ஹேராம் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6809
அவன் வலது கையை யாரோ பிடித்து பலவந்தமாக அவனிடமிருந்த துப்பாக்கியை வாங்கினார்கள். அவர்களின் மிருகத்தனமான பிடியைத் தாங்க முடியாமல் வேதனையால் அவன் உதடுகளைக் கடித்துக் கொண்டான். முறுக்கேறி நின்ற நரம்புகளை இடது கை கொண்டு தடவினான்.
எதற்கு? எதற்கு இந்த முரட்டுத்தனம்?
மக்கள் கூட்டத்துக்கு மேலே மெல்ல பறந்து செல்லும் ஒரு கறுப்பு பறவையைப் போல அவனுடைய துப்பாக்கி ஒவ்வொரு கையாகக் கடந்து தூரத்தில் போய்க் கொண்டிருப்பதை மின் விளக்கு வெளிச்சத்தில் அவன் பார்த்தான். ஒரு போலீஸ்காரனைப் பார்த்து அவன் சொன்னான், "அந்தத் துப்பாக்கியைப் பத்திரமா பார்த்து பிடிங்க. இல்லாட்டி தேவையில்லாம அவங்க துப்பாக்கி வெடிச்சு சாகப் போறாங்க."
அவன் தோளிலும் தலையிலும் முதல் முறையாக அடிகள் விழுந்தன.
நண்பர்களே, உபநிஷத்தில் இருக்கும் வாக்கியத்தை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? 'அடிப்பவன் நான் இவனை அடிக்கிறேன் என்றோ அடிவாங்கியவன் எனக்கு அடி கிடைத்தது என்றோ கருதினால், அவர்கள் இருவருக்குமே ஆத்மா என்ற ஒன்றைப் பற்றி தெரியாது என்று அர்த்தம். ஆத்மா அடிப்பதும் இல்லை. அடி வாங்குவதும் இல்லை.'
கொலையாளி:
இந்தியர்களே, நான் ஆரம்பத்தில் பிரம்மத்தில் இருந்து புறப்பட்டது அழகான பெண் வண்ணத்துப் பூச்சியாகத்தான்.
ஏழு வண்ண சிறகுகளை வீசியவாறு பாற்கடலுக்கு மேலே இஷ்டம் போல பறந்து திரிந்தேன். தாமரையில் இருந்த தேனைப் பருகி சந்தோஷத்துடன் இருந்தேன். பாற்கடலைப் பார்த்துப் பார்த்து ஆனந்தத்தில் திளைத்தேன்.
தேவர்களின் கூட்டத்திற்கும், அசுரர்கள் கூட்டத்திற்கும் மேலே சுதந்திரமாக வானத்தில் நான் பறந்து திரிந்தேன். காமதேனுவும், சந்திரனும், காளைக் குடமும், அமிர்தக் கலசமும் என எல்லாவற்றையும் நான் பார்த்தேன்.
பாற்கடலில் ஒரு பெரிய சலனம். பாற்கடல் அலைகளைக் கிழித்துக் கொண்டு ஒரு திவ்ய உருவம் உயர்ந்து வருகிறது. பார்த்தால் தாமரைப் பூவில் அமர்ந்தவாறு மகாலட்சுமி!
நான் தேவியின் அழகில் என்னையே மறந்து போனேன். தீபத்தில் இருக்கும் எண்ணெயைப் போல நான் தேவியின் பக்கத்திலேயே பறந்து கொண்டிருந்தேன். அமிர்தம் கலந்த தாமரைத் தேனின் மணம் என்னை பைத்தியம் கொள்ளச் செய்தது.
நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். தேவர்களும் அசுரர்களும் நடுங்கும் வண்ணம் சிறகுகளால் தேவியை தாமரைப் பூவில் இருந்து தள்ளிவிட்டு, அமிர்தத் தேன் குடிக்க முயற்சித்தேன். வியப்பு கலந்த ஒரே ஒரு பார்வையால் தேவி என்னைச் சாம்பலாக்கினாள்.
சகோதரர்களே, இதுதான் என்னுடைய முதல் பிறவியும் அதன் இறுதி முடிவும்.
இன்னொரு பிறவியில் நான் அயோத்தியில் தசரத மகாராஜாவின் பூங்காவனத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த தாமரைத் தடாகத்தில் வசிக்கும் வண்டாகப் பிறந்தேன். சிறு குழந்தையாக இருந்த ஸ்ரீராமன் ஒருநாள் தடாகத்தின் பக்கம் விளையாடிக் கொண்டிருந்தான். தனக்கு மிகவும் பிடித்தமான நீலத்தாமரையின் தண்டின் மேல் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து ராஜகுமாரன் பயந்து போய் உரத்த குரலில் அழ ஆரம்பித்தான்.
அவ்வளவுதான்&
ஆயுதங்களைக் கையில் வைத்திருந்த வேலைக்காரர்கள் ஓடி வந்தார்கள். ஸ்ரீராமன் அவர்களிடம் என்னைச் சுட்டிக் காட்டினான். ஒரு வேலையாள் வெறுப்புடன் என்னைப் பிடித்து கரையில் போட்டான்.
என்னை மிதித்துக் கொல்வதற்காக அவன் தன் கால்களை உயர்த்தினான். அப்போது இராமபிரான் அவனைத் தடுத்தான். அருகில் நிழல் தந்து கொண்டிருந்த மலர்களுடன் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த மரக்கிளையில் என்னைப் பிடித்து வைக்கச் சொன்னான். கருணைமனம் கொண்டு ஸ்ரீராமனும், வேலைக்காரர்களும் திரும்பிச் சென்ற பிறகு, நான் மீண்டும் தாமரை மலரில் போய் உட்கார்ந்து கொண்டேன்.
மறுநாள் தாமரை மலரைப் பறிப்பதற்காக கையை நீட்டிய ஸ்ரீராமன், அதன் தண்டில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து அதிர்ந்து போனான். அவன் முகம் கோபத்தால் அக்னியென சிவந்தது. வெறுப்புடன் என்னைக் கரையின் மேல் எறிந்தான்.
பிறகு... தன் வலது காலை உயர்த்தி என்னை அவன் மிதித்தான். சிறுவனாக இருந்த அவனின் பிஞ்சு பாதத்தால் என்னைச் சரியாக மிதித்து நசுக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் தன் மிருதுவான பாதம் கொண்டு ஸ்ரீராமன் என்னை மிதித்துக் கொண்டே இருந்தான்.
என்னுடைய மகா பாக்யத்தை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்! எத்தனை தடவைகள் ராமனின் பாதம் என்மேல் திரும்பத் திரும்ப பட்டும், நான் சாகவில்லை.
என் உடம்பில் இருந்து வெளிப்பட்ட விஷ திரவம் ஸ்ரீராமனின் புண்ணிய பாதத்தில் ஒரு கறுப்பு அடையாளத்தை உண்டாக்கியது. அதற்குள் வேலைக்காரர்கள் குழந்தையைத் தேடி ஓடி வந்து விட்டார்கள். அவர்கள் அவனை என்னிடமிருந்து பிரித்தார்கள்.
அவர்களில் அனுபவம் அதிகம் கொண்ட வேலைக்காரன் ஒரே மிதியில் என்னை நசுக்கித் தேய்த்தான். ஹா... ராமனின் பாதம் தொட்டு நான் உயிரை விட்டிருந்தால்! நான் இப்போதும் பிரம்மத்தில் ஆனந்த அனுபவங்களுடன் உல்லாசம் கொண்டு இருந்திருப்பேன்!
தேசத் துரோகிகளைப் பரலோகத்திற்கு அனுப்பி வைக்கிற வேலை என்மீது விழுந்திருக்காது. கஷ்டம்!
2
கிரக நிலை
கைகளைப் பின்பக்கமாகப் பிடித்து வளைத்ததால் உண்டான வேதனையில் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருந்த கொலையாளி ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தான்.
மரண ராசி! இன்று வெள்ளிக்கிழமை. 1948 ஜனவரி 30. மரண நேரம் குத்துமதிப்பாக 5.17
அவன் வேகவேகமாக தான் போட்டுக் கொண்டிருந்த கணக்குகளைக் கழித்தான். நெருப்பு பிடித்து எரியும் வெடிமருந்து கிடங்கைக் போல அவனைச் சுற்றிலும் ஒரே சத்தங்கள்! யாரோ அவனைப் பிடித்து குலுக்கினார்கள். சாபங்களும், வசவும் அவனை மூச்சு முட்டச் செய்தன.
அப்போது மரண ராசி& மிதுனம். ஆத்ம சாந்தி& ரிஷபம்... ரிஷபமா?...
அவன் முகம் இருண்டது. கணக்குகளின் கிளைகளை விட்டு வேறு கிளைகளுக்கு அவன் தாவிக் கொண்டே இருந்தான்.
ஆமாம்! ரிஷபம்தான்! அதிபதி சுக்கிரன்! ஹே கடவுளே! இது உண்மையா?
தன்னையும் அறியாமல் படுகுழிக்குள் விழுந்து விட்டதைப் போல் அவன் உணர்ந்து, சிலிர்த்தான். அவனுக்குள் இருந்து ஒரு அடிநாதம் எந்தவித சத்தமும் இல்லாமல் மெதுவாக எழுந்து உயர்ந்து வந்தது. தன்னைப் பிடித்துக் கொண்டிருந்த கைகளை உதறிவிட்டு வேகமாக ஓடிப் போய் துப்பாக்கியைப் பிடுங்கி குழாயை வாய்க்குள் வைத்து விசையை அழுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அப்போது அவன் நினைத்தான்.