ஹேராம்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6809
அர்ஜுனா பல்குணா...
குளிரே குலுங்கிப் போகிற அளவிற்கு முழங்கிய குண்டு வெடிக்கும் சத்தத்தைக் கேட்டு புல்வெளியில் இருந்த மனிதக் கூட்டம் முழுவதும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தது.
கொலையாளி குளிர்ந்த காற்றில் புகைந்து கொண்டிருக்கும் கைத்துப்பாக்கியுடன் அமைதியாக எந்தவித சலனமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தான்.
5.17 சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு வேலை முடிந்தது. மரண ராசியைப் பார்க்க வேண்டும். கிழவர் எங்கே போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமே!
பனிக்காலமாக இருந்ததால் நேரம் இரவைப் போல இருண்டு போயிருந்தது. சூரியன் அஸ்தமனம் ஆகாமலே காணாமல் போயிருந்தது. காக்கி கால் சட்டையும் காக்கி மேல் சட்டையும் அணிந்திருந்தான் கொலைகாரன். அவற்றின் குளிர்ச்சி அவன் உடலெங்கும் தொட்டுப் பரவிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் பங்களாவின் அடைக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல்களுக்குப் பின்னால் இலேசான வெளிச்சம் விழுந்து கொண்டிருந்தது. மதிலுக்கு அருகில் பெரிய நாவல் மரங்களும், வேப்ப மரங்களும் இருட்டில் கலந்து நின்றிருந்தன.
குண்டடிபட்ட மனிதரின் உடனிருந்த இரண்டு பெண்களில் ஒருத்தியைத் தன் இடது கையால் தள்ளி மாற்றிவிட்டுத்தான் கொலையாளி தன் துப்பாக்கியால் குறி பார்த்தான். குண்டபடி பட்ட மனிதரின் கைத்தடியும் பிரார்த்தனை மாலையும் நோட்டு புத்தகமும் அவளது மென்மையான கைகளில் இருந்து கீழே விழுந்தன. அவள் அதைப் பொறுக்குவதற்காக குனிவதையும் கிழவர் ஒரு வாக்கை உச்சரித்தவாறு நிலத்தில் விழுவதையும் கொலையாளி பார்த்தான்.
குளிரில் விரைத்து போயிருந்த புல்லின் மேல் கிழவர் உறக்கம் வந்த மனிதரைப் போல மரணத்தைத் தழுவி விழுந்தார். ஆடை எதுவும் அணியாதிருந்த அவர் நெஞ்சில் தொப்புள் துவாரங்கள் போல தெரிந்த காயங்களின் வழியாக குருதி கொட்டியது.
கிழவருக்கு இவ்வளவு ரத்தமா!
பெண்ணே, கீழே விழுந்த பொருட்களை எடுப்பதா உனக்கு முக்கியம்? கீழே விழுந்து கிடக்கும் கிழவரின் சரீரத்தை நீ பார்க்கவில்லையா? இப்போது அனேகமாக அவருக்கு உயிர் போய்க் கொண்டிருக்கும். சரி... உயிர் எப்படி போகும்? கண்கள் வழியாகவா? மூக்கு வழியாகவா? வாய் வழியாகவா? உள்ளங்கால் வழியாகவா? உயிர் இப்போது உடலைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிக் கொண்டிருக்கும். சரீரம் அதன் விருப்பப்படி கிடக்கட்டும். கைத்தடியும் பிரார்த்தனையும் மாலையும் நோட்டு புத்தகமும் இனி தேவையில்லை. சரீரம் சாம்பலாகப் போகிறது!
துப்பாக்கியின் குழலிலிருந்து புறப்பட்டு வந்த நீலப்புகையின் மணத்தை கொலையாளி நாசிக்குள் இழுத்தான். இரவில் தான் உடல் உறவு கொண்ட சிறுவனின் கையிடுக்கிற்குள் இருந்து வந்த வாசனை இதைப் போலத்தான் இருந்தது என்று நினைத்தான் அவன். அவனுடைய இளம் ரோமங்களில் முத்தம் தந்து அவனை கிளுகிளுக்கச் செய்த போது, வெடிமருந்தின் மணம்தான் அவன் நாசித்துவாரத்திற்குள் நுழைந்தது. திடீரென்று என்ன நினைத்தானோ, அவன் அந்தச் சிறுவனை நகங்களால் மிருதுவாகவும் கடினமாகவும் ஒரே நேரத்தில் வருட ஆரம்பித்தான்.
ஓய்வு எடுக்கும் அறைக்குப் பின்னால், வெளியே விளக்குகள் தட்டி உடைக்கப்பட்ட இரவு நேரத்தின் அமைதியைக் கிழித்துக் கொண்டு புகை வண்டிகள் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டுக் கொண்டும் கூவிக் கொண்டும் தண்டவாளங்களில் தாளம் போட்டுக் கொண்டும் போய்க் கொண்டிருந்தன. சிறுவன் அறையை விட்டு கிளம்பிப் போனபிறகு, அவன் முதல்நாள் படித்து நிறுத்தி வைத்திருந்த பெரிரோசனின் நாவலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். கண்கள் இலேசாக மூடத் தொடங்கியபோது, அவன் ஒரு கையால் தலையணைக்குக் கீழே எதையோ தேடினான். துப்பாக்கியின் குழலை அவன் விரல்கள் தொட்டன. தன்னை விட்டுப் போன சிறுவனின் பிறப்பு உறுப்பைத் தொட்டதைப் போல, அவன் ஒரு நிமிடம் அந்தத் துப்பாக்கியைப் பிடித்தான்.
புல்வெளியின் அமைதியைக் கலைக்கிற மாதிரி ஒரு பெண் உரத்த குரலில் அலறினாள். தன்னைச் சுற்றிலும் சத்தங்களால் ஒரு போர்க்களமே உண்டாகிவிட்டிருப்பதை கொலையாளி தெரிந்து கொண்டான். 'அர்ஜுனா பல்குணா பார்த்தா கிரீடி...'& அவன் தனக்குள் முணுமுணுத்தான். குளிர் அவனுக்குள் நுழைந்து, ஆக்கிரமித்து அவனை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தது. துப்பாக்கிக் குழலின் வெப்பத்தை அவன் விரல்கள் தொட்டுப் பார்த்தன.
'வணக்கம்' என்று கிழவரிடம் சொல்ல நினைத்ததை உண்மையில் அவன் சொன்னானா?
தானல்ல& துப்பாக்கியின் ஒடுங்கிப் போன முகம்தான் 'வணக்கம்' என்ற வார்த்தையை உச்சரித்தது என்று அவன் உணர்ந்தான்.
கஷ்டம்! எதிரி மரியாதைக்குரிய மனிதராக இருக்கிறார். என் நாக்கு 'வணக்கம்' என்ற வார்த்தையை உச்சரித்திருக்க வேண்டும். வணக்கம்! வணக்கம்! வணக்கம்! நீங்கள் செய்த எல்லா நன்மைகளையும் நினைத்துப் பார்த்து வணக்கம்! செய்த தீமைகளுக்கு இந்தத் துப்பாக்கியின் தண்டனை.
அவன் துப்பாக்கியைப் பார்த்தான். அதிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த புகை இப்போது நின்று விட்டிருந்தது.
நாம் இப்போது பிரிகிறோம், நண்பரே! இனி உன்னுடைய விதி என்னவென்று யாருக்குத் தெரியும்? என் விதியையும் தான் சொல்கிறேன்.
பல கைகள் சேர்ந்து அவனை இறுகப் பிடித்த போது இது தான்தானா என்ற அதிர்ச்சி அவனை ஒரு நிமிடம் அலைக்கழித்தது. தன் உடம்பை இத்தனை மனிதர்கள் ஒரே நேரத்தில் சேர்ந்துபிடிப்பது இதுவே முதல்முறை என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான்.
நண்பர்களே, நான் இங்கேதானே இருக்கிறேன். வேறு எங்கும் நான் போகப் போவதில்லை. ஒரு வேலையைச் செய்து முடித்த பிறகு, அதன் விளைவுகளில் இருந்து தப்பி ஓடி விடுவதா? நீங்கள் கீதையின் வாசகத்தைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? 'பலனைப் பற்றி கொஞ்சமும் நினைக்காமல் கர்மம் செய்பவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கர்மத்தின் விளைவால் அவர்கள் கர்மத்தின் தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள். ஆனால், பலனை எதிர்பார்த்து காரியம் செய்பவர்கள் கர்மத்தின் விளைவு மூலம் பாவத்தையே செய்கிறார்கள்.'
என்னுடைய கடமை முடிந்தது. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்.
துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்தவாறு கொலையாளி உரத்த குரலில் கூப்பிட்டான். "போலீஸ்! போலீஸ்! தான் சரணடைவதை வெளிப்படையாக அறிவித்தான்.
கொலையாளியின் நன்கு வெட்டப்பட்ட தலைமுடியின் ஓரங்கள் நரைத்திருந்தன. அமைதி தவழ்ந்து கொண்டிருந்த முகத்தில் கவலையின் ரேகைகள் தெரிந்தன. தெளிவும், சந்தேகமும் நிறைந்த கண்களிலும் உதடுகளிலும் ஒரு மிடுக்கு தெரிந்தது. அவன் பார்வை நாலாபக்கங்களிலும் அலைந்து கொண்டிருந்தது. அவனுக்கு கிட்டத்தட்ட முப்பத்தேழு வயது இருக்கும். எதையோ மறந்து நின்றிருக்கும் ஒரு மனிதனைப் போல அவன் அங்கே நின்றிருந்தான்.