ஹரித்துவாரில் மணியோசை - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7360
அதற்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தீக்குச்சியை எடுத்து உரசி சரஸ்ஸுக்குக் கீழே காட்ட வேண்டும். மூன்று குச்சிகளும் எரியும்போது, சரஸ்ஸிலிருந்து புகை கிளம்பி உயர்ந்தது. சூடான சரஸ்ஸை உள்ளங்கையில் வைத்து கையால் நசுக்கிப் பொடியாக்கி அதைப் புகையிலையுடன் கலந்து குழாயில் நிரப்பினான். சரஸ்ஸின் மனம் காரில் பரவியது. பாம்பு வாயைத் திறக்கும்போது உண்டாகும் வாசனை... டாக்ஸி அப்போது ஸ்ரீநிவாஸ்புரியை அடைந்துவிட்டிருந்தது. டாக்ஸிக்காரன் பின்னால் திரும்பிப் பார்த்தான்.
“நேராக...”
சரஸ்ஸின் மங்கலான புகைக்கு நடுவில் உட்கார்ந்திருந்த ரமேஷன் கடந்த காலத்தை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தான். இருபத்து ஆறு வருடங்களுக்கு முன்னால் பயணம் செய்தபோது தன் தாயின் கர்ப்பப்பையை அவன் தனக்கு முன்னால் பார்த்தான். ஈரமான நரம்புகள் படர்ந்திருக்கும் சிவப்பு நிறச் சுவர்கள். மெல்லிய சிவந்த இருட்டு அவனைச் சூழ்ந்திருந்தது. அந்த இருட்டில் தலைகீழாக அவன் சுருண்டுப் படுத்திருக்கிறான். யமுனையின் நீளமான கரை வழியாக டாக்ஸி ஓடிக்கொண்டிருந்தது. முன்னாலும் பின்னாலும தெருவிளக்குகளின் ஊர்வலம். ஆஸாத் மார்க்கெட்டும் கிஷன் கஞ்ச்சும் ஹராய்ரோஹில்லாவும் கீர்த்தி நகரும் பின்னால் போய்க் கொண்டிருந்தன. கடைசியில் புறப்பட்ட இடத்திற்கே டாக்ஸி வந்து நின்றது.
“ஸாப்!”
டாக்ஸிக்காரன் அழைத்தான். குழாய் முழுமையாக அணைந்து போயிருந்தது. ரமேஷன் கண்களை உருட்டியவாறு நான்கு பக்கங்களிலும் பார்த்தான். மரணத்திற்கும் வாழ்விற்குமிடையில் ஒரு தவிப்பு இருக்கிறது. அதில் இருந்தான் ரமேஷன். யூஸஃப் ஸராயியில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய ஒரு உருண்டை சரஸ் மரணத்தைப் பற்றியும் கர்ப்பப்பையைப் பற்றியும் நினைப்பதற்குப் பயன்பட்டது. டாக்ஸியை விட்டு இறங்கிய ரமேஷன் மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை வெளியில் எடுத்தான். மீதியை வாங்கவில்லை. டாக்ஸிக்காரன் அதனால் மகிழ்ச்சியடைந்திருப்பான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கையால் தொழுத அவன் புறப்பட்டான்.
மழைபோல வெளிச்சத்தைப் பொழிந்து கொண்டிருந்தன நிலான் விளக்குகள். ஐஸ்கிரீமை ருசித்தவாறு தொப்புளுக்குக் கீழே புடவை அணிந்த இளம்பெண்கள் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார்கள். ஷகுஃபாவில் பேண்ட் இசை காதைக் கிழித்தது. வர்ணங்களும், சத்தங்களும் நிறைந்த மாய உலகத்தின் வழியாக ரமேஷன் வீட்டை நோக்கி நடந்தான். படுக்கையறையில் ஏர்கண்டிஷனரை ஆன் செய்தான். குளிர்ச்சி அறை முழுக்கப் பனியைப் போலப் படர்ந்தது. டேப் ரிக்கார்டரை ‘ஆன்’ செய்தான். சிதாரின் இனிய இசை அறைக்குள் ஒலித்தது. சாப்பிட வேண்டுமென்று தோன்றவில்லை. மதியம் சாப்பிடாமல் இருந்தும் கூட பசி இல்லை. சாய்வு நாற்காலியை இழுத்துப்போட்டு அதில் ரமேஷன் சாய்ந்தான். சரஸ்ஸின் போதை, பசி, குளிர்ச்சி, சிதார் இசை!
கண்கள் தானாகவே மூடின.
2
ரமேஷன் படுக்கையை விட்டு எழுந்தான். மானஸா தேவியும் ப்ரம்ம குண்டமும் அவனை அழைப்பதைப் போல் இருந்தது. ஹரித்துவாரைப் பற்றி நினைத்துக் கொண்டே அவன் கண்களைத் திறந்தான். நினைவு முழுவதும் ஹரித்துவாரைப் பற்றியே இருந்தது. ஹரித்துவாரைப் பற்றி எதற்காக இப்படி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? கடந்த நான்கைந்து வருடங்களாகவே அவன் பல இடங்களுக்கும் பயணம் செய்திருக்கிறான். அந்தச் சமயங்களில் ஒருமுறைகூட அவனுடைய இதயம் இந்த அளவிற்கு அடித்துக் கொண்டதில்லை. உலகம் தன்னுடைய வீடு என்ற எண்ணம் எங்கு போனது?
மேட்ரிட்டிற்குச் செல்லும் நாளன்று பகல் முழுவதும் க்ளப்பில் உட்கார்ந்து செஸ் விளையாடுவதும் சரஸ் இழுப்பதுமாக இருந்தான். இரவு எட்டரை மணிக்கு விமானம். க்ளப்பை விட்டு வெளியே வரும்போது ஏழுமணி ஆகிவிட்டிருந்தது. வீட்டிற்குச் சென்று பெட்டியில் எதையதையோ வாரிப் போட்டுக் கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றான். கொல்லத்திலிருந்து கோட்டயத்திற்குச் செல்லும் மதமதப்புடன் விமானத்தைப் பற்றியோ, ஸ்பெயினைப் பற்றியோ செய்யப்போகிற முக்கிய வேலையைப் பற்றியோ அப்போது சிந்திக்கவேயில்லை. செஸ்ஸில் மாவோவின் சிந்தனைகளைப் பற்றி பயன்படுத்துவதைப் பற்றி அவன் தீவிரமாக எண்ணிக் கொண்டிருந்தான். விமான நிலையத்தில் ஸெஞ்யோர் அகினோ ஹிரோஸியும் சுஜா மெஹ்ராவும் அவனுக்காகக் காத்திருந்தார்கள்.
“நீ எங்கே போயிருந்தே?”
“கொஞ்சம் தாமதமாயிருச்சு, ஸெஞ்யோர்.”
“போதைப்பொருள் சாப்பிட்டுட்டு வர்ற, அப்படித்தானே?”
ஸெஞ்யோரின் முகத்தில் கோபம் தெரிந்தது.
“மாவோவின் சிந்தனைகளை செஸ்ஸில் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன்” -குரலைத் தாழ்த்திக் கொண்டு சுஜாவின் காதில் சொன்னான். கடைசியில் விமானத்தை நோக்கி அவன் ஓடவேண்டிய நிலை உண்டானது.
டில்லிக்கு மிகவும் அருகில் இருக்கும் ஹரித்துவாருக்குச் செல்லும் ரமேஷன் சரஸ்ஸைப் பற்றியோ செஸ்ஸைப் பற்றியோ சிறிதுகூட நினைக்கவில்லை. மனம் முழுக்க ஹரித்துவார் மட்டுமே இருந்தது. இதுவரை பார்த்திராத பிரகாசமான தீபங்கள் அவனுடைய கண்களுக்கு முன்னால் உயர்ந்து எரிந்து கொண்டிருந்தன. இதுவரை கேட்டிராத மணியோசைகள் காதுகளில் முழங்கிக் கொண்டிருந்தன. ஹரித்துவார் தன்னை அழைக்கிறதோ என்று அவன் நினைத்தான்.
போர்வையை விலக்கிவிட்டு அவன் கட்டிலிலிருந்து எழுந்தான். அறைக்குள் குளிர்ச்சி நிறைந்திருந்தது. அவன் கையை நீட்டி ஏர் கண்டிஷனரை அணைத்தான். ஒரு முனகலுடனும் நடுக்கத்துடனும் அந்த இயந்திரம் நின்றது. திரைச்சீலையை சற்று இழுத்து விட்டபோது அறைக்குள் சற்று இருட்டு புகுந்தது. கான்க்ரீட் கட்டிடங்கள் வெளியே தெரிந்தன. கான்க்ரீட்டின் ஆக்கிரமிப்பிலிருந்து தற்காலிகமாகவாவது தப்பித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தே அவன் சென்றமுறை தன் சொந்த ஊருக்குச் சென்றான். அந்த ஊரில் கான்க்ரீட் இல்லை. அதற்குப் பதிலாக தென்னை மரங்கள் இருந்தன.
பார்க்குமிடமெல்லாம் தென்னை மரங்கள். தென்னை அவன் மனதில் ஒரு அலைபாயும் நிலையை உண்டாக்கியது. அந்த அலைபாயும் நிலை அவனுடன் எப்போதுமே ஒட்டிக் கொண்டிருப்பதுதான். ஊரில் இருந்தபோது தென்னை மரங்கள் அவனை அமைதியற்றவனாக ஆக்கியது. நகரத்தில் இருக்கும்போது அதையே கான்க்ரீட் கட்டிடங்கள் செய்தன.
“உன் அமைதியில்லாத மனதை நான் சரி பண்ணுறேன்.”
அவனுடைய தாயின் முகத்தில் ஒரு கள்ளச் சிரிப்பு. வெள்ளை வேட்டியையும் சட்டையையும் அணிந்து கொண்டு காலில் செருப்பு எதுவும் இல்லாமல் அவன் வயல் வரப்பு வழியாக நடந்தான்.
“இங்கே உட்காரு.”
கருங்கல்லுக்கப் பக்கத்தில் அவனுடைய தாய் அமர்ந்தாள். தாய் சொல்லைக் கேட்கும் ஒரு நல்ல பிள்ளையைப் போல தாயின் அருகில் அவன் அமர்ந்தான்.
“உன் கவலைக்குக் காரணம் என்ன மகனே?”
“எனக்குத் தெரியலம்மா!”
“உன் தாயை இப்பவும் நீ நம்பலையா?”
“உங்களை நான் நம்பலையா!”
“அப்ப நீ சொல்லு...”
அந்தத் தாய் தன் மகன் ரமேஷனின் கையை எடுத்து தன்னுடைய மடியில் வைத்தாள். எலும்புகள் தெரியும், முடிகள் வளர்ந்திருக்கும் கைகள். தாய்க்குத் தெரியாத விஷயம் எதுவும் அவனுடைய வாழ்க்கையில் இல்லை. சரஸ், பங்க் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, இளம்பெண்களுடன் நடந்து திரிவது எல்லாமே அவளுக்குத் தெரியும். எல்லா விஷயங்களையும் அவன் தன் தாயிடம் மறைக்காமல் கூறிவிடுவான்.