல்லா கணக்கும் தவறாகிவிட்டதா?”
நம்பியார் மெதுவாக எழுந்தார். அவளுடைய தோளில் கையை வைத்து தனக்கு மிகவும் நெருக்கமாக அவளை நிற்க வைத்தார்.
“இல்லை மகளே. அப்படி யாரைப் பற்றியும் அதிகமாகக் கணக்குப் போடக்கூடாது என்ற வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்திருக்கிறது. மாமரத்தின் கிளையில் இருக்கும் மாம்பிஞ்சுகளும் வாசலில் தடுமாறியபடி நடக்கும் குழந்தைகளும் ஒரே மாதிரி என்று யாரோ கூறியிருக்கிறார்களே. எல்லாம் ஒரு மழை மேகத்தைப் போலத்தான்.. உண்மையாக சொல்லப் போனால், நாம் எல்லோரும் எப்படி ஆவோம்? என்னவாக ஆவோம்? எல்லாம் நாம் சம்பாதித்தவை என்று வீர வார்த்தைகள் பேசுவதில் என்ன இருக்கிறது? நம்முடைய ரத்தத்தில் சில பொருட்கள் கலந்திருக்கின்றன. கால காலங்களாக, குருக்களான முன்னோர்கள் காரணமாக அவர்கள் மூலம் கிடைத்த சில குணங்களும் தேவையற்றவைகளும்... அவை இல்லாமற் செய்வது என்றால், அது அந்த அளவிற்கு எளிதான விஷயமல்ல. வட இந்தியாவில் இருக்கும் பழக்கவழக்கத்தைப் பார்த்திருப்பேல்ல. மூத்தவர்களைப் பார்க்குறப்போ, காலைத் தொட்டு நெற்றியில் வைக்கும் பழக்கம்.. சிலர் காலை நீட்டிப் படுத்து வணங்குவதையும் பார்க்கலாம். என்ன அழகான பழக்கம் அது. அதைப் போன்றதுதான் நெற்றியில் கையை வைத்து ஆசிர்வதிப்பதும்.. பெரியவர்களின் ஆசி என்ற விஷயம் நம் எல்லோருக்கும் நிறைய பலத்தைத் தரத்தானே செய்கிறது? ஒரு வகையில் கூறுவதாக இருந்தால், வம்ச பரம்பரைகளின், கோத்திர எச்சங்களின் பலம்!”
“எனக்குப் புரியுது அப்பா. பேசிக் கொண்டிருக்கும்போது, பல நேரங்களில் எடுத்தெறிந்து பேசுவது மரியாதை இல்லாததால் அல்ல. எப்படியோ அது பழக்கமாகிவிட்டது. இந்த ஓப்பன்னஸ் ஃப்ரூட்டலி ஃப்ராங்காக பேசுவது.. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. இன்றைய காலத்தில் வாழ்வதற்கு கொஞ்சம் பணிவு இருக்கத்தான் வேண்டும். அப்படித்தானே?”
“அது இருக்கட்டும். நான் வெளிப்படையாகக் கேட்கிறேன். இந்த ப்ராஜெக்ட் விஷயத்தில், உன்னுடைய கருத்துக்களுக்கு ஒரு மாறுதலும் இல்லையா?”
“இல்லை அப்பா” அவளுடைய குரல் உறுதியானதாக இருந்தது.
“இது இறுதி முடிவா?”
“ஆமாம்.”
“அப்படியென்றால்.. அதனால் எனக்கு உண்டாகும் அவமானம்..”
“அதைப்பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு உடன்பாடில்லாத எந்த விஷயத்திலும் நம்பிக்கை வைக்க என்னால் முடியாது.”
“ஒரு வியாபாரி தன்னுடைய வார்த்தைகளைக் காப்பாற்ற கடமைப்பட்டவன் என்பதை நீ நம்புகிறாயா? இல்லை.. வெள்ளைக்காரர்களின் மணி கட்டப்பட்ட மேனேஜ்மெண்ட் பள்ளிக்கூடங்கள் கற்றுக் கொடுத்து வெளியே அனுப்புவது வேறு விதத்தில் இருக்குமோ என்னவோ.”
“வார்த்தை” - அவள் ஒரு நிமிடம் சிந்தித்தாள். “கொஞ்சம் எத்திக்ஸ் பார்ப்பது நல்லதுதான். ஆனால், ஒட்டுமொத்த பயன் என்ன என்பதைக் கணக்கிட்டுப் பார்க்குறப்போ, சில தந்திரங்கள் நிறைந்த செயல்களை செய்ய வேண்டியது வரும். புத்திசாலித்தனமான ஒரு பின்வாங்கலையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.”
“மகளே, அங்குதான் நீ தப்பு பண்ணுகிறாய். அதாவது- இறுதியில் பயன் இருக்க வேண்டும் என்பதற்காக கொள்கைகளையே மாற்றிக் கொள்ளலாம் என்று கூறுகிறாய். அப்படித்தானே? வாக்கு சொன்னவர்களிடம் நீதிமன்றத்தில் போர் புரியலாம். சில நேரங்களில் வெற்றி பெறவும் செய்யலாம். அதே மாதிரி.. அதே மாதிரி..”
“இது ஒரு மேனேஜ்மெண்ட் தியரி ஒண்ணும் இல்லை. கொஞ்சம் நடைமுறை அறிவு. அவ்வளவுதான்.”
தந்தை சிறிது நேரம் சிந்தித்துவிட்டு தன் மகளின் கண்களையே வெறித்துப் பார்த்தார்.
“அப்படியென்றால் நாம கொஞ்சம்கூட முடியாது மகளே. என்னைப் பொறுத்தவரையில் வியாபாரத்தில் சாதாரண மரியாதைகளுக்கு மிகவும் கீழே மட்டுமே லாப-நஷ்ட கணக்குகள் வரும். ஒருவேளை நம்மை விட்டு போய்க் கொண்டிருக்கும் ஒரு பழைய தலைமுறையின் இறுதிக் கண்ணிகளில் ஒன்று என்று மட்டும் நினைத்துக் கொண்டால் போதும். ஒரு ஓல்ட் பான்டிக்குட்.”
சுதாவால் எதுவும் கூற முடியவில்லை.
நம்பியார் மீண்டும் அவளுடைய கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஒருவேளை, முன்னால் வைத்த காலை பின்னோக்கி எடுக்க வேண்டாம் என்று நான் இறுதியில் தீர்மானித்தால்..?”
“அதை உண்ணி அத்தானின் வெற்றியாக மட்டுமே நான் எடுத்துக் கொள்வேன். ஒரு அர்த்தத்தில் என்னுடைய வெட்கக்கேடான தோல்வியாகவும் அது இருக்கும்.”
“அதாவது- இதற்கு நடுவில் ‘நான்’ என்ற தேவையற்ற கதாபாத்திரம் எந்த இடத்திலும் வரவில்லை என்று அர்த்தம்.”
“அப்படியொண்ணும் நான் சொல்லலையே.”
“பார் மகளே” - தந்தையின் முகம் வழக்கத்திற்கு மாறாக சிவப்பதையும், குரல் கனத்து ஒலிப்பதையும் அவள் பார்த்தாள். “தேவையில்லாமல் நாம் நாடகம் விளையாடி எந்தவொரு பயனும் இல்லை. இது வியாபார உலகம். ஒரு தடவை தயங்கி நின்றுவிட்டால், பிறகு பிடித்து ஏறுவது மிகவும் கஷ்டமான விஷயமாக செய்திகள் அங்கும் இருக்கும். அது போதுமே.”
எதையும் பேச முடியாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு சோஃபாவில் நிலைகுலைந்து விழுந்தார் நம்பியார்.
உரத்த சத்தங்களுடன் வெளியே நடந்து செல்லும் மகளை முகத்தை உயர்த்திப் பார்க்கக்கூட அவரால் முடியவில்லை. அவருடைய உள் மனம் அழுதுகொண்டிருந்தது. ஒன்றையும் இரண்டையும் சொல்லி காரியங்களை இந்த அளவில் கொண்டு வந்து நிறுத்துவாள் என்று எந்த சமயத்திலும் அவர் நினைத்ததில்லை. அப்படியே இல்லையென்றாலும் இது அவளுடைய துருப்புச் சீட்டு. அதில் அவரை வீழ்த்த முடியும் என்பதை அவள் நன்றாக அறிந்திருந்தாள். அவளுக்குள்ளே இருக்கும் அந்தப் பழைய பிடிவாதக்காரியான சிறுமிக்கு அது நன்றாகத் தெரியும்.
“ஷீ ஈஸ் ஹோல்டிங் மீ டூ ரான்ஸம். நான்சென்ஸ். மகளானால் என்ன.. யாராக இருந்தால் என்ன.. யாரும் என்னை இந்த அளவிற்கு எளிதாகக் கார்னர் பண்ணியது இல்லை” - அவர் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டார்.
எழுந்து கையை நீட்டி இன்டர்காமின் பொத்தானை அழுத்தினார்.
“கொஞ்சம் தேநீர் கொடுத்தனுப்பு. நல்ல கடுப்பத்தில் இருக்கணும். இரண்டு கப்புகளும்.”
பிறகு உண்ணியை அழைத்தார்.
“கொஞ்சம் இங்கே வா. சீக்கிரம் வரணும்.”