ஹேராம் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6809
கொலையாளி:
இந்தியர்களே, என்னுடைய இன்னொரு பிறவி பிரான்ஸ் நாட்டில். அங்கு ஒரு பிரபல பிரபு குடும்பத்தில் நான் பிறந்தேன். தாய், தந்தையின் விருப்பப்படி கடவுள் வழிபாடு விஷயங்களில் பயிற்சி பெற்றேன். இதன்மூலம் குடும்ப செல்வாக்கைக் கொண்டு போப்பாண்டவர், பிரெஞ்ச் மன்னர் ஆகியோரிடம் தனிக்கவனம் என்மீது படும்படிச் செய்ய முடிந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு புராதன நகரத்தில் இருந்த பாஷண்டர் கிறிஸ்தவர்களை அடக்குவதற்காக போப்பாண்டவர் அனுப்பி வைத்த சிலுவைப் போர்ப்படையின் ஆலோசகராக நான் நியமிக்கப்பட்டேன். அந்த நகரத்தை கிட்டத்தட்ட நாங்கள் முழுமையாகப் பிடித்து எங்கள் கைகளில் கொண்டு வந்த மாதிரிதான். நிலைமை அமைந்தது. காரணம்& பாஷண்டர்கள் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. மாறாக, கோட்டை வாசலைத் திறந்தே வைத்திருந்தார்கள். ஒருவேளை எங்களிடமிருந்து அவர்கள் கருணையை எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆட்சி செய்து கொண்டிருந்த பிரபுவும் மதத் தலைவரான பாதிரியாரும் தப்பித்து ஓடி விட்டார்கள். எங்களின் படை கொள்ளை, கொலை, காமவெறி என்று நகரத்தையே ஒரு வழி பண்ணியது.
அங்கிருந்த தேவாலயம் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது. மாலை நேர வாக்கில் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் கிறிஸ்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தேவாலயத்திற்குள் நுழைந்து வாசல் கதவை அடைத்துக் கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும்.
நான் கோட்டை கோபுரத்தின் மீது அமர்ந்து கொண்டு கீழே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது படைத் தலைவன் என்னைத் தேடி வந்தான். அவன் சொன்னான், ‘‘பிதாவே... பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று ஒரு மிகப்பெரிய கூட்டம் தேவாலயத்தில் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நுழைந்து தங்கியிருக்கிறார்கள். அவர்களில் பாஷண்டர்களும் இருக்கிறார்கள். உண்மையான கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் கதவை மூடிக் கொண்டிருக்கிறார்கள். நம் விஷயம் என்னவென்றால் அரச கட்டளைப்படி நாம் அடுத்த போர் முனைக்கு உடனடியாகப் போயாக வேண்டும். அதற்கு முன்பு நாம் எப்படி தண்டனையை நிறைவேற்றுவது?’’
நான் சரியான பதிலுக்காக பரமபிதாவிடம் பிரார்த்தித்தேன். படைத் தலைவன் எனக்கு முன்னால் முழங்கால் போட்டு அமர்ந்திருந்தான். அவனை என் கையில் இருந்த சிலுவையால் ஆசீர்வதித்த நான் சொன்னேன், ‘‘இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். எல்லோரையும் கொன்றுவிடு. கடவுளுக்கு யார் தேவைப்படுகிறார்களோ, அவர்களை கடவுள் எடுத்துக் கொள்வார்’’ புனித நீரைத் தெளித்து அவனை நான் போகச் சொன்னேன்.
கோபுரத்தின் மேல் நான் மீண்டும் காவல் தெய்வத்தைப் போல் போய் அமர்ந்தேன். தேவாலயத்தைச் சுற்றிலும் விறகையும், சுள்ளிகளையும், காய்ந்து போன புற்களையும் படையைச் சேர்ந்த வீரர்கள் ஏற்கனவே போட்டு தயாராக வைத்திருந்தார்கள். சூரியன் மறைந்ததும், அந்த மிகப்பெரிய தேவாலயத்தைச் சுற்றிலும் இன்னொரு தேவாலயத்தைப் போல நெருப்பு கொழுந்து விட்டு உயரமாக எழுந்து நின்றது.
இருட்டைக் கிழித்துக் கொண்டு நெருப்பு ஜுவாலைகள் காற்றில் கம்பீரமாக எழுந்தன. ‘‘எல்லாவற்றிற்கும் மேலான கடவுளே, வணக்கம்’’ & நான் உரத்த குரலில் சொன்னேன். மின்னல்களின் கூட்டத்தைப் போல நெருப்பு தேவாலயத்தை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டிருந்தது. கண்களைத் திறந்து மூடுகின்ற சமயத்திற்குள் அந்த உயர்ந்து நிற்கும் தேவாலயம் ஆகாயத்தையே எட்டிக் கொண்டிருக்கும் நெருப்பு இல்லமாக மாறியது. கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் தீயைப் பார்த்து நான் அச்சத்துடனும், வியப்புடனும் கைதட்டி மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தேன்.
நெருப்பில் சிக்கி எரிந்து கொண்டிருந்த மக்களின் அலறல் சத்தமும், கூப்பாடுகளும் என் காதுகளில் வந்து விழுந்தன. பாஷண்டர்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தேவாலயம் சாம்பலாகிக் கொண்டிருப்பதை நான் வெறியுடனும் ஆவேசத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘‘உண்மை விசுவாசத்தின் பதிலடி!’’ & நான் உரத்த குரலில் சொன்னேன்: ‘‘சரித்திரத்தின் தவறு திருத்தப்பட்டிருக்கிறது!’’
நெருப்பு மாலையைப் போல, புகையும் ஜுவாலையும் காற்றில் விண்ணளவு உயர்ந்து நின்று, அழகு காட்டிக் கொண்டிருந்த அந்தக் கம்பீரமான தேவாலயத்தையும், அதில் அபயம் தேடிக் கொண்டிருந்த மக்களையும் முழுமையாக எரித்து சாம்பலாக்கி விட்டிருந்தன. புதிய சூரியன் உதித்ததைப் போல நகரத்தின் மேல் ஒரு சிவப்பு வெளிச்சம் பரவி முழுமையாக ஆட்சி செய்து கொண்டிருந்தது. ஒரு கையில் உருவிய வாளையும், இன்னொரு கையில் சிலுவையையும் வைத்துக் கொண்டு நான் முழங்கால் போட்டு அமர்ந்து கடவுளைத் தொழுதேன். மக்களின் கூப்பாடுகளும், ஓலங்களும் முற்றிலுமாக நின்று போயிருந்தன. நெருப்பு எரிந்து முடிந்திருந்தது. ஒரு நெருப்பு மாலையைப் போல தேவாலயம் எலும்புக்கூடாய் இருட்டில் நின்று ஒளிர்ந்தது.
நான் சிலுவையையும் வாளையும் கீழே வைத்தேன். வேதப் புத்தகத்தை அதன் உறையில் போட்டேன். முழு நிலவு அப்போது உதயமாகிவிட்டிருந்தது. சந்திரனையே நான் ஆவேசம் பொங்கப் பார்த்தேன். என்னுடைய பிறப்பு உறுப்பு முறுக்கேறி நின்றதை என்னால் உணர முடிந்தது. ஒருவித ஓசையை எழுப்பியவாறு நான் அதை வெளியே எடுத்தேன். கண்களைக் கொஞ்சம்கூட இமைக்காமல் சந்திரனையே பார்த்தவாறு நான் என் கையால் பிறப்பு உறுப்பை மேலும் கீழுமாய் ஆட்டிக் கொண்டிருந்தேன். அதிலிருந்து வந்த விந்தை அந்த மிகப்பெரிய நகரத்தின் மேல் வட்டமாக வீசியெறிந்தவாறு நான் அலறினேன். ‘‘கடவுளுக்கு வணக்கம்!’’ கீழே இருட்டில் இரத்தத்தில் மூழ்கியிருந்த படைவீரர்கள் பதிலுக்குச் சொன்னார்கள்: ‘ஆமென்!’
4
துண்டு நாட்டின் தந்தை
கொலையாளிக்கு வாந்தி வரும்போல் இருந்தது. அவன் போலீஸ்காரர்களைப் பார்த்துச் சொன்னான்: ‘‘எனக்குக் கொஞ்சம் உட்காரணும்போல இருக்கு. என்னால முடியல...’’ அவர்களின் சம்மதத்துடன், அவன் தரையில் உட்கார்ந்தான். தலையை கீழ்நோக்கி குனிந்திருந்தான். கண்களை மூடியிருந்தான்.
நான் மட்டும் தனியா? என்னுடைய எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீரா?
பல தடவைகள் முயற்சி செய்து பார்த்தும் அவனால் வாந்தி எடுக்க முடியவில்லை. முழுமையாக அடைத்துக் கொண்ட காதுகளும், நீர் வழிந்து கொண்டிருந்த கண்களுமாய் மேல்மூச்சு, கீழ்மூச்சு விட்டவாறு அமர்ந்திருந்த அவன் தரையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் உரத்த குரலில் சொன்னான். ‘‘எனக்கு ஒரு போர்வை தாங்க. இல்லாட்டி குளிர்ல நான் செத்தே போயிடுவேன்.’’ சில நிமிடங்களுக்குப் பிறகு, அவன் உடம்பின்மீது ஒரு கம்பளியைக் கொண்டு வந்து போட்டார்கள். கொலையாளி நன்றிப் பெருக்குடன் தலையை உயர்த்திப் பார்த்தான். தன்னையே பார்த்துக் கொண்டிருந்த முகங்களில் கம்பளியின் சொந்தக்காரர் யார் என்பதை அவனால் பார்த்து கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் மன வேதனையுடன் தலையைக் குப்புற கவிழ்த்துக் கொண்டான்.