கிராமத்துக் காதல் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7176
அந்தச் சத்தத்தைக் கேட்டதும் நரிக்கும் ஒரு உற்சாகம் உண்டானது. அது மெதுவாக நடந்து வந்து ஓசை புறப்பட்டு வந்த குளியலறைக்குள் எட்டிப் பார்த்தது. அதற்குள் ஒளிந்திருந்த காமவயப்பட்ட மனிதனைப் பார்த்ததும், நரி வேகமாக ஒரு ஓட்டம் பிடித்தது. தூரத்திற்குப் போன அது பின்னால் ஒருமுறை திரும்பிப் பார்த்தது.
ரவி விழுந்து விழுந்து சிரித்தான். நிலவு சிறிது நேரத்திற்கு மறைந்து விட்டு மீண்டும் தன் முகத்தைக் காட்டியது. ரவி பொறுமையை இழந்தான். அவள் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று அவன் முடிவெடுத்தான்.
அதற்குப் பிறகு ஐந்து நிமிடங்கள் ஓடின. சற்று தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது.
வெள்ளைத் துணியால் தலையை மறைத்துக் கொண்டு புதிதாக உதயமாகும் நிலவைப் போல அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
ரவியின் இதயம் மகிழ்ச்சியால் துள்ளியது.
வெற்றி பெற்று விட்டதன் ஒரு அடையாளம் அவனுடைய முகத்தில் தெரிந்தது. அவன் முகத்தில் ஆர்வம் பொங்க தன்னுடைய ஆசை இளங்கொடியைக் கண்களை விரித்துக் கொண்டு பார்த்தவாறு ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான்.
அந்தக் குளியலறையை நெருங்கியபோது அவளுடைய வேகம் குறைந்தது. அவள் அதற்குச் சற்று தூரத்திலேயே நின்றுவிட்டாள்.
"மாளு..."- ரவி பொறுமையை இழந்து கட்டளையிட்டான்.
ஒரு வெண்மையான கற்சிலையைப் போல அவள் மீண்டும் அந்த இடத்தில் நின்றிருந்தாள்.
ரவி வெளியே வந்து அவளுடைய கையைப் பற்றினான். அது ஒரு மின் கம்பியைப் போல வெப்பமடைந்து நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் அவளுடைய தலையை மூடியிருந்த வெள்ளைத் துணியை அகற்றி அவளை உற்றுப் பார்த்தான். ஒரு பிணத்தின் முகத்தை மூடியிருக்கும் துணியை விலக்கிவிட்டுப் பார்க்கும் போது இருப்பதைப் போல, எந்தவித உயிர்ப்பும் இல்லாமல் அவளுடைய முகம் இருந்தாலும், அந்தக் கண்கள் நட்சத்திரங்களைப் போல ஜொலித்துக் கொண்டிருந்தன. அவளுடைய கன்னங்களில் கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது.
"மாளு, நீ ஏன் அழறே?"- ரவி ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டு ஒரு அமைதியான குரலில் கேட்டான்.
தன்னைப் பிடித்த ரவியின் கையை உதறிவிட்டு திக்கிய குரலில் அவள் சொன்னாள்: "நான் போறேன்."
"என்ன, போறியா? நீ எதுக்கு பயப்படுறே? நீ எதுக்கு நடுங்கவும், அழவும் செய்ற? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? முட்டாள் பெண்ணே, இங்கே வா..."
ரவி அவளுடைய கையை மீண்டும் பிடித்தான். அவள் திரும்பவும் அவனுடைய கையை உதறிவிட்டு ஒருவித பதைபதைப்புடன் திரும்பி நடந்தாள்.
"மாளு... மாளு... கொஞ்சம் நில்லு..."- என்று அழைத்தவாறு ரவி அவளுக்குப் பின்னால் நடந்தான். அவள் வேகமாக நடந்தாள். நடந்து தளர்ந்து மேல்மூச்சு கீழ்மூச்சுவிட்டபடி அவள் அந்த மணலில் ஓட ஆரம்பித்தாள். சிறிது தூரம் ரவியும் ஓடினான். அவள் ஒரு பட்டாம்பூச்சியைப் போல தன்னுடைய இடம் வந்ததும் பறந்து போய் விட்டாள்.
அவள் சிறிதும் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. நிலத்தின் சுவர் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த மர ஏணி மீது ஏறி இறங்கி அவள் அந்த மரக் கூட்டங்களுக்கிடையே மறைந்து போனாள். ரவி என்ன செய்வதென்று தெரியாமல் அந்த ஆற்றின் கரையை நோக்கி வரும் ஒற்றையடிப் பாதையில் விழித்துக் கொண்டு நின்றிருந்தான். நடந்த சம்பவம் ஒரு கனவைப் போல இருந்தது அவனுக்கு.
சிறிது நேரம் எந்தவித அசைவுமில்லாமல் நின்றுவிட்டு அவன் என்னவோ சிந்தித்தவாறு திரும்பி நடந்தான். காதல் சம்பந்தப்பட்ட பல வினோதமான அனுபவங்கள் இதற்கு முன்பு அவனுக்கு இருக்கின்றன என்றாலும், இந்த அளவிற்கு மனதைத் தொடக்கூடிய ஒரு சம்பவம், இதுவரை அவனுடைய வாழ்க்கையில் நடந்ததில்லை என்பதே உண்மை. அதில் மறைந்திருந்த மனரீதியான தத்துவத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவளுடைய காற்பாதங்களின் அடையாளங்கள் மணலில் தெளிவாகத் தெரிந்தது. அதன் மீது மிதித்து நடந்த போது அவனுக்கு ஒரு வகை மகிழ்ச்சி உண்டானது. அவன் அந்தக் காலடிச் சுவடுகளிலேயே தன் காற்பாதங்களை வைத்தபடி சிறிது தூரம் நடந்தான்.
அப்போது மாளுவின் பாதம் பட்டிருந்த ஒரு இடத்தில் ஏதோவொரு பொருள் மின்னிக்கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் அந்தப் பொருளைக் குனிந்து எடுத்தான். வெள்ளியால் ஆன ஒரு கொலுசு அது.
"சந்தேகமே இல்ல... இது அவளோடதுதான்..." -ரவி அந்தக் கொலுசைத் திருப்பிப் திருப்பிப் பார்த்தவாறு தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் அதைத் தன்னுடைய உதட்டில் வைத்து முத்தமிட்டான்.
அவன் அந்தக் கொலுசைக் கையால் தடவியவாறு நடக்காமற்போன ஒரு ஆசையை மனதில் வைத்துக்கொண்டே தான் இருக்குமிடத்திற்குத் திரும்பி வந்தான்.
மறுநாள் ரவியால் மாளுவை எங்கும் வெளியில் பார்க்க முடியவில்லை. அவன் அன்று கொலுசைக் கையில் எடுத்துக் கொண்டு மாலை மயங்கும் வரையில் ஆற்றின் கரையிலேயே அவளுக்காகக் காத்திருந்து, எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் திரும்பிப் போனான்.
நான்காவது நாள் நடுப்பகல் நேரத்தில் அவள் ஆடைகளைச் சலவை செய்வதற்காக ஆற்றின் கரைக்கு வந்தாள். ரவி மெதுவாக அவளருகில் சென்று கேட்டான்: "மாளு, இந்தக் கொலுசு உன்னோடதுதானே?"
அவள் நன்றியுடன் அவனைப் பார்த்து, தலையை ஆட்டியவாறு "ஆமாம்" என்றாள்.
ரவி இன்னும் கொஞ்சம் அவளுக்கு அருகில் வந்து நின்று கொண்டு மெதுவான குரலில் கேட்டான்: "நீ ஏன் அன்னைக்கு ராத்திரி ஓடினே?"
அவள் தலையைக் குனிந்து கொண்டு விரக்தியுடன் புன்னகைத்தாளே தவிர, வாய் திறந்து பதில் எதுவும் சொல்லவில்லை. அவளைப் பார்த்து ரவி கேட்டான்: "இன்னைக்கு ராத்திரி வருவியா? உன்கிட்ட சில விஷயங்கள் நான் பேச வேண்டியதிருக்கு."
அவள் எதுவும் பேசாமல் ஊமையைப் போல முகத்தைக் குனிந்து கொண்டு நின்றிருந்தாள். ரவி அவளிடம் வற்புறுத்தி கேட்டான்: "நீ வருவியா? அன்னைக்கு இருந்த இடத்துலேயே இன்னைக்கு உனக்காக நான் காத்திருக்கேன். வர்றேன்னு சொல்லு..." அவன் அவளுடைய கையைப் பிடித்து அழுத்தினான்.
அவள் தாழ்வான குரலில் சொன்னாள்: "வர்றேன்."
"அப்படின்னா, கொலுசை நீ வர்றப்போ தர்றேன்."
ரவி திரும்பி நடந்தான். தெளிந்த நிலவு அன்றும் அந்த ஆற்றின் கரையில் வெண்பட்டை விரித்தது. மரங்கள், புதர்கள் ஆகியவற்றின் நிழல்கள் அந்தப் பரந்து காணப்பட்ட பட்டு விரிப்பிற்கு அற்புதமான கரைகளை உண்டாக்கின.