ஹேராம் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6809
கடைசியில் ரகசிய ஞானங்களும், மிகப்பெரிய மந்திரங்களும் குறிக்கப்பட்டிருக்கும் என்னுடைய நூல்களுக்காகவும் வேறு சில அபூர்வ பொருட்களுக்காகவும் என்னுடன் காதல் கொள்ள அவள் சம்மதித்தாள். ஒரு வசந்தகால இரவில் என் சொத்துக்களை அவள் பெயருக்கு நான் மாற்றிக் கொடுத்தேன். பிறகு ஒரு பெரிய மரத்திற்குக் கீழே கிடந்த மலர்ப் படுக்கை மேல் அவளைக் கிடத்தி நான் உடலுறவு கொள்ளத் தொடங்கும் போது, அவளின் இளம் காதலன் மரத்தின் மேலே இருந்த கிளையொன்றில் இருந்து ஆயுதத்துடன் குதித்து அவளைக் கொன்றான். என்னுடைய பிறப்பு உறுப்பையும், கை கால்களையும் வெட்டி எடுத்தான்.
நான் அந்த மரத்தினடியில் ஒரு இரவும் ஒரு பகலும் காகங்களும், கழுகுகளும், குள்ள நரிகளும் கொத்த, கடிக்க& எறும்பும் ஈக்களும் மொய்க்க கிடந்தவாறு இறுதி மூச்சை விட்டேன்.
3
கடித்தாலும் வெடிக்காத உயிர்
வலது கண்ணையும் கன்னத்தையும் சேர்த்து கொடுத்த ஒரு அடியில் கொலையாளியின் தலை ஒரு பக்கம் சாய்ந்து போனது. ஒரு நிமிடம் அவனுக்கு கண்கள் இருண்டு போனது மாதிரி இருந்தது.
இந்துக்களே, உங்களின் கைகளாலா பிராமணனை வதைக்கிறீர்கள்? மூன்று குண்டுகளைக் கொண்டு உங்கள் எதிரியின் உயிரைப் பறித்தவன் ஆயிற்றே நான்! பிராமணனான என்னுடைய சுய தர்மம் அல்ல அது. இருந்தாலும் காயைப் பறிப்பது போல எதிரியின் உயிரை நான் தனியாகப் பிரித்தேன் என்பது உண்மை தானே? அதுவும் பிடிவாத குணமும் கடின இதயத்தையும் கொண்ட ஒரு கிழவரின் கடித்தால்கூட வெடிக்காத ஒரு உயிரை& பெரிய வரம் கிடைத்த மனிதன் தான் என்று கருதிக் கொண்டிருக்கும் ஒரு அகங்காரம் கொண்ட மனிதனின் உயிரை.
மனதைக் கோவிலாக நினைத்து வழிபடும் மனிதன். சின்னச் சின்ன பைத்தியக்காரத்தனமான விஷயங்களுக்கும் பிடிவாதங்களுக்கும் அடிமையாகிப் போன மனிதன் பாரத மாதாவின் அகண்ட சொத்தின் மேல் முட்டாள்தனத்திற்கு மேல் முட்டாள்தனமும், தோல்விக்கு மேல் தோல்வியும், சர்வநாசத்திற்கு மேல் சர்வ நாசமும் உண்டாக்கிய மனிதன்.
எங்கே அந்த மனிதர்? -சாம்பலாவதற்கு முன்பு அவரின் உடம்பை நான் ஒருமுறை பார்க்க வேண்டும். என்னுடைய புதிய படைப்பை கடைசி முறையாக நான் ஒருதடவை பார்க்க விரும்புகிறேன். நான் புதிதாக உருவாக்கிய கிழவர்! அப்படி நான் புதிதாக உண்டாக்கியதில் நடந்தது ஒரு தண்டனையும் இரண்டு தப்பித்தல்களும். கிழவருக்கு அவர் செய்த பாவத்திற்குத் தண்டனை கிடைத்தது. பாரதத்திற்கு அந்த மனிதரிடமிருந்து விடுதலை கிடைத்தது. அதோடு கிழவரும் தப்பித்துக் கொண்டார். கஷ்டம்! இது எப்படி? மந்திரமா? மாயாஜாலமா? பிசாசின் வேலையா? அந்த மனிதரால் எப்படி இதை அடைய முடிந்தது?
அவர் உண்மையிலேயே இறந்து விட்டாரா? மரணமும் ஆத்மசாந்தியும் என்னுடைய சத்திரிய கர்மங்களும் அவர் உண்டாக்கும் கண்ணாமூச்சு விளையாட்டாக இருக்குமா? என்னுடைய வெடிகுண்டுகள் அவரின் மாயத் தோற்றத்துக்குள் நுழைந்து கடந்து போயிருக்குமோ? கிழவர் கீழே விழுந்து கிடக்கும் இடத்தை விட்டு எழுந்து உடல் உறுப்புகளை அசைத்தவாறு கால்களை நீட்டி நீட்டி நடந்தவாறு எனக்குப் பின்னால் வருவாரோ?
அவர் ஒரு திருடன். கபன சன்னியாசி. மாயாவி. கடவுளைப் பற்றிய கீர்த்தனைகள் தெரியும். பகவத் கீதையைப் பார்க்காமலேயே தெரியும். பாரதமாதாவை முஸ்லீம்களுக்கு அறுத்து விற்கவும் தெரியும். அந்த மனிதரின் அகிம்சை! உள்ளுக்குள் அவர் இம்சை மனம் கொண்ட மிருகமே. வஞ்சகன். கடிகாரமும் கண்ணாடியுமாய் எனக்குப் பின்னால் அவர் ஓடி வருகிறார். எனக்கு மன்னிப்பு தருவதாக நாடகம் நடத்துவதற்கு! ஹேய்! ஹேய்! என்னை விடுங்கள்! என்னை விடுங்கள்! நான் அந்த ஆளின் காலடி ஓசையை கேட்க வேண்டும். என் கையை விடுங்கள்! நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்னை நீங்கள் அந்த மனிதரின் கையில் ஒப்படைக்கப் போகிறீர்களா?
கொலையாளி போராடிக் கொண்டு முன்னால் வேகமாய் போனான். அவன் கண்கள் மூடியிருந்தன. திடீரென்று ஒருவித பதைபதைப்புடன் அவன் தன் கண்களைத் திறந்தான். விலங்கு போடப்பட்டிருந்த தன்னுடைய கைகளைப் பார்த்தான். அவன் முகத்தில் அதைப் பார்த்ததும் வருத்தம் உண்டானது.
பாரதத்தைக் காப்பாற்றிய கைகளுக்கு அவர்கள் விலங்கு அணிவித்திருக்கிறார்கள்! விதியின் கொடுமையை என்னவென்பது!
குளிர் எல்லா பக்கங்களிலும் இருந்தும் தன்னை முழுமையாகத் தாக்குவதை அவனால் உணர முடிந்தது. போலீஸ்காரர்களின் தாளத்திற்கேற்ப அவன் நடந்தான். கைகளை ஆட்டாமல் நடந்து போவதைப் பற்றி அவன் எண்ணிப் பார்த்தான். ‘‘கிழவரின் சடலத்தை ஒரு தடவை என்னைப் பார்க்க அனுமதிப்பீர்களா?’’ அவன் யாரிடம் என்றில்லாமல் கேட்டான். அங்கிருந்த சத்தத்தில் அவன் கேட்டது யார் காதிலும் விழவில்லை. ஒரு போலீஸ்காரன் மட்டும் அவனைப் பார்த்து கேட்டான். ‘‘என்ன? நீங்க ஏதாவது சொன்னீங்களா?’’ கொலையாளி தலையை ஆட்டினான்.
கிழவரிடம் விடை பெற வேண்டும். இப்போது அந்த மனிதர் எனக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார். பிறப்பைத் தருகிற தாய், தந்தை கொண்டிருக்கும் உறவைவிட கொல்லுபவன் கொல்லப்படுபவன் கொண்டிருக்கும் உறவு பலம் படைத்தது ஆயிற்றே! பிறப்பை யார் வேண்டுமானாலும் தரலாம். மரணத்தை எல்லோராலும் தர முடியுமா? மரணம் அடையலாம்... மரணத்தைத் தர எத்தனை பேருக்குத் தைரியம் இருக்கிறது! அதுவும் கொலை செய்து முக்திக்கு அனுப்புவது! பிரம்மனின் காலடிகளுக்கு! சிவ சம்போ! எனக்கு எங்கே தவறு நேர்ந்தது!
கிழவரின் கிரக நிலைக் கட்டத்தை அவன் மனம் மீண்டும் அசை போட்டுப் பார்த்தது. மீண்டும் மீண்டும் கணக்குகள் போட்டுப் போட்டு அவன் அழித்தான்.
முன்பே இதைப்பற்றி நான் ஏன் எண்ணிப் பார்க்கவில்லை! கஷ்டம்! கிழவரின் ஜாதகம் எனக்கு நன்றாக மனப்பாடம் ஆகியிருந்தும்! இதோ! கிழவருக்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆயுள் இருக்கிறது! பிரம்மாவே காவலுக்கு நின்றிருந்தாலும், இந்தத் திங்கட்கிழமைக்கு மேல் இந்த மனிதர் இருக்கப் போவதில்லை.
கொலையின் மூலம்தான் மரணம். மகாத்மாவின் மரணம். அகிம்சாவாதியின் இறுதி முடிவைப் பாருங்கள். ஆனால், இன்று தாண்டியிருந்தால், இவரின் மரணம் என் கைகளை விட்டு வேறொரு மனிதனின் கைக்குப் போயிருக்கும். அவ்வளவுதான் இவரின் மரணராசியும் மாறும். கிழவர் என்னைப் போல காலத்தின் பிடியில் சிக்கி நீந்திக் கொண்டே இருப்பார்.
ராம: ராம! விதி எவ்வளவு சரியாக என்னை இங்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது! கிழவர் விடை பெற்றுக்கொண்டு புறப்படத் தயாராக இருக்கும்போதுதான் பிரம்மத்திற்கு அவரை அனுப்புவதற்காக நான் வந்து நின்றேன். ஹே, பகவான்! நீயும் கிழவரின் பக்கம்தானா!