ஹேராம் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6809
அது நடக்காமல் போய்விட்டது! நேரம் தவறி விட்டது! கிழவர் சதி செய்து விட்டார். கஷ்டம்! அவருக்கு அவன் முக்தியைத் தேடிக் கொடுத்துவிட்டான். சுக்கிரனுடன் சங்கமம்! கடவுளே கிழவருக்கு சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்! சாந்தி கூட தேவைப்படாத ஆத்மா. நீண்ட நெடுங்காலம் கடந்து இங்கு திரும்பி வந்தால் போதும். அதுவரை பிறப்பதற்கு பெண்களின் பிறப்பு உறுப்பைத் தேட வேண்டியதில்லை. உறவு கொள்ளுவதற்கும் அவை தேவையில்லை. கஷ்டம்! என்னுடைய இந்தக் கைகளால் கிழவர் தப்பித்துக் கொண்டார்!
அவன் தனக்குள் கொதித்தான். தன்னுடைய கைகளை யாராவது வெட்டி எறிந்திருக்கக்கூடாதா என்று அவன் விருப்பப்பட்டான்.
ஹா! என்னுடைய கணக்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது! கிழவரின் உயிர் இப்போது கடவுளின் பாதத்தை நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது! மகா பாவி!
தன் மேல் மற்றவர்களின் கைகள் வந்து விழுவதை அவன் பாதி மயக்கத்தில் இருப்பதைப் போன்ற உணர்வுடன் அறிந்தான். 'ஸ்வேதவாஹன: பீபத்ஸர், விஜயோ, ஜிஷ்ணு: ஸவ்யஸாசி, தனஞ்ஜய:'& அவன் மனதிற்குள் சொன்னான்.
இந்தியர்களே, நான் செய்த இந்த தியாகம் பாலைவனத்தில் விழுந்த பனித்துளிபோல் ஆகிவிட்டதே! ஹே, ராம்! எனக்கு மட்டும் முக்தி இல்லையா? கவணில் இருக்கும் கல்துண்டைப் போல எத்தனைக் காலத்திற்கு நான் வீசி வீசி எறியப்பட்டுக் கொண்டே இருப்பது? எவ்வளவு காலத்திற்கு கர்மத்திற்குப் பின்னால்& எலும்புக்குப் பின்னால் பாய்ந்தோடும் நாயைப் போல அலைந்து கொண்டிருப்பது?
கிழவருக்கு முக்தியின் காலம் நீண்ட நெடுங்காலம் மூன்று கோடி. பதினொரு இலட்சத்து நான்காயிரம் கோடி, கோடி மனித வருடங்கள்... நீண்ட ஆனந்தம்; ஓய்வு அதற்குப் பிறகுதான் அவர் வெளியே வருவார். நானோ? நான் எவ்வளவு காலத்திற்கு பெண்களின் பிறப்பு உறுப்புக்குள் விந்து வடிவத்தில் செல்வதும், யோனிகள் வழியாக அழுதவாறு இரத்தத்தில் தேய்ந்து வெளியே வருவதுமாய் இருப்பது! மஹாமாயே!
தன்னைப் பிடித்துக் கொண்டிருந்த கைகளுக்குள் அவன் தன்னையும் அறியாமல் நெளிந்தவாறு 'ஹா! ஹா!' என்று மெதுவாக சொல்லிக் கொண்டே முரண்டு பிடித்தான்.
நான் இனியும் ஆணுக்குள் உண்டாகி, பெண்ணுக்குள் நுழைந்து, பிறந்து, அழுது, தவழ்ந்து, வளர்ந்து, புணர்ந்து, நரக வாழ்க்கை வாழ்ந்து மீண்டும் மீண்டும் சாக வேண்டும். எனக்கு போதும் போதுமென்றாகி விட்டது. என் பாரத மாதாவே! உன்னுடைய மக்களுக்காகத்தான் நான் கிழவரைக் கொன்றேன். ஆனால், அவருக்கு பிரம்மானந்தம்! ஹா! மனிதர்களின் நூறு ஆனந்தம், மனித கந்தர்வர்களின் ஒரு ஆனந்தத்திற்குச் சமம்! மனித கந்தர்வர்களின் நூறு ஆனந்தம் தேவ கந்தர்வர்களின் ஒரு ஆனந்தத்திற்கு சமம்! தேவ கந்தர்வர்களின் நூறு ஆனந்தம் பிதுர்களின் ஒரு ஆனந்தத்திற்குச் சமம்! பிதுர்களின் நூறு ஆனந்தம் பெரிய தேவர்களின் ஒரு ஆனந்தம்! பெரிய தேவர்களின் நூறு ஆனந்தம் கர்ம தேவர்களின் ஒரு ஆனந்தம்! கர்ம தேவர்களின் நூறு ஆனந்தம்! இந்திரனின் ஒரு ஆனந்தம்! இந்திரன்மார்களின் நூறு ஆனந்தம் பிரகஸ்பதியின் ஒரு ஆனந்தம் பிரகஸ்பதியின் நூறு ஆனந்தம் பிரஜாபதியின் ஒரு ஆனந்தம்! பிரஜாபதியின் நூறு ஆனந்தம்! ஒரு பிரம்மானந்தம்! ஓம்! ஓம்! ஓம்! சச்சிதானந்த ஸ்வரூபமான ப்ரம்ம சாட்சாத்காரமே!
தன்னைப் பிடித்தவர்களை கொலையாளி முறைத்துப் பார்த்தான்.
"நீங்கள் யார்? நீங்கள் எல்லாம் யார்? எந்த பாழாய்ப் போனதன் நிழல்கள் நீங்கள்? என்னுடன் வர உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது? ச்சீ... என்னை விட்டு விலகிச் செல்லுங்கள். இது நான் மட்டும் போகும் பயணமே."
திடீரென்று வந்த அழுகையால் அவன் முகம் என்னவோ போல் ஆனது.
யாருடைய பிடியிலோ இருந்த தன் கைகளை உயர்த்தி தன் மேல் விழுந்து கொண்டிருந்த அடிகளை அவன் தடுக்க முயற்சித்தான்.
எதற்காக இந்த உடம்பை நீங்கள் அடிக்கிறீர்கள்? அது அதன் கடமையைச் செய்திருக்கிறது. பரந்து கிடக்கும் பாரதத்திற்காக செய்யப்பட்ட கடமை!
தன்னை வலிந்து இழுத்துக் கொண்டு போகும் மனிதர்களை ஒரு விளையாட்டு பொம்மையைப் போல அவன் பின்பற்றினான்.
பயணம் போவதற்காக தயாராக இருக்கிற என்னை எதற்கு இழுத்துச் செல்கிறார்கள்? தள்ளுகிறார்கள்? இடிக்கிறார்கள்? எந்த அளவிற்கு முட்டாள்தனமாக நீங்கள் நடந்து கொள்கிறீர்கள்? உங்களின் எதிரியைக் கொன்ற பிராமணனை நீங்கள் இப்படி துன்பப்படுத்தலாமா? நீங்களே உங்கள் மேல் எவ்வளவு பெரிய பாவத்தைச் சுமத்திக் கொள்கிறீர்கள் தெரியுமா? இதற்கு எப்படி நீங்கள் பரிகாரம் காண்பீர்கள்? கஷ்டம்!
கொலையாளி:
இந்தியர்களே, உங்களுக்குத் தெரியுமா? இன்று ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து எட்டில் நின்று கொண்டிருக்கும் உலகத்தின் காலக்கணக்கிற்கு மூல காரணமாக இருந்தவரும் பாரதத்தில் ஆன்மீகப் பயிற்சி பெற்றவருமான யூதகுரு தன் தாயின் பிறப்பு உறுப்பில் இருந்து கோமாதாக்கள் சாட்சியாக பிறவியெடுத்தபோது, அவரை வணங்க நட்சத்திரங்கள் தோன்றியதைத் தொடர்ந்து கிழக்குப் பக்கத்திலிருந்து வந்த மூன்று ஞானிகளில் நானும் ஒருவன்.
பிறந்த குழந்தையிடம் குடி கொண்டிருந்த ஆன்மீக சக்தியை முதல் பார்வையிலேயே தெரிந்து கொண்ட நான் பொறாமையால் பிடிக்கப்பட்டவன் ஆனேன். குழந்தையின் சிறுவயது தாயையும் என்னுடன் வந்த சக பிரயாணிகளையும் ஏமாற்றி அவர்கள் கண்களில் படாத மாதிரி ஒரு பிடி புற்களை குழந்தையின் வாய்க்குள் திணித்தேன்.
அந்தப் புற்கள் மூச்சுக் குழலில் பட்டு, அவன் மரணமடைநது விடுவான் என்று எதிர்பார்த்த நான், வெளியேறினேன். நீர் எடுக்கப் போயிருந்த தாய் திரும்பி வந்து தொழுவத்திற்குள் நுழைந்தாள்.
அவள் உரக்க சத்தமிடுவதைக் கேட்டு, மற்றவர்களுடன் சேர்ந்து பரிதாபப்படுவது மாதிரி நடித்தேன். தொடர்ந்து எதுவுமே பேசாமல் மவுனமாக நின்றிருந்தேன்.
குழந்தைக்குப் பக்கத்தில் நின்றிருந்த ஒரு பசு குழந்தையின் வாயில் இருந்த புற்களை நக்கியெடுப்பதை நான் பார்த்தேன்.
திரும்பி வந்த போது காஷ்மீரில் இருந்த ஒரு தெருவில் நடனமாடும் பெண் மீது நான் காதல் கொண்டேன். நாட்கள் செல்லச் செல்ல அவளையே விடாமல் நான் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன். அவள் மீது நான் கொண்ட அளவுக்கும் அதிகமான காதலைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன். அவளின் காதல் பிச்சைக்காகக் கெஞ்சினேன். இளம் வயதுப் பெண்ணான அவள் நடுத்தர வயதுக்காரனான என்னுடைய காமத்தை வெறும் தமாஷாக எண்ணினாள். என்னை மனம் போன படியெல்லாம் அவள் கிண்டல் பண்ணினாள். என்னுடைய காதலைக் காற்றில் பறக்க விடவும் அவள் தயாரானாள்.