ஹரித்துவாரில் மணியோசை - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7360
உள்ளுக்குள் அவள் மிகவும் நல்லவள். ஆணும், பெண்ணுமாக அவளுக்கென்று இருக்கக்கூடிய ஒரே வாரிசு சுஜாதான். அமிர்தசரஸ் பொற்கோவிலில் அய்யாயிரத்தொரு ரூபாய் நேர்ந்து அதற்குப் பிறகு பிறந்தவள் அவள். பணம் கொடுத்து வாங்கப்பட்ட பெண் அவள்.
“நான் பகீரதனோட தேர் சத்தத்தைக் கேக்குறேன்”- வண்டி ரூர்க்கியை அடைந்தபோது ரமேஷன் சொன்னான்.
நகரத்தின் வழியாக கங்கை கலங்கலுடன் ஓடிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். ஓரத்தில் நகரவாசிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ரூர்க்கியை விட்டு ஹரித்துவாரை நோக்கி வண்டி மீண்டும் புறப்பட்டது. வண்டியின் இரைச்சலில் இப்போது யாக மந்திரங்களின் இனிமை இருந்தது. வண்டியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த புகை ஹோம குண்டங்களிலிருந்து வெளியேறும் புகையா என்ன? மலைகளின் அடிவாரத்தில் சங்கொலி ஒலிப்பதைப் போல் ரமேஷனுக்குத் தோன்றியது. அவன் மவுனமான மனிதனாக ஆனான்.
முஸுரி எக்ஸ்பிரஸ் ஹரித்துவாரில் மெதுவாக வந்து நின்றது.
5
பறந்து கொண்டிருந்த தலைமுடியைச் சரிசெய்த சுஜா வண்டியை விட்டு கீழே இறங்கினாள். ஒரு கூலியாள் ஓடிவந்தான். சூட்கேஸை அவன் கையில் தந்த ரமேஷன் எதையாவது மறந்துவிட்டோமா என்று பார்த்தான். அவன் இழுத்து வீசி எறிந்த சிகரெட் துண்டுகள், சுஜா தின்று கீழே போட்ட சாக்லெட் பேப்பர்கள், அவர்கள் தேநீர் அருந்திய பிறகு போட்ட பேப்பர் டம்ளர்கள்... இவை தவிர அங்கு வேறெதுவும் இல்லை. ரமேஷனும் வண்டியை விட்டு இறங்கினான். அவன் ஹரித்துவார் மண்ணில் கால் வைத்தான்.
ரமேஷன் நான்கு பக்கங்களிலும் கண்களை ஓட்டினான். ஹரித்துவாரைப் பார்க்க வேண்டும் என்ற வேட்கை அவனுடைய கண்களில் முழுமையாகத் தங்கியிருந்தது. ஹரித்துவாரின் வாசனையை முகர்ந்து பார்ப்பதற்காக அவனுடைய நாசித் துவாரங்கள் துடித்தன. ஹரித்துவாரின் ஒலியை கேட்பதற்காக அவனுடைய செவிகள் காத்திருந்தன. ரமேஷன் பார்த்தது ஒரு அசுத்தமான சிறு புகைவண்டி நிலையம். மசாலா சேர்ந்த கடலையை விற்றுக் கொண்டிருந்தான் ஒரு வயதான கிழவன். அழுகிப்போன பழங்கள் சிதறிக் கிடக்கும் ஒரு தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான் ஒரு பழ வியாபாரி. தரையிலும் பெஞ்சிலும் இங்குமங்குமாய் சிதறிப்போய் பகல் வெப்பத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர் பிச்சைக்காரர்கள்.
வண்டியை ஆர்வத்துடன் பார்த்தவாறு கூலிகள் வந்து நின்றார்கள். ரமேஷனையும் சுஜாவையும் விட்டால் அங்கு வண்டியை விட்டு இறங்கியது நான்கைந்து கிராமத்து மனிதர்கள் மட்டுமே. அவர்களின் கையில் பெட்டிகள் எதுவும் இல்லை. சில மூட்டைகளை மட்டும் வைத்திருந்தார்கள். ப்ளாட்ஃபாரத்தில் சுவர்களில் விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தன. பெரும்பாலும் அவை திரைப்பட விளம்பரங்கள்தான். மும்தாஜ், ஷர்மிளா, டாகூர், மாலா சின்ஹா, ஷம்மிகபூர்... ஹரித்துவாரையும் அலங்கரித்துக் கொண்டிருப்பவை திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள்தானா? அங்கு எந்த இடத்திலும் ஒரு கடவுள் படத்தைக் கூட பார்க்க முடியவில்லை.
“ஹரித்துவாரில் கடவுள்கள்.”
ரமேஷன் நடனமாடிக்கொண்டிருந்த ஷம்மிகபூரையும், குளியல் ஆடையுடன் நின்று கொண்டிருந்த மும்தாஜையும் சுட்டிக்காட்டி, “எங்கே போனாலும் இவங்களைப் பார்க்கலாம். டில்லியின் எல்லாத் தெருக்களிலும், சிறுநீர் கழிக்கும் இடங்களில், பஸ் நிலையங்களில்... எல்லா இடங்கள்லயும் இவங்க இருப்பாங்க” என்றான்.
“கடவுள்களை விட நமக்கு இன்னைக்கு தேவை திரைப்பட நட்சத்திரங்கள்தான், ரமேஷ். அவங்க நம்மை மகிழ்ச்சிப் படுத்துறாங்க. தெய்வங்கள் நம்மளை பயமுறுத்தவில்லே செய்யுது?”
சுஜா சொன்ன கருத்து உண்மைதானே! தெய்வங்கள் எப்போதும் மனிதர்களை ஏமாற்றவே செய்கின்றன. ஷம்மிகபூரும், மும்தாஜும் சந்தோஷம் உண்டாக்குகிறார்கள். ஷம்மிகபூர் நடனமாடும் போதும் மும்தாஜ் குளியல் கோலத்துடன் பாட்டு பாடும்போதும் ஒன்றுமில்லாதவர்களும் கஷ்டப்படுபவர்களும் தங்களின் அவல நிலையை மறக்கவல்லவா செய்கிறார்கள்?
ரமேஷனும் சுஜாவும் புகைவண்டி நிலையத்திற்கு வெளியே வந்தார்கள். வெளியே குண்டும் குழியுமாக ஒரு பாதை இருந்தது. அது தெருவில் இருந்த ஒரு கேட்டில் போய் முடிகிறது. கேட்டிற்கு வெளியே சைக்கிள் ரிக்ஷாக்காரர்களும் குதிரை வண்டிக்காரர்களும் வாடகைக் கார் ஓட்டுபவர்களும் சலசலத்துக் கொண்டிருந்தனர்.
“பாபுஜி, ரிக்ஷா...”
“பாபுஜி, டாக்ஸி...”
அவர்கள் ரமேஷனையும் சுஜாவையும் வந்து மொய்த்தனர். எல்லாரின் கண்களிலும் ஒரு பரிதாபத்தன்மை தெரிந்தது. சவரம் செய்யாத முகங்களும் பரட்டைத் தலைமுடியும் கொண்ட வறுமையின் பிடியில் சிக்கிய மனிதர்கள் அவர்கள். அவர்களின் எல்லா வாடகைக்கார்களிலும், குதிரை வண்டிகளிலும் ரிக்ஷாக்களிலும் ஏறி பயணம் செய்ய முடிந்திருந்தால்? அந்த வகையில் அவர்கள் எல்லாரையும் திருப்திப்படுத்த முடிந்திருந்தால்? உண்மையாகவே அப்படியொரு காரியம் நடக்கக்கூடாதா என்று ரமேஷன் மனப்பூர்வமாக விரும்பினான்.
“பாபுஜி, என்கூட வாங்க. அருமையான அறை. மின்விசிறி இருக்கு. அறைக்குள்ளேயே குளியலறை இருக்கு.”
பேன்ட்டும், புஷ் சட்டையும் அணிந்த பச்சை நிறக் கண்களைக் கொண்ட ஒரு இளைஞன் சொன்னான். ஏதோ ஒரு ஹோட்டலின் தரகராக அவன் இருக்கவேண்டும். ஆர்வத்துடன் அவன் ரமேஷனயும் சுஜாவையும் மாறி மாறிப் பார்த்தான். அதற்கிடையில் வேறு சில ஹோட்டல்கள், சத்திரங்கள் ஆகியவற்றின் தரகர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளிக் கொண்டார்கள்.
“தஃபா ஹோ ஜாவோ.”
சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு பின்னால் வந்த கூலியாள் பஞ்சாபியில் வாய்க்கு வந்தபடி அவர்களைத் திட்டினான். தரகர்களைக் கடந்து வெளியே வந்த அவன் கேட்டான். “ஒரு ஹோட்டல் காட்டட்டுமா பாபு?”
“எங்கே?”
“ஊப்பர் ஸடக்குக்குப் பக்கத்துல, பாபு.”
ஆனால், அந்த ஊப்பர் ஸடக் எங்கே இருக்கிறது?
“நதிக்குப் பக்கத்துலயா?”
“ஆமா, பாபு.”
ஹோட்டல் நதியின் கரையில் இருக்கிறது என்றால் உண்மையாகவே நல்ல விஷயம்தான். எப்போதும் நதியில் ஓடிக்கொண்டிருக்கும் நீரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாமே! உண்ணும்போதும், உறங்கும்போதும் கங்கையின் இசை காதுகளில் முழங்கிக் கொண்டே இருக்கவேண்டும். கூலியாள் அவன் சொன்ன ஹோட்டலை நோக்கி பெட்டிகளைத் தலையில் வைத்துக் கொண்டு நடந்தான். ஹரித்துவார் மண்ணில் ரமேஷனும் சுஜாவும் அவனைப் பின்தொடர்ந்து நடந்தார்கள். அகலம் குறைவான மேடும் பள்ளமுமாக இருந்தது பாதை. பாதையின் ஒரு பக்கத்தில் அனாதைப் பிணங்களைப் போல ரிக்ஷாக்கள் கிடந்தன. இன்னொரு பக்கம் அழுக்கடைந்து போய்க் காணப்படும் சிறுசிறு கடைகள் நெருக்கமாக இருந்தன. கடைகளுக்கு முன்னால் பாப்டி, பல்லா போன்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் இருந்தார்கள். நடந்து செல்லும்போதே, சத்திரங்களின் தரகர்கள் மீண்டும் அவர்களை நெருங்கி வந்தார்கள். கூலியாள் அவர்களை வாய்க்கு வந்தபடி பேசி விரட்டினான்.
இதுதான் ஹரித்துவாரா? ரமேஷன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். பிணங்களைப்போல பின்தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தத் தரகர்கள், நான்கு பக்கங்களிலும் அலைந்து கொண்டிருக்கும் இந்த ரிக்ஷாக்காரர்கள், இந்த ஒடுக்கலான கடைகள், இந்த மேடும் பள்ளங்களுமான பாதை...