கிராமத்துக் காதல் - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7177
ரவியின் சிந்தனை தொடர்ந்தது: "அவ இப்போ எப்படி இருப்பா, அவளுக்குக் கல்யாணம் நடந்திருக்கும். இல்லாட்டி... இன்னும் கல்யாணம் ஆகாம கன்னியாவே இருப்பாளோ? அப்படி இருக்காது. ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் அப்படி இருக்குறதுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஒரு வேளை நவநாகரீகமான படித்த வேற யாராவது அழகை ரசிக்கக்கூடியவன் அவளைத் தட்டிக்கிட்டு போயிருப்பானோ என்னைப் பார்த்தா அவளால அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா? அவள் என்னைப் பா£க்குறப்போ எப்படி நடந்துக்குவா? பத்மினிகிட்ட அவள் எப்படி நடப்பா? நான் அவளுக்கு எவ்வளவு பெரிய கெடுதல் பண்ணியிருக்கேன்! அவளோட இருந்த நாட்கள் உண்மையாகவே எவ்வளவு சந்தோஷமானது! அதுக்குப் பதிலா நான் அவளுக்கு என்ன செஞ்சேன்? அதுக்குப் பிறகு சொல்லப்போனா நான் அவளைப் பற்றி விசாரிச்சுப் பார்க்கக் கூட இல்ல. என் வாழ்க்கை முழுவதுமே மகிழ்ச்சி நிறைந்ததா இருக்கும்னு இளமை போதையில நான் தப்பா நினைச்சிட்டேன். முட்டாள்! பலவிதப்பட்ட மலர்கள் இருந்த தோட்டத்தை நோக்கி ஓடிய போக்கிரி நான்! அந்த எல்லா மலர்களையும் சொந்தமாக்கணும்ன்ற ஆசையில், முயற்சியில் எத்தனையோ மலர்களை நான் கால்ல மிதிச்சு அழிச்சுட்டேன். சுகத்தை மட்டும் தேடித்திரியிற ஒரு மனிதனா இருந்தேன் அன்று நான். இன்னைக்கோ நான் ஒரு தத்துவவாதியா மாறியிருக்கேன். ஆனால், உலகப் பாடங்கள் படிச்சு முடிக்கிறப்போ நான் பாதி கிழவனாயிட்டேன். செய்த காரியத்தை மறுபடி வேற மாதிரி செய்ய இனிமேல் முடியாது. பரிதாபப்பட்டும் பிரயோஜனம் இல்ல. அவளுக்குத் திருமணமாயிடுச்சு. கணவனோடும், குழந்தைகளோடும் சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்கான்ற செய்தி முதல்ல காதுல விழட்டும்...'
"அதோ அங்கே பாருங்க... அது என்ன? இல்ல இல்ல... ஒரு பறவைன்னு நினைக்கிறேன். என்ன சுட்டித்தனம்ன்றீங்க! ஜாடாவு மாதிரியே இருந்திச்சு. பெருசா சத்தம் போட்டுக்கிட்டு அந்தக் கரும்பனை மேல அது வந்து விழுந்துச்சு..."- இப்படி தன் கணவனை அழைத்துச் சொன்ன பத்மினி பனை மரத்தின் உச்சியைப் பார்த்தாள்.
ரவியும் அங்கு பார்த்துவிட்டு சொன்னான்: "ஓ... அதுவா? அது ஒரு வேழாம்பல் பறவை. நீர் குடிப்பதற்காக மழை விழணும்னு காத்துக்கிடக்கிற ஒரு பறவையைப் பற்றி பத்மினி, நீ கேட்டது இல்லையா? அந்தப் பறவைதான் அது..."
"அதோ கழுத்துல ஓட்டை இருக்குமா?"
"அதோட கழுத்துல ஒரு ஓட்டையும் தலையில ஒரு கொண்டையும் இருக்கும்."
அதைக் கேட்டு பத்மினி சிரித்தாள். வேழம்பலின் முக் தலையில் வாளி கவிழ்த்தது மாதிரி இருக்கும் புடைப்பைப் பற்றி முன்பு மாளு சொன்ன கதை ரவியின் ஞாபகத்தில் வந்தது. அந்தக் கதையை அவன் பத்மினியிடம் சொன்ன போது, அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.
முன்னால் நடந்து கொண்டிருந்த ரவி கதையைக் கூறி முடிப்பதற்கு முன்பு எதுவும் முன்கூட்டி சொல்லாமல் பக்கத்திலிருந்த தாழ்வான இடத்தில் உட்கார்ந்திருந்தான்.
அதைப் பார்த்தவாறு அருகிலிருந்த ஒரு புதருக்குப் பின்னால் மறைந்திருந்த குறும்புத்தனம் செய்யும் சிறுவர்கள் கூப்பாடு போட்டார்கள். அந்தக் கூட்டத்தின் தலைவனாக ஒரு சிறுவன் இருந்தான். அவன் முன்னால் நடந்தான். அவன் மிடுக்கான குரலில் சொன்னான்: "அய்யா, அந்த இடத்தை அசுத்தம் செய்ய நாங்க விடமாட்டோம்."
ரவி சிரித்துக் கொண்டே பத்மினிக்கு நேராகக் கையை நீட்டினான். பத்மினிக்கு வந்த சிரிப்பில், அவளுடைய பாதி பலம் போய்விட்டிருந்தது. எப்படியோ அவள் தன் கணவனை அந்தத் தாழ்வான இடத்திலிருந்து கையைப் பிடித்துத் தூக்கினாள். அதற்குப் பிறகு ரவியும் அவளுடைய சிரிப்பில் பங்கு கொண்டான்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இதே மாதிரி மாளுவுடன் நிலவு வெளிச்சத்தில் தான் நடக்கும் போது தான் அந்தத் தாழ்வான இடத்தில் விழுந்த ஒரு சம்பவத்தை ரவி நினைத்துப் பார்த்தான். இதைப்போல எத்தனையோ இனிமையான கடந்த கால நினைவுகளையும் அந்த இடம் அவனிடம் எழுப்பிவிட்டது. அந்தத் தேக்குக்காடு, அந்தக் குளிக்கும் இடம், அதற்கருகில் இடிந்து கிடக்கும் பகவதி கோவில். நெடுங்குத்தாக ஒரு ஈட்டியைப் போல உயரமாக இருக்கும் அந்தக் கணை மரம்- இவை எலலாமே இப்போதும் அங்கு இருக்கின்றன. பன்னிரண்டு வருடங்கள் கடந்தும், இன்றும் இருவழிஞ்ஞி ஆறு அப்படியேதான் ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் கரையில் குறும்புத்தனம் செய்யும் சிறுவர்கள் அப்போது செய்ததைப் போலவே இப்போதும் மணலில் பள்ளங்கள் தோண்டி அதில் ஆட்கள் விழுவதைப் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறார்கள். மனிதர்களைத் தவிர அந்தக் கிராமத்தின் இயற்கைக்கு எந்தவொரு மாற்றமும் உண்டாகவில்லை.
பச்சை நெல் செடிகள் ஆடிக் கொண்டிருக்கும் சிறிய வயலின் மேற்குப் பகுதியில் இருக்கும் மலை உச்சியில் மறையப் போகும் சூரியன் பொன் நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தன.
ரவி தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து நெருப்புப் பற்ற வைத்து மெதுவாக புகை விடத் தொடங்கினான்.
'அவளைப் பார்க்கணும்னு என் கண்கள் துடிக்குது. எங்கே விசாரிப்பது?'
சிறிது தூரத்தில் ஆற்றோரம் இருந்த சுவரில் தலையை நீட்டிக் கொண்டு நின்றிருந்த அழகான ஒரு மேத்தோன்றிப் பூவைப் பறிப்பதற்காக பத்மினி அந்தப் பக்கம் போனாள்.
ரவி அவள் வருவதற்காகக் காத்து, சந்தோஷம் தந்து கொண்டிருந்த கடந்த கால நினைவுகளில் மூழ்கிப் போய், அங்கேயே நின்றிருந்தான்.
13
இளமையின் புதிய போதையில் தன்னை மறைத்திருக்கும் ஒரு இளைஞன் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் ஒரு இளம் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தும் இனிய வார்த்தைகளைக் கூறுகிறான். இல்லாவிட்டால் விளையாட்டாக அவளைக் கிள்ளவோ, அதைக் கடந்து முத்தமிடவோ, கட்டிப்பிடிக்கவோ காதலின் கடைசிப் படியான உடல்ரீதியாக ஒன்று சேரவோ செய்கிறான். அந்த இளைஞன் இருபத்தைந்தாவது அனுபவமாக அது இருக்கும். அந்த அப்பிராணி இளம் பெண்ணோ காதலென்ற மின்சாரக் கம்பியைச் சந்திப்பது முதல் தடவையாக இருக்கும். அந்த இளைஞன் அந்த இளம் தேவதையை காலப்போக்கில் மறந்து விடுகிறான். காலச் சக்கரம் மீண்டும் சுற்றுகிறது. வாழ்க்கையின் பல நடப்புகளில் அவன் மூழ்கிவிடுகிறான். மொத்தத்தில் அவன் முழுமையாக மாறிவிடுகிறான்.
ஒரு ஆகாயத்தில், ஒரு ரெயில்வே ஸ்டேஷனில், ஒரு பொது இடத்தில், ஒரு தெருவில் இல்லாவிட்டால் ஒரு வெளியூரிலிருக்கும் ஹோட்டலில், ஒரு பெண் அவனை மறைந்து நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் இப்போது கன்னியோ, உத்தியோகத்தில் இருப்பவளோ, நோயாளியோ, இல்லாவிட்டால் பிச்சைக்காரியோ- இவற்றில் ஏதாவதொன்றாக இருக்கலாம். அவளுக்குள் அந்தக் கடந்து போன நாட்களின் நினைவுகள் ஓடிக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரியாது.