கிராமத்துக் காதல் - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7176
அவங்களோட வீட்டையும் நிலத்தையும் எடுத்து நாங்க இங்கே வசிக்க ஆரம்பிச்சோம். சீக்கிரமே உங்க தோட்டத்துல ஒரு ரப்பர் வெட்டுற கூலிக்காரனா என்னை நீங்க சேர்த்துக்கிட்டீங்க. எட்டு வருடங்கள் ஓடிருச்சு. இப்போ நான் மேஸ்திரி ஆயிட்டேன். இதுதான் என்னோட கதை."
வெள்ளைக்காரர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு கேட்டார்: "நீ மாளு மேல் உண்மையாவே அன்பு வச்சிருக்கியா?"
"அவ நல்ல ஒரு பெண்."
"குழந்தை?"
"ராகவன் என் உயிர்."
"நான் ஒரு நல்ல சந்தோஷமான விஷயத்தைச் சொல்றதுக்குத்தான் உன்னை இங்கே வரவழைச்சேன். கோழிக்கோடு ரவீந்திரன்ற பெரிய பணக்காரனைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கியா? அவருக்கு குழந்தைகள் எதுவும் இல்ல. சமீபத்துல அவர் இங்கே வந்திருக்குறப்போ, உன் மகனைப் பார்த்திருக்கார்-. என்ன காரணத்தாலோ உன் மகன் மேல அவருக்கு ஒரு விருப்பம் உண்டாயிடுச்சு. உன் அதிர்ஷ்டம்தான்னு அதைச் சொல்லணும். இக்கோரா, அவனை அவர் வாங்கப் போறதா என்கிட்ட சொன்னார். உங்களுக்குப் பெரிய ஒரு தொகையை அவர் அதுக்கு பதிலா தருவார். சம்மதம்தானே இக்கோரா?"
இக்கோரன் அமைதியாக இருந்தானே தவிர, பதிலென்று எதுவும் கூறவில்லை.
"என்ன, உனக்குக் கிடைச்சிருக்கிறது பெரிய அதிர்ஷ்டம்தானே, இக்கோரன் மேஸ்திரி?"- வெள்ளைக்காரர் சிரித்துக் கொண்டே இக்கோரனின் தோளில் தட்டினார். ஆனால், இக்கோரனின் முகத்தில் சிறிது கூட மலர்ச்சி உண்டாகவில்லை. சிறிது வெறுப்பும் மனஉறுதியும் கலந்த குரலில் அவன் பதில் சொன்னான்: "இதைச் சொல்றதுக்குத்தான் அய்யா, நீங்க என்னை இங்கே அழைச்சிருந்தீங்கன்னா, அதுக்காக நான் ரொம்பவும் வருத்தப்படுறேன். என் தங்க மகனை விற்று, அதுனால கிடைக்குற பணத்தை வச்சு நாங்க சந்தோஷமா வாழ வேண்டாம். அந்த சந்தோஷம் எந்தக் காலத்திலயும் என் மகனைக் கொஞ்சுகிற சந்தோஷத்தைத் தராது. கடவுள் அருளால இன்னைக்கு நாங்க மூணு பேரும் சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். சாகுறது வரை இப்படியே வாழ்ந்தால் போதும் எங்களுக்கு."
வெள்ளைக்காரர் அதைக் கேட்டு செயலற்று உறைந்துவிட்டார்.
வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிராமத்து மனிதன் தேடிவரும் ஒரு மிகப்பெரிய தொகையை வேண்டாம் என்று தூக்கி எறிவதா? திரு.பர்ட்டன் இக்கோரனின் முகத்தை உற்றுப் பார்த்தார். அங்கு எந்தவித உணர்ச்சி வேறுபாடும் இல்லை.
சிறிது நேரம் தீவிர சிந்தனையில் எதுவும் பேசாமல் இருந்த திரு.பர்ட்டன் அமைதியான, அதே நேரத்தில் மிடுக்கான குரலில் சொன்னார்: "இப்படியொரு பதிலை நீ சொல்வேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல இக்கோரா! உன் மகனை விலைக்கு விற்கணும்னு மட்டும்தான் நான் சொல்றேன்னு நீ தப்பா நினைச்சிட்டே"- வெள்ளைக்காரர் வேறொரு கோணத்தில் பேச்சைத் தொடர்ந்தார்: "கோழிக்கோட்டுல இருக்குற அநதக் கோடீஸ்வரருக்குப் பிள்ளைகள் இல்ல. உன் மகனைப் பார்த்ததும் அவருக்கு ஒரு பிரியம் தோணிருச்சு. உங்க இந்து மதத்துல முன்பிறவி தொடர்பு போல உள்ள ஒரு பிரியம்..."
வெள்ளைக்காரர் தான் பயன்படுத்திய உவமையின் பெருமையை தனக்குத்தானே பாராட்டிக் கொண்டு புன்னகைத்தார். பிறகு சொன்னார்: "உன் மகனை அவர்கிட்ட அனுப்பினால் அவர் அவனை ஒரு இளவரசனைப் போல வளர்ப்பார். உயர்ந்த அளவுல படிக்க வைப்பார். ஒரு வேளை வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சு கூட அவர் படிக்க வைக்கலாம். உன் மகன் இந்தச் சின்ன கிராமத்துல வளர்ந்தால், யாருமே ஒரு பொருட்டா நினைக்காத ஒரு விவசாயியாகவோ, இல்லாட்டி ஒரு கூலிக்காரனாகவோதான் வரமுடியும். அதுனால உன் மகனை அங்கே அனுப்பி வைக்கணும்ன்றதுதான் நான் சொல்ல விரும்புறது. நீங்க சந்தோஷமா வாழுறதுக்கு கொஞ்சம் பணமும் கிடைக்கும். ஆயிரம் ரெண்டாயிரம் இல்ல. பத்தாயிரம் ரூபாய் வேணும்னா கூட, நான் வாங்கித் தர்றேன். என்ன, உன் மகனைப் பெரிய மனிதனும் பணக்காரனுமான ஒரு அதிகாரியாகவோ முதலாளியாகவோ பார்க்க இக்கோரன் மேஸ்திரி, உனக்கு விருப்பமில்லையா?"
இக்கோரன் எதுவும் பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"சொல்லு, மேஸ்திரி... எதையும் சிந்திச்சுப் பார்க்காம ஒரு முடிவுக்கு வந்துடக்கூடாது. நல்லா சிந்திச்சுப் பாரு. உன்னைத் தேடி மிகப்பெரிய அதிர்ஷ்டம் வந்திருக்கு...."
இக்கோரன் வருத்தம் கலந்த குரலில் சொன்னான்: "எஜமான். நானும் என் பெண்டாட்டியும் குழந்தையும் சந்தோஷமா முழு மன அமைதியோட வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இதைவிட பெரிய அதிர்ஷ்டம் எங்களுக்கு எதுக்கு? அதுனால இதுக்கு மேல அந்த விஷயத்தைப் பற்றி நீங்க என்கிட்ட பேச வேண்டாம், முதலாளி..."
வெள்ளைக்காரர் கோபம் கலந்த குரலில் சொன்னார்: "நீ ஒரு முட்டாள். அடி மடையன். சிந்திக்கத் தெரியாதவன். இல்லாட்டி இப்படிப் பேசுவியா?"
அதற்கு இக்கோரன் சொன்னான்: "எஜமான், நான் முட்டாள்தனமா பேசல. நல்லா, யோசிச்சுப் பார்த்துத்தான் பேசுறேன். சும்மா ஏதோ கிடைக்குதேன்னு வாங்கிச் சாப்பிட்டு நடக்குற ஆள் இல்ல நான். கிராமப்புறத்துல கஷ்டப்பட்டு வேலை செய்து கிடைக்கிறதுல சந்தோஷமா வாழ்றவங்க நாங்க. நினைவு தெரிஞ்ச காலம் முதல் உடல் உழைப்பு மூலம் கிடைக்கிறதை வச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கிறவன் நான். அந்த சந்தோஷம் வேற வகையில கிடைக்கும்னு நான் நினைக்கல. இப்போ நாங்க திருப்தியா, சந்தோஷமா வாழறோம். இனிமேலும் இப்படியே வாழ்ந்தா போதும். லட்சக்கணக்கிலோ, கோடிக்கணக்கிலோ பணம் கிடைச்சு... நாங்க அதை வச்சு என்ன செய்யப் போறோம்?"
வெள்ளைக்காரருக்கு இப்போது தர்ம சங்கடமான நிலையாகிவிட்டது. வாயை மூடக்கூடிய அளவிற்கு இக்கோரன் பேசிய கிராமத்து தத்துவஅறிவைக் கேட்டு, புதிதாக வேறு எதுவும் பேசத் தோன்றாமல் சிறிது வெறுப்புடனும், ஏமாற்றத்துடனும் அவர் அவனைப் பார்த்துக் கேட்டார்: "அப்படின்னா நீ இதைப் பெருசா நினைக்கல... அப்படித்தானே?"
வெள்ளைக்காரனின் குரலில் உண்டான மாற்றத்தைப் பார்த்து இக்கோரனின் முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவன் சொன்னான்: "எஜமான், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். ஒருவேளை மாளுவிற்கு இந்த விஷயத்துல சம்மதம் இருந்தா, பையனைக் கொண்டு போகலாம்..."
அதைக் கேட்டு திரு.பர்ட்டனின் முகத்தில் பிரகாசம் உண்டானது. அவர் சொன்னார்: "அப்படின்னா பையன்மேல அவளுக்குத்தான் உரிமை அதிகம்னு உன் வார்த்தைகள்ல இருந்து தெரியுதே!"
இக்கோரன் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. வெள்ளைக்காரர் அப்போதே மாளுவை அழைத்துக் கொண்டு வரும்படி ஆளை அனுப்பினார்.
வெள்ளைக்காரர் அவளிடம் எல்லா விஷயங்களையும் விளக்கிச் சொன்னார். கடைசியில் அவளைப் பார்த்துக் கேட்டார்: