கிராமத்துக் காதல் - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7177
ஆனால், அவளுடைய கண்கள் 'அவனை'க் கண்டுபிடித்து விட்டது. அவளுடைய மனதில் பழைய நினைவுகள் அடுத்தடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றன. மலை அடுக்குகளில் மோதி தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கும் இடி முழக்கத்தைப் போல சில வார்த்தைகள் அவளுடைய இதய நரம்புகளில் முழங்கிக் கொண்டேயிருக்கின்றன. நடவடிக்கையில் அவள் மீண்டும் அன்றைய சிறு பெண்ணாக மாறுகிறாள். எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்ற இடைப்பட்ட காலங்களைப் பின்னால் தள்ளிவிட்டு அவளுடைய நினைவுகள் ஆழமான ஒரு தாழ்வாரத்தை நோக்கிப் பாய்கிறது. மனதிற்குள் எழுந்த கிளர்ச்சியால் உண்டான எழுச்சியுடன் அவள் புன்னகை செய்தவாறு தனக்குள் கூறிக் கொள்கிறாள்: ‘என்னோட காதல் பூங்காவனத்தில் முதன் முதலாக நுழைந்து என்னை ஆட்கொண்ட திருடா, நான் உன்னைத் திரும்பவும் பார்த்துட்டேன். நீ ஏமாற்றினதை நான் எப்பவும் மறக்கமாட்டேன். ஆனா, என்னை நீ பார்க்கல. பார்க்கக்கூடாதுன்றதுதான் என்னோட விருப்பம். நாம இப்படி தனித்தனியாவே இருப்போம்.’
காலம் முகத்தின் சதையில் எவ்வளவோ புதிய கைவேலைகளைக் காட்டியிருந்தாலும், தன்னை முதன் முதலாக முத்தமிட்ட ஆணை ஒரே பார்வையில் அடையாளம் கண்டுபிடிக்கப் பெண்ணுக்குப் பிறவியிலேயே ஒரு திறமை இருக்கிறது.
மலரைப் பறிக்கச் சென்ற மனைவியை எதிர்பார்த்து அந்த ஆற்றின் கரையில் நின்றிருந்த ரவீந்திரனை, அருகிலிருந்த ஒரு குடிசையின் ஜன்னல் வழியாக இரண்டு கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.
ரவீந்திரன் தொடர்ந்து சிந்தனையில் மூழ்கியிருந்தான்: 'அடடா! வாழ்க்கைன்றது எவ்வளவு அழகான ஒரு தோட்டம்! அதன் பரிணாம தன்மையும் புதிரும் தான் அதைப் பெரிதாக வணங்கக் கூடியதாகவும் பெருமைக்குரியதாகவும் ஆக்கியவை. என்னோட வாழ்க்கைன்ற கவிதை நூலின் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறப்போ, ஒரு காதல் பாடலின் ஆங்காங்கே காணாமல் போன சில வரிகளை நான் பார்க்குறேன். தெளிவற்ற அந்த வரிகள் ஒரு கவிஞனின் திறமையுடன் மீண்டும் இணைக்கப்படும் போது இப்படிப் படிக்கலாம்.
ஆடும் காட்டுக் கொடிகளுக்கிடையில்
உணர்ச்சிகள் புரளும் இதயத்துடன் நான்
அவள் குளிரலை வீசும் மனதுடன்
தினமும் வருவாள் ஆற்றின் கரைக்கு..
குளிர்நிலவு உயரத்தில் காயும்
தெளிந்த வெண்மணலில் இருக்கும் அவளின்
அமுதம் பொழியும் புதுப் புன்சிரிப்பில்
இழக்கவே, பொழுதென்ற ஒன்று அழியும்...'
பக்கத்தில் ஒரு பேச்சுச் சத்தம் கேட்டு ரவி பாட்டை நிறுத்திவிட்டு அங்கு திரும்பிப் பார்த்தான். பத்மினி மலரைப் பறித்து திரும்பி வந்து கொண்டிருந்தாள். அவளுடன் ஒரு சிறுவனும் இருந்தான். அவள் அவனுடன் பேசி, சிரித்துக் கொண்டே அருகில் வந்தாள். சிறுவனின் கை நிறைய மேத்தோன்றில் பூக்கள் இருந்தன.
பத்மினி அந்தச் சிறுவனின் கையைப் பிடித்து, ரவியின் அருகில் வந்தவுடன் கேட்டாள்: "இவனை உங்களுக்குத் தெரியுமா?"
ரவி ஆச்சரியத்துடன் அந்தச் சிறுவனின் முகத்தைப் பார்த்தவாறு ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்: "இல்ல..."
பத்மினி சொன்னாள்: "இதோ... இது நீங்களேதான்" அவள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு சொன்னாள்: "என்ன ஒற்றுமை! நான் முதல்ல பார்த்தப்போ ஆச்சரியத்துல மூழ்கிட்டேன். உங்களோட பன்னிரண்டாம் வயசுல எடுத்த ஒரு புகைப்படத்தை முன்னாடி ஒரு நாள் எனக்குப் பரிசாகத் தந்தீங்கள்ல? அந்தப் புகைப்படம் உயிரோடு எழுந்து வந்துச்சோன்னு எனக்கு சந்தேகமே வந்திருச்சு. இங்க பாருங்க... அதே கண்கள், அதே மூக்கு, அதே முகம், அதே நடவடிக்கை... இப்படியெல்லாம் ஒரே மாதிரி இருக்கமுடியுமா என்ன? நான் மலர் பறிக்க முயற்சி பண்ணினப்போ அவன் ஓடி வந்து எனக்கு உதவினான். அந்த உயர்ந்த சுவர் மேல ஏறி எவ்வளவோ பூக்களைப் பறிச்சுத் தந்தான். தைரியசாலி பையன்!"- அவள் அந்தச் சிறுவனின் முகத்தைப் பிடித்து உயர்த்தி, அன்பு பொங்கக் கேட்டான்: "தம்பி, உன் பேர் என்ன?"
அவன் மிடுக்காக முகத்தை உயர்த்திக் கொண்டு சொன்னான்: "ராகவன்... பெரியவங்க என்னை இக்கோரன் பையன்னும் கூப்பிடுவாங்க."
"உன் அம்மா பேரு?"
"மாளு."
அவனைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ரவீந்திரனைச் சுட்டிக் காட்டிக் கொண்டு அவன் சொன்னான்: "அய்யா... சிகரெட் சாம்பல் விழுந்து உங்களோட சட்டை பொசுங்குது பாருங்க..."
ஒரு கனவிலிருந்து எழுவதைப்போல ரவி அதிர்ச்சியடைந்து, தன்னுடைய சட்டையின் கீழ்ப்பகுதியை உதறி தீயை அணைத்தான். சட்டையில் ஒரு ரூபாய் அளவுக்கு வட்டமாகக் கரிந்து போயிருந்தது.
பத்மினி ரவீந்திரனை அன்புடன் கோபித்தாள்: "இப்படியா சுய நினைவே இல்லாம நடந்துக்கிறது! சிகரெட்டிலிருந்து நெருப்பு விழுந்து இந்த அளவுக்கு வட்டமா எரியிற அளவுக்குத் தெரியாமலா இருப்பாங்க!"
அவள் சிறுவனை மெதுவாக அணைத்தவாறு கேட்டாள்: "ராகவன், உனக்கு எத்தனை வயசாச்சு?"
"பன்னிரண்டு..."- அவன் மலர்களை அவளிடம் நீட்டியவாறு சொன்னான்: "இதை வாங்கிக்கங்க. நான் போகணும். அப்பா தோட்டத்துல இருந்து வர்ற நேரமாச்சு."
பத்மினி பூக்களை வாங்கிவிட்டு, தன் கணவனிடம் சொன்னாள்: "இவனுக்கு ஏதாவது கொடுக்கணும்."
ரவீந்திரன் தன் கைகளை மெதுவாக பாக்கெட்டிற்குள் விட்டு, ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து, அந்தச் சிறுவனிடம் கொடுத்தான். முதலில் அவன் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்தான். ரவீந்திரன் அந்த நோட்டை அவனுடைய கையில் திணித்தான்.
பத்மினி ஆச்சரியத்துடன் தன் கணவனின் முகத்தைப் பார்த்து ஆங்கிலத்தில் கூறினாள்: "என்ன, அஞ்சு ரூபாய் நோட்டா? நீங்க என்ன தூங்குறீங்களா?"
ரவி அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. இதற்கிடையில் ராகவன் ஓடி மறைந்திருந்தான். ரவி கண்களை இமைக்காமல் தூரத்தில் பார்த்தபடி ஒரு பிணத்தைப் போல அதே இடத்தில் நின்றிருப்பதைப் பார்த்து, பத்மினி அவனைப் பிடித்து குலுக்கிக் கொண்டு கேட்டாள்: "உங்களுக்கு என்னஆச்சு? வாங்க... மாலை மயங்கப் போகுது. நாம திரும்பிப் போகணும்ல?"
"ம்..."- ரவி கனவில் நடக்கும் ஒரு மனிதனைப் போல நடந்தான். அவர்கள் அரை பர்லாங் தூரத்தை அடைவதற்கு முன்பு, அந்தச் சிறுவன் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க அவர்களை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான். சிறுவன் ரவியின் அருகில் வந்து, "அம்மா, என் மேல கோபப்பட்டாங்க. இதை உங்ககிட்ட தரச் சொன்னாங்க."
அவன் ஒரு சிறு பேப்பர் பொட்டலத்தை ரவியின் கையில் தந்துவிட்டு, அழ ஆரம்பித்தான்.
பத்மினி சற்று தூரத்தில் நிறைய மலர்களுடன் நின்றிருந்த ஒரு கொன்னை மரத்தை ஆர்வத்துடன் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். திரும்பியவாறு சிறுவன் மீண்டும் தன் கணவனின் அருகில் இருப்பதைப் பார்த்ததும் சிறிது சந்தேகத்துடன் அவர்களுக்கு அருகில் வந்தாள்.