ஹரித்துவாரில் மணியோசை - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7361
தட்டுத் தடுமாறி அவன் கீழேயிருந்த பாதைக்கு வந்தான். அங்கு பகலில் பார்த்த ஆட்களின் கூட்டமோ ஆரவாரமோ எதுவும் இல்லை. பாதை எந்தவித சந்தடியும் இல்லாமல் அமைதியாக இருந்தது. ஒரு ஓரத்தில் அனா தையாக இரண்டு மூன்று ரிக்ஷாக்கள் கிடந்தன. நாவல் மரங்களுக்கு அடியில் பிச்சைக்காரர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். தெருவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில் ஊப்பர் ஸடக் வழியாக அவன் நடக்க ஆரம்பித்தான்- எங்கு போகிறோம் என்பது தெரியாமல். அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்த அவனுடைய காலடிச் சத்தத்தைக கேட்ட மரங்களின் உச்சியில் தூங்காமல் விழித்திருந்த சில பறவைகள் ஆரவாரித்தன.
ஊப்பர் ஸடக் ரமேஷனுக்கு முன்னாலும் பின்னாலும் நீண்டு கிடந்தது. முன்பகுதி ஹர்கிபவ்டியிலும் பின்பகுதி காடி ஹட்டாவிலும் முடிகிறது. புகைவண்டி நிலையத்தை தாண்டினால் ஊப்பர் ஸடக் பெயர்மாற்றம் பெற்று ஜ்வாலாப்பூருக்கும் அங்கிருந்து ரிஷிகுலத்திற்கும் அங்கிருந்து குருகுலத்திற்கும் நீண்டு போகிறது. பின்னால் போலீஸ் ஸ்டேஷனும் தபால் நிலையமும் வால்தாரா பாலமும் இருக்கின்றன. பின்னால் என்ன இருக்கின்றன என்பது தெரியும். முன்னால்?
நடப்பதற்கு கால்கள் ஒத்துழைக்கவில்லை. கண்கள் அடிக்கொரு தரம் மூடின. உடம்பின் ஒவ்வொரு உறுப்பிலும் சரஸ்ஸின் நெருப்பு இப்போதும் பலமாக எரிந்து கொண்டிருந்தது. எனினும், அவன் நடந்தான்- கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்தை நோக்கி; பிறப்பிலிருந்து இறப்பை நோக்கி; கர்ப்பப்பையிலிருந்து சிதையை நோக்கி.
கடைவாசலில் உறங்காமல் படுத்திருந்த ஒரு பிச்சைக்காரி ரமேஷனைப் பார்த்ததும் எழுந்திருந்து இருட்டில் தன்னுடைய பிச்சைப் பாத்திரத்தை தேடி எடுத்து அவனுக்கு முன்னால் நீட்டினாள்.
“பாபுஜி, ஒரு பைசா...”
அவளுக்குத் தேவை ஒரு பைசா. ஒரு பைசா மட்டும். பேண்ட் பாக்கெட்டிற்குள் கையைவிட்டு அவன் சில நாணயங்களை எடுத்து அவளுடைய பிச்சைப் பாத்திரத்தில போட்டான். நாணயங்களைப் பாக்கெட்டிற்குள்ளிருந்து பொறுக்கி எடுக்க சில நிமிடங்கள் ஆயின.
ஒரு அனாதைப் பிணத்தைப் போல வெறிச்சோடிப்போயிருந்த அந்தப் பாதையில் அவன் நடந்து கொண்டிருக்கும்போது பின்னால் பல குரல்கள்:
“பாபுஜி, ஒரு பைசா...”
“மகாராஜ்...”
“மகனே...”
அவனை நோக்கி நீட்டப்பட்ட பல பிச்சைப் பாத்திரங்கள்...”
“உஷ்... அமைதி...”
அவன் விரலை உதட்டில் வைத்தவாறு சொன்னான். தன்னுடைய கை விரல்களை பேன்ட் பாக்கெட்டிற்குள் விட்டான். பிச்சைப் பாத்திரங்களில் நாணயங்கள் விழுந்தபோது பிச்சைக்காரர்கள் கடவுள்களின் பெயர்களை சொல்லி அவனை ஆசீர்வதித்தார்கள்.
நிலவு உதித்தது. ஓரங்களில் இருந்த கட்டடங்களின் நிழல்கள் பாதையின் நடுவில் விழுந்தன. தளர்ந்துபோன தன்னுடைய கைகளை பாக்கெட்டிற்குள் விட்டவாறு அவன் பயணத்தைத் தொடர்ந்தான். உயிரற்ற நிழல்களுக்கு மத்தியில் உயிர்ப்புள்ள ஒரே நிழலாக அவன் இருந்தான். நீண்டு கிடக்கும் பாதையில் நடந்து நடந்து ஒரு சோர்வு உண்டானபோது, போகும் பாதையை மாற்றினால் என்ன என்று அவன் நினைத்தான்.
பாதையின் இரு பக்கங்களிலும் கட்டடங்கள் இருந்தன. கட்டடங்களுக்கு இடையில் வெற்றிடங்களும் இருந்தன. முதலில் பார்த்த ஒரு கட்டிடத்தை நோக்கி அவன் திரும்பினான். அது வலது பக்கத்தில் இருந்தது. ஒடுக்கலான இருளடைந்து காணப்பட்ட ஒரு பாதை தெரிந்தது. அதன் இரண்டு பக்கங்களிலும் இருந்த நிறம் மங்கலான கட்டடங்களின் ஜன்னல்கள் இல்லாத சுவர்கள்... சிறுநீரின் தாங்கமுடியாத வாடை... விளக்குகள் இல்லாத கட்டடங்களின் மீது நிலவு வெளிச்சம் விழாமல் இருந்தது. ஒரே இருள்!
இருட்டில் தட்டுத் தடுமாறி அவன் முன்னோக்கி நடந்தான். காலில் ஏதோ இடறிய மாதிரி இருந்தது. எழுந்தார்கள். கண்களைத் திறந்து பார்ப்பதைப்போல் இருந்தது. எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், இருட்டில் ஏதோவொன்று அசைவதைப்போல் இருந்தது. வெறுமனே அப்படித் தோன்றுகிறதா என்ன? இருட்டு மூச்சு விடுமா? பெருமூச்சு விடும் சத்தம் நன்றாகவே கேட்டது. இங்கு இருட்டிற்கு உயிர் இருக்கிறதா என்ன? இயற்கைக்கும் உருவம் இருக்கிறதா?
“ஹூம்...”
ஒரு முணுமுணுப்புடன் யாரோ தட்டுத்தடுமாறி கால்களை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து வைத்து அவன் முன்னோக்கி நடந்தான். யாரோ அவனைப் பின்தொடர்ந்தார்கள். அவனுக்கு மிகவும் அருகில் காலடிச் சத்தம் கேட்டது.
தக்ஷப்ரஜதிபதி, நீயா? தத்தாத்ரேயா, நீயா? இல்லாட்டில் பகீரதா, நீயா? நான் உங்களைத் தேடிக்கிட்டிருக்கேன். புகைவண்டி நிலையத்தில் உங்களில் யாரையும் நான் பார்க்கலை. திரைப்பட நட்சத்திரங்களை மட்டுமே நான் பார்த்தேன். ஊப்பர் ஸடக்கை எடுத்துக்கிட்டா அங்கே தரகர்களையும் ரிக்ஷாக்காரர்களையும் மட்டும்தான் என்னால் பார்க்க முடிஞ்சது. நீங்க இந்த இருளடைஞ்சு போய் கிடக்குற கட்டடங்களுக்குள்ளே ஒளிஞ்சிருக்கீங்களா? நான் உங்களைத் தேடிக்கிட்டிருக்கேன், தெரியுமா? அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
கட்டடங்களின் எல்லையில் தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. தெரு விளக்காக இருக்கலாம். அந்த வெளிச்சத்தை நோக்கி அவன் நடந்தான். பின்னால் அவனைப் பின் தொடர்ந்த காலடிச் சத்தம் வேகமானது.
லோவர் ஸடக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவன் போய் நின்றபோது, அவனுடைய தோளில் யாரோ தொட்டார்கள். திரும்பிப் பார்த்தபோது அவனுக்கு உடம்பே நடுங்கி விட்டது.
“நீ யார்?”
பாதம் முதல் தலை வரை அணியப்பட்ட கருப்பு நிற ஆடை மார்பு வரை தொங்கிக் கொண்டிருந்த அவிழ்த்துவிடப்பட்ட தலைமுடி. வெளியே நீட்டிக் கொண்டிருந்த இரத்தம் வழியும் நாக்கு. கையில் தூக்கிப் பிடித்த திரிசூலம்.
யாரென்று அவன் கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல் அந்த உருவம் ரமேஷனுக்கு முன்னால் வந்து நின்றது. அப்போது அதன் கழுத்தில் அணிந்திருந்த கபாலத்தை அவன் பார்த்தான்.
“உனக்கு என்ன வேணும்?”
அந்த உருவம் எதுவும் பேசாமல் தன்னுடைய கையை நீட்டியது. ரமேஷன் ஒரு அடி பின்னால் தள்ளி நின்றான். எதற்காக அது கையை நீட்ட வேண்டும்? ஒரு வேளை தன்னுடைய குருதியை அது கேட்கிறதோ? விளக்கு கம்பத்தின் மீது சாய்ந்து நின்றவாறு மீண்டும் அவன் கேட்டான்.
“உனக்கு என்ன வேணும்?”
அதற்கு பதில் இல்லை. நீட்டிய கை அப்படியே இருந்தது. ஒருவேளை அது பணம் கேட்கிறதோ? அப்படியொரு எண்ணம் மனதில் தோன்றவே, பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஒரு ரூபாயை எடுத்து நீட்டிய கையில் அவன் வைத்தான். அந்த உருவம் தன் கழுத்தில் அணிந்திருந்த கபாலத்திலிருந்து பூ இதழ்களை எடுத்து அவன் மீது எறிந்தது.
அதற்குப் பிறகு அந்த உருவம் அங்கு நிற்கவில்லை. திரிசூலத்தை உயர்த்திப் பிடித்தவாறு இருட்டினூடே வேகமாக அது நடந்து சென்றது.