ஹேராம் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6809
இந்திரன் என் தாய் திதியை, பணிவிடைகள் செய்து சுகமாக உறங்க வைத்த பிறகு உருவமே இல்லாமல் கர்ப்பத்திற்குள் நுழைந்தான்.
அவனிடமிருந்த வஜ்ராயுதத்தின் முதல் வெட்டில் என் வலது கை துண்டானது. தொப்புள் கொடியால் கர்ப்பப் பைக்குள் கஷ்டப்பட்டுக் கிடந்த நான் எப்படித் தப்பிக்க முடியும்? நான் உரத்த குரலில் அலறினேன். இந்திரன் என்னை ஏழு துண்டுகளாக வெட்டினான். ஒவ்வொரு துண்டும் தனித்தனியாக அழுதது. என் தாய் எங்கே எழுந்து விடப் போகிறாளோ என்று பயந்த இந்திரன் 'அழாதே' என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் ஏழு துண்டுகளையும் மேலும் ஏழேழு துண்டுகளாக நறுக்கினான். மொத்தம் நாற்பத்தொன்பது துண்டுகள்! சொல்லப்போனால்& உலகத்திலேயே புராதனமான கர்ப்பச்சிதைவிற்கு இரையாகிப் போனவன் நான். இருந்தாலும் நான் நாற்பத்தொன்பது துண்டுகளாகப் பிறந்தேன். ஆனால் இந்திரனுக்குச் சமமான மகனை இழக்க நேரிட்ட என் தாயின் துக்கத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். தாயின் கர்ப்பப்பையை போர்க்களமாக மாற்றிய என்னுடைய விதியை என்னவென்பது?
இன்னொரு பிறவியில் நான் பிறந்தது துவாரகையில். அங்கு நான் ஒரு மது விற்பனையாளனாகப் பிறந்தேன். மதுவில் வெளிநாட்டு போதை மருந்துகள் பலவற்றையும் கலந்து நான் பெரிய அளவில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். ஸ்ரீகிருஷ்ண பகவானின் ஆணைப்படி பிரபாஸா தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்ட யாதவர் குலத்தைச் சேர்ந்தவர்களை நான் மதுவிற்கு அடிமைகளாக்கினேன். பாவ பரிகாரத்திற்காக பகவான் பிரத்யேகமாக சொல்லி நடந்த தீர்த்த யாத்திரை அது பகவானின் புத்திரர்களும், பேரன்மார்களும், பரமபத்ரன், ப்ரத்யும்னன், சாம்பவன், உக்ரசேனன், குருசேனன், உள்ளிட்ட யாதவ வீரர்களும் 'மைரேகம்' என்ற மதுவை அருந்தி அட்டகாசம் பண்ணிக் கொண்டு நடந்தார்கள். விஷம் கொண்ட உயிரினங்களை வேகவைத்து நான் எடுத்த வீரிய பொருட்களையும், கஞ்சாவையும் நான் மதுவுடன் கலந்திருந்தேன்.
என்னுடைய குதிரை வண்டி மதுவை விற்பனை செய்தவாறு அந்தக் கூட்டத்திற்குப் பின்னால் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. யாதவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மதுவின் போதையில் தள்ளாடினார்கள். அவர்கள் இஷ்டப்படி வாக்குவாதங்களில் ஈடுபட்டார்கள். ஒருவரையொருவர் இடித்தார்கள், தள்ளினார்கள், வாயில் வந்த கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டிக் கொண்டார்கள். ஆயுதங்களைத் தூக்கித் தாக்கினார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர்கள் தனித்தனியாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டை போட ஆரம்பித்தார்கள். என்னுடைய ஆட்கள் மதுப்பாத்திரங்களுடன் உள்ளே நுழைந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களின் தாகத்தைத் தணித்தார்கள். போரின் கடுமை அதிகரித்தது. பாதை முழுவதும் சடலங்களால் நிறைந்தது. எங்கு பார்த்தாலும் இரத்தம் சிந்திக் கிடந்தது. ஆயுதங்கள் முழுமையாக வீணாய்ப் போனவுடன், வாட்களைப் போல கூர்மையும் பலமும் கொண்ட ஏரகைப்புல் ஓலைகளைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்க ஆரம்பித்தார்கள். யாதவர்களில் முக்கால் வாசிப்பேர் செத்து விழுந்தார்கள். பலபத்ரன் பைத்தியம் பிடித்தவனைப் போல போர்க்களத்தில் எஞ்சியிருந்த யாதவர்கள் ஒவ்வொருவரையும் அடித்தே கொன்றான். பிறகு எனக்கு நேராகப் பாய்ந்து வந்தான். நான் இரத்தக்களத்திற்கு மத்தியில் விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன். அப்போது கால் இடறி, கீழே விழுந்தேன். நிலத்தில் ஒடிந்து கூர்மையாக இருந்த ஒரு மரத்துண்டு கழுத்துக்குள் நுழைய, நான் மரணத்தைத் தழுவினேன்.
6
வாக்குமூலம்
போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே கூடியிருந்த மக்களின் உரத்த குரல்கள் கொலையாளி அமர்ந்திருந்த அறைக்குள் தெளிவாகக் கேட்டது. இடையில் போலீஸ்காரர்கள் கதவைத் திறந்தபோது, அவன் வெளியே நின்றிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தான். குளிர்ந்து போய், தளர்ந்து, பசி ஏற்பட்டு, தாகம் உண்டாகி அவன் மரபெஞ்சில் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
வெளியே மக்கள் கூட்டம் உரத்த குரலில் கத்துவது அவன் காதில் விழுந்தது.
அவர்கள் என்னைக் கொல்லப் போகிறார்களா? விலங்குகள் மாட்டப்பட்ட என்னைக் கொல்ல இப்போது எந்த கோழையாலும் முடியுமே!
ஒரு இளம் வயது போலீஸ்காரன் தேநீருடன் வந்தான். அதை நன்றிப் பெருக்குடன் கையில் வாங்கினான் அவன். போலீஸ்காரனின் இரக்கம் கலந்த குணத்தைப் பார்த்து அவனுக்கு இரக்கம் உண்டானது. மனம் சற்று இலேசான மாதிரி உணர்ந்தான்.
போலீஸ்காரனைப் பொறுத்தவரை அவன் ஒரு குற்றவாளி அவ்வளவுதான். என்னை வெறுக்க வேண்டிய காரணம் அவனுக்கு இல்லை.
கொலையாளி தேநீர் அருந்தி முடிக்கும் வரையில் அங்கேயே நின்றிருந்த போலீஸ்காரன் கப்பை வாங்கிக் கொண்டு போனான். கொலையாளி சுவர் மேல் இலேசாகச் சாய்ந்தவாறு அமர்ந்து, சற்று கண்களை மூடினான்.
திடீரென்று அவன் திடுக்கிட்டு கண் விழித்தான். தான் ஒரு நிமிடம் உறங்கினோமோ அல்லது நீண்ட நேரம் உறங்கி கொண்டிருந்தோமோ என்பது பற்றி அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவன் நேரத்தைப் பார்த்தான். ஆனால் கடிகாரம் காணாமல் போயிருந்தது-
நான் இனிமேல் நேரத்தைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது என்கிறீர்களா? முட்டாள்கள்! உங்களின் நேரத்தைப் பார்த்து நான் செயல்படக்கூடியவன் அல்ல. புரிந்து கொள்ளுங்கள்! நான் யுகங்களைப் பார்த்து, அதன்படி நடப்பவன், உங்களின் கடிகாரங்கள் காட்டும் சாதாரண நேரத்தை அடியொற்றி அல்ல, காலப் பெருவெள்ளத்தில் தான் என்னுடைய உயிரின் சமய ரேகைகள். பிச்சைக்காரர்கள்! நாய்கள்! இனத்துரோகிகள்!
குளிர் ஒரு பெரிய இயந்திரத்தைப் போல அவனைப்பிடித்து ஆட்டிப் படைத்தது.
கதவு திறக்கப்பட்டது. கூட்டமாக போலீஸ்காரர்கள் உள்ளே நுழைந்தார்கள். கொலையாளி அங்கிருப்பதைப் பற்றி அக்கறையே இல்லாதது மாதிரி அவன் வாக்குமூலத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். அவன் அவர்களையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.
நீங்கள் என்னுடைய வாக்குமூலத்தை இப்போது குறிக்கப் போகிறீர்கள் அல்லவா? கலிகாலம்! அப்படியென்றால் நீங்கள் அர்ஜுனனின், அபிமன்யுவின், ஸ்ரீகிருஷ்ண பகவானின், ஸ்ரீராமச்சந்திரனின் வாக்குமூலத்தையும் எடுப்பீர்களா?
நீங்கள் என் பெயரைக் கேட்கிறீர்களா? நண்பர்களே, பெயர்களை வெறுமனே உச்சரிக்கக் கூடிய நேரமில்லை இது. எதற்காக நீங்கள் என் பெயரைக் கேட்கிறீர்கள்? என் கடமை அதன் உச்ச எல்லையில் நிற்கின்ற நேரத்தில் என்னுடைய பெயர் உங்களுக்குத் தெரிய வேண்டுமா என்ன?
கொலை செய்யப்பட்ட மனிதரை எனக்குத் தெரியுமா என்று கேட்கிறீர்களா? சரிதான்... இல்லாவிட்டால் நான் ஏன் அந்த மனிதரைக் கொல்ல வேண்டும்? எனக்கே அறிமுகமில்லாத ஒரு ஆளைக் கொல்வதற்கு நான் என்ன பைத்தியக்காரனா? அவரை எனக்கு நன்றாகவே தெரியும். நீண்ட காலமாகவே தெரியும். அவரின் ஒவ்வொரு வாக்கையும் பார்வையையும் கூட நான் நன்கு அறிவேன்.