கிராமத்துக் காதல் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7176
நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மக்களின் ஆரவாரமும், அவர்களின் கூக்குரலும், குறையாத அவர்களின் நடமாட்டமும் விற்பனை செய்பவர்களின் அழைப்பும், நாணயங்களின் சலசலப்பும் கூடிய வண்ணம் இருந்தது. எல்லாரும் தங்களின் வேலையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஒரு முஸ்லிம் கிழவன் தன் கையிலிருந்து ஒரு ரூபாய் நாணயமொன்றை ஒரு கல்லின் மீது தட்டி அது உண்டாக்கும் ஓசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு பலகாரக் கடைக்கு முன்னால் நின்று கொண்டு ஒரு குழந்தை தன் தாயிடம் காப்பி வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து அழுது கொண்டிருக்கிறது. ஒரு புன்னை மரத்தடியில் ஆதிவாசிகளின் கூட்டமொன்று தாங்கள் வாங்கிய வண்ணக் கற்களின் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்தவாறு உட்கார்ந்திருக்கிறது.
கையில் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு மாளுவும் சந்தைக்குப் போயிருந்தாள். வெள்ளை நிறத்தில் பெரிய சிவந்த புள்ளிகள் போட்ட ஒரு ரவிக்கையையும், கறுப்பு வண்ணத்தில் கரை போட்ட ஒரு மெல்லிய கிராமத்து முண்டையும் அவள் அணிந்திருந்தாள். நெற்றிக்கு அருகில் தலைமுடியை வகிடு எடுத்து பிரித்து பின்னால் அழகாக அதைக் கட்டியிருந்தாள்.
மாமா சாமான்கள் வாங்குவதற்காகத் தந்த ஒரு ரூபாய் இல்லாமல், தான் கயிறு பிரித்து சம்பாதித்த எட்டணாவையும் அவள் கையில் வைத்திருந்தாள்.
உப்பு, மிளகாய் போன்ற சாமான்கள் வாங்குவது தவிர, தனக்கென்று ஒன்றிரண்டு பொருட்களை வாங்க வேண்டுமென்ற திட்டத்துடன் தான் அவள் சற்று சீக்கிரமே, சந்தையை நோக்கி வந்திருந்தாள். ஆனால், சந்தைக்கு வந்து பார்த்த பிறகுதான் தான் மனதில் நினைத்தே இராத பல புதிய பொருட்கள் அங்கிருப்பது அவளுக்குத் தெரிய வந்தது. அவற்றை அவளுக்கு வாங்க வேண்டும் போல் இருந்தது.
அவள் சந்தையைச் சுற்றி நடக்க ஆரம்பித்தாள். கண்ணாடி வளையல்கள் விற்பனை செய்யும் இடத்திற்குச் சென்று புதிய மாதிரியில் இருந்த வளையல்களைப் பார்த்தாள். இன்னொரு இடத்திற்குச் சென்று கல் வைத்த மோதிரங்களை எடுத்து இப்படியும், அப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு, அவற்றை அங்கேயே வைத்தாள். ஒரு துணிக்கடைக்குச் சென்று அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல வண்ணத் துணிகளைப் பார்த்து வியப்படைந்துநின்று கொண்டிருந்தாள். கடைசியில் பச்சை நிறத்தில் படங்கள் போட்ட ஒரு ஜப்பான் துணியின் விலை என்ன என்று கேட்டாள். பக்கத்தில் நின்றிருந்த ஒரு செட்டியாரிடம் கறுப்புக் கரைபோட்ட முண்டின் விலை என்ன என்று விசாரித்தாள். அடுத்த நிமிடம் குனிந்து நின்று கழன்று விழும் நிலையில் இருந்த கொலுசுகளைச் சரி செய்தாள். கூட்டத்தில் யாரையோ அவள் மிதித்துவிட்டாள். அந்த ஆளின் உடம்பைத் தொட்டு நெற்றியில் ஒற்றிக் கொண்டாள். சோப், சீப்பு, கண்ணாடி, நீலம், வளையல்கள் விற்கும் கடைக்குச் சென்று ஒரு காசுக்கு நீலமும், இரண்டு காசுகளுக்கு நூலும் கேட்டாள். கடைக்காரன் அவற்றை எடுக்கும் நேரத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த முகக் கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டு அங்கேயே அவள் அதை வைத்தாள். திரும்பிப் பார்த்தபோது அங்கு தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு தன்னுடைய பளபளப்பான பற்களைக் காட்டி அவள் சிரித்தாள். பிறகு முன்பு சென்ற துணிக்கடைக்குச் சென்று வேறொரு ஜப்பான் துணியின் விலை என்ன என்று விசாரித்தாள். கடைக்காரன் சொன்ன விலையைக் கேட்டு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏமாற்றத்துடன் திரும்பிய போது எதிரில் நின்றிருந்த முகத்தைப் பார்த்து அவள் மேலும் அதிர்ச்சியடைந்தாள். நேற்று மாலை நேரத்தில் ஆற்றின் கரையில் அவளையே உற்றுப் பார்த்த அந்த மனிதன் அவளுக்குப் பின்னால் நின்றிருந்தான்.
இனம்புரியாத ஒரு நடுக்கத்துடன் அவள் வேறொரு வழியில் திரும்பி நடந்தாள். பல இடங்களுக்கும் போய் சுற்றி நடந்துவிட்டு கடைசியில் ஒரு புகையிலை வியாபாரியின் கடையில் போய் நின்றாள்.
அவித்த மரவள்ளிக் கிழங்கை வாயில் போட்டு, தேங்காய் பூக்களைச் சேர்த்து ருசித்துத் தின்றவாறு ஒரு தடிமனான முஸ்லிம் அங்கு வந்தான். அவன் கடையில் ஒரு பிடி புகையிலையை வாங்கி தன் கையில் வைத்து அதன் குணத்தைச் சோதித்துப் பார்ப்பதற்காக, நாசிக்கு அருகில் கொண்டு வந்து அதை முகர்ந்து பார்த்தான்.
அடுத்த நிமிடம் சிறிதும் எதிர்பார்க்காமல் அந்த முஸ்லிம் ஒரு தும்மல் போட்டான். அவனுடைய வாய்க்குள் பாதி மென்ற நிலையில் இருந்த உணவுப்பொருள் ஒரு பெரிய துப்பாக்கியிலிருந்து கிளம்பியதைப் போல சிதறி கடைக்காரனின் முகத்தின் மீது விழுந்தது. அந்தக் காட்சியைப் பார்த்து மாளு அணை உடைந்ததைப் போல விழுந்து விழுந்து சிரித்தாள்.
அதைவிட உரத்த குரலில் பின்னாலிருந்து சிரிப்புச் சத்தம் கேட்கவே, அவள் திரும்பிப் பார்த்தாள். மீண்டும் அதே ஆள்தான்!
அடக்க முடியாமல் அவன் மீண்டும் மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தான். அவளும் முகத்தைத் திருப்பிக் கொண்டு வாயை மூடி சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவள் சந்தையை விட்டுத் திரும்பிப் போன போது, ஒரு பையன் அவளை நோக்கி ஓடி வந்தான். ஒரு பேப்பர் பொட்டலத்தை அவளுக்கு நேராக அவன் நீட்டினான்.
"இதை யார் தந்தது?"- அவள் சந்தேகத்துடன் அந்தப் பையனைப் பார்த்துக் கேட்டாள்.
"நீளமான சில்க் சட்டை போட்ட ஒருமீசை வச்ச ஆளு..."
அந்தப் பொட்டலத்தை வாங்க வேண்டுமா என்று சந்தேகப்பட்டவாறு அவள் தயங்கி நின்றிருப்பதைப் பார்த்த அந்த சிறுவன் அந்தப் பொட்டலத்தை அவள் கூடையில் போட்டுவிட்டு ஓடி விட்டான்.
அவள் ஒரு தனியான இடத்திற்குச் சென்று அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தாள். தான் விலை விசாரித்த அந்த அதிக விலை கொண்ட துணியும் ஒரு வாசனை சோப்பும் அதில் இருந்தன. அதைப் பார்த்து அவளுக்கு மகிழ்ச்சியைவிட பதைபதைப்புத்தான் உண்டானது.