கிராமத்துக் காதல் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7176
"என்ன மதராஸி?" என்று அவன் அழைத்தான்.
"நல்லா இருக்கேன்"- இக்கோரன் பதில் சொன்னான்.
தொடர்ந்து அந்த முஸ்லிமை பாதம் முதல் தலை வரை தன் கண்களால் பார்த்து இக்கோரன் பாட ஆரம்பித்தான்.
'மாப்பிள்ளை மார்களுக்கு நான்கு குற்றம்
சலவை உடுப்பார்கள் தலையைக் கட்டுவார்கள்
தாடியிருக்க, முடியை எடுப்பார்கள்
தாழ்ந்த குலத்தின் கையைப் பிடிப்பார்கள்'
அதைக் கேட்டு உண்ணிச் சேக்கு மாப்பிள்ளை விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு விஷயத்திற்குள் நுழைந்த அவன் கேட்டான்:
"இக்கோரா, நாளைக்கு எங்கேயாவது மாடுகளைப் பூட்டுறதா இருக்கா?"
"இல்ல..."
"அப்படின்னா மாடுகளை அழைச்சிட்டு நாளைக்கு வந்திடு. நம்ம வயலை உழணும்..."
"சரி...."
இக்கோரன் அதற்குப் பிறகும் இலக்கு இல்லாமல் நடந்து கொண்டிருந்தான். பாட்டுப் பாடியவாறு வயலின் வரப்பு வழியாக நடந்து போன போது அருகிலிருந்த ஒரு குடிசைக்குள்ளிருந்து ஒரு குழந்தை அழும் குரல் கேட்கவே, அங்கு அவன் சென்றான்.
அது வீடு கட்டும் பாச்சுவின் வீடு. பாச்சு அப்போது அங்கு இல்லை. பாச்சுவின் மனைவி தொழுவத்தில் பசுவைக் கறந்து கொண்டிருந்தாள். குழந்தையைப் பார்ப்பதற்கு அங்கு யாருமில்லை. அழுது அழுது குழந்தையின் தொண்டையே வற்றிப் போயிருந்தது.
இக்கோரன் நேராக வீட்டிற்குள் சென்றான். ஒரு பழைய பனையால் ஆன ஓலைப் பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தையை எடுத்து தாலாட்டுப் பாட்டுப் பாடியவாறு அவன் வாசலில் நடந்து கொண்டிருந்தான்.
'அழாதே மகளே, அழைக்காதே மகளே
உன்னைக் கட்டும் கல்யாணத்துக்கு
பன்னிரண்டு யானைகள் அலங்கரித்து வரும்
பொன் உள்ள பெட்டியைத் தூக்கிவரும்
பின்னால் பித்தளைச் சாவி ஓடிவரும்...'
இக்கோரனின் பாட்டில் அடங்கியிருந்த எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பாலோ என்னவோ குழந்தையின் அழுகைச் சத்தம் நின்றது. பாச்சுவின் மனைவி தொழுவத்திலிருந்தாவறு சொன்னாள்:
"இக்கோரா, இதோ வந்துட்டேன்."
அவள் பால் கறந்து, உள்ளே கொண்டு போய் ஒரு பாத்திரத்தில் ஊற்றிவிட்டு வந்து குழந்தையை இக்கோரனிடமிருந்து வாங்கினாள்.
இக்கோரனுக்கு ஒரு நெய்யப்பம் கிடைத்தது-.
பிறகு அவன் ஆற்றின் கரையை நோக்கித் திரும்பினான். அங்கு அவன் போன போது மாளு குளிப்பதற்குத் தயாராக நின்றிருந்தாள். இக்கோரன், புன்சிரிப்புத் தவழ, அர்த்தம் நிறைந்த பார்வையால் அவளைக் கீழிலிருந்து தலை வரை அளந்து கொண்டு பார்த்தான். பிறகு அவன் தலையை ஆட்டியவாறு ஒரு பாட்டைப் பாடினான்:
'கந்தர்வனைக் கண்டு காதலிச்சா ஒரு பொண்ணு
சாயங்காலம் முக்கம் ஆற்றைக் கடந்தா...
எனக்கு இது எதுவும் தெரியாது ராமநாராயணா...'
மாளுவின் உள்ளத்தில் நெருப்பு பற்றி எரிந்தது. தன்னுடைய ரகசியம் முழுவதையும் இந்தக் கள்ளு குடிக்கும் மனிதன் நன்கு தெரிந்திருக்கிறானோ என்று அவள் நினைத்தாள்.
8
பஞ்சமி நிலவு அதற்குப் பிறகும் இரண்டு முறை முக்கம் ஆற்றில் முகத்தைக் காட்டியது. ரவி தன்னுடைய அஞ்ஞாத வாதம் முடிந்து நகரத்திற்குத் திரும்பிச் செல்லும் ஆயத்தத்தில் இருந்தான்.
இந்தக் கிராமத்தில் தங்கியிருந்த அந்த நாட்களில் ரவிக்கு ஆச்சரியப்படத்தக்க மன அமைதியும் உடல் நலமும் கிடைத்தன. அவற்றுடன் சிறிதும் எதிர்பார்த்திராத 'அந்தக் காதலும்'. எனினும், நகரத்திற்குப் புறப்படும் நேரம் வந்துவிட்டது என்றவுடன் ரவியின் குணம் மீண்டும் மாற ஆரம்பித்தது. நகரத்தின் ஆனந்தத்தையும், ஆர்ப்பாட்டமான விருந்துகளையும், கேளிக்கைகளையும், நண்பர்களையும், சினேகிதிகளையும் பற்றி மனதில் நினைத்து பார்த்தபோது, உடனே அவற்றில் போய் மூழ்க வேண்டும் என்றொரு ஆவேசம் அவனுக்குள் உண்டானது. இரண்டு மாதங்கள் தான் நகரத்தை மறந்து இருப்பதைப் போல, இங்கிருந்து கிளம்பிவிட்டால் இந்தக் கிராமத்தையும் தான் மறந்துவிட வேண்டும் என்று அவன் மனதில் முடிவெடுத்தான். சாமான்களைக் கட்டி ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு மறுநாள் அதிகாலையில் அவற்றை பாதையில் கொண்டு வந்து தரும்படி ஒரு கூலிக்காரனையும் ஏற்பாடு பண்ணினான்.
அன்று இரவு மாளு அங்கு வந்த போது, சாமான்கள் கட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்: "இதோட அர்த்தம் என்ன?"
ரவியின் பதில் மிடுக்கான குரலில் வந்தது: "மாளு, நான் அவசரமா நகரத்துக்குப் போக வேண்டியதிருக்கு."
ஒரு இடியும், மின்னலும் அவளுடைய இதயத்தைப் பிளந்து கொண்டு பாய்ந்து சென்றன. அவளுடைய கண்களில் இருள் வந்து ஆக்கிரமித்தது.
அவள் அதைப் பற்றி சிறிதும் சிந்தித்துப் பார்த்ததில்லை. ரவி இங்கிருந்து கிளம்புவான் என்று அவள் நினைத்ததேயில்லை. இப்போது இதோ சிறிதும் எதிர்பார்க்காமல் ஒரு விடை பெறுதல்!
அவள் ரவிக்கு அருகில் வந்தாள். அவனைப் பார்த்து அவள் கேட்டாள்: "என்னை விட்டுட்டு போறீங்களா?"
"மாளு, வேற வழியே இல்ல. ஆனா, உன்னை நான் நிச்சயமா மறக்க மாட்டேன். நீயும் என்னை மறக்கமாட்டேன்னு நம்புறேன்."
அவன் பெட்டியைத் திறந்தான். பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கத் தயங்கவில்லை -ரூபாய் என்ற நிலையில் அல்ல. காதலனின் ஒரு உதவி என்றே அதை அவள் எண்ணினாள்.
அவன் அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவளுடைய கன்னத்தில் கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது. அவள் அவனுடைய வலது கையைப் பிடித்து, அந்த விரலில் இருந்த மோதிரத்தைப் பிடித்து என்னவோ சொல்ல நினைத்தாள். ஆனால், வார்த்தைகள் வெளியே வரவில்லை.
"என்ன, இந்த மோதிரம் வேணுமா? எடுத்துக்கோ.."- ரவி மோதிரத்தைக் கழற்றி அவளிடம் நீட்டினான்.
அவளுக்கு மோதிரம் தேவையில்லை. வேறு என்னவோ கூற வேண்டும் என்றுதான் அவள் நினைத்தாள். ஆனால், காதலன் நீட்டிய அந்தக் காணிக்கையை அவள் வேண்டாம் என்று மறுக்க வில்லை. ஒரு பொம்மையைப் போல அவள் அதை கையை நீட்டி வாங்கினாள்.
ரவி அவளைக் கடைசி தடவையாக முத்தமிட்டான். அவன் சொன்னான்: "நான் புறப்படுறேன். கோழிக்கோட்டுக்குப் போயி ஒரு வாரம் ஆகுறதுக்கு முன்னாடி, உன்னைப் பார்த்து விசாரிக்குறதுக்காக நான் ஒரு ஆளை அனுப்பி வைக்கிறேன்.
அவள் அதற்கு ஒரு வார்த்தைகூட பதிலாகக் கூறவில்லை. அவள் அவனுடைய அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அமைதியாக அவனிடமிருந்து விடை பெற்றாள்.
அவள் ஒரு உயிரற்ற பிணத்தைப் போல ஆற்றைக் கடக்கும் போது, தூரத்தில் இக்கோரனின் ஒரு பாட்டு தெளிவாகக் காற்றில் மிதந்து வந்தது:
'வானத்தில் நிலவு ஒளிர்வதைக் கண்டு
ஆசைப்பட வேண்டாம் நீ பெண்ணே....'