கிராமத்துக் காதல் - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7176
ரவி அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தான். தான் கொடுத்த ஐந்து ரூபாய் தவிர, வேறு சில பொருட்களையும் அவன் பார்த்தான். ஐந்து ரூபாய் நோட்டும் ஒரு தங்க மோதிரமும்.
அவனுடைய இதயத்தில் கடந்த கால ஞாபகம் வந்து ஆக்கிரமித்தது. சிறிதும் அடக்க முடியாத அந்த உணர்ச்சியின் உந்துதலால் பாதிக்கப்பட்ட ரவி குலுங்கிக் குலுங்கி அழுதான். சிறுவனை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவன் புலம்பினான்: "என் மகனே, செல்லமே, நீ இவ்வளவு நாட்களும் எங்கேடா மறைஞ்சிருந்தே?"
பத்மினி தன் கணவனின் சற்றும் எதிர்பார்த்திராத நடவடிக்கைகளைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள்: "என்ன, பைத்தியக்காரத்தனமா நடந்துக்குறீங்க?"
நடுத்தர வயது உள்ள ஒரு கிராமத்துப் பெண் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் ரவி அதிர்ச்சியடைந்தான். அவள் சிறுவனின் கையைப் பிடித்துக் கொண்டு, ரவியைப் பார்த்து கடுமையான குரலில் சொன்னாள்: "குழந்தையை விடுங்க..."
ரவி அவளுடைய முகத்தை பரிதாபமாகப் பார்த்துச் சொன்னான்: "மா...(அந்தப் பெயரை முழுமையாகக் கூற அவனால் முடியவில்லை) நீ என்னை மன்னிக்கமாட்டியா? இவன் என் மகன்...."
அந்த வார்த்தைகளைக் கேட்டு பத்மினிக்கு உயிரே போவது போல இருந்தது. அவள் ஓடி "கிருஷ்ணா...கிருஷ்ணா..." என்று கார் டிரைவரை உரத்த குரலில் அழைத்தாள். "கிருஷ்ணா ஓடிவா. இவரை இங்கேயிருந்து அழைச்சிட்டு போ" என்றாள்.
"உங்க மகனா?"- அவள் கிண்டலுடன் கேட்டாள்: "நீங்க யாரு? நீங்க இதுவரை எங்கேயிருந்தீங்க?"
மாளு சிறுவனைப் பிடித்து இழுத்தாள். ரவியும் அவனை விடவில்லை. "விடு... இவன் என் மகன்" என்றான் அவன்.
மாளு கோபத்துடன் சொன்னாள்: "உங்களைப் பார்க்குறப்போ பைத்தியம்னு தோணுது. ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமா நடந்துக்குறீங்க? குழந்தையை விடுங்க. மரியாதையா சொல்றேன்."
ஆரவாரத்தைக் கேட்டு கிராமத்து ஆட்களில் சிலர் அங்கு வந்து சேர்ந்தார்கள். நகரத்திலிருந்து வந்த அந்தப் பணக்காரனின் செய்கைகளைப் பார்த்து அவர்கள் விழுந்துவிழுந்து சிரித்தார்கள். அவர்களில் சிலர் முன்னோக்கி வந்தார்கள். "இவன் இக்கோரனோட மகன். உங்க மகன் இல்ல" என்று நேரடியாக ஐடென்டிஃபிக்கேஷன் சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள். ரவீந்திரன் அவர்களை அடித்து விரட்டுவதற்காகத் தன் கையை உயர்த்திக் கொண்டு கத்தினான்: "தள்ளி நில்லுங்க. என் மகனை நான் அழைச்சிட்டு போகப் போறேன்."
காக்கி நிறத்தில ஒரு கால் சட்டையும் கிழிந்த ஒரு வலை போட்ட பனியனும் அணிந்த, தலையில் துண்டைக் கட்டிய ஒரு பலசாலியான மனிதன் கிராமத்து ஆட்களைத் தள்ளிக் கொண்டு முன்னால் வந்து உரத்த குரலில் சொன்னான்: "என் மகனை விடு.."
ரவியின் கை தளர்ந்தது.
"எனக்கு மூணு கோடி ரூபாவுக்கு சொத்து இருக்கு. அதுல பாதியை இவனுக்குத் தர்றேன். பையனை எனக்கு விட்டுத்தா இக்கோரா."
"ஓ... ஒரு கோடீஸ்வரர் வந்திருக்காரு"- பையனை மாளுவின் கையில் தந்த இக்கோரன் சொன்னான்: "குழந்தையை வேகமா வீட்டுக்குக் கொண்டு போ. இவன் பைத்தியம் மாளு. இவன் பைத்தியம்..."
தர்மசங்கடமான நிலையில் உள்ள ஒரு பைத்தியத்தைப் போலவே ரவி முணுமுணுத்தான்: "ஆமா... நான் பைத்தியம்தான்... நான் பைத்தியமா ஆகப்போறது உறுதி."
டிரைவர் கிருஷ்ணனும் பத்மினியும் ஒருவிதமாக ரவியைப் பிடித்துத் தாங்கியும் இழுத்தும் காரில் கொண்டு போய் உட்கார வைத்தார்கள்.
ரவிக்கு சிறிதும் எதிர்பாராமல் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வெள்ளைக்காரர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பங்கு பெற முடியாமல் அவர்கள் திரும்ப வேண்டி வந்தது. திரு.பர்ட்டனுக்கு அதனால் மிகவும் ஏமாற்றமும் வருத்தமும் உண்டானது. அவர் அவர்களுடன் நகரம் வரை சென்றார். ஆனால், அன்றே முக்கத்திற்குத் திரும்ப ரவி அவரை விடவில்லை. "மிஸ்டர்.பர்ட்டன்... நீங்க போகக்கூடாது. உங்களால எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியதிருக்கு" என்ற ரவியின் வேண்டுகோளைக் கேட்டு பர்ட்டன் அன்று ராஜேந்திர விலாஸத்தில் தங்கச் சம்மதித்தார்.
14
அன்று இரவு ரவீந்திரன் திரு.பர்ட்டனின் தன்னுடைய வாழ்க்கைக் கதை முழுவதையும் மனம் திறந்து கூறினான். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் தான் முக்கத்திற்கு ஓய்வு எடுப்பதற்காகச் சென்றதையும் தன்னுடைய இளமை வேட்கையால் தற்காலிகக் காதலில் ஈடுபட்டதையும், பிறகு அதைப் பற்றி முழுமையாக மறந்து போனதையும் ஒரு கதை படிப்பதைப் போல அவன் திரு.பர்ட்டனிடம் கூறினான். "மிஸ்டர்.பர்ட்டன், அந்தச் சிறுவன் என் பையன்றதை வெட்கத்தை விட்டு நான் சொல்றேன். அவனை ஏத்துக்குறதுக்கோ இல்லாட்டி தத்து எடுத்துக்குறதுக்கோ- நான் தயாரா இருக்கேன். என் சொத்துல பாதியை என்ன முழுசையே கூட அவனுக்குத் தர நான் தயாரா இருக்கேன். அதைப் பற்றி பேசுறதுக்குத்தான் நான் உங்களை இங்கே பிடிச்சு தங்க வச்சிருக்கேன். அந்தப் பையனோட அப்பான்னு சொல்லிக்கிர்ற இக்கோரன் உங்கத் தோட்டத்துல வேலை பார்க்குற ஒரு மேஸ்திரின்னு நான் கேள்விப்பட்டேன். அதுனால நீங்க சொன்னா அவன் கட்டாயம் கேட்பான்" என்றான் அவன்.
திரு.பர்ட்டன் ரவீந்திரனைத் தேற்றி தைரியம் சொன்னார்: "அந்த விஷயத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்" என்றார் அவர்.
மறுநாள் சாயங்காலம் பர்ட்டன் இக்கோரனைத் தன்னுடைய பங்களாவுக்கு வரவழைத்தார்.
திரு.பர்ட்டன் நல்ல முறையில் மலையாளம் பேசக்கூடிய ஒரு ஐரோப்பியர். அவர் இக்கோரனிடம் அவனுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார்.
இக்கோரன் எல்லா விஷயங்களையும் விளக்கமாகச் சொன்னான். திருமணத்தைப் பற்றி அவன் சொன்ன போது, வெள்ளைக்காரர் அர்த்தம் நிறைந்த புன்னகையுடன் கேட்டார்: "நீ மாளுவைத் திருமணம் செய்ததற்குக் காரணம்?"
இக்கோரன் சிறிதும் தயங்காமல் பதில் சொன்னான்: "அய்யா, எங்களோட சாஸ்திரத்துல ஒரு சொல் இருக்கு. ஆம்பளைன்னு ஒருத்தன் இருந்தான்னா, அவனுக்குப் பக்கத்துல அவனைப் பார்த்துக்கிறதுக்கு ஒருத்தி கட்டாயம் இருக்கணும். எனக்கு ஒரு பெண் தேவைப்பட்டது. நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுல என்ன புதுமை இருக்கு?"
அதற்குப் பிறகு வெள்கைக்காரருக்கு என்ன கேட்பது என்றே தெரியவில்லை. "சரி... பிறகு..."- அவர் தன்னுடைய கதையைத் தொடரும் படி இக்கோரனிடம் சைகை செய்தார்.
"திருமணம் முடிஞ்சு நான் அவளையும் அழைச்சுக்கிட்டு என் ஊருக்குப் போயி நான்கு வருடங்கள் இருந்தேன். அப்போ இங்கேயிருந்த மாளுவோட மாமாவும் அத்தையும் குழந்தையும்- மூணு பேரும் இரண்டே வாரங்கள்ல அம்மை நோய் வந்து செத்துப் போனாங்கன்ற செய்தி காதுல வந்து விழுந்துச்சு. அவளுக்குச் சொந்தம்னு வேற யாரும் இல்ல. அதனால நாங்க இங்கே திரும்பி வந்தோம்.