Lekha Books

A+ A A-

ஹேராம் - Page 6

hey-ram

நண்பர்களே, எதற்காக என்னிடம் இப்படி கடினமாக நடந்து கொள்கிறீர்கள்? இலட்சக்கணக்கான இந்துக்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்த கிழவனுக்கு நிரந்தர மரணத்தைத் தர உங்களால் முடியுமா? ஆண் சிங்கமான சிவாஜி மகாராஜை நீங்கள் மறந்து விட்டீர்களா? இரத்தத்தை விலையாகக் கொடுத்து வாங்க வேண்டிய இடத்தில் இரத்தத்தை விலை தந்து வாங்கத்தான் வேண்டும். கண்ணீரால் முடியாது. துன்பத்தால் முடியாது. கொள்ளையால் ஆகாது. இருட்டறையில் ஒன்றும் நடக்காது. தொல்லைகளாலும் சாதிக்க முடியாது. இரத்தத்தைக் குடம் குடமாகப் பிடித்து வாங்க வேண்டும். பிராமணனான என்னுடைய கைகளில் பட்ட இந்தக் கிழவனின் ரத்தம் அவர் உங்களுக்குத் தரவேண்டிய விலையே. உங்களின் கொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான சகோதரர்களின் உயிருக்கான விலை அது.

ஆனால், அது போதாது. உடலுக்குக் கிடைத்த தண்டனை போதாது. என் வெடிகுண்டுகள் துளைத்தெடுத்த கிழவனின் உயிர் இன்னும் விலை தரவேண்டி இருக்கிறது. அது மீண்டும் ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து வேறொரு பெண்ணின் பிறப்பு உறுப்பிற்கு முட்டை இடுவதற்காக ஆழத்தில் நீந்திக் கொண்டிருக்கும் கடல் ஆமையைப் போல காலம் காலமாக சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சம், அந்த உயிரை ஒவ்வொரு பிறவியிலும் நான்தான் தண்டிப்பேன். கிழவன் பாம்பாக இருந்தால், நான் கீரியாக இருப்பேன். அவர் மரமாகப் பிறந்தால் நான் கோடாரியாக இருப்பேன். அவர் மலராக இருந்தால், நான் புழு. அவர் மகானாக இருந்தால் நான் மரண ஆயுதம். அவர் புறாவாகப் பிறந்தால் நான் அதைப் பிடிப்பவன். அவர் நாய் என்றால் நான் பேயின் அணு. அவர் நாடாக இருந்தால் நான் பஞ்சமாக வருவேன். அவர் வீடாக இருந்தால் நான் வெண் கரையானாக இருப்பேன். அவர் கர்ப்பம் என்றால் நான் சிதைவு.

அவரை நீங்கள் நாட்டின் தந்தை என்று அழைக்கிறீர்களா? அவர் நாட்டின் கசாப்புக்காரன். அவர் ஏதாவதொரு நாட்டின் தந்தை என்றால், அது விரிந்து கிடக்கும் பாரதத்தில் இருந்து அவர் உயிருடன் பிரித்தெடுத்த அந்த துண்டு நாட்டிற்குத்தான் சரியாக இருக்கும். அவர் உங்களுக்காக தியாகம் செய்திருக்கலாம். உங்களிடம் விழிப்புணர்வு உண்டாக்க முயற்சித்திருக்கலாம். பணத்தைத் தேடி ஓடாமல் இருந்திருக்கலாம். இவை எல்லாமே அவரது மன விளையாட்டின் ஒரு பகுதி என்பதே உண்மை. அவரை விட மகாத்மாக்களான எத்தனையோ தியாக புருஷர்கள் இந்த மண்ணில் பிறந்திருக்கிறார்கள். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வீரசிங்கம் என உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற, கப்பலில் இருந்து கடலில் நீந்தி தப்பித்த என்னுடைய குருநாதர் மட்டும் போதும், இப்படிப்பட்ட ஆயிரம் சிறுவர்களை அழிப்பதற்கு அகிம்சையாம்! அவரின் செப்படி வித்தைகளைவிட எவ்வளவு பழமையானது அகிம்சை! இருந்தாலும் ஒரு கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு நான் அவரை நோக்கி கைகளைக் குவித்தேன். காறித் துப்பியிருக்க வேண்டும். துஷ்டன்!

போலீஸ்காரர்கள் அவனை எழுப்பினார்கள். அவன் பார்வை போலீஸ்காரர்களைதத் தாண்டி தூரத்தை நோக்கிப் போனது. அவன் உதடுகளில் ஒரு வெளிறிப் போன புன்னகை உண்டானது.

நமஸ்தே ஸதா வத்சலே மாத்ருபூமே!

கொலையாளி:

இந்தியர்களே, இன்னொரு பிறவியில் நான் காசியில் ஒரு பெரிய சன்னியாசியாகப் பிறந்தேன். புனிதப் பயணம் வரும் பக்தர்களைக் கொள்ளையடிக்கும் சண்டாளர்களின் ஒரு கூட்டத்தை நானே பாதுகாத்து வளர்த்தேன். கொள்ளையடித்து அவர்கள் தரும் பணமும், பொருட்களும் என்னைச் செல்வந்தனாக்கியது. அதோடு எனக்கு திருப்தி வரவில்லை. சுடுகாட்டு காவலர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு இளம்பெண்களின் செத்துப்போன உடல்களைத் திருட்டுத்தனமாக புணர நினைக்கும் மனிதர்களுக்கு அவற்றைத் தந்து அதன்மூலம் நிறைய பணம் சம்பாதித்தேன். அப்படி வாழ்க்கை போய்க் கொண்டிருந்தபோது, காசியின் கன்னியான ராஜகுமாரி திடீரென்று மரணத்தைத் தழுவினாள். அவளின் செத்துப்போன உடம்புடன் உடலுறவு கொள்வதற்காக பணக்காரர்களும், முக்கிய நபர்கள் பலரும் என்னை அணுகினார்கள். பக்கத்து நாட்டைச் சேர்ந்த மன்னர்கள் பலரும் கூட இந்த விஷயத்திற்காக ரகசிய தூதர்களை அனுப்பி வைத்தார்கள். நான் அவர்களிடமிருந்து கணக்கு வழக்கு பார்க்காமல் பணத்தை வாங்கினேன். தந்திரச் செயல்கள் மூலம் ராஜகுமாரிக்கு உயிரைத்தர முடியும் என்று மகாராஜாவிடம் பொய் சொல்லிவிட்டு ராஜகுமாரியின் செத்துப்போன உடலை என்னுடைய ஆசிரமத்துக்கு கொண்டுவந்து விட்டேன். அவளின் அழகில் மயங்கிப்போன நான் முதலில் அவளைப்புணர ஆசைப்பட்டேன். விளைவு ஒரு வகையான விஷயம் அவள் உடம்பிலிருந்து புறப்பட்டு என் உடம்புக்குள் நுழைய, சில விநாடிகளிலேயே நான் வீங்கிப் போய், அவலட்சணமாகி, இரத்தம் கக்கி இறந்தும் போனேன்.

இன்னொரு பிறவியில் நான் ஸோதோம் நகரத்தின் பெரிய வணிகனாகப் பிறந்தேன். என் கடைக்கு வருகிற சிறு குழந்தைகளைக் கூட நான் உடலுறவு கொள்ள ஆரம்பித்தேன். ஸோதோம்&கொமோ நகரங்களை அவற்றின் பாவச் செயல்களுக்காக பூமியில் இருந்து இல்லாமல் செய்வதற்காக கடவுள் அனுப்பி வைத்த இரண்டு தேவதூதர்கள் அதே நகரத்தைச் சேர்ந்த லோத்தின் வீட்டிற்கு வந்தார்கள். வெளியே இருந்து வந்திருக்கும் இரண்டு அழகான வாலிபர்களைப் பற்றியும் நகர எல்லையில் காவல் காத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் என்னிடம் சொன்னார்கள். நானும் என் நண்பர்களும் லோத்தின் வீட்டை வளைத்தோம். "இரண்டு இளைஞர்களையும் எங்களின் உபயோகத்திற்கு விட்டுத்தரவேண்டும்" என்று உரத்த குரலில் சொன்னோம். லோத் வெளியே வந்து எங்களைப் பார்த்துச் சொன்னார். "என் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளிகளை நீங்க அவமானப்படுத்துகிறது அவ்வளவு நல்லது இல்லை. எனக்கு ரெண்டு கன்னிப் பெண்கள் மகளாக இருக்கிறார்கள். அவுங்களை வேணும்னா உங்ககூட அனுப்பி வைக்கிறேன்."

அவ்வளவு தான்& நான் சத்தம் போட ஆரம்பித்துவிட்டேன். "யாருக்கு வேணும் உங்க மகள்கள்? அந்தத் தடியன்களை வெளியே அனுப்புறியா இல்லியா?" அடுத்த நிமிடம் லோத் உள்ளே போய் வாசல் கதவை மூடிக் கொண்டார். நாங்கள் கதவைத் தட்டி உடைக்க முற்பட்டோம். திடீரென்று எங்களால் எதையுமே பார்க்க முடியவில்லை. கண்கள் ஒரே இருட்டாகிவிட்டன. எங்களுக்குப் பார்க்கும் சக்தி இல்லாமல் போய்விட்டது. அழுது புரண்டவாறு நாங்கள் இருட்டில் தடவிக் கொண்டிருந்தோம். வழி தெரியாமல் அஞ்சி நடுங்கிப் போய் ஒருவரையொருவர் மோதிக் கொண்டு தெருவில் விழுந்து கிடந்தோம். எப்போதோ எழுந்தபோது, சூரிய உதயத்தைப் போல ஒரு வெளிச்சத்தைப் பார்ப்பது போல இருந்தது. நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். வெளிச்சத்திற்குப் பின்னால் கர்ண கொடூரமான ஒரு ஒலி கேட்டது. அந்த ஒலி பெரிதாகப் பெரிதாக ஆகாயத்தில் இருந்து கந்தகமும் நெருப்பும் கொட்ட ஆரம்பித்தன. என் உடல் மெதுவாக எரிய ஆரம்பித்தது. வாய்விட்டு அழுது, கண் பார்வை இல்லாமல், வேதனையால் துடித்து நான் செத்தேன்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel