கிராமத்துக் காதல் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7177
11
சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்ட சம்பவங்கள் முடிந்து பதினோரு வருடங்கள் மிகவும் வேகமாகக் கடந்து போயின. முக்கத்தின் நெல் வயல்கள் இருபத்து இரண்டு அறுவடைகளை அதற்குப் பிறகு சந்தித்தன. இருவழிஞ்ஞி ஆற்றில் அதற்குப் பிறகும் எத்தனையோ முறை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவிட்டது.
நாகரீகமும் மாறுதல்களும் நகரத்தைக் கூட பார்த்தால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு முற்றிலும் மாற்றிவிட்டிருந்தன. எத்தனையோ பழைய பணக்காரர்களும் நிறுவனங்களும் காணாமல் தரை மட்டமாகியிருந்தனர். புதிய பணக்காரர்களும் நிறுவனங்களும் கட்டிடங்களும் உருவான சம்பவங்களும் நடந்தன.
'ராஜேந்திர விலாஸம்'- இன்றும் ஒரு அரண்மனையைப் போல கோழிக்கோடு நகரத்தின் மையப் பகுதியில் உயர்ந்து கம்பீரமாக நின்றிருப்பதைப் பார்க்கலாம். முன்பு லட்சாதிபதியாக இருந்த அதன் நாயகன் இப்போது ஒரு கோடீஸ்வரன்.
ராஜேந்திர விலாஸத்தின் இரண்டாவது மாடியிலிருக்கும் தன்னுடைய அறையில் ரவீந்திரன் என்னவோ தீவிரமாகச் சிந்தித்தவாறு உட்கார்ந்திருந்தான். அவனுடைய நெற்றிக்கு மேலே பிறைச் சந்திர வடிவில் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. இடது பக்கக் காலுக்கு மேலே முழுவதாகவும் தலையின் பின்பகுதியில் இங்குமங்குமாகவும் தலைமுடி நரைத்திருந்தது. கண்களுக்குக் கீழே சிந்தனைகள் ஒன்றுகூடி உண்டாக்கியதைப் போல கறுத்த அடையாளங்கள் தெரிகின்றன. ஆனால், முகத்திலிருந்த ஒளியும் கண்களிலிருந்த பிரகாசமும் இப்போதும் மறையாமல் அப்படியே இருக்கின்றன. அந்த முதுமையின் ஆரம்ப அடையாளங்களில் கூட ஒரு கவர்ச்சி இருக்கவே செய்கிறது.
முகத்தைப் பளபளப்பாக இருக்கும் வண்ணம் சவரம் செய்து, தலைமுடியை சீராக வாரிவிட்டு, சில்க்கால் ஆன ஒரு பெங்காலி சட்டை அணிந்து, ஒரு நீளமான சுருட்டைப் புகைத்தவாறு தனக்கு முன்னாலிருந்த அகலமான ஜன்னல் வழியாக வெளியிலிருக்கும் தெரு வீதியைப் பார்த்தவாறு அவன் உட்கார்ந்திருந்தான். ஆனால், சிந்தனைகளின் நீராவியை வெளியேற்றிக் கொண்டிருந்த அவனுடைய கண்கள் எதையும் குறிப்பாகப் பார்க்கவில்லை. அவை அவனுடைய வாழ்க்கையின் கடந்து போன நாட்களைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் கண்ணாடிகளாக இருந்தன.
அவன் இப்போது எல்லாராலும் போற்றப்படும் ஒரு குபேரன். இளம் வயதிலிருந்தே கவலை என்றால் என்னவென்றே அறிந்து கொள்ளும் சூழ்நிலை அவனுக்கு வரவில்லை. சுகங்களை அவன் தேடிச் சென்றதில்லை. அவை அவனைத் தேடி வந்தன. ஆனால், ஒரே ஒரு சுகம் மட்டும் அவனுக்குக் கிடைக்கவேயில்லை. அதாவது ஒரே ஒரு கவலை மட்டும் அவனை விடாமல், இந்த முதுமையின் ஆரம்ப கட்டத்தில் கூட அவனை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. குழந்தை இல்லை என்ற கவலையே அது! ஒரு புதிய முகத்தைக் கண்டு இறப்பதற்கான அதிர்ஷ்டம் தனக்கு வாய்க்காதா என்று அவன் ஏங்கினான்.
குழந்தை இல்லையே என்ற எண்ணத்தில் தன்னுடைய இனிமையான இல்லற வாழ்க்கையைக் கூட அவன் பாழ்ப்படுத்திக் கொண்டான். தன்னுடைய முதல் மனைவியை, திருமணம் முடித்து எட்டு வருடங்களுக்குப் பிறகு வேண்டாம் என்று ஒதுக்கியதை இப்போது அவன் நினைத்துப் பார்த்தான். சுனந்தா.... என்ன அழகும், நல்ல குணத்தையும் கொண்ட பெண் அவள் என்பதை அவன் மனதில் இப்போது எண்ணிப் பார்த்தான். தங்களின் இல்லற வாழ்க்கையின் காதல் நிறைந்த ஒவ்வொரு நாட்களையும் அவன் நினைத்துப் பார்த்தான். இப்போது பத்மினியைத் திருமணம் செய்து மூன்று வருடங்களாகிவிட்டன. அவளும் யாரும் ஏறிட்டு பார்க்கும் அழகையும் எல்லாரையும் கவரக்கூடிய குணத்தையும், அறிவையும் கொண்ட ஒரு இளம்பெண்தான். ஆனால், அவளுக்கும் தன்னுடைய ஆசையை நிறைவேற்றித் தர வாய்ப்பில்லை என்றே அவனுக்குப் பட்டது. சொல்லப் போனால் அவர்கள் மீது தான் ஏன் குற்றம் சுமத்த வேண்டும். அதற்கான காரணம் தானே கூட இருக்கலாமே என்பதையும்அவன் நினைக்காமல் இல்லை. ஒரு தந்தை ஆகக்கூடிய அதிர்ஷ்டம் தன்னுடைய ஜாதகத்திலேயே இல்லை என்றால், எந்தப் பாவமும் செய்யாத அந்தப் பெண்களை தான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும் என்பதையும் அவன் நினைத்தான்.
வெளியே தெருவில் ஒரு ஆரவாரம் கேட்டது. அவன் என்ன சத்தம் வருகிறது என்று பார்த்தான். தெருவின் ஒரு மூலையில் வளர்ந்து நின்றிருக்கும் ஒரு புளிய மரத்தடியில் அமர்ந்து கூடடமாகப் பிச்சைக்காரர்கள் இரவு உணவைச் சமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஐந்து வயதுள்ள ஒரு சிறுவனின் கையிலிருந்து ஒரு துண்டு கருவாட்டை பத்து வயதுள்ள அவனுடைய அண்ணன் பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டான் என்பதற்காக தம்பி உண்டாக்கிய சத்தம் தான் அது. அடுத்தநிமிடம் கஷ்டப்பட்டு இடுப்பை மட்டும் மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு துண்டுத் துணியைச் சுற்றியிருந்த முழு கர்ப்பிணியான ஒரு அழுக்கடைந்த பிச்சைக்காரி ஒரு விறகுக் கொள்ளியை எடுத்து கருவாட்டைப் பறித்துக் கொண்டோடிய அந்தப் பெரிய பையனின் கையைப் பிடித்து 'டேய், நீ எதுக்கு உயிரோட இருக்கே? செத்துத் தொலைஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்!' என்று சத்தம் போட்டவாறு அவனுடைய முன் தலையில் ஒரு அடி கொடுத்தாள். அவ்வளவுதான். அந்தப் பையனின் தலையிலிருந்து இரத்தம் ஆறென வழிய ஆரம்பித்தது. பாதி கடித்திருந்த கருவாட்டைக் கீழே துப்பிய அந்த ஆடை எதுவும் அணிந்திராத பையன் உயிரே போவது மாதிரி இருந்த வேதனையைத் தாங்க முடியாமல் துடித்து அழுது கொண்டிருந்தான்.
அதைப் பார்த்து ரவீந்திரனின் கண்களில் நீர் நிறைந்து விட்டது. 'கஷ்டம்...'- அவன் தன் மனதிற்குள் நினைத்தான்: 'யாருக்கும் தேவைப்படாத குப்பைக்குழியில் பழங்கள் பழுத்துக் கிடக்குது. தங்கம் இருக்கிற சுரங்கங்கள்ல பழங்களைக் கண்ணால கூட பார்க்க முடியல.'
அவனுடைய தோள் மீது ஒரு கை பட்டது. அவன் முகத்தைத் திருப்பிப் பார்த்தான். பத்மினி புன்னகைத்தவாறு அவனுக்குப் பின்னால் நின்றிருந்தாள்.
ரவீந்திரன் தன்னுடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை மிகவும் கஷ்டப்பட்டு மறைக்க முயன்றான். எனினும், தன் கணவன் ஏதோ ஆழமான சிந்தனையில் மூழ்கியிருக்கிறான் என்பதை பத்மினி புரிந்து கொள்ளாமலில்லை.
"என்ன தீவிரமா சிந்திச்சுக்கிட்டு இருக்கீங்க?"- பத்மினி கள்ளங்கபடமற்ற புன்சிரிப்புடன் கேட்டாள்
ரவீந்திரன் பரிதாபமாக பத்மினியின் முகத்தைப் பார்த்தான். அந்தப் பார்வையில் அவனுடைய உள் மனதில் இருந்த வேதனை வெளிப்பட்டது. 'பத்மினி, உன்னோட மார்புல அழுது சாய்ந்து இருக்குற ஒரு குழந்தையைப் பார்க்குறதுக்கான அதிர்ஷ்டம் எனக்கு வாய்ச்சிருந்தா....'- அவன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.