ஒற்றையடிப் பாதைகள் - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6354
“நான் பரிமாறுகிறேன்” - சுதா சொன்னாள். “எனக்கு சைவ உணவு பொருட்கள் மட்டும் போதும்.”‘
உண்ணிக்கு சிரிப்பு வந்தது.
“சைவத்திற்கு மாறிவிட்ட ஒரு ஆளுக்கு இந்த அளவிற்கு கோபம் தேவையே இல்லை.”
அந்த நகைச்சுவையைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக அவள் உணவு சாப்பிட ஆரம்பித்தாள்.
உண்ணி தொடர்ந்து சொன்னாள்.
“சுதா, எதற்கு என்று சற்று முன்பு கேட்டாய் அல்லவா? அதற்கு பதில் சொல்றேன். மிகவும் சிம்பிள். ஏனென்றால் ஐ நீட் யூ. எனக்கு நீ வேணும். முழுசா. ஒரு அர்த்தத்தில் கூறுவதாக இருந்தால், அந்தப் பழைய உன்னை.”
அதை எதிர்பார்த்திருந்ததைப்போல, ஒரு ரொட்டித் துண்டைப் பிரித்தெடுத்த சுதா நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
“மீண்டும் ஒரு காதல் கதையை ஆரம்பிக்கக்கூடிய வயது தாண்டிவிட்டது. அதை மறந்துவிட்டதுபோல் தோணுகிறது.”
“சரிதான். டீன் ஏஜுக்கென்றே உரிய செயல்கள் எப்போதோ முடிந்துவிட்டன. உண்மையாக சொல்லப் போனால் அந்தக் காலக்கட்டத்தில் உள்ளுக்குள் பலமான உணர்ச்சிகள் எதுவுமே இல்லாமல் சிறிது காலம் நாம் என்னென்னவோ செய்து கொண்டிருந்தோம். ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக யாரோ உண்டாக்கிய இரண்டு பேருக்கும் இடையில் நடந்த ஒருவகையான கோமாளித்தனமான விளையாட்டுக்களாக அவை இருந்தன இல்லையா? மிகவும் ஆழமான இழப்புணர்வு தோன்றாமல் இருந்ததற்கும் ஒருவேளை அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.”
“தோன்றவில்லை என்று யார் சொன்னது?”
கரண்டியைத் தட்டில் வைத்த அவன், எதுவும் புரியாததைப்போல விழித்தான்.
“சுதா நீ என்ன சொன்னே?”
“என்னைப் பொறுத்தவரையில் அந்தப் பிரிவு மிகவும் ஆழமான ஒன்றுதான். சிறிது காலத்திற்காவது அதன் வேதனையை மனதில் வைத்துக்கொண்டு திரிந்தேன்.”
“அப்படியா?” அவன் திகைத்துப் போய் உட்கார்ந்து விட்டான்.
“என்ன, அதில் சந்தேகம் இருக்கா? நம்பிக்கை இல்லையா? இனி நான் அதற்கான சான்றுகளைத் தரவேண்டுமா? எப்படிப்பட்ட சான்றுகளைத் தந்தால் நீங்க புரிஞ்சிக்குவீங்க?” - அவளுடைய குரல் உயர்ந்தபோது அடுத்த நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த இரண்டு மனிதர்கள் தலையைத் திருப்பிப் பார்த்தார்கள்.
“சுதா” - உண்ணி பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டான். “ஒருவேளை.. எனக்கு.. என்ன என்று தெரியவில்லை.. கொஞ்சமும் புரியவில்லை.”
நீண்ட நாட்களாக மனதிற்குள் இருப்பவற்றையெல்லாம் கூறி விடுவதற்கான வழி திறந்து விட்டிருப்பதைப்போல அவள் உணர்ந்தாள். சுதா ஆவேசத்துடன் தொடர்ந்து சொன்னாள்.
“டீன் ஏஜர்களாக இருந்த காலத்தில் விடுமுறை வரும்போது பாய்ந்து ஓடிவந்தது ஒரே ஒரு ஆளைப் பார்ப்பதற்கு மட்டும்தான். ஆனால், சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு, தொலைபேசி மூலம், கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தபோது, எங்கோ ஏதோ ஒன்றின் குறைவை என்னால் தெளிவாக உணர முடிந்தது.”
“நான் மிகவும் சுயநலமாக இருந்தேன். அப்படித்தானே?”
“சுயநலமாக மட்டுமல்ல; உண்ணி அத்தான், என் விஷயத்தில் நீங்க இன்னும் கொஞ்சம் உரிமையாளரைப் போல இருக்கக்கூடாதா என்று பல நேரங்களில் நான் ஆசைப்பட்டிருக்கிறேன். நான் எப்போதும் உங்களுக்கு சொந்தமான பெண்ணாகத்தானே இருந்திருக்கிறேன்? உங்களுக்கு மட்டுமே என்று இருக்கும் பெண் பிறகு என்ன? ஆனால் உரிமையாளராக இருப்பது என்றால் அதிகாரங்களுடன் கைப்பற்றிச் செல்வது அல்ல. என்னுடையது, எனக்கு மட்டுமே சொந்தமானது என்ற பலமான உணர்வு. அதை சிறிய அளவில் வெளியே காட்டினாலும் அதனால் பிரச்சினையில்லை. ஆனால் மிகவும் அமைதியாக அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். அது ஒரு மிகப்பெரிய சுவாரசியமான விஷயம். பெரிய பாதுகாப்பு உணர்வை அது எனக்குத் தரும். குறிப்பாகத் தாய் இல்லாமல் வளர்ந்த பெண்ணுக்கு..”
அவளுடைய முகத்திலிருந்து கண்களை எடுக்காமல் எதை வேண்டுமானாலும் கேட்பதற்குத் தயாராக இருப்பது மாதிரி உண்ணி காத்திருந்தான்.
“டெல்லியில் படிக்கும்போது நாங்கள்... ஹாஸ்டலில் இருந்த தோழிகளுக்கிடையே ஆண் நண்பர்களின் கடிதங்களை யாருக்கும் தெரியாமல் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வது என்பது சாதாரணமாக இருந்த ஒரு பழக்கம். சொல்லப் போனால், யாருக்கும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட ஒரேயொரு உறவு அவர்கள் மத்தியில் என்னுடையது மட்டும்தானே? எனினும், உண்ணி அத்தான், உங்களுடைய கடிதத்தை மட்டும் மற்றவர்களிடம் காட்டுவதற்கு என்ன காரணத்தாலோ பல நேரங்களிலும் எனக்கு தயக்கமாக இருந்தது. அந்த வயதில் எங்களுக்குத் தேவையாக இருந்த ஏதோ ஒன்று அந்தக் கடிதங்களில் எந்தச் சமயத்திலும் இருந்தது இல்லை. பிறகு- அவ்வப்போது வேண்டுமென்றே மலையாளத்தில் திணிக்கப்படும் சில வார்த்தைகளை என்னுடைய நெருங்கிய தோழியான அந்த வங்காளப் பெண் அபர்ணா ஒருநாள் மொழிபெயர்த்துக் கூறும்படி சொன்னாள். அதை சரியாக மொழிபெயர்த்தபோது, அவள் வெட்கப்பட்டு குனிந்து கொண்டாள். உண்ணி அத்தான், அதுதானே உண்மையான நீங்கள்? எம்.ஸி.பி. என்று கூறுவது அப்படியொன்னும் போரடிக்கும் ஒன்றல்ல. எனினும் அபர்ணா ஒருநாள் கூறியது என்ன தெரியுமா? ‘உண்மையைச் சொல்லட்டுமா சுதா! தவறாக நினைக்கக் கூடாது. என் பார்வையில் நீங்கள் இரண்டு பேரும் கொஞ்சம்கூட சேர முடியாது என்று தோன்றுகிறது’ என்றாள் அவள். அப்போது ஏதோ தமாஷாகச் சொல்லி அவள் விஷயத்தை மாற்றப் பார்த்தாள்.”
எதுவும் சொல்ல முடியாமல் அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
“பிறகு.. நேரில் பார்க்கும்போது காட்டப்படும் அந்த வெறி... பல நேரங்களில் அவை மிகவும் ஆதிகால வெளிப்பாடாக இருந்தன. ஒருவகையில் மிருகத்தனமான உணர்ச்சி... வீட்டில் ஏதாவதொரு இருட்டான மூலையில் சூழ்நிலையை உண்டாக்கி ஒரு கட்டி அணைத்தல்.. முத்தம் தரல்.. தேவையற்ற இடங்களிலெல்லாம் கைகளை ஓட விடுதல்.. நான் இன்னும் கொஞ்சம் சம்மதித்திருந்தால், ஒன்றைக்கூட மீதம் வைக்காமல் எல்லாவற்றையும் அப்போதே செய்து முடித்திருப்பீர்கள். அப்படித்தானே! அந்தக் கேவலமான அவசரம் எதற்காக? வெளியே காட்டிக் கொள்ளவில்லையென்றாலும், எனக்கு அந்த செயல்கள் மீது எந்த அளவிற்கு வெறுப்பு இருந்தன என்று தெரியுமா? வலிய கொடுக்கப்படும் முத்தத்தில்கூட நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கக்கூடிய காதலனின் ஆழம் தெரியாத காதல் இல்லாமல் போனது அல்லவா?