ஒற்றையடிப் பாதைகள் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6353
“இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் அக்ரஷன் எல்லா விஷயங்களிலும் கட்டாயம் தேவைப்படுகிறதே. உன்னைப் போன்றவர்கள் இளம் வயதில் இருக்குறப்போ, அதை மிகவும் எளிதாகத் தர உங்களால் முடியும். கடந்த காலத்தின் சுமை இல்லாமல் ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்திக்க வேண்டியது வந்தால், வேகமாக பாய்ந்து செல்ல வேண்டியதிருக்கும் அல்லவா? வரலாற்றில் வெற்றி பெற்ற பல தீர்மானங்களுக்குப் பின்னால் இத்தகைய இன்ட்யூஷனை ஒட்டிய தாவல் கட்டாயம் இருக்கும்.”
“ஆனால், இளமையின் தாவல் எல்லா விஷயங்களிலும் சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாதே?”
சுதா இரண்டாவது முறையாக மதுவை ஊற்றினாள். நம்பியார் தலையை உயர்த்திப் பார்த்தார்.
“மகளே, நீ எந்த அர்த்தத்தில் அதைச் சொன்னே?”
“எல்லா அர்த்தங்களிலும்.”
“நம்முடைய புதிய ப்ராஜெக்ட்டை பற்றிக் குறிப்பாக உணர்த்துறியா?”
ஐஸ் கட்டிகளில் பொன் நிறத்தைக் கொண்ட திரவம் படர்வதைப் பார்த்துக் கொண்டே அவள் தலையை ஆட்டினாள்.
“உண்ணிக்கு மிகவும் விருப்பமான ப்ராஜெக்ட் அது. அடுத்த வாரம் அவன் ஃப்ராங்க் ஃபர்ட்டுக்குப் புறப்படத் தயாராக இருக்கிறான்.”
“வேண்டாம் என்று சொல்லுங்க...” - அவள் முகத்தில் அடித்ததைப்போல அதைச் சொன்னாள்.
“என்ன மகளே, இப்படிச் சொல்றே?” நம்பியார் ஒரு அதிர்ச்சியுடன் அவளுடைய முகத்தையே வெறித்துப் பார்த்தார். “இவ்வளவு வேலைகளையும் செய்து முடித்தப் பிறகு...”
“லாபம் குறைவாக இருக்கும். பரவாயில்லை. இந்த சன்ரைஸ் இன்ட்ஸ்ட்ரி வேறொன்றுக்கு மாறிப் பார்ப்பதில் தவறே இல்லை. எது எப்படி இருந்தாலும், இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டியது இருக்கும்.”
“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? மகளே, நீ என்ன சொல்றே? இந்தக் கட்டத்தில் வேண்டாம் என்று விட்டு விடுறதுன்னா, அது என்ன சாதாரண விஷயமா? இண்டஸ்ட்ரியில் நம்முடைய பெயர், என்னுடைய தனிப்பட்ட இமேஜ், நம்முடைய பலதரப்பட்ட கமிட்மென்ட்ஸ், அதன் நஷ்ட பரிகாரங்கள்... வழக்குகள், கூட்டம் அவை வேறு...”
“அவற்றைப் பற்றி மட்டுமே நம்மால் சிந்திக்க முடியும். எல்லாவற்றுக்கும் ஒரு வழி இல்லாமலா இருக்கும்?”
நம்பியார் ஒட்டுமொத்தமாக இடிந்து போய் உட்கார்ந்திருந்தார். கண்ணாடிக் குவளையில் கசப்பான திரவத்தை ஒரே இழுப்பில் தொண்டைக்குள் இறக்கிய அவர் கெஞ்சுகிற குரலில் சொன்னார்.
“இன்னொரு பெக் மகளே... சின்னதா போதும்.”
“வேணுமா அப்பா? வழக்கமானதுதானே?”
“வேணும். என்னவோ போல இருக்கு.”
“நான் வேதனைப்பட வச்சிட்டேனா அப்பா?”
“இல்லை மகளே... இல்லாவிட்டாலும் சின்ன பிள்ளைகள் நெஞ்சில் மிதிக்கிறப்போ, தாய்க்கும் தந்தைக்கும் வேதனை தோன்றுவது இல்லையே!”
“அப்பா, என்னை மன்னிச்சிடுங்க. நான் அப்படியெல்லாம் மனசுல நினைக்கவில்லை தெரியுதா?”
“பரவாயில்லை. ஒரு சின்ன பெக் ப்ளீஸ்...”
அதையும் அவளுடைய தந்தை ஒரே இழுப்பில் உள்ளே கொண்டு போவதை ஆச்சரியத்துடன் அவள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
உணவு சாப்பிட உட்காரும்போது, நம்பியார் சிறிது நேரத்திற்கு எதுவும் பேசவில்லை.
அவள் மெதுவாகப் பரிமாற ஆரம்பித்தாள். தன் தந்தையின் முகத்தைப் பார்க்காமலே.
“உண்ணியைப் பார்த்தியா மகளே?” நம்பியார் திடீரென்று கேட்டார்.
“ம்.”
“அவனால் விமான நிலையத்திற்கு வர முடியவில்லை. பெங்களூரில் இருந்து வந்த விமானம் தாமதமானதுதான் காரணம்.”
“அப்படியா?”
“ஒண்ணு கேட்கட்டுமா! நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டீர்களா? என்னவோ மாதிரியான பேச்சும் முக்கலும் முனகலும்...”
“சண்டை போடுவதற்கான வயது எப்பவோ தாண்டிப் போயிடுச்சே!”
“கடந்து போனவற்றைப் பற்றி இப்போது நினைத்துப் பார்த்து ஒரு பிரயோஜனமும் இல்லை. அவை ஒவ்வொன்றும் முடிய வேண்டிய விதத்தில் முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டால் போதும்.”
“இல்ல... இங்கு எல்லோரும் கமிட்மென்ட்டைப் பற்றி - வாக்குறுதியைக் காப்பாற்றுவதைப் பற்றி பேசுவதைக் கேட்டேன்.” - அவள் தான் சொல்லிக் கொண்டிருந்ததை திடீரென்று நிறுத்தினாள்.
பிய்த்த சப்பாத்தித் துண்டை அதே நிலையில் கையில் பிடித்துக் கொண்டு, தந்தை தன் மகளின் கண்களையே உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையின் கூர்மையிலிருந்து அவளால் விலக முடியவில்லை.
சிறிது நேரம் கழித்துத் தாழ்வான குரலில் அவள் கேட்டாள்.
“தெரேஸா இப்போ” - கேட்டு முடித்த பிறகு, அதைக் கேட்டிருக்க வேண்டாம் என்ற அவளுக்குத் தோன்றியது. எப்படியோ நாக்கில் இருந்து அந்தக் கேள்வி வந்துவிட்டது.
“மான்செஸ்ட்டருக்குத் திரும்பிப் போயிட்டாள். நான் அப்பவே எழுதியிருந்தேனே.”
“ஓ..” அவள் ஆர்வமே இல்லாத மாதிரி முனகினாள். தந்தையின் நீளமான கடிதங்களில் ஏதோ ஒரு வாசகம்... ஒருவேளை, அப்போது அது முழுமையாக மனதில் பதியாமல் போயிருக்கலாம். இல்லாவிட்டால் அதை எப்படி அவள் மறந்திருப்பாள்? முதல் சில நாட்களுக்கு தெரேஸா ஒரு பெரிய புள்ளியாக மனதிற்குள் புகைந்து கொண்டு நின்றிருந்தாளே. பிறகு சுதாவின் மனதில் அவள் தானாகவே எப்படியோ இல்லாமற் போய்விட்டாள்.
“எல்லாம் ஒரு பரிதாபப்பட வேண்டிய விஷயம் என்று மட்டும் நினைத்தால் போதும்” - அவளுடைய தந்தை விளக்க முயற்சித்தார்.
“பரிதாபப்பட வேண்டிய வயசு ஒண்ணும் இல்லையே அப்போ?”
“கடல்களுக்கு அப்பால் எவ்வளவோ தூரத்தில் தனியாக இருக்கும் வாழ்க்கை... தினமும் காணும் கொஞ்சம் மனிதர்கள்... அப்படிப்பட்ட சூழ்நிலையில், சில நேரங்களில் தேவையற்ற நெருக்கம் உண்டாவது சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். சாமர்த்தியசாலிகள் தங்களுடைய காரியம் முடிந்தவுடன், அதிலிருந்து ஓடிவிட முடியும். பாவங்களிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். மனதில் பெரிய தயார் நிலைகள் எதுவும் இல்லாமல் இருக்கும் சில முடிவுகள்... எது எப்படியோ... எல்லாம் முடிந்துவிட்டனவே.”
சுதாவிற்கு சிரிக்க வேண்டும்போல் இருந்தது.
“அப்பா, நீங்க சொன்னதைப் போன்ற அந்த வாழ்க்கையை நானும் கொஞ்சம் பார்த்திருக்கிறேனே. கடல்களுக்கு அப்பால் தூரத்தில் தனியாக இருக்கும் வாழ்க்கை... தினமும் காணும் கொஞ்சம் மனிதர்கள்... ஆர்வத்தைத் தூண்டும் கொஞ்சம் மனிதர்கள்... ஒருவேளை உண்ணி அத்தான் பார்த்ததைவிட மிகவும் அதிகமான காலம்... அதில் அதிகமாக ப்ரோவோக்கிங் ஆன சூழ்நிலைகள்.”
நம்பியார் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தடுமாறினார்.
“என்னால் எதுவும் பேச முடியவில்லை மகளே. உனக்கு என்னை விட அதிகமான அறிவு இருக்கு. உலக அனுபவமும் நான் உனக்கு சொல்லித் தருவதற்கு என்ன இருக்கிறது? ஆனால் ஒன்றை மட்டும் நீ மறந்துவிடக் கூடாது. சொல்லப் போனால், ஒரு காலத்திலேயே இந்த ஏடாகூடமான விஷயங்களையெல்லாம் நீ எப்பவோ இல்லாமல் செய்திருக்கலாம். அவனுக்கு அப்போ ஏகப்பட்ட ஆசை நடக்க வேண்டிய விஷயங்கள் அந்தந்த நேரத்தில் நடந்திருந்தால்... அப்போ நீதான் ஒவ்வொன்றையும் சொல்லி தட்டி உருட்டிக் கொண்டு போயிட்டே.”