ஹேராம் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6809
7
இதுதான் என் பெயர்
வெளியே ஆரவாரம் சற்று குறைந்திருந்தது. ஒரு போலீஸ்காரன் எரிந்து கொண்டிருந்த ஒரு கரி அடுப்பை கொலையாளிக்கும் அதிகாரிக்குமிடையில் கொண்டு வந்து வைத்தான். அடுப்பில் இருந்து தனக்கு நேராக வந்த சூடான புகையை கொலையாளி மூச்சில் கலந்து சுவாசித்தான். அடுப்பின் சிவந்த வெளிச்சத்தை அவன் ஒரு நண்பனைப் பார்ப்பதுபோல் பார்த்தான். தந்தை, பாட்டன் பக்கத்தில் இருக்க, ஹோம குண்டத்தின் தீக்கனல்களின் பிரகாசத்தைப் பார்த்தவாறு கனவு கண்டு கொண்டிருந்த ஒரு சிறுவன் அப்போது அவனின் ஞாபகத்தில் வந்தான். எங்கோ தூரத்தில் வீசியெறியப்பட்டவனைப் போல அவன் ஒரு நிமிடம் சிலிர்த்தான். போலீஸ் அதிகாரிகள் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட போதுதான் தான் அழுவதையே அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது. விலங்கு போடப்பட்ட கைகளை உயர்த்தி அவன் கண்ணீரைத் துடைத்தான். முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தான் அவன். நீண்ட பெருமூச்சு விட்டவாறு அவன் சொன்னான்.
‘‘நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ருபூதமே
த்வயாஹிந்துபூமே ஸீகம் வர்த்தி தோஹம்...’’
அவன் மீண்டும் குளிரை உணர்ந்தான். காலைநேர ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பதாகைக்கு முன்னால் தான் ஒரு படை வீரனாக நின்று கொண்டிருக்கும் காட்சி அவன் திறந்த கண்களுக்கு முன்னால் ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது.
போலீஸ்காரர்களே, உங்களைப் போன்ற படைவீரன்தான் நானும். என்னுடைய போர் சீருடையும் காக்கிதான். காக்கிக்கும் காவிக்கும் மண்ணின் நிறம்தான். தெரிகிறதா?
இந்தியர்களே, கீதை சொல்கிறது: ‘‘அர்ஜுனா... எனக்கும் உனக்கும் எத்தனையோ பிறவிகள் கடந்து போயிருக்கின்றன. என்னுடைய, உன்னுடைய அந்தப் பிறப்புகள் அனைத்தையும் நான் அறிவேன். வீரனான அர்ஜுனனே, உனக்கு அது தெரியவில்லை.
ஆனால், துர்பாக்கியசாலியான நான் இதோ எல்லாவற்றையும் தெரிந்திருக்கிறேன். நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை, கிழவரின் சாபமாக இருக்குமோ கசப்பான அந்த நினைவுகள்? இல்லாவிட்டால் பிறப்பு சம்பந்தமான இந்த நினைவுகள் என்னுடைய முக்தியின் ஆரம்பமாக இருக்குமோ? அப்படியென்றால் இப்போதைய என் நினைவுகள் கடவுளின் வேலையாகத்தான் இருக்கும்!
கர்ம சக்கரத்திற்கு முன்னால் நான் பதைபதைப்புடன் நின்றிருக்கிறேன். பார்த்தன் பகவானிடம் கேட்ட அதே கேள்விதான் என் நாவிலும்: ‘‘மனிதன் விருப்பப்படவில்லையென்றாலும் என்ன காரணத்திற்காக அவன் பாவம் செய்ய நேரிடுகிறது?’’ பகவான் பதில் சொன்னார்: ‘‘மனிதனை வற்புறுத்தி பாவம் செய்ய வைக்கிற சக்தி ரஜோ குணத்தில் இருக்கிறது. அந்த ரஜோ குணத்தை அதிகப்படுத்தும் அந்த சக்திக்குப் பெயர்தான் காமம். அந்தக் காமத்தை அடக்குகிறபோது அதுவே குரோதமாக மாறுகிறது...’’
காமம்! காமம்! குரோதம்!
காமத்தின் கொழுப்பு தடவாமல் உலகத்தில் என்ன இருக்கிறது? குரோதத்தையும் எடுத்துக் கொள்வோம்... எல்லாவற்றின் மீதும் கறுத்த சிறகை அடித்துக் கொண்டு அது பறந்து திரிகிறது. பிறகு எப்படித்தான் நாம் தப்பிப்பது?
கஷ்டம்! கீதை வாக்கியம் என் சந்தேகத்தைப் போக்கவில்லை.
என்னுடைய காமம் உடம்பின் ஆசையைத் தீர்ப்பது மட்டுமே! என்னுடைய குரோதம் தடை செய்யப்பட்ட காமம் அல்ல. அது ஒரு மன வியாதி அல்ல. இந்தியர்களே, எனக்குப் பைத்தியம் கிடையாது.
குருஜியின் வார்த்தைகளை மூளைக்குள் செலுத்துகிறது என்னுடைய குரோதம். குரோதத்தின் வேதாந்தம்தான் என்னுடையது. இரத்தத்தின் வேதாந்தம் பாரதாம்பிகைக்கு நான் இரத்தத்தால் அபிஷேகம் செய்கிறேன்.
நான் பிரம்மத்தின் படியில் ஏற்றிவிட்ட அந்தக் கிழவர் காமத்திற்கு அடிமையாக இருந்தார். உடலை அவர் எப்படியெல்லாமோ அடக்கினார். ஆனால், ஆத்மாவின் காமத்தில் மூழ்கிப்போனார். மகாத்மா என்ற பெயர்! ஆன்மீக வெளிப்பாடு! அவற்றை அவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார். குரோதத்தை அவர் அகிம்சை என்ற பட்டுத்துணியில் சுற்றி வைத்துக் கொண்டார். ஏதோ சில தகிடுதத்த செயல்கள் மூலம் அவர் முக்தியடைந்து விட்டார். எங்கேயோ சில குறுக்கு வழிகளில் அவர் பாய்ந்ததென்னவோ உண்மை & துர்பாக்கியமான என் கைகள் மூலம்! குறுக்கு புத்தி! என்ன இருந்தாலும் வைசியன் ஆயிற்றே! சூத்திரக்காரனாக மாறியே ஆக வேண்டும். பாரதாம்பாவே, என்னை மன்னித்து விடு. எனக்கு வருத்தமில்லை நண்பர்களே, எனக்கும் ஒரு நாள் வரும்.
நான் பெயரை எழுதி கையொப்பம் இடவேண்டுமா? சரி... இதோ... என் பெயர் மோகன்தாஸ். அது அந்தக் கிழவரின் பெயர் என்கிறீர்களா? நண்பர்களே, என்னைப் பொறுத்தவரை இனிமேல் இதுதான் என் பெயர். கிழவருக்கு இனி பெயரில்லை. பிரம்மத்தில் இருக்கும் எதற்கும் பெயர் கிடையாது.