கிராமத்துக் காதல் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7177
சிறிது நேரம் சென்றதும் அவளுடைய பிடி சிறிது சிறிதாகத் தளர்வதைப் போல் அவனுக்குத் தோன்றியது. அவள் மயக்க நிலையில் நீரை நோக்கி தாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த அவன், அடுத்த நிமிடம் ஒரு கையால் அவளைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் முழு பலத்தையும் பயன்படுத்தி அவன் நீரைத் துளாவினான். வேகமான நீரோட்டத்துடன் போராடி எப்படியோ பத்து நிமிட சாகசத்திற்குப் பிறகு, ஆபத்து எதுவும் நடக்காமல் அவன் கரையை அடைந்தான்.
பிறகு அவன் அவளைக் கரையிலிருந்த புற்களின் மீது கொண்டு போய் படுக்க வைத்தான். அவளை இறுக்கிக் கொண்டிருந்த ஆடைகளை அவிழ்த்து தனக்குத் தெரிந்த சில ஆரம்ப முதல் உதவிகளைச் செய்தான்.
கால் மணி நேரம் ஆன பிறகு அவளுக்கு சுய நினைவு வந்தது. அவள் கண்களைத் திறந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தாள். தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த இக்கோரனைப் பார்த்து பயந்த குரலில் அவள் கேட்டாள்: "நான் சாகலையா?"
இக்கோரன் சொன்னான்: "அப்படித்தான் தோணுது, பெண்ணே!"
அவள் எழுந்து உட்கார்ந்தாள்.
இக்கோரன் தொடர்ந்து அவளைப் பார்த்துக் கேட்டான்: "அதெல்லாம் இருக்கட்டும் மாளு. நீ தண்ணியில விழுந்து சாகணும்னு நினைச்சதுக்குக் காரணம் என்னன்னு சொல்லு...."
அவள் தேம்பித் தேம்பி அழுதாளே தவிர, முதலில் எந்தவொரு பதிலையும் கூறவில்லை. இக்கோரன் மீண்டும் வற்புறுத்திக் கேட்டான்: "எது இருந்தாலும் நடந்தது நடந்திருச்சு. இந்தச் சம்பவத்தை யாரும் பார்க்கல. நீ சொல்லப் போற விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். இப்பவாவது காரணத்தைச் சொல்லலாம்ல?"
"நான் வாழ்ந்து ஒரு பிரயோஜனமும் இல்ல. அதுனாலதான்.."
"அதுக்குக் காரணம்?"
"அவமானத்துக்குப் பயந்து..."- அவள் ஒரு குற்றவாளியைப் போல தலை குனிந்து நின்றாள்.
"அப்போ உனக்கு?"
அவள் அமைதியாகத் தவறை ஒப்புக் கொண்டாள்.
"எல்லாத்தையும் நான் சொல்றேன். இன்னைக்குச் சாயங்காலம் அந்த பகவதி கோவிலுக்கு வந்தா போதும்."
அவள் சிரமப்பட்டு கால் மைல் தூரத்திலுள்ள தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தாள். இக்கோரன் தன்னுடைய சிறிய படகிலிருந்த நீரை வெளியேற்றினான். பிறகு அந்தப் படகிலேயே ஏறி உட்கார்ந்து துளாவியபடி மறுகரையை அடைந்தான்.
சொன்னதைப் போலவே அன்று மாலை நேரத்தில் அந்தப் பழமையான பகவதி கோவிலில் அவர்கள் இருவரும் சந்தித்தார்கள்
அங்கு மாளு எதையும் மறைக்காமல் தன்னுடைய வாழ்க்கைக் கதை முழுவதையும் மனதைத் திறந்து இக்கோரனிடம் கூறினாள். இக்கோரன் அவள் சொன்னதை கவனத்துடன் கேட்டான். கேட்கும்போது இரக்கம், சிரிப்பு, கோபம் எல்லாமே அவனுடைய முகத்தில் பிரதிபலித்தன. கதையின் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஏற்றபடி அவனுடைய முகத்தில் இருந்த உணர்ச்சிகளும் மாறிக் கொண்டிருந்தன.
மாளு எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகு இக்கோரன் சொன்னான்: "நான் அப்பவே பாட்டுப் பாடி சொன்னேன்ல.... அந்தக் கோட்டும் சட்டையும் போட்ட ஆளை நீ நம்பாதேன்னு. நீ நான் சொன்னதைக் காதுலயே வாங்கல. அதுனாலதான் இப்போ அனுபவிக்கிறே. எது மண் எது சாணம்னு வித்தியாசம் பார்க்கத் தெரியாத ஒரு அப்பிராணிப் பெண் நீ. அந்த நகரத்துல இருந்து வந்த ஆள் இருக்கானே... அவன் ஒரு சரியான திருட்டுப் பய... அவனோட சில்க் சட்டையும், சிகரெட்டும், மணமும்...அதைப் பார்த்து நீ மயங்கிட்டே. இனி நீ அவனை விளக்கு வச்சுப் பார்த்தாலும், அவனை உன்னால பார்க்க முடியாது. உன்னை முகத்துக்கு நேரா பார்த்தால் கூட அவன் சத்தியம் பண்ணி சொல்லுவான் உன்னை இந்தப் பூமியில இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லைன்னு... சரி, இனி என்ன செய்யப் போற?"
மாளு எதுவும் பேசாமல் சிறிது இருந்துவிட்டு பிறகு சொன்னாள்: "பேசாம செத்துப் போயிடணும்றதுதான் என்னோட ஆசை. ஆனால், என் வயிற்றுல உயிருள்ள ஒரு குழந்தை இருக்கே! அதைக் கொல்ல இனிமேல் நான் நினைக்கல. அது வாழ வேண்டியது. அதுனாலதான் என்னால சாகமுடியாமப் போச்சு. அது என்னை 'அம்மா'ன்னு கூப்பிடுறதைக் கேக்குறதுக்காகவாவது நான் வாழ்ந்தாகணும். ஆனால், என் குலத்துக்கும், குடும்பத்துக்கும் அவமானம் உண்டாகுற அளவுக்கு நான் இங்கே இருக்க விரும்பல. உலகத்துல கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலைக்குப்போயி நான் பிச்சையெடுத்தாவது இருந்துக்குவேன். அதுதான் என் தலையெழுத்து..."
அவள் மீண்டும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். இக்கோரன் அவளுக்கு அருகில் மேலும் சற்று நெருங்கி வந்து, தடுமாறிய குரலில் கேட்டான்:
"மாளு, என்னைக் கல்யாணம் பண்ணிக்குறதுல உனக்கு ஏதாவது பிரச்சினை இருக்கா?"
அவள் தன் தலையை உயர்த்திக் கொண்டு ஆச்சரியத்துடன் கேட்டாள்: "என்ன?"
இக்கோரன் தன் கேள்வியை மீண்டும் திருப்பிச் சொன்னான்.
"எதுக்கு? உங்களுக்கும் அவமானம் உண்டாகுறதுக்கா? வேண்டாம்... வேண்டாம்... என்னோடவே அவமானம் இருந்துட்டுப் போகட்டும்..."
"என்ன அவமானம்? உனக்கும் எனக்கும் மட்டும் தானே இந்த விஷயம் தெரியும்! அதை என்னால பொறுத்துக்க முடியும். உனக்கு இந்த விஷயத்துல சம்மதமான்னு மட்டும்தான் நான் கேட்டேன். நீ கிட்டத்தட்ட ஒரு தடவை செத்துப் போனது மாதிரி தான். உன் பாவங்களெல்லாம் போன பிறவியில நடந்ததுன்னு வச்சுக்கோயேன்..."
"வேண்டாம். அந்தப் பெரிய பாவத்தை நீங்க ஏத்துக்க வேண்டாம். -அவள் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள்.
"ஏதோ ஒரு பெரிய பாவத்தால் தான் நான் பிறந்திருக்கேன். உனக்கு சம்மதமா, சொல்லு?"
அவள் பதிலெதுவும் கூறவில்லை. இக்கோரன் தொடர்ந்து சொன்னான். "சரி... உனக்குச் சம்மதம்தான்னு நான் எடுத்துக்குறேன். உன்னோட இந்த ரகசியம் இநத பகவதி கோவிலுக்கும் உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். உன்னை நான் கல்யாணம் பண்ணி என் ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன். ஒண்ணு, ரெண்டு வருடங்கள் கழிச்சு நாம இங்கே திரும்பி வருவோம்."
அவன் அவளுடைய கையைப் பிடித்தான். மாளு தன் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
ஒரு மாதம் ஆவதற்கு முன்பே இக்கோரன் மாளுவைத் திருமணம் செய்தான். கிராமத்து மக்கள் மத்தியில் அவர்களின் திருமணச் செய்தி பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது. உலகத்தில் தன்னுடைய நண்பனென்று கள்ளைத் தவிர வேறு எதுவுமே வேண்டாமென்று திரிந்த இக்கோரன் திருமணம் செய்து கொண்டான் என்ற செய்தியைச் சிலர் நம்பவே இல்லை.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு இக்கோரன் முழுமையாக மாறிவிட்டான். குழந்தை, குடும்பம் என்று வந்தவுடன் அவன் மது அருந்துவதை முழுமையாக நிறுத்திவிட்டான். அவன் தன்னுடைய வாழ்க்கை முறையையே முற்றிலுமாக மாற்றிக் கொண்டான் என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.