கிராமத்துக் காதல் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7176
5
மதிய நேரம் தாண்டிவிட்டிருந்தது. மாளு ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினாள். அவள் ஒரு சிறு துண்டை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு ஆற்றுக்குள் குதித்தாள். கைகளால் நீரைத் துழாவி, சீராகக் கால்களால் நீரை அடித்து, தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து வைத்துக் கொண்டு அவள் நீரைக் கிழித்துக் கொண்டு முன்னோக்கி நீந்தினாள். மாளு நன்றாக நீந்தக் கூடியவள். அவள் சாய்ந்தவாறும் மல்லாக் படுத்துக் கொண்டும் நீந்தினாள். தான் நீரில் நீந்திக் குளிப்பதை யாரும் பார்க்கவில்லை என்றுதான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் திறந்து கிடந்த நீரில் அவள் சுதந்திரமாக நீந்திக் கொண்டிருந்த காட்சிக்கு ஒரு கவர்ச்சி இருக்கவே செய்தது.
அவள் நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசித்தவாறு ரவி அந்தப் புற்கள் அடர்ந்த புதருக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்தான். அவள் ஏரியின் நடுப்பகுதியை அடைந்தபோது, அவளின் நீச்சல் திறமையைப் பாராட்டுவதைப் போல ரவி மெதுவாக விசிலடித்தவாறு வெளியே வந்தான்.
ரவியைப் பார்த்ததுதான் தாமதம். வெட்கத்தால் அவள் நீருக்குள் தன்னை மூழ்கச் செய்து கொண்டாள். அதற்குப் பிறகு மூன்று நிமிடங்களுக்கு அவளை மேலே பார்க்கவே முடியவில்லை. ரவிக்கு அதைப் பார்த்து பதைபதைப்பு உண்டாகாமல் இல்லை. ஆனால் ஆற்றின் கீழ்ப்பகுதியில் ஏரிக்கப்பால் அவள் திடீரென்று நீருக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டினாள்.
ரவியின் பார்வையைப் பார்த்ததும், அவளுக்கு கரைக்கு வரவேண்டும் என்றே தோன்றவில்லை. தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு அவள் நீருக்குள்ளேயே ஒரு மீனைப் போல அமைதியாக நீந்திக் கொண்டிருந்தாள். நான்கு பக்கங்களிலும் நீரில் பரவிக் கிடக்கும் தலைமுடிகளுக்கு மத்தியில் அவளுடைய பிரகாசமான முகம் நீருக்கு மத்தியில் இருக்கும் செந்தாமரையைப் போல இருந்தது.
கால்மணி நேரம் கடந்தது. அதற்குப் பிறகும் ரவி அந்த இடத்தைவிட்டு நகர்வதாகத் தெரியவில்லை. ஒரு சிகரெட்டைப் புகைத்தவாறு அவன் அதே இடத்தில் நின்றிருந்தான்.
மாளு மெதுவாகக் கரையை நோக்கி நீந்தத் தொடங்கினாள். கரையில் கால்கள் பட்டவுடன், அவள் தன் கைகளால், மார்புப் பகுதியை மறைத்துக் கொண்டு தன்னுடைய ஆடைகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வேகமாக ஓடினாள்.
முஸ்லிம் பெண்கள் குளிப்பதற்காகக் கரையில் ஒரு இடத்தில் ஓலையால் மறைக்கப்பட்ட ஒரு குளியலறை இருந்தது. ஆடைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அவள் அதற்குள் நுழைந்தாள்.
அவள் ஆடைகளை அணிந்து முடித்து வெளியே வந்தாள். ரவி அதே இடத்தில் நின்றிருந்தாள். அவளிடம் என்னவெல்லாமோ பேசவேண்டுமென்று ரவி ஆசைப்பட்டான். ஆனால், வார்த்தைகள் வராமல் அவன் செயலற்று நின்றிருந்தான். எத்தனையோ நவநாகரீகமான இளம்பெண்களின் காதல் சுகத்தில் சங்கமமாகி ஆனந்தம் கண்ட அந்த இளைஞனுக்கு சாதாரண ஒரு கிராமத்துப் பெண்ணிடம் பேசுவதற்கு ஒரு வார்த்தைகூட வெளியே வரவில்லை. வார்த்தைகள் கிடைக்கவில்லை.
அப்போது நேற்று தான் சந்தையில் வாங்கிக் கொடுத்தனுப்பியிருந்த சோப் அவளுடைய கையில் இருப்பதை அவன் பார்த்தான். ரவிக்கு பேச்சை ஆரம்பிப்பதற்கு ஒரு விஷயம் கிடைத்தது-.
"சோப் நல்ல வாசனையா இருந்துச்சா?"
மாளு சோப்பை ஆடைக்குள் மறைத்து வைத்தாள். எதுவும் பேசாமல் அவள் திரும்பி நடந்தாள்.
அன்று மாலையில் ரவி வயல்கள் பக்கமாக நடந்து போனபோது, அவளுடைய வீட்டை அவன் பார்த்தான்.
பழ மரங்கள் நிறைய இருந்த ஒரு நிலத்தின் நடுவில், புல் வேயப்பட்ட ஒரு சிறு ஓலைக் குடிசை. முன்பக்கம் சாணம் தெளிக்கப்பட்டு சுத்தமாக இருந்த முற்றம் இருந்தது. மூன்று நான்கு பசுக்கள் இருந்த ஒரு தொழுவம். ஒரு மூலையில் உயரமாக இருந்த வைக்கோல் போர்.
மாளுவின் மாமாவும் அத்தையும் அவர்களின் இரண்டு வயது வரக்கூடிய ஒரு ஆண் குழந்தையும் மட்டுமே அவளைத் தவிர, அந்த வீட்டில் இருந்தவர்கள்.
ஆற்றின் கரையில் தினந்தோறும் சொல்லி வைத்ததைப் போல ரவியும், மாளுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். அப்படி வெறுமனே பார்க்க ஆரம்பித்தது பழக்கமாக வளர்ந்தது. அவளுக்குச் சிறிது சிறிதாகப் பேசுவதற்கான தைரியம் வந்தது. ரவியின் கேள்விகளுக்கு உண்டு என்றோ இல்லை என்றோ அவள் பதில் கூறிக் கொண்டிருந்தாள். அந்த எல்லையும் படிப்படியாக மீறப்பட்டது. அவர்களுக்கிடையே சர்வசாதாரணமாக உரையாடல் எந்தவித தயக்கமும் இல்லாமல் நடந்தது. ரவி தந்த பரிசுப் பொருட்களை அவள் சிறிதும் தயங்காமல் பெற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். எது எப்படியோ, ஒரு கிராமத்துப் பறவை தன்னுடைய வலையில் விழுந்து விட்டது என்பதை ரவி புரிந்து கொண்டான்.
ஒரு நாள் ரவி தன்னைப் பற்றி எந்த வித கெட்ட எண்ணமும் உண்டாகாத முறையில் அவளிடம் கேட்டான்: "இன்னைக்கு பொழுது சாய்ஞ்ச பிறகு நீ இங்கே வரமுடியுமா? நாம நிலா வெளிச்சத்துல இந்த மணல்ல உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம். தனியா இங்கே இருந்திருந்து எனக்கே வெறுத்துப் போச்சு."
ரவி தன்னுடைய தனிமைச் சூழ்நிலையைப் பற்றி சொன்னதைக் கேட்டு மாளுவிற்கு அவன் மீது பரிதாபம் உண்டானது. அவள் சொன்னாள்: "நான் வரலாம். ஆனா, யாராவது அதைப் பார்த்துட்டா...?"
ரவி சொன்னான்: "ராத்திரி நேரத்துல இங்கே யார் வரப்போறது? அப்படியே யாராவது வந்தா, நாம இந்தக் குளியலறைக்குள்ள போயி ஒளிஞ்சுக்குவோம்."
அவள் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அதை மவுனம் நிறைந்த சம்மதம் என்று ரவி கணக்குப் போட்டுக் கொண்டான். அவன் ஒரு வெற்றி மனப்பாங்குடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
அன்று வசந்த பஞ்சமி நாள். சிலையின் மார்பில் தொங்கிக் கொண்டிருக்கும் புல நகத்தைப் போல நிலவு மலைக்கு மேலே பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்த நிலவொளியில் இருவழிஞ்ஞி ஆற்று நீர் தகதகத்தது. மென்மையாக வீசிக் கொண்டிருந்த காற்றில் ஆடிய மரங்களும் பூச்செடிகளும் பரந்து கிடக்கும் மணலில் அழகான ஒரு தோற்றத்தைத் தந்தன. வானத்திலிருந்து புறப்பட்டு வந்த ஒரு அமைதியான சூழ்நிலை அந்தப் பகுதியெங்கும் பரவியது.
மாளுவின் வரவை எதிர்பார்த்து ரவி அந்தக் குளியலறையில் உட்கார்ந்திருந்தான்.
நீண்ட நேரமாகியும், ஒரு நிழல் கூட அங்கு வரவில்லை. ரவி பொறுமையை இழந்து அடுத்தடுத்து சிகரெட்டுகளைப் புகைத்த வண்ணம் இருந்தான். பஞ்சமி நிலவு மறையும் நிலையில் இருந்தது.
அருகிலிருந்த ஒரு மரப்பொந்தில் இரண்டு பறவைகள் தங்களுக்குள் சண்டை போட்டு கொண்டிருந்தன. மர இலைகளை 'கலபலா' என்று அசைத்தவாறு ஒரு குறும்புத்தனமான காற்று கடந்து போனது. ஆற்றின் வழியாக ஒரு தகர விளக்கின் சிவப்பு வெளிச்சம் நகர்ந்து கொண்டிருந்தது. நகரத்திலிருந்து நேரம் கடந்து திரும்பி வரும் ஒரு சரக்குகள் ஏற்றப்பட்ட படகு அது.
நிமிடங்களை மனதில் எண்ணிக் கொண்டு ரவி அதற்குப் பிறகும் உட்கார்ந்திருந்தான். நரியொன்று அந்தப் புதருக்குள் இருந்து ஆற்றை நோக்கி வந்தது. ஏதோ ஒரு சந்தேகத்துடன் அது தலையை உயர்த்திக் கொண்டு அந்த இடத்திலேயே நின்றது.
நரியை மிகவும் அருகில் பார்த்ததும் ரவிக்கு ஒருவித ஆர்வம் உண்டானது. தனிமைச் சூழ்நிலையில் தனக்குக் கிடைத்த அந்தப் புதிய நண்பனின் கவனத்தை ரவி ஒரு குறும்புத்தனமான ஓசையை உண்டாக்கித் திரும்பினான்.