ஹரித்துவாரில் மணியோசை - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7360
“சுஜா, இதுதான் ஹரித்துவாரா?”
“ஆமா, ரமேஷ். நாம இப்போ ஹரித்துவார்லதான் இருக்கோம்.”
சுஜா ஒழுங்காக வாரி கட்டியிருந்த தலைமுடிகள் இப்போது தனித்தனியாகப் பிரிந்து அவள் கன்னங்களில் விழுந்து கிடந்தன.
“இந்த தெருவோட பேர் என்ன?”
“இதுக்கு பேர் இல்ல மேம் ஸாப்.”
இடது பக்கத்தில் காவி நிறத்திலிருந்த ஒரு கட்டிடத்தைச் சுட்டிக்காட்டினான் கூலியாள்.
“அதுதான், நம்மோட ஹோட்டல், ஸாப்.”
ஹோட்டலுக்கு முன்னால் ஒரு நிறம் மங்கிப்போன பெயர்ப் பலகை இருந்தது. ஸ்ரீகங்காஜீ ஹோட்டல். அது முதல் மாடியில் இருந்தது. கூலியாள் தன் தலையிலிருந்த பெட்டிகளை இறக்கி கையில் வைத்துக்கொண்டு படிகளில் ஏறினான். ஒரு மோட்டார் ஒர்க் ஷாப்பிற்கும் ஒரு வெற்றிலைப் பாக்குக் கடைக்கும் நடுவில் அந்தப் படிகள் இருந்தன. பிடிகள் மிகவும் ஈரமாக இருந்தன. அதில் சகிக்க முடியாத ஒரு நாற்றம் அடித்தது. ஒரு வெறும் தளத்தில் போய் அந்தப் படிகள் முடிந்தன. அங்கிருந்த திண்ணை மீது யாரோ படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
“முனீம்ஜி, ஓ முனீம்ஜீ!”
கூலியாள் அந்த ஆளை எழுப்பினான். அவன் ஒரு வயதான கிழவன். அந்த மனிதனின் முகத்தைப் பார்த்ததும் ரமேஷனுக்கு வாந்தி வந்தது. அவனுடைய வலது கன்னத்தில் ஒரு ரூபாய் அளவுக்கு வட்டமாக இரத்தமும் சலமும் கொண்ட ஒரு பழுப்புப்புண் இருந்தது. அதன் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அந்தக் காட்சியைப் பார்க்கவே முடியவில்லை. கூலியாள் கிழவனின் காதில் மெதுவான குரலில் என்னவோ சொன்னான். முனீம்ஜி தலையணைக்கு அடியிலிருந்து ஒரு சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு தளத்தை நோக்கி நடந்தான்.
“அருமையான அறையா இருக்கணும், முனீம்ஜி... இவங்க டில்லியில இருந்து வர்றாங்க!”
கூலியாள் பெட்டிகளைக் கையில் தூக்கிக் கொண்டு முனீம்ஜியைப் பின் தொடர்ந்தான். ரமேஷனும் சுஜாவும் டில்லியிலிருந்து வருகிறார்கள் என்பதை அவன் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். கிழவன் ஒரு அறையின் பூட்டைத் திறந்தான். அவன் கதவைத் திறக்கும்பொழுது மூலையில் வௌவால்களின் சிறகடிப்பு சத்தம் கேட்டது. ஜன்னல்களோ அலமாரியோ எதுவும் அறையில் இல்லை. மேல் பூச்சு உதிர்ந்து போய் காணப்பட்ட சிதிலமடைந்த சுவர்கள்.
“இதுதான் அறை.”
கூலியாள் தன் தலையில் கட்டியிருந்த சிவப்புத் துணியை அவிழ்த்து, முகத்தையும் கழுத்தையும் துடைக்க ஆரம்பித்தான். அவனுடைய கண்களில் ஒரு தவிப்பு தெரிந்தது. மேலே ஒரு துருப் பிடித்த மின்விசிறி தொங்கிக் கொண்டிருந்தது. ரமேஷன் ஸ்விட்சை ‘ஆன்’ செய்தான். காற்றாடி ஓடவில்லை.
“மின்சாரம் இல்ல பாபுஜி.”
முனீம்ஜி தன் முழு புண்ணில் கையை வைத்து தடவியவாறு சொன்னான். அது பொய் என்பதைச் சொல்ல வேண்டியதில்லையே!
“டட்டி அதோ அங்கே இருக்கு!”
முனீம்ஜி கழிப்பறையைச் சுட்டிக் காட்டினான். கழிப்பறையும் குளியலறையும் ஒரே இடத்தில் இருந்தன. அங்கே செல்ல முடியவில்லை. மூக்கை அடைக்குமளவிற்கு நாற்றமடித்தது. திறந்திருந்த கதவுக்கப்பால் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன.
“முனீம்ஜி ரொம்பவும் நல்ல ஆள். நம்பிக்கைக்குரிய மனிதர். தேவைப்படுகிற எந்த உதவி வேணும்னாலும் செய்து தருவாரு.”
கூலியாள் சொல்லிக் கொண்டிருந்தான். முனீம்ஜி எண்ணெய் படிந்த ஒரு லெட்ஜருடன் வந்தான்.
“எவ்வளவு நாட்கள் தங்கி இருப்பீங்க, பாபு?”
ரமேஷன் எந்த பதிலும் சொல்லாமல் பாக்கெட்டிற்குள் கையை விட்டு இரண்டு ஒரு ரூபாய் நோட்டுகளை எடுத்து கூலியாளுக்கு முன்னால் திண்ணையில் வைத்தான். பெட்டிகளைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் படிகளில் இறங்கினான்.
“பாபுஜி.”
பின்னாலிருந்து கூலியாள் மார்பே வெடிக்கிற மாதிரி அழைத்தான். முனீம்ஜிக்கு இரண்டு ஆட்களைக் கொண்டுவந்து கொடுத்தால் அவனுக்குக் கிடைக்கும் பணத்தில் கமிஷன் கிடைக்கும். அது இப்போது கிடைக்காமல் போய்விட்டது. அவனுடைய மார்பே வெடிக்கிற மாதிரியான அழைப்பு ரமேஷனின் காதுகளில் ஆணிகளைப்போல் வேகமாகப் போய் அறைந்தது. முனீம்ஜி மெதுவான குரலில் என்னவோ சாபமிட்டான்.
“ஒரு பெட்டியை இங்கே தா. நான் வச்சுக்குறேன்.”
சுஜா கையை நீட்டினாள். ரமேஷன் கொடுக்கவில்லை. வாயில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டுடன் இரண்டு கைகளிலும் பெட்டியை வைத்துக் கொண்டு அவன் நடந்தான். அவனுடன் சுஜாவும். அவர்களுக்கிடையில் கனமான அமைதி நிலவியது. முனீம்ஜியும் அவனுடைய ஹோட்டலும் அவர்கள் மனதில் ஒரு காயமான நினைவாகப் பதிந்தனர்.
“பாபுஜீ...”
பாதையின் இரண்டு பக்கங்களிலிருந்தும் யார் யாரோ அழைத்தார்கள். பிச்சைக்காரர்களோ, தரகர்களோ- யாராகவும் அவர்கள் இருக்கலாம். இரு பக்கங்களிலும் வரிசையாக சத்திரங்கள் இருந்தன. பெயரே இல்லாத தெருவும், ரயில்வே ஸ்டேஷன் சாலை சேருமிடத்தில் ஒரு ஹோட்டலின் பெயர்ப்பலகை இருந்தது. ரமேஷன் அங்கு சென்றான். பாதையோரத்தில் சுஜா பெட்டிகளுக்கு காவல் இருந்தாள்.
“வாங்க... வாங்க...”
ஹோட்டல் உரிமையாளர் லாலாஜி, ரமேஷனின் தோற்றத்தையும் நடந்து வரும் தோரணையையும் பார்த்து எழுந்து நின்றான். ரமேஷன் உள்ளே கண்களை ஓட்டினான். தண்ணீர் அந்த இடத்தில் தேங்கிக் கிடந்தது. அதன் இரு பக்கங்களிலும் அறைகள் இருந்தன. நடுவில் இருக்கும் வெற்றிடத்திற்குப் போகும் இடத்தில் தலைக்கு மேலே இரண்டு கோவணங்கள் உலரப் போடப்பட்டிருந்தன. சிறுநீரின் மஞ்சள் நிறம் அந்தக் கோவணங்களில் இருந்தன.
“வேற வழியே இல்ல, சுஜா டியர்!”
“ஏதாவதொரு சத்திரத்தில் போய்த் தங்கலாம், ரமேஷ்!”
ஹோட்டல்களின் நிலை இதுவென்றால் சத்திரங்களின் கதை எப்படி இருக்கும்? ஹரிஹர் தர்மசாலை, கீதா தர்மசாலை, யதிசைதன்யா தர்மசாலை, காயத்ரிதேவி தர்மசாலை, ஸ்ரீகங்கா தர்மசாலை, கங்கோத்ரி தர்மசாலை- இப்படி எவ்வளவு தர்மசாலைகள்! இருபத்தைந்து காசுகள் கொடுத்தால் தலை சாய்ப்பதற்கு ஆறடி இடம் கிடைக்கும்.
“நீ தயாரா?”
“இல்ல...”
அவள் புன்னகைத்தாள்.
ஊப்பர் ஸடக்கின் இரு பக்கங்களிலும் கட்டிடங்கள் நிறைய இருந்தன. தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மர நிழலில் அமர்ந்து பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். இந்த ஊப்பர் ஸடக்கிற்கும் பழைய டில்லியின் தெருக்களுக்குமிடையே என்ன வேறுபாடு இருக்கிறது? ஒரே ஒரு வேறுபாடு மட்டும் இருக்கிறது. பழைய டில்லியின் தெருக்களுக்கு ஊப்பர் ஸடக் என்பதற்கு பதிலாக நயீ ஸடக் என்றோ கல்லீ காசிராம் என்றோ பெயர்கள் இருந்திருக்க வேண்டும். டில்லியின் கல்லீ காசிராம் சற்று மாறி வந்ததாக இருக்கும் இந்த ஊப்பர் ஸடக்! பழைய டில்லி சற்று மாற்றம் பெற்று வந்ததுதானே இந்த ஹரித்துவார்?
“ரமேஷ், நீ என்ன சிந்திக்கிறே?”
“நம்மோட பழைய டில்லி தோற்றம் மாறி வந்ததுதானே இந்த ஹரித்துவார்?”