ஹரித்துவாரில் மணியோசை - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7360
அவனுடைய ஊர் கேரளமோ, டில்லியோ எதுவும் இல்லை. இந்த பூமிதான் ரமேஷனுக்கு பிறந்த ஊர். இருட்டில் பயணம் செய்யும் பயணி அவன். பயணத்துக்கு மத்தியில் வழிதவறி அவன் கர்ப்பப்பைக்குள் சென்று விடுகிறான். இப்படி எத்தனையெத்தனை கர்ப்பப்பைகளுக்குள் இதுவரை அவன் போய் வந்திருக்கிறான்!
“சுஜா, எனக்காக ஒரு சிதையைத் தயார் பண்ணிவைக்க உன்னால் முடியுமா?”
“அதுக்கு மின்சாரத் தகனம் செய்ய இடம்போதுமே?”
“மரணச் சான்றிதழ் இல்லாம அங்கே போக முடியாதே!”
“அங்கே இருக்குற ஆளுக்கு லஞ்சம் கொடுத்தா போதும்... எல்லாம் நடக்கும்.”
காக்கி உடையணிந்து, சிதையின் நிறத்தில் கண்களையும் உடம்பில் பிண வாடையையும் கொண்டிருக்கும் அந்த வெட்டியானின் பெயர் ஸ்ரீராம். சில நாட்களுக்கு முன்பு ஒருநாள் முழுவதும் மின்சாரத் தகனம் செய்யும் இடத்தில் போய் அவன் இருந்தான். பிணவண்டிகள் வருவதையும் போவதையும் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான். பிணங்களின் வாயில் அரிசியும் திரியும் வைத்து புரோகிதர்கள் சடங்குகள் செய்வதை அவன் பார்த்தான். அதிகமான பிணங்களை அவன் பார்த்தது அன்றுதான். கொஞ்சம் பணம் கொடுத்தால் ஸ்ரீராம் தன்னை உயிருடன் எரிப்பதற்குத் தயாராக இருப்பானா? பணம் கொடுத்தால் முடியாதது என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லையே! ரமேஷன் தன்னுடைய எரியூட்டலைக் கற்பனை பண்ண ஆரம்பித்தான். ஸ்ரீராம் தன்னை பலகையின்மீது படுக்க வைப்பான். புரோகிதர் தன்னுடைய வாயில் வேக வைத்த அரிசியையும் கொளுத்திய திரியையும் வைப்பார். சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரத்தின் லிவரைப் பிடித்து கீழே இழுத்து தன்னை அடுப்பிற்குள் தள்ளி விடுவான் ஸ்ரீராம். உள்ளே போவதற்கு முன்பே தன்னுடைய ஆடைகளும் தலை முடியும் முழுமையாக எரிந்து முடிந்திருக்கும். சில விநாடிகளில் உடல் பற்றி எரிந்து ஒரு மாமிசப் பிண்டமாக மாறும். பிறகு எலும்புகள் வெடித்துச் சிதறும். கடைசியில்தான் ஒரு பிடி சாம்பலாக மாறிய பிறகு, ஸ்ரீராம் அடுப்பின் பின் பகுதியைத் திறந்து தன்னைத் தட்டிப் பார்த்து சட்டியில் இடுவான். அந்தச் சாம்பலை மண்சட்டியில் வைத்து அதற்கு மேலே மண்ணை நிரப்பி யாராவது யமுனையில் போய் கரைப்பார்கள்.
சுஜா பேகைத் திறந்து ஒரு ஃப்ளாஸ்க்கையும் ஒரு பொட்டலத்தையும் வெளியே எடுத்தாள். பேப்பர் டம்ளரில் சூடான தேநீரை ஊற்றினாள்.
“பொட்டலத்துல என்ன இருக்கு?”
“நீயே கற்பனை பண்ணிச் சொல்லு.”
“சேண்ட்விச்.”
சுஜா ஆச்சரியத்துடன் ரமேஷனின் முகத்தையே பார்த்தாள். அவனும் ஆச்சரியப்படாமல் இல்லை. தன்னால் எப்படி அவ்வளவு சரியாகச் சொல்ல முடிந்தது என்று அவனுக்கும் ஆச்சரியம்.
அவள் ஒரு சேண்ட்விச்சை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“எனக்கு வேண்டாம். காலையில் இதைத்தான் நான் சாப்பிட்டேன்.”
“அது சாஸேஜ் சேண்ட்விச்தானே?”
“அது எப்படி உனக்குத் தெரியும்?”
ரமேஷன் ஆச்சரியம் மேலோங்க சுஜாவின் முகத்தைப் பார்த்தான். அவளும் தன்னை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. தன்னால் எப்படி அதைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று அவள் வியந்தாள்.
“அவனுக்கும் ஒரு துண்டு கொடுக்கட்டுமா?”
சற்று தூரத்தில் இடம் பெயர்ந்து உட்கார்ந்திருந்த வெளிநாட்டுக்காரன் அவ்வப்போது அவர்களைக் கடைக்கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அந்த அப்பாவியை வெறுமனே விட்டுரு, சுஜா.”
அவர்கள் சேண்ட்விச்சை சாப்பிட்டுவிட்டு தேநீரைக் குடித்தார்கள். சேண்ட்விச்சிலிருந்த தக்காளியின் ருசியே அவனுக்குத் தெரியவில்லை. சரஸ் இழுத்து இழுத்து ருசி வேறுபாடே அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது. இன்னும் சில நாட்கள் கழிந்து கண்களுக்கு நிறத்தில் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாமற் போகலாமல்லவா? காதுகளுக்கு ஒலிகளையும் மூக்கிற்கு வாசனைகளையும் புரிந்து கொள்ள முடியாமற் போகலாம் அல்லவா? சுஜா காலியான தெர்மோஃப்ளாஸ்க்கை மீண்டும் பேகிற்குள் வைத்தாள். ஒரு குழந்தையை உள்ளே வைத்திருக்கக் கூடிய அளவிற்கு பெரியதாக இருந்தது அவளுடைய பேக். பேகை மூடிவிட்டு முழங்கால்களைச் சுற்றி கைகளைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டு அவள் கேட்டாள்.
“இனி என்ன செய்றது?”
அவளே அதற்கு பதிலும் சொன்னாள்: “சும்மா ஏதாவது சிந்திக்க வேண்டியதுதான்.”
சிந்திக்கலாம். ஆனால், எதைப் பற்றிச் சிந்திப்பது? சிந்தித்து சிந்தித்து வெறுப்பாகிப் போனதுதான் மிச்சம். இப்படி சிந்திக்க ஆரம்பித்து இருபத்தாறு வருடங்களாயிற்றே! ஒரு நிமிடமாவது எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடிந்தால்...? மனதில் ஆசைப்பட மட்டும்தான் முடிந்தது.
“ரமேஷ், நீ என்ன சிந்திக்கிறே?”
“சிந்திக்காம இருக்க முடியுமான்னு சிந்திக்கிறேன். நீ?”
“நானா? எனக்கே தெரியல.”
“சுத்த பொய்.”
“சத்தியமா சொல்றேன், ரமேஷ்.”
சிறிது நேரம் சென்ற பிறகு, ரமேஷன் கேட்டான்: “இப்போ நீ எதைப் பற்றி சிந்திச்சிக்கிட்டு இருக்கே?”
“என் தாயைப் பற்றி...”
“அவங்களைப் பற்றி நினைக்கிறதுக்கு என்ன இருக்கு?”
அவள் தன் கால்களை இருக்கையின்மீது தூக்கி வைத்துக் கொண்டு தாடைப் பகுதியை முழங்காலின்மீது வைத்துக் கொண்டு அமர்ந்தாள். புடவையின் ஓரத்தை கீழ்நோக்கி இழுத்துவிட்டு தன்னுடைய வெண்மையான சிறு பாதங்களை மறைத்தாள். சுஜாவின் தாய்க்கு அவளை ரமேஷனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், சுஜா ரமேஷனின் அறைக்கு அடிக்கொருதரம் போவதையும் அவனுடன் பல இடங்களுக்கும் போய் வருவதையும் அவள் விரும்பவேயில்லை. ஹரித்துவாருக்குச் செல்ல வேண்டும் என்று சம்மதம் கேட்டு சுஜா வந்து நின்றபோது, ரமேஷன் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தான்.
“உன் அப்பாக்கிட்ட கேளு.”
அவள் குரல் வேறு மாதிரி ஒலித்ததை ரமேஷன் கவனிக்காமல் இல்லை. அவள் கட்டாயம் இந்த விஷயத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டாளென்றும், தன்னுடைய ஹரித்துவார் போகும் திட்டம் தவிடு பொடியாகப் போவது உறுதி என்றும் நினைத்து அவன் பயந்தான். சுஜாவின் தந்தை அப்போது வீட்டில் இல்லை. அவர் எப்போதும் தொழில் விஷயமாக எங்காவது சுற்றிக் கொண்டிருப்பார்.
“அதுக்கு அப்பா என்ன இங்கேயா இருக்காரு?”
“வந்த பிறகு கேளு.”
சுஜாவின் தாயின் முகம் மிகவும் கறுத்துப் போயிருந்தது. வெளிநாடுகளில் ஏராளமான இடங்களைப் போய் அவள் பார்த்திருந்தாலும், ஒரு பெரிய அரசாங்க அதிகாரியின் மனைவியாக இருந்தாலும் அவளுடைய பழமையான பழக்க வழக்கங்கள் அவளை விட்டுப்போகாமலே இருந்தன. அவள் இப்போதும் பஞ்சாப்பின் கோதுமை வயல்களின் படைப்பாகவே தொடர்ந்து கொண்டிருந்தாள். ஆனால், அவளுடைய மகள் அவளுக்கு நேர் எதிர். அவள் ஹிப்பிகள் பிறப்பதற்கு முன்பே ஹிப்பியாகி விட்டாள். சேகுவாரா இறப்பதற்கு முன்பே, அவரைக் கதாநாயகன் ஆக்கியவள் அவள். இப்போது அவளுடைய சே மீதுகொண்ட ஈடுபாடு முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது அவள் ஒரு சூப்பர் சேயின் பிறப்பிற்காகக் காத்திருக்கிறாள்.