கிராமத்துக் காதல் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7176
ரவி அந்த சிகரெட்டை அவளிடம் நீட்டியவாறு சொன்னான்: "பரவாயில்ல... இதை ரெண்டு தடவை இழுத்து புகையை வெளியே விடு. மனம் புரட்டல் சரியாயிடும்."
அவள் முதலில் தயங்கினாள்.
"ம்..."
அவள் 'வேண்டாம்' என்று தலையை ஆட்டினாள்.
"மாளு... இது நல்லது..."
ரவி அந்த சிகரெட்டை அவளுடைய உதடுகளுக்கு நடுவில் வைத்தான். அவள் அதை உள் நோக்கி இழுத்தாள். புகைபலமாக அவளுடைய தொண்டைக்குள் ஏறியது. அடுத்த நிமிடம் மூக்கிற்குள்ளும், கண்களிலும் அவளுக்குப் புகைச்சல் உண்டாக ஆரம்பித்தது. அவள் இருமத் தொடங்கினாள். அதைப் பார்த்து ரவி விழுந்து விழுந்து சிரித்தான்.
"இதுக்கும் இன்னொரு மருந்து இருக்கு"- ரவி அவளை ஒரு குழந்தையைப் போல தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு சொன்னான்: "ஒரு முத்தம்..."
ஒரு நாள் மாலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் ரவியைத் தேடி வந்தாள் மாளு. அவள் சொன்னாள்: "அத்தை அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க. இனி ரெண்டு மாதங்கள் கழிச்சுத்தான் அவங்க திரும்பி வருவாங்க..."
ரவி அவளை வாரி எடுத்து முத்தமிட்டவாறு சொன்னான்: "இனி என்னோட பஞ்சவர்ணக்கிளி எப்பவும் இங்கே வர்றதுக்கு சுதந்திரம் கிடைச்சிருக்குல்ல....!"
ஒரு பயங்கரமான சத்தத்தை உண்டாக்கியவாறு ஒரு பறவை வாசலிலிருந்த தென்னை மரத்தின் மீது பறந்து வந்து விழுந்தது. ரவி அப்படிப்பட்டட ஒரு பறவையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை. அவன் அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். மாளு சொன்னாள்: "இந்த பறவையோட பேரு வேழாம்பல். கடவுளோட சாபத்தால இந்தப் பறவை இப்படி ஆயிடுச்சு..."
ரவி அந்த சாபக் கதையைக் கேட்க விரும்பினான். அவள் அதைச் சொல்ல ஆரம்பித்தாள்: "முன்பு கடவுளோட பசுக்களுக்குத் தண்ணீர் காட்ட ஒரு பையன் இருந்தான். ஒரு நாள் அவன் பசுக்களுக்குத் தண்ணீர் கொடுக்காம தண்ணி இருக்கிற வாளியை முன்னாடி வச்சிட்டு தன்னை மறந்து தூங்கிட்டான். பசுக்கள் தண்ணீர் இல்லாம தாகமெடுத்து கஷ்டப்படுறதைப் பார்த்த கடவுள் இங்கே வந்து பார்த்தா, பையன் நிம்மதியா தூங்கிக்கிட்டு இருக்கான். அடுத்த நிமிடம் அவர் அந்த வாளியை அவனோட தலையில கவிழ்த்து வச்சாரு. அப்போ அவர், 'நீ தண்ணீர் குடிக்க முடியாத, தாகமெடுத்து கஷ்டப்படுற, தொண்டையில துவாரம் உள்ள ஒரு பறவையா பிறக்கணும்' என்று சாபம் போட்டார். அதுனாலதான் இந்தப் பறவையோட தலையில் இப்பவும் ஒரு வாளி கவிழ்த்து வச்சது மாதிரி ஒரு அடையாளம் இருக்கும். தெரியுதா?"
வேழாம்பல் பறவையின் கடந்த கால வரலாறைக் கேட்டு ரவி விழுந்து விழுந்து சிரித்தான். "இனி என் குயிலுக்கு வேற என்னென்ன கதைகளெல்லாம் தெரியும்?"- அவன் அவளுடைய கன்னங்களைக் கிள்ளியவாறு கேட்டான்.
கிராமம்! நாகரீகத்தின் ரசனைகள் எதுவும் எட்டிப் பார்த்திராத கிராமம்... அங்குள்ளவர்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் ஒரு இலக்கியம் இருக்கவே செய்கிறது. பழங்கதைகளும், பேய்க் கதைகளும், அழகும் கற்பனையும் கலந்த சரித்திரக் கதைகளும், வீரச் செயல்களைப் புகழ்ந்து பாடும் பாடல்களும் நிறைந்த எளிமையான அந்தக் கிராமப்புற இலக்கியத்திற்கும் ஒரு சொந்தமான வசீகர சக்தி இருக்கவே செய்கிறது. அங்குள்ள ஒவ்வொரு சிறு பாறைக்கும் அருவிக்கும் ஏரிக்கும் குளத்திற்கும் ஆற்றுக்கும் ஒவ்வொரு பெயர் இருப்பதைப் போல அங்குள்ள கரும்பாறைக் கூட்டங்களின், குளங்களின், ஆலமரத் திண்ணை ஆகியவற்றிற்குப் பின்னால் மிகவும் நீளமான சரித்திரக் கதைகள் நிச்சயம் இருக்கவே செய்கின்றன. அதோ அந்தப் பெரிய கரும்பாறை... அது ஒரு கல்லாக மாறிய ஆண் யானை! எந்தவொரு கிராமத்து மனிதனைப் பார்த்துக் கேட்டாலும் அந்தக் கரிய நிற ஆண் யானை கரும்பாறையாக மாறிய பயங்கரமான அந்தக் கதையை நமக்குக் கூறுவான். அதோ, அந்த பாலா மரத்திற்கு அருகில் உள்ள குளத்திற்கருகில் பொதுவாகவே யாரும் போகமாட்டார்கள். அதற்குக் காரணம்- பல வருடங்களுக்கு முன்னால் அது குற்றவாளிகளின் கழுத்துகளை வெட்டுவதற்காகப் பயன்படுத்திய குளம். அதைப் பற்றி கேள்வி எதுவும் இல்லை. ஒவ்வொரு புதிய பருவத்தின் விடை பெறுதலையும் வருதலையும் கிராமத்து மக்கள் பூக்கள் மூலமும், பறவைகள் மூலமும் அறிந்து கொள்கிறார்கள். குயில் வந்தால், மழை வருகிறது. 'வித்தூன்றும் காலம் வந்தது' என்று பாடிக் கொண்டு வரும் ஒரு புதிய விருந்தாளிப் பறவை நிலத்தை உழுதுவித்து விதைப்பதற்குக் காலம் வந்துவிட்டது என்பதை அறிவிக்கிறது. இப்படிப்பட்ட பல அறிவுகளின், நம்பிக்கைகளின் ஒரு உறைவிடம்தான் மாளு. மிகவும் பழமையான எந்தவிதக் கெடுதலும் இல்லாத இந்த மாதிரியான நம்பிக்கைகளை அவள் ஆர்வத்துடன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பது என்பது ரவிக்குக் கூட ஒரு புதுமையான அனுபவம்தான்.
அத்தை போன பிறகு அவர்களுக்கு அதிக சுதந்திரம் கிடைத்ததைப் போல் ஆகிவிட்டது. சிறிதும் எதிர்பார்க்காமல் இந்த சுதந்திரம் கிடைத்தவுடன், ஆற்றின் அக்கரையிலிருந்த அந்தக் காதல் காளையை அவள் பகல் நேரத்திலும் போய்ப் பார்க்கத் தொடங்கினாள்.
7
இக்கோரனின் பெயரைக் கேட்காதவர் என்று முக்கம் பகுதியில் யாரும் இல்லை. மாநிறத்தில் திடகாத்திரமான, உயரம் குறைவான உருவம். ஒட்ட முடிவெட்டிய தலை. எப்போதும் சிரித்தவண்ணம் இருக்கும் முகம். இந்த விஷயங்கள் அசாதாரணமானவை என்று கூற முடியாவிட்டாலும் மொத்தத்தில் இக்கோரன் ஒரு அசாதாரணமான படைப்பு என்பதில் சந்தேகமேயில்லை. மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து முழங்காலை மறைக்கும் வண்ணம் கட்டியிருக்கும். ஒரு துண்டுத் துணியைத் தவிர ஒவ்வொரு நாளும் அவன் அணிவதற்கு அவனிடம் வேறு உடையே இல்லை. வேலை என்று இறங்கும் போது அந்தத் துணி கறுத்து அழுக்காகிப் போயிருக்கும். மற்ற நேரங்களில் வெண்மையாகக் காணப்படும். இது ஒன்றுதான் வேறுபாடு. முன்பு, தங்கத்தால் ஆன ஒரு ஜோடி பெரிய கடுக்கன்கள் அணிந்திருந்த காதில் இப்போது அவை உண்டாக்கிய ஓட்டைகள் மட்டுமே இருக்கின்றன. தனக்கு என்ன வயது நடக்கிறது என்பது அவனுக்கே தெரியாது. இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள் அவனுடைய வயது இருக்கலாம். அவன் எப்போதும் ஒரு பேனாக் கத்தியை இடுப்பில் வைத்திருப்பான். அவனுடைய ஒரே ஆயுதம் அதுதான்.
அவனுடைய செசந்த ஊர் எது, வீடு எங்கே இருக்கிறது, தாய்- தந்தை யார் போன்ற எந்த விஷயங்களும் முக்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாது. மலபார் கலகம் நடந்த காலத்தில் அவன் தெற்குப் பக்கத்திலிருந்து எப்படியோ இறக்காமல் தப்பித்து முக்கம் பகுதிக்கு பிழைப்புத் தேடி வந்திருக்கிறான். அவனுடைய தாய், தந்தை இருவரும் கலகத்தில் சிக்கி மரணமடைந்து விட்டார்கள்.