கிராமத்துக் காதல்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7176
கோழிக்கோட்டில் உள்ள 'ஸ்டார் க்ளப்'பில் இரவு 10 மணிக்கு ஒரு பெரிய விருந்து உபச்சாரம் நடந்து கொண்டிருந்தது. வெளிநாட்டு மது புட்டிகளும் மீன்களும் மாமிசமும் நிரப்பப்பட்ட பெரிய பாத்திரங்களும் கத்திகளும் முட்களும் கரண்டிகளும் வைக்கப்பட்டிருந்த பெரிய மேஜையைச் சுற்றி நின்றவாறு இரண்டு டஜன் இளைஞர்கள் குடித்துப் பாடியவாறு ஆடிக் கொண்டிருந்தார்கள்.
இந்த அளவிற்கு மிகச் சிறப்பான ஒரு விருந்தைத் தந்த திரு.ரவீந்திரனைப் புகழ்ந்து ஒவ்வொருவரும் வாய்க்கு வந்த வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தி சொற்பொழிவு ஆற்றி முடித்த பிறகு, உற்சாகத்தின் எல்லையைத் தொட்ட மகிழ்ச்சியான ஆர்ப்பாட்டங்களுக்கும் கைத்தட்டல்களுக்கும் மத்தியில் இரண்டு வார்த்தைகள் பேசுவதற்காக மிஸ்டர் ரவீந்திரன் எழுந்து நின்றான்.
"அன்பான நண்பர்களே..."- மிடுக்கான தோற்றத்தையும் எப்போதும் புன்னகை தவழும் முகத்தையும் கொண்டிருக்கும் அந்த இளைஞன் மதுவின் போதை இல்லாத குரலில் பேசினான்: "இந்தச் சிறு விருந்து உபச்சாரம் உங்கள் எல்லாருக்கும் பெரிய அளவில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்திருக்குன்றதை நினைச்சு நான் மிகவும் சந்தோஷப்படுறேன். ஆனால், நாளைக்குக் காலையில நான் உங்க எல்லாருக்கும் ஆச்சரியம் தரப்போற ஒரு புதிய செய்தியைச் சொல்லப் போறேன். அது என்னன்னு உங்களால கண்டுபிடிக்க முடியலைன்னா, நாளைக்குக் காலை வரை பொறுமையா காத்திருங்க."
அந்த மதுவின் போதையில் சிக்கியிருந்த மூளைகள் தீவிர சிந்தனையில் மூழ்கின. ஒவ்வொருவரும் தங்களுக்குள் மெதுவான குரலில் கேட்டுக் கொண்டார்கள்: "அந்தப் புதிய செய்தி என்னவாயிருக்கும்? க்ளப்புக்கு ஒரு வேளை ஏதாவது பெருசா பணம் தருவதா இருக்குமா? இல்லாட்டி... ரவியோட திருமணச் செய்தியாக இருக்குமோ?" இப்படி ஒவ்வொருவரும் தங்கள் மனதிற்குத் தோன்றியதையெல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டார்கள்.
மறுநாள் காலையில் 'ஸ்டார் க்ளப்'பின் மேஜையின் மீது 'க்ளப்பின் உறுப்பினர்களுக்கு' என்ற முகவரியுடன் ஒரு கடிதம் இருந்தது. அவர்கள் அதைப் பிரித்து ஆர்வத்துடன் படித்தார்கள்.
"நண்பர்களே, நான் சொல்வதாக இருந்த செய்தி இதுதான். நான் இரண்டு மாத காலத்திற்கு இங்கிருந்து இல்லாமற் போகிறேன். கடிதம் உங்கள் கையில் கிடைக்கும் போது நான் கோழிக்கோடு நகரைத் தாண்டியிருப்பேன். நான் எங்கு இருப்பேன் என்ற விஷயத்தை உங்களில் யாராவது கண்டுபிடிக்க முடிந்தால், அந்த மனிதருக்கு என்னுடைய புதிய மோரிஸ் காரைப் பரிசாக நான் தருகிறேன்.
ரவீந்திரன்"
அந்தச் செய்தி க்ளப் உறுப்பினர்களை ஆச்சரியப்பட வைத்தது. நண்பர்களுடன் தினமும் மது அருந்தி ஆடிப் பாடித் திரியும் இளைஞனான ஒரு லட்சாதிபதி வேறொரு இடம் தேடிப் போவது என்பது எந்த அளவிற்கு சந்தோ-ஷம் தரக்கூடிய விஷயமாக இருக்கும் என்பதை அவனே நடைமுறையில் தெரிந்து கொள்ளட்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். அத்துடன் மோரிஸ் கார் தங்களுக்குக் கிடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர்களில் ஒவ்வொருவரும் முடிவெடுத்துக் கொண்டார்கள்.
2
மதிய நேரம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது-. கோழிக்கோடு நகரத்திற்குக் கிழக்குத் திசையில் இருக்கும் ஒரு கிராமத்தின் அகலம் குறைவான வளைந்து வளைந்து செல்லும் ஒரு குண்டும் குழியுமான செம்மண் பாதையில் ஒரு வாடகைக்கார் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. பாதையின் இரு பக்கங்களிலும் பரந்து கிடக்கும் நெல் வயல்கள் இருந்தன. அறுவடை முடிந்து வெறுமனே கிடந்த அந்த வயல்களின் வரப்புகளில் இங்குமங்குமாய் முளைத்திருந்த இளம் பச்சை நிறப் புற்களை வாலை ஆட்டியவாறு பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே சிறு கடைகள் தென்பட்டன. அங்கு சமையல் பொருட்களை வாங்கிக் கொண்டு போகும் பாதி உடையணிந்த கிராமத்துப் பெண்கள் பாதையோரத்தில் ஒதுங்கி நின்றார்கள். கள்ளு குடித்த மனிதர்களைப் போல ஆடி ஆடி போய்க் கொண்டிருந்த சில மாட்டு வண்டிகளும் அந்தக் காருக்கு வழி ஒதுக்கிக் கொடுத்தன.
தென்னை மரங்கள் வளர்ந்து நின்றிருக்கும் மேடுகள்... சிறு சிறு குன்றுகளைப் போல் உயர்ந்து நிற்கும் பாறைகள்... வயலுக்கு மத்தியில் ஆங்காங்கே தெரியும் வெற்றிடங்கள்... அவற்றில் இருக்கும் சில சிறிய குடிசைகள்... விழுந்து கிடக்கும் கோவில்கள்... இடிந்து கிடக்கும் பீடங்கள்... பாதி வற்றிப் போயிருக்கும் கோவில் குளங்கள்... மாந்தோப்புகள்... பச்சைப்புல் மைதானங்கள், காய்கறித் தோட்டங்கள்... இப்படிப் பல காட்சிகளையும் கடந்து கொண்டு அந்தக் கார் இருவழிஞ்ஞி ஆறும் ஒரு சிற்றாறும் ஒன்று சேரும் முக்கம் ஏரிக்கு அருகில் போய் நின்றது.
நடுத்தர வயதுடைய ஒரு கிராமத்து மனிதன் முன்னால் வந்து காரில் இருந்த மிடுக்கான மனிதனை வரவேற்றான்.
"எல்லாம் சரிபண்ணி வச்சிருக்கா?"-அந்த நவநாகரீகமான மனிதன் கேட்டான்.
"தங்கறதுக்கு இடம் ஏற்பாடு பண்ணியாச்சு. வேலைக்காரனையும் பேசி தயார் பண்ணி வச்சிட்டேன்."
"சரி... நான் உபயோகப்படுத்துற சாமான்களை கார்ல கொண்டு வந்திருக்கேன்."
"அது எல்லாத்தையும் அங்கே கொண்டு போயிடுவோம்."
அந்தக் கிராமத்து மனிதன் 'குஞ்ஞா கூ....' என்று உரத்த குரலில் அழைத்தவுடன் பருமனான ஒரு குள்ள மனிதன் அங்கு ஓடி வந்தான்.
"இந்த சாமான்களை என் இடத்துல கொண்டு போய் வை."
- பிறகு ரவீந்திரன் பக்கம் திரும்பிய அந்த ஆள் சொன்னான்: "இந்தச் சாமான்களை குஞ்ஞன் கொண்டு போய் வைப்பான். நாம அங்கே நடக்கலாம்..."
"சரி..."- ரவீந்திரன் கூலியைத் தந்து வாடகைக் கார்காரனை அனுப்பி வைத்தான்.
ரவீந்திரனும் அந்தக் கிராமத்து மனிதனும் அந்த நதிக்கரை வழியே நடக்க ஆரம்பித்தார்கள். வழி முழுவதும் பெண்கள் துணிகளைச் சலவை செய்து கொண்டும் குளித்துக் கொண்டும் இருந்தார்கள். குழந்தைகள் ஆற்றங்கரையில் மணல் வீடுகள் அமைத்து பள்ளங்கள் தோண்டியும் சுவர்கள் கட்டியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சில கிராமத்து மனிதர்கள் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆற்றின் கரையிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு ஒற்றையடிப் பாதையில் திரும்பி, பிறகு ஒரு சிறிய வயலுக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்து சற்று மேடாக இருந்த ஒரு நிலத்தில் ஏறினார்கள்.
அங்கு ஒரு சிறு வீடு இருந்தது. புற்களைக் கொண்டு கூரை வேய்ந்தும், சுவர்களில் வெள்ளை அடிக்கப்பட்டும், முற்றத்தில் சாணம் தெளித்து சுத்தமாக்கியும் வைக்கப்பட்டிருந்த அந்த வீடு பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
ரவீந்திரனுக்கு அந்தச் சிறிய நிலமும், வீடும் மிகவும் பிடித்திருந்தது. அந்த நிலத்தில் மாமரங்களும் பலா மரங்களும் வாழை மரங்களும் இருந்தன. வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் மரங்கள், முன்னால் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பரந்து கிடக்கும் வயல்கள், வடக்குப் பக்கம் சிறிய மலைகள்... ஒரு பக்கம் ஆறு வளைந்து ஓடிக் கொண்டிருந்தது.