ஹரித்துவாரில் மணியோசை - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7361
“உன்னை என்னால மாற்றவே முடியல ரமேஷ்!”
“நீ எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”
“ம்...”
பேன்ட் பாக்கெட்டில் காலையில் யூஸஃப்ஸராயியில் வாங்கிய சரஸ் அப்படியே இருந்தது. அவன் ஒரு உருண்டையை வெளியே எடுத்தான்.
“இதைக்கொஞ்சம் நிரப்பித்தா. ப்ளீஸ்... பைப் சூட்கேஸ்ல இருக்கு!”
அவள் தரை விரிப்பின்மீது முழங்காலிட்டு அமர்ந்து சூட்கேஸிலிருந்து பைப்பையும் புகையிலையையும் வெளியே எடுத்தாள். கல்லைப் போல இறுகிப்போய்க் கிடந்த சரஸ்ஸை இரண்டு தீக்குச்சிகளுக்கு இடையில் நெருக்கமாக வைத்தவாறு தீப்பெட்டியை உரசி சூடாக்கினாள். சூடாக்கவில்லையென்றால் அது தூளாக மாறாது. தூளாக மாறிய சரஸ்ஸை புகையிலையுடன் சேர்த்து அவள் பைப்பில் நிரப்பினாள்.,
“இந்தா...”
அவன் பைப்பை வாங்கினான். சரஸ்ஸை எப்படி நிரப்புவது என்ற விஷயம் சுஜாவிற்கு நன்றாகவே தெரியும். அவள் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள். பொதுவாகவே அவள் நிறைய வாசிக்கக் கூடியவள்தான்.
அவனைப் பொறுத்தவரையில் சமீப காலத்தில் அவன் எதுவும் படிக்கவில்லை. படிக்கக்கூடிய காலத்தை அவன் கடந்துவிட்டான். இனிமேல் இருக்கும் காலம் தியானத்திற்குரியது. வெறுமனே வாசித்துக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது? புதிய புத்தகங்களைப் பற்றி அவன் தெரிந்து கொள்வதே சுஜா சொல்லிக் கேட்கும்பொழுதுதான்.
பைப்பை எடுத்துக் கொண்டு ரமேஷன் வராந்தாவின் கைப்பிடிக்கு அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு தன் கால்களை கைப்பிடியின் மீது வைத்தவாறு உட்கார்ந்தான். அப்படி உட்கார்ந்திருப்பது அவனுக்கு மிகவும் சுகமாக இருந்தது. பைப்பை வாயில் வைத்துக் கொண்டே அவன் அழைத்தான்: “சுஜா, தீப்பெட்டி...”
லைட்டர் கொண்டு வருவதற்கு அவன் மறந்துவிட்டான். அவள் எங்கிருந்தோ தீப்பெட்டியொன்றை தேடி எடுத்துக்கொண்டு வந்து தந்தாள். பைப் எரிந்தபோது சரஸ்ஸின் வாசனை வராந்தா முழுக்கப் பரவியது. அந்த வாசனையுடன் வேறு எந்த வாசனையுடனும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. அவனை மிகவும் கவர்ந்த மணம் பெண்கள் உபயோகப்படுத்தும் நேஷனல் ஃபைவ் என்ற சென்ட்டுடையதுதான். தன்னுடைய ஒவ்வொரு மயிர்க்கால்களிலும் நெருப்பு உண்டாவதைப்போல் அவன் உணர்ந்தான்.
“யாராவது பார்த்தாங்கன்னா?”
சரஸ்ஸின் வாசனை அங்கு பரவியபோது யாரிடம் என்றில்லாமல் சுஜா கேட்டாள். அவள் நான்கு பக்கங்களிலும் பார்த்தாள். அங்கு யாருமில்லை. கீழே பாதையில் மட்டுமே ஆட்கள் இருந்தார்கள். அரோராவோ வேறு யாருமோ அப்போது அங்கு வந்துவிட்டால்? ஹரித்துவாரில் இருந்துகொண்டு சரஸ் புகைப்பது என்பது சட்ட ரீதியான குற்றச் செயல் மட்டுமல்ல- அது பாவமும் ஆயிற்றே!
“வேண்டாம் ரமேஷ், வேண்டாம்.”
“பிறகு எதுக்கு, நீ பைப்புல நிரப்பித் தந்தே?”
“எனக்கு பயமா இருக்கு.”
“நான் சிறைக்குப் போயிடுவேன்னு பயப்படுறியா? முட்டாளே, கங்கைக் கரையிலே உட்கார்ந்து எவ்வளவு சன்னியாசிகள் கஞ்சா அடிக்கிறாங்கன்னு உனக்குத் தெரியுமா? போதைப் பொருட்களை ஹரித்துவாரில் தடை செய்திருக்கிறது சட்டம் மட்டும்தான். கடவுள் அதைத் தடை செய்யல. நான் கடவுள் பக்கம் இருக்கேன்.”
சுஜா உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்து மீண்டும் வாசிப்பதில் ஈடுபட்டாள். அவ்வப்போது தன்னுடைய கண்களை உயர்த்தி அவள் ரமேஷனைப் பார்த்தாள். அவன் பைப்பை பலமாக இழுத்துக் கொண்டு பாதையை நோக்கிக் கொண்டிருந்தான். பாதையில் படிப்படியாக ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது. வெயில் குறைந்து கொண்டிருந்தது. மரங்களுக்கு அடியில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருந்தது. இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருக்கும் ரிக்ஷாக்காரர்கள்... மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு ஓடிக்கொண்டிருந்த குதிரை வண்டிகள்... பகல் நேரத்திலும் இருளடைந்து கிடக்கும் கட்டிடங்கள்...
இதுதான் ஹரித்துவாரா? மானஸாதேவி, இதுதான் உன்னுடைய ஊரா?
ரமேஷனின் கண்கள் மெதுவாக மூடின. பற்களுக்கிடையிலிருந்து அணைந்து போயிருந்த பைப் மடியில் விழுந்தது.
6
எட்டு மணி ஆனபோது அரோரா கதவைத் தட்டியவாறு அறைக்குள் வந்தான். அவனிடம் ஏதோ ஒரு வாசனை திரவியத்தின் வாசனை அடித்தது.
“டின்னர், சார்?”
“இங்கேயே பரிமாறிட்டா வசதியா இருக்கும்.”
“சரி, சார்...”
மரியாதையுடன் அவன் திரும்பிச் சென்றான். ரமேஷனை தட்சேஸ்வரனாகவும் சுஜாவை சதீதேவியாகவும் அவன் நினைப்பதைப் போலிருந்தது அவனுடைய செயலைப் பார்க்கும்போது.
ரமேஷன் இப்போதும் வராந்தாவில் சாய்வு நாற்காலியில்தான் உட்கார்ந்திருந்தான். அவனுடைய பற்களுக்கிடையில் இறுக்கமாகக் கடித்துப் பிடித்திருந்த பைப் இருந்தது. சரஸ்ஸின் வெள்ளைப் புகை அதிலிருந்து எப்போதும் புறப்பட்டு வந்து கொண்டேயிருந்தது. சுஜா இப்போதும் படித்துக்கொண்டேயிருந்தாள்.
அரோரா மீண்டும் திரும்பி வந்தான். அவன் கையில் மெனு இருந்தது. சுஜா அதை வாங்கிப் பார்த்தாள். அவளுக்கு மிகவும் பிடித்தமான சிக்கன் ஸ்டீக்கோ, அஸ்பராகஸ் சூப்போ அதில் இல்லை. அதற்குப் பதிலாக நானும் சீஸ் குருமாவும் பூரியும் பாஜியும் இருந்தன.
“நானும் சீஸ் குருமாவும்.” சுஜா அரோராவிடம் சொன்னாள். பிறகு அவள் வராந்தா பக்கம் பார்த்து கேட்டாள்: “ரமேஷ், உனக்கு?”
“எனக்கு எதுவும் வேண்டாம்.”
“பசிக்கலையா?”
“இல்ல...”
“எதுவும் சாப்பிடாம இப்படியே இருந்தா?”
அவள் எழுந்து அவனுக்கு அருகில் சென்றாள். இப்போது அவள் அவனுடைய காதலியோ, எதிர்கால மனைவியோ அல்ல. அவனுடைய தாய் அவள்.
“எதுவும் வேண்டாம்.”
“ஒரு சாண்ட்விச்சாவது?”
“வேண்டாம்னு சொல்றேன்ல!”
அவனுடைய குரல் மிகவும் கடுமையாக இருந்தது. அவன் இப்போது அவளுடைய காதலன் அல்ல. பிடிவாதம் பிடிக்கக் கூடிய ஒரு சிறுவன். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சுஜா அந்த மெனு அட்டையைத் திருப்பிக் கொடுத்தாள். அரோரா அதை வாங்கிக் கொண்ட திரும்பிச் சென்ற பிறகு அவள் மீண்டும் தான் அமர்ந்திருந்த நாற்காலிக்குச் சென்று புத்தகத்தைத் திறந்தாள். ஆனா, அவளுக்கு வாசிப்பதில் நாட்டம் செல்லவில்லை.
உணவு பரிமாறுபவன் உணவு கொண்டு வந்தான். தட்டுகளையும் மற்ற பொருட்களையும் டீப்பாயின் மீது வைத்து தள்ளிக் கொண்டு வந்த அவன் சுஜாவின் முன்னால் அதை வைத்தான்.
“ரமேஷ்...”
மீண்டும் அவள் அழைத்தாள். அவன் அவள் அழைத்ததைக் கேட்கவில்லை. அவளுக்குத் தன்னுடைய முதுகைக் காட்டியவாறு கால்களை வராந்தாவின் கைப்பிடியின் மீது தூக்கி வைத்துக் கொண்டு அவன் இப்போதும் புகைபிடித்துக் கொண்டிருந்தான்.
சுஜா நாப்கின்னை எடுத்து தன்னுடைய மடியில் விரித்துக் கொண்டு உணவைச் சாப்பிட ஆரம்பித்தாள். அவளுக்கு நல்ல பசி எடுத்தது. பசி எடுக்கும்போது அவள் சாப்பிடாமல் இருப்பதில்லை. ரமேஷனை எடுத்துக்கொண்டால் அவனுக்குப் பட்டினி கிடப்பதென்பது மிகவும் சர்வ சாதாரணமான ஒரு விஷயம். அவனுக்கு மிகவும் பிடிக்காத ஒரு விஷயம் உணவு சாப்பிடுவது.