ஹேராம் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6809
அவரின் பெயரைத் தெரியுமா என்கிறீர்களா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஒரு இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் போது தட்டியெழுப்பிக் கேட்டாலும் அந்த மனிதரின் பெயர் என் நாக்கு நுனியில் எப்போதும் இருக்கும். ஆனால், நான் சொல்லமாட்டேன். இனி பெயர்களைச் சொல்லி என்ன ஆகப்போகிறது? சாகவேண்டிய மனிதர் செத்தாகிவிட்டது. கொலை செய்ய வேண்டியவன் கொலை செய்து விட்டான். செத்துப் போன மனிதருக்கு இனி பெயரால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. இனி யார் அழைத்தாலும் அவர் கேட்கப் போவதில்லை. ஒரு கல்லறை உண்டாகும் பட்சத்தில் அதில் அவரின் பெயரை எழுதலாம். ஆனால், அவ்வளவு நல்லவர்களா இந்து மக்கள்?
நீங்கள் என்னை பயமுறுத்துகிறீர்கள். இல்லையா? கஷ்டம்! நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னைக் கொடுமைப்படுத்தாதீர்கள். இது ஒரு தெரு குண்டனின் முரட்டுத்தனமான உடம்பல்ல. இது சத்தியவானும் கடவுள் நம்பிக்கை கொண்டவனும் நாட்டுப்பற்று உள்ளவனுமான ஒரு பிராமணனின் உடம்பு. கொடுமைகளை இந்த உடம்பால் தாங்கிக் கொள்ள முடியாது. எங்களின் ஆத்மாவிற்குத்தான் பலம் அதிகம். உடம்புக்கு அல்ல. என்னைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
தனக்கு முன்னால் நாற்காலிகளில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரிகளைக் கொலையாளி மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அழகான தோற்றத்தைக் கொண்டிருந்த ஒரு இளம் போலீஸ் அதிகாரி சிகரெட்டைப் பற்றவைத்தபோது, அவனுக்கு என்னவோ போல் இருந்தது. அவர்கள் வீட்டுக்குத் திரும்பி ஓய்வெடுக்கிறபோது, மனைவிகளிடமும் பிள்ளைகளிடமும் தன்னைப் பற்றி என்ன கூறுவார்கள் என்று அவன் எண்ணிப் பார்த்தான். அவன் தொண்டை வற்றிப் போயிருந்தது. ஒரு கப் தேநீர் இப்போது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.
இந்திய சகோதரர்களே, நீங்களே சிந்தித்துப் பாருங்கள். உண்மையில் கிழவர் ஏற்கனவே செத்துப் போயிருக்கலாமே! எத்தனை தடவை அவர் மரணத்தின் எல்லை வரை போவதாக நடித்திருக்கிறார்! எதற்காக அவர் சாகவில்லை? உயிரைத் தியாகம் செய்யவில்லை? எதற்காக என் கைகளுக்காக அவர் காத்திருந்தார்? வக்கிரபுத்தி! அவருக்கு என்னவோ தெரிந்திருக்கிறது. நான் வாசல் கதவைத் தட்டுவதற்காகக் காத்திருந்தார் அந்த மனிதர்! ஹா! கிழவர் பிறக்காமலே இருந்திருந்தால்...! என்னுடைய பிராமண பிறப்பை சத்ரிய தர்மத்திற்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டிய சூழ்நிலையே உண்டாகியிருக்காது.
நான் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் எங்கேயிருந்து வந்தவன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? என்னைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்கள் விலங்கின் எல்லையில் இந்த உடல் உங்களுக்கு கிடைக்கும். ஆனால், அதற்குள் இருக்கிற ஆத்மாவை உங்களால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியுமா? உங்கள் செயல்களில் இருந்து உங்களை யார் காப்பாற்றப் போகிறார்கள்?
கொலையாளி:
இந்தியர்களே, என்னை மிகவும் அதிர வைத்த பிறவியைப் பற்றி இப்போது கேளுங்கள். அயோத்தியில் வண்டாகப் பிறந்து மரணமடைந்த நான் சரயு நதியில் மீனாகப் பிறந்தேன். மிகவும் பலசாலியும் அகங்காரியுமான நான் ஒரு மீன் கூட்டத்திற்கே தலைவனாக இருந்தேன். நதியில் விழும் உணவுப் பொருட்கள் மேல் முழு ஆதிக்கமும் செலுத்தக் கூடியவன் நானாக இருந்தேன். நான் தின்றது போக மீதியிருப்பதைத்தான் மற்றவர்கள் தின்னவேண்டும்.
ஒருநாள் உயிர் இருக்கிறது போல் தோன்றுகிற சடலம் நதி வழியே கடந்து சென்றது. நானும் மற்ற மீன்களும் அதைப் பின் தொடர்ந்தோம். உயிர் இருப்பதற்கான அடையாளம் எதையும் சடலம் காட்டவில்லை என்பது உறுதியான பிறகு நான் முதலில் போய் அதைக் கடித்தேன். வலது பாதத்தில் நான் கடித்தது. அப்போது பாதத்தின் உள் பக்கத்தில் நீலநிறத்தில் காணப்பட்ட ஒரு அடையாளத்தை நான் பார்த்தேன். அப்போது அயோத்தியில் என்னுடைய பழைய பிறப்பு ஞாபகத்தில் வந்தது. கடினமான மனதுடனும் கவலையுடனும் குற்ற உணர்வுடனும் நான் நதியின் ஆழத்தை நோக்கி நீந்தினேன். அடியில் இருந்த சேறை நோக்கி என் உடலை படுவேகமாகச் செலுத்தினேன். சேற்றில் என்னை நானே மூழ்கடித்து இறந்தேன்.
நான்தான் சத்ரபதியின் முதல் குதிரையாக இருந்தேன். என்னுடைய ஆணவத்தால் நான் இளைஞனான சிவாஜியைக் கீழே தள்ளி விட்டு, மிதிப்பதற்காக என்னுடைய முன்னங்கால்களை உயர்த்தினேன். அடுத்த நிமிடம் அவர் மின்னல் வேகத்தில் வாளை உருவி என் இதயத்தில் சொருகினார். சிவாஜியின் மேல் இரத்தத்தைச் சிந்தியவாறு நான் செத்து விழுந்தேன்.
நான்தான் நாதிர்ஷாவின் பிரதான அடியாள். சாந்தினி சவுக்கின் ஓடைகளில் இரத்தம் மழை வெள்ளத்தைப்போல பாய்ந்து வந்து கொண்டிருந்தபோது, என்னுடைய தலைமையில்தான் மயில் சிம்மாசனம் கொள்ளையடிக்கப்பட்டது. பெண் வேடமிட்டு கோமாளித்தனங்கள் பலவற்றையும் காட்டியவாறு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த என்னைத் தங்களின் தலைமேல் வைத்தவாறு ஊர்வலமாக வீரர்கள் கொண்டு சென்றார்கள். அன்று இரவு வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்று நான் அலிகளின் கூட்டத்தைத் தேடிப்போனேன். ஒரு இளம் அலியுடன் உடல் இன்பம் கண்டுகொண்டிருந்தபோது, என் தலையில் எமன் தாக்கியதன் விளைவு, பிடரி அடிபட்டு நான் மரணமடைந்தேன்.
கண்ணகி மார்பகத்தை வீசி எறிந்தபோது, ஓடிப்போய் அதைப்பிடித்த தெருப் பிச்சைக்காரனாக நான் இருந்தேன்.
தைமூரின் படையில் போரில் தோற்ற மன்னர்களின் பற்களைப் பிடுங்கும் வேலைக்காரனாக நான் இருந்திருக்கிறேன். தேவி சரஸ்வதியைப் பார்ப்பதற்காக பிரம்மா மேலே முளைக்க வைத்த தலையாக நான் இருந்திருக்கிறேன்.
சாக்ரட்டீஸை விஷம் வைத்துக் கொல்லச் சொன்ன நீதிபதி நான்தான். ரோமில் காஸீஸியத்தில் மிருகங்களுக்கு உணவாகத் திறந்துவிடப்படுகிற கைதிகளைக் கொன்று தின்னும் சிங்கங்களில் ஒன்றாக நான் இருந்திருக்கிறேன்.
க அபய்க்கு முன்னால் முகத்தை நிலத்தில் வைத்து தொழுகை செய்து கொண்டிருந்த முஹம்மது ரஃபியின் மீது ஒட்டகத்தின் குடலை வீசியெறிந்த மனிதன் நான்தான்.
பரீக்ஷித் மகாராஜாவைக் கொல்வதற்காக தட்சன் கிருமியாக ஒளிந்திருந்த மாதுளம்பழத்தை பிராமணவேடம் தரித்து மன்னரின் சன்னதியில் கொண்டுபோய் கொடுத்த இளைஞன் நான்தான்.
ஜெரிக்கோ நகரத்தைத் தகர்ப்பதற்காக வந்து சேர்ந்த ஜோஷாவின் படைக்கு ஆலோசனைகள் தந்து நகரம் அழியக் காரணமாக இருந்த ரஹாப் என்ற விபச்சாரியாக இருந்தது நான்தான்.
இப்லீஸின் வஞ்சனையால் ஆதாமும் ஏவாளும் கொன்று வேக வைத்து தின்ற இப்லீஸின் குழந்தை கன்னஸ் நான்தான்.
பிறப்பு உறுப்பில் விஷப்பற்களை வைத்துக் கொண்டு பார்வதி வேடத்தில் சிவனைக் கொல்வதற்காகச் சென்றது நான்தான்.
முதல் அணுகுண்டு மூலம் ஆயிரம் சூரியன்களைப்போல வெடித்துச் சிதறிய அணுசக்திகூட நான்தான்.